Wednesday, January 15, 2014

கர்த்தருடைய ஜெபம்

கர்த்தருடைய ஜெபம்

மத்தேயு 6:9-13
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது;
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

குழந்தைகளுக்கான ஜெபம்

நானும் கர்த்தர் எனக்கு கொடுத்த பிள்ளைகளும் சியோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்கலாகவும் இருக்கிறோம். (ஏசாயா 8:18)
என் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாய் இருக்கும் (ஏசாயா 54:13)\
இதி என் பிள்ளைகள் கர்த்தரால் வந்த சுதந்திரம்; என் கர்ப்பத்தின் கனி அவரால் எனக்கு கிடைத்த பலன் (சங்கீதம் 127:4)
என் பிள்ளைகள் என் பந்தியை சுற்றிலும் ஒலிவமர கன்றுகளைப் போல் இருப்பார்கள் (சங்கீதம் 128:3)
என் சந்ததியுன் மேல் கர்த்தருடைய ஆவியையும், என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதங்களும் ஊற்றப்படும். அதனால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்கள் ஓரத்தில் உள்ள அலரிச் செடியை போல் வளருவார்கள். (ஏசாயா 44:3,4)
என் மேல் இருக்கும் தேவ ஆவியும், என் வாயில் அவர் வைத்துள்ள அவர் வார்த்தைகளும் என் வாயினின்றும் என் சந்ததியுன் வாயினின்றும் நீங்குவதில்லை (ஏசாயா 59:21)
என் பிள்ளைகள் பாதிகாப்புடன் வாழ்வார்கள். அவர்கள் சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிலைத்திருக்கும் (சங்கீதம் 102:8)
கர்த்தருடைய கிருபையோ அவருக்கு பயந்த என் மேலும், அவருடைய நீதி என் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றும் இருக்கும். (சங்கீதம் 103:17)
கர்த்தர் என் வாசல்களின் தாள்ப்பாகளைப் பெலப்படுத்தி என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் (சங்கீதம் 147:13)
கர்த்தருக்கு பயப்படுகிற எனக்கு எனக்கு திடநம்பிக்கை உண்டு, என் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் (நீதிமொழிகள் 14:26)
என் பிள்ளைகளின் பிள்ளைகள் எனக்கு கிரீடமாய் விளங்குவார்கள் (நீதிமொழிகள் 17:6)
நான் என் உத்தமத்திலே நடக்கிறேன். எனக்கு பிறகு என் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பார்கள். (நீதிமொழிகள் 20:7)
இயேசுவை போல் என் பிழைகள் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும், அதிகதிகமாய்  விருத்தியடைவார்கள் (லூக்கா 2:52)
சாமுவேலை போல் என் பிள்ளை வளர்ந்து கர்த்தருக்கும் மனிதருக்கும் பிரியமாக நடந்து கொள்ளுவான் (1 சாமுவேல் 2:26)
யோவான் ஸ்நானகனை போல என் பிள்ளை ஆவியில் பெலன்கொண்டு வளருவான். பாவ மன்னிப்பாகிய ரட்சிப்பை தெரியப்படுத்துவான் (லூக்கா 1:80)
என் பிள்ளைகள் தானியேலை போல உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இடைவிடாமல் தேவனை ஆராதிப்பார்கள். தேவன் பேரில் விசுவாசம் வைப்பார்கள். அவர்கள் கையில் எடுத்தது ஜெயமாயிருக்கும் (தானியேல் 6:4, 16,23,28)
என் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனங்கள் சொல்லுவார்கள். தரிசனங்களை காண்பார்கள்

Friday, January 3, 2014

புனித வேதாகமத்தின் வரலாறு பகுதி மூன்று

சகோ.M.S.வசந்தகுமார்

ஜேம்ஸ் அரசனின் அங்கீகாரம் பெற்றிருந்த ஆங்கில வேதாகமம், பிரசுரிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே மூன்று பதிப்புகள் வெளிவந்த 13ஆம் நூற்றாண்டில், கென்டபரியின் பிரதான பிஷப்பாக இருந்த ஸ்டீவன் லங்டன் என்பவருடைய அதிகாரப் பிரிவும், 1551 இல் ராபர்ட் எஸ்டீன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வசனப் பிரிவுகளும் இம்மொழிபெயர்ப்பில் இடம் பெற்றிருந்தன. 1615இல், இம்மொழிபெயர்ப்பில் இருந்த நூற்றுக்கணக்கான எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. 1629 இல், மறுபடியுமாக இம்மொழி பெயர்ப்பு திருத்தப்பட்டதோடு, அதுவரை காலமும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்த தள்ளுபடியாகமங்கள் நீக்கப்பட்டன. 1638 இல், மறுபடியுமாக இவ்வேதாகமம் திருத்தப்பட்டது. இம் மொழிபெயர்ப்பின் 1701 இன் லொயிட்ஸ் பதிப்பில், பிரதான பிஷப் அஷர் என்பவருடைய வேதாகமச் சம்பவங்களின் காலக்குறிப்புகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம், 1762 இல் பாரீஸ் என்பவரால் கேம்பிரிஜ் வேதாகமம் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இதில் 383 விளக்கக் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தன. 1769இல் இது ஒக்ஸ்போர்ட் வேதாகமம் என்னும் பெயரில் சில திருத்தங்களுடன் ப்லேய்னி என்பவரினால் வெளியிடப்பட்டது. இதன் பிறகு இவ்வேதாகமமே ஆங்கில கிறிஸ்தவ சபையினது வேதாகமமாக இருந்தபோதிலும், பிற்காலத்தில் வெளியிடப்பட்ட இதன் பதிப்புகளில், ஒரு சில திருத்தங்களும் செய்யப்பட்டன.
1611 முதல் 1881 வரை ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமமே ஆங்கில கிறிஸ்தவ உலகில் தனிப் பெரும் வேதாகமமாக இருந்த போதிலும் காலத்துக்குக்காலம் சிலர் புதிய மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். பழைய கையெழுத்துப் பிரதிகள் சில கிடைத்தமையினால் அவற்றையும் ஆராய்ந்து பார்த்து சில திருத்த மொழிபெயர்ப்புகளும் வெளிவரத் தொடங்கின. 17ஆம் நூற்றாண்டில், ஹென்றி ஹம்மொண்ட் (1653இல்), வூட் ஹெட், அலெஸ்ட்ரி, வோக்கர் (1675 இல்), ரிச்சர்ட் பெக்ஸ்ட்டர் (1685 இல்) என்போரது விளக்க மொழிபெயர்ப்பு வேதாகமங்கள் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் மோர் (1729 இல் பு.ஏ.), வீட்டன் (1745 இல்), ஜான் வெஸ்லி (1755 இல்) என்போரும், இன்னும் சிலரும் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்துள்ளனர். 19 ஆம் நூற்றாண்டில் இதைவிட அதிகமானோர் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்துள்ளனர். இவர்களில் தாம்சன் (1808 இல்), அலெக்சாண்டர் (1822 இல்), நோவா வெப்ஸ்டர் (1833 இல்), பென் (1836 இல் பு.ஏ.), கென்றிக்ஸ் (1842 இல் பு.ஏ.), ப்ரெண்டன்(1844 இல் ப.ஏ.), நோர்ட்டன் (1855 இல் சுவிசேஷங்கள்) கொனன்ட்ஸ் (1857 பு.ஏ.), ப்ரோம்ஃபீல்ட் (1863 சுவிசேஷங்கள்), அன்டர்சன் (1865 பு.ஏ.), பெளவர் (1870 பு.ஏ.), அல்பிரட் (1870 பு.ஏ.), ரொதர்ஹம் (1872 இல் பு.ஏ.), ஜூலியா ஸ்மித் (1876 இல்) என்போர் முக்கியமானவர்கள். இவ்வாறு பலர் புதுப்புது ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தயாரித்தபோதிலும் பெரும்பாலான ஆங்கிலக் கிறிஸ்தவர்கள், ஜேம்ஸ் அரசனுடைய அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு வேதாகமத்தையே தேவ வார்த்தையாகக் கருதி, அதையே உபயோகித்து வந்துள்ளனர்.
(5) அண்மைக்கால ஆங்கில வேதாகமங்கள்
அண்மைக்காலத்தில் நூற்றுக்கும் அதிகமான புதிய மொழிபெயர்ப்பு வேதாகமங்கள் ஆங்கில மொழியில் வெளிவந்துள்ளன. இவற்றுள் பல, தனிப்பட்ட நபர்களது மொழி பெயர்ப்புகளாகும். சில, சகல சபைகளையும் சேர்ந்தவர்களைக் கொண்ட குழுவினரது முயற்சியினால் வெளியிடப்பட்டவைகளாகும். அண்மைக் காலங்களில் வேதாகமப் புத்தகங்களின் பழைய கையெழுத்துப் பிரதிகள் சில கிடைத்துள்ளமையினால், அவற்றை அடிப்படையாய்க் கொண்டு மூல மொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் வண்ணம் வேதாகமத்தை மொழிபெயர்க்கக் கூடிய வசதிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இன்று வெளிவரும் ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமங்கள் ஜேம்ஸ் அரசனது அங்கீகரிக்கப்பட்ட பதிப்பைவிட சிறப்பான மொழி பெயர்ப்புகளாக உள்ளன. ஆனால் ஆரம்பகாலத்தில், ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் என கூறியவர்களது கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகின.
எனினும் 1870 இல் வின்செஸ்ட்டர் இன் பிஷப்பான வில்பர்ஃபோஸ் என்பவரது முயற்சி காரணமாக, ரோமன் கத்தோலிக்கச் சபை தவிர்ந்த ஏனைய சபைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழு, ஒரு புதிய வேதாகம மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டது. இக்குழுவினர் இரு பிரிவாகப் பிரிந்து, ஒரு பகுதியினர் இங்கிலாந்திலும் மறுபகுதியினர் அமெரிக்காவிலுமாக மொழி பெயர்ப்புப் பணியை ஆரம்பித்தனர். இங்கிலாந்து குழுவினர் தமது திருத்தப்பட்ட புதிய ஏற்பாட்டை 1881இலும், பழைய ஏற்பாட்டை 1885இலும் வெளியிட்டனர். எனினும், அமெரிக்க குழுவினர் 1901 இலேயே தமது மொழிபெயர்ப்பைப் பிரசுரித்தனர்.
இது, அமெரிக்க தராதரப் பதிப்பு என்னும் பெயரில் வெளிவந்ததோடு, இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட திருத்தப் பதிப்பைவிட வித்தியாசமான மொழிநடையிலேயே இருந்தது. இத்திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வேதாகமங்கள் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும்கூட, ஜேம்ஸ் அரசனது பதிப்பை வாசித்துப் பழகியவர்களது எதிர்ப்புகளுக்கும் விமர்சனத்துக்கும் முகங்கொடுக்க வேண்டியதாயிருந்தது. இம்மொழி பெயர்ப்புகளால், ஜேம்ஸ் அரசனது பதிப்பை மக்கள் உபயோகிப்பதை நிறுத்த முடியாது போய்விட்டது.
அண்மைக்காலங்களில் வேதாக மத்தின் பல பழைய கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளதோடு, புதிய ஏற்பாடானது ஆரம்பத்தில், முதலாம் நூற்றாண்டின் சாதாரண பேச்சு மொழியான கொய்னி என்னும் கிரேக்கத்திலேயே எழுதப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வேதாகமம் உயர்தர மொழி நடையிலேயே இருக்கவேண்டும் என நீண்ட காலமாக இருந்து வந்த கருத்தும் மாறத் தொடங்கியது. இதனால், அன்றாட பேச்சு மொழியிலான இலகு மொழிநடையில் பல ஆங்கில வேதாகமங்கள் வெளிவரத் தொடங்கின. இவற்றுள், 1885 இல் வெளிவந்த ஹெலன் ஸ்புரல் என்பவரது சாதாரண மொழியிலான பழைய ஏற்பாடும், 1895 இல் வெளிவந்த ஃபெரர் ஃபென்டன் என்பவரது இலகு மொழி நடையிலான புதிய ஏற்பாடும், 1905 இல் வெளிவந்த அவரது பழைய ஏற்பாடும், 1899 இல் பிரசுரமான 20 ஆம் நூற்றாண்டு புதிய ஏற்பாடும், 1913 இல் வெளிவந்த ஜேம்ஸ் மொஃபட் என்பவரின் புதிய ஏற்பாட்டின் புதிய மொழிபெயர்ப்பும், (1924இல் பழைய ஏற்பாட்டையும் இவர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்). 1903 இல் பிரசுரமாகிய ரிச்சர்ட் வேமத் என்பவரின் நவீன பேச்சிலான புதிய ஏற்பாடும், 1923 இல் வெளி வந்த எட்கர் குட்ஸ்பீட் என்பவரின் புதிய ஏற்பாட்டின் அமெரிக்க மொழி பெயர்ப்பும், 1927 இல் வெளியிடப்பட்ட ஸ்மித், கோர்டன், மீக், வோட் டர்மன் என்போரது பழைய ஏற்பாட்டின் அமெரிக்க மொழி பெயர்ப்பும், 1924 இல் பிரசுரமாகிய மொன்ட் கோமரி இன் மொழி பெயர்ப்பும், 1923 இல் பெலன்டைன் என்பவரினால் வெளியிடப்பட்ட ரிவர்சைட் புதிய ஏற்பாடும், 1947ஆம் ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கிய ஜே.பி.பிலிப்ஸ் என்பவரது பேச்சுமொழி நடையிலான மொழி பெயர்ப்பும், 1956 முதல் 1559 வரையிலான காலப் பகுதியில் வெளிவந்த வூஸ்ட்டின் விரிவுபடுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பும், 1958 இற்கும் 1965 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பிரசுரமான அம்பிலிஃபைட் பைபிளும், 1901இல் வெளிவந்த ஏ.எஸ்.வேஸ் என்பவரின் நிருபங்களின் புதிய பதிப்பும், 1955 இல் வெளிவந்த ஸ்கோபீஃல்ட் இன் புதிய ஏற்பாடும், 1959ல் பிரசுரமான நவீன ஆங்கிலத்திலான பேர்க்ளி பதிப்பும் முக்கியமானவைகளாகும். இன்று இதைப்போன்ற இலகு மொழி நடையிலான பல ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.
தனிப்பட்டவர்களுடைய இலகு மொழிநடையிலான ஆங்கில வேதாகமங்கள் மட்டுமல்ல, பல சபைகளைச் சேர்ந்த குழுவினால் மொழி பெயர்க்கப்பட்ட சில புதிய ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமங்களும் அண்மை காலத்தில் வெளிவந்துள்ளன. இவற்றில் 1946இல் வெளிவந்த திருத்தப்பட்ட தராதரப் பதிப்பு (ஆர்.எஸ்.வி) வேதாகமம் முதலிடம் பெறுகின்றது.

Thursday, January 2, 2014

புனித வேதாகமத்தின் வரலாறு பகுதி இரண்டு

சகோ.M.S.வசந்தகுமார்
 1901இல் வெளியிடப்பட்ட அமெரிக்க தராதரப் பதிப்பின் பதிப்புரிமை, மார்க்க கல்விக்கான சர்வதேச சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சங்கம், 1937 ல் அமெரிக்க தராதரப் பதிப்பைத் திருத்தி மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு ஒரு குழுவை நியமித்தது. 32 வேத பண்டிதர்களும் 50 ஆலோசகர்களும் இக்குழுவில் பணியாற்றினர். இவர்களது முயற்சி காரணமாக 1946இல் புதிய ஏற்பாடும், 1952இல் முழு வேதாகமமும் திருத்தப்பட்ட தராதரப் பதிப்பு எனும் பெயரில் வெளிவந்தது. அதே சமயம், லொக்மேன் எனும் நிறுவனம், அமெரிக்கப்பதிப்பின் புதிய திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு ஒன்றை 1971 இல் வெளியிட்டது. இது புதிய அமெரிக்க தராதரப்பதிப்பு (என்.ஏ.எஸ்.பி) என அழைக்கப்படுகின்றது.
அமெரிக்க தராதரப்பதிப்பை அமெரிக்கர்கள் திருத்தி வெளியிட்டபடியால், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பதிப்பு வேதாகமத்தை மறுபடியுமாகத் திருத்தி வெளியிடும் முயற்சிகள் 1930 இல் ஆரம்பமாகின. எனினும், 1939 இல் ஏற்பட்ட இரண்டாவது உலக மகா யுத்தத்தினால் இப்பணி பாதிக்கப்பட்டது. பின்னர் 1946ல் ஸ்காட்லாந்து சபையின் பொதுச் சங்கம் இப்பணியை ஆரம்பிக்கத் தீர்மானித்து, இங்கிலாந்திலுள்ள ரோமன் கத்தோலிக்கச் சபை தவிர்த்த ஏனைய சபைகளின் கூட்டுறவுடன் 1947 இல் ஒரு மொழி பெயர்ப்புக் குழுவை நியமித்தது. இக்குழுவினரது முயற்சி காரணமாக, 1961 இல் புதிய ஏற்பாடும், 1965இல் பழைய ஏற்பாடு உட்பட முழுவேதாகமமும் புதிய ஆங்கில வேதாகமம் எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
1610இல் ரோமன் கத்தோலிக்கச் சபையினால் வெளியிடப்பட்ட டூவாய் எனும் ஆங்கில வேதாகமம் பிஷப் சலோனர் என்பவரினால் திருத்தப்பட்டது. இவர் கி.பி.1749இற்கும் 1772இற்கும் இடைப்பட்ட காலத்தில் புதிய ஏற்பாட்டை 5 தடவைகள் திருத்தி வெளியிட்டதோடு, 1750 இலும் 1763 இலும் பழைய ஏற்பாட்டையும் இரு தடவைகள் திருத்தி வெளியிட்டார். 1810லிருந்து, அமெரிக்காவிலுள்ள ரோமன் கத்தோலிக்கச் சபையும் இத்திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை உபயோகிக்கத் தொடங்கியது. இதைவிட ஒரு சில ரோமன் கத்தோலிக்க வேதபண்டிதர்களது தனிப்பட்ட ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமங்களும் 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்துள்ளன. சலோனரின் மொழி பெயர்ப்பு மறுபடியுமாகத் திருத்தப்பட்டு, 1941இல் புதிய ஏற்பாடு அமெரிக்காவில் பிரசுரமாகியது. இத்திருத்த மொழிபெயர்ப்பு, அமெரிக்க கத்தோலிக்க வேதாகம ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டதாகும். இதன் பின்னர் எபிரேய மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட ரோமன் கத்தோலிக்கச் சபையினரது பழைய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு நான்கு பகுதிகளாக 1948 முதல் 1969 வரையிலான காலப்பகுதியில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க சபையின் புதிய ஏற்பாடு, லத்தீன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டிருந்தமையினால் 1970இல், மூலமொழியான கிரேக்கத்திலிருந்து நேரடியாக ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாட்டையும் அமெரிக்க கத்தோலிக்க வேதாகம ஒன்றியம் வெளியிட்டது. இவர்களது மொழி பெயர்ப்பு வேதாகமம், புதிய அமெரிக்க வேதாகமம் என அழைக்கப்படுகின்றது. இதேபோல, இங்கிலாந்திலும், வெஸ்ட்மின்ஸ்டர் பதிப்பு எனும் பெயரில் ரோமன் கத்தோலிக்க ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமம் பிரசுரிக்கப்பட்டது. இது கட்பர்ட் லெட்டர் என்பவரது முயற்சியினால் தயாரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாகும். இதன் புதிய ஏற்பாடு 1948ல் வெளிவந்தது. பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் 1935லிருந்து வெளிவரத் தொடங்கியபோதிலும் 1954ல் ஏற்பட்ட லெட்டரின் மரணம் இம்மொழி பெயர்ப்பு பூர்த்தியடைவதைத் தடுத்துவிட்டது.
1945ல் ஆர்.ஏ. நொக்ஸ் என்பவர் புதிய ஏற்பாட்டையும், 1949ல் பழைய ஏற்பாட்டையும், 1955ல் இரு ஏற்பாடுகளை ஒன்றாகவும் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்திலுள்ள ரோம சபையின் அங்கீகாரம் கிடைத்தது. இது லத்தீன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கில வேதாகமமாகும். பின்னர் வத்திக்கானின் 2வது ஆலோசனைச் சங்கத்தின் விளைவாக (1963-1965) வேதாகமத்தை வெளியிடுவதில் ரோமன் கத்தோலிக்கச் சபை மற்ற சபைகளுடன் இணைந்து பணிபுரியும் முயற்சி உருவானது. இதனால் 1965ல் திருத்தப்பட்ட தராதரப்பதிப்பு வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டையும், 1966ல் பழைய ஏற்பாட்டையும் ரோமன் கத்தோலிக்கச் சபை வெளியிட்டது.
இதன் பின்னர் 1967ல், ரோமன் கத்தோலிக்க சபை எருசலேமில் வெளியிட்ட ஆங்கில வேதாகமம் “எருசலேம் பைபிள்” என அழைக்கப்படுகிறது. இது எபிரேய, கிரேக்க, அரமிக், பிரான்ஸ் மொழி வேதாகமங்களை அடிப்படையாய்க்கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமமாகும்.
1962ஆம் ஆண்டு அமெரிக்க வேதாகமச் சங்கம் அன்றாட மொழியில் ஆங்கிலத்தில் ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தது. இதன் பயனாக 1966ல் நவீன மனிதனுக்கான நற்செய்தி எனும் தலைப்பில் புதிய ஏற்பாடும் 1976 இல் முழுவேதாகமமும் “குட்நியூஸ் பைபிள்” எனும் பெயரில் வெளிவந்தது. இதைத் தவிர இன்னும் சில ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமங்களும் தற்சமயம் வெளிவந்துள்ளன. இவற்றுள் முக்கியமானது இன்று பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படும், புதிய சர்வதேசப் பதிப்பு வேதாகமமாகும் (என்.ஐ.வி.). இதை வெளியிட வேண்டும் எனும் கருத்து அமெரிக்காவிலுள்ள இலிநொஸ் என்ற இடத்தில் 1965 இல் கூடிய சகல சபைகளையும் சார்ந்த வேத பண்டிதர்களால் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்துக்கு அதிக ஆதரவு கிடைத்தமையினால் 1966 இல் சிக்காகோ எனுமிடத்தில் கூடிய சபைத்தலைவர்களது கூட்டத்திலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 1967 இல் நியூயார்க் சர்வதேச வேதாகமச்சங்கம் இப்பணியைப் பொறுப்பேற்றது. இதன் பயனாக 1973இல் புதிய ஏற்பாடும், 1978இல் முழு வேதாகமமும் “புதிய சர்வதேச பதிப்பு” எனும் பெயரில் வெளிவந்தது. இன்றிருக்கும் ஆங்கில வேதாகமங்களில் இதுவே சிறப்பானதாகக் கருதப்படுவதோடு பெரும்பாலான கிறிஸ்தவர்களால் உபயோகிக்கப்பட்டும் வருகின்றது.

Wednesday, January 1, 2014

புனித வேதாகமத்தின் வரலாறு bible histroy

சகோ.M.S.வசந்தகுமார்
இன்று உலகிலேயே அதிகளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகமாக இருப்பது பரிசுத்த வேதாகமம் மட்டுமேயாகும். 1982 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி, உலகின் 275 மொழிகளில் முழுமையான வேதாகமமும், 495 மொழிகளில் புதிய ஏற்பாடும், 940 மொழிகளில் வேதாகமத்தின் சில பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதன்படி, 1982 இல் மொத்தம் 1710 மொழிகளில் வேதாகமம் இருந்துள்ளதை அறிகின்றோம். இன்று இதைவிட அதிகமான மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, இன்னும் பல புதிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றது.
1992 ஆம் ஆண்டு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கோட்டே டீ ஐவெயர் இன் மொழியான பீட்டேடலோவா என்னும் மொழியில் மாற்கு எழுதின சுவிசேஷம் வெளியிடப்பட்டபோது, வேதாகமப் புத்தகங்களின் மொழி பெயர்ப்புகள் 2000 மொழிகளாக உயர்வடைந்துள்ளது. எனினும், இன்னும் 4500 மொழிகளில் வேதாகமத்தின் சிறு பகுதிகூட மொழிபெயர்க்கப்படாமல் உள்ளது. இன்றுவரை மொழி பெயர்க்கப்பட்டுள்ள வேதாகமங்களுள் முக்கியமானவற்றை இவ்வத்தியாயத்தில் பார்ப்போம்.
ஐரோப்பிய மொழிகளில் வேதாகமம்
அப்போஸ்தலனாகிய பவுல் முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராட்சியத்திலிருந்த பிலிப்பி என்னும் பட்டணத்தில் சபையை ஸ்தாபித்தபோது ஐரோப்பா கண்டத்திற்குச் சென்ற கிறிஸ்தவம், படிப்படியாக ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியமையினால் அப்பிரதேசத்து மக்களது மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்படத் தொடங்கியது. இவற்றுள் ஆரம்பகாலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமங்களின் வரலாற்றை 7 ஆம் அத்தியாயத்தில் ஏற்கனவே அறிந்துகொண்ட நாம், இப்போது பிற்கால மொழி பெயர்ப்புப் பணிகள் பற்றி பார்ப்போம்.
(1) ஜெர்மனிய மொழிபெயர்ப்பு
ஜெர்மனிய கோத்திரங்களுள், கோத்திக் மற்றும் பிரான்கிங் இனத்தவரது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் பற்றி 7 ஆம் அத்தியாயத்தில் நாம் அறிந்து கொண்டோம். இவ்விரு ஜெர்மனிய கோத்திர இனத்தவரது மொழிகளில் மட்டும் அல்ல, இன்னும் சில ஜெர்மனிய கோத்திர மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, தற்சமயம் 200 இற்கும் அதிகமான இவற்றின் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சங்கீதப் புத்தகத்தைப் பலர் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துள்ளனர். 1350 இல் ஆக்ஸ்பேர்க் வேதாகமம் என அழைக்கப்படும் ஜெர்மனிய மொழியிலான புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1400 அளவில் டெப்வன்சிஸ் என அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் ஜெர்மனிய மொழி பெயர்ப்பு தயாரிக்கப்பட்டது. 1389 இற்கும் 1400இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு வேதப் பிரதியில், பழைய ஏற்பாட்டின் பகுதிகளும் ஜெர்மனிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. ஜோஹான் மென்டல் என்பவரினால் வெளியிடப்பட்ட ‘மென்டல் வேதாகமம்’ என அழைக்கப்படும் வேதாகமமே, ஜெர்மன் மொழியில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமமாகும். 1466 இல் வெளிவந்த இவ்வேதாகமம் பிற்காலத்தில் 18 பதிப்புகள் பிரசுரிக்கப்பட்டது.
வேதாகம சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் வேதாகமம், சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூத்தர் மொழிபெயர்த்து வெளியிட்ட ஜெர்மன் மொழி வேதாகமமாகும். ஜெர்மனியிலுள்ள ஒரு செல்வந்த குடும்பத்தில் 1483 இல் பிறந்த மார்ட்டின் லூத்தர், 1505 இல் ஒரு துறவுமடத்தில் சேர்ந்து 1507 இல் ரோம சபையின் மதகுருவானார். இறையியல் கல்வியில் பட்டம் பெற்று வேதாகம விரிவுரையாளராகிய லூத்தர் வேதவாக்கியங்களை ஆராயும்போது, மனிதன் ரோம சபையின் சடங்காச்சாரங்களை செய்வதன் மூலமாக அல்ல, மாறாக, இயேசுகிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமே இரட்சிக்கப்படுவான் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டமையினால், அக்காலத்தைய ரோம சபையின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தொடங்கினார். இதனால், ரோம சபை அவரை எதிர்க்கத் தொடங்கியது. 1521 ஆம் ஆண்டு மே மாதம் முதல், 1522 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்புக்காகத் தன் நண்பர்களினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சமயம், மார்ட்டின் லூத்தர், எரஸ்மஸ் என்பவருடைய கிரேக்க வேதாகமத்தை அடிப்படையாய்க் கொண்டு ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். இது 1522 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விட்டன் பேர்க் எனும் இடத்தில் அச்சிடப்பட்டது. 1523 ஆம் ஆண்டில் மார்ட்டின் லூத்தரின் பழைய ஏற்பாட்டின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு பகுதி பகுதியாக வெளியிடப்பட்டது. 1534 இல் பழைய ஏற்பாடு, தள்ளுபடி யாகமங்கள், புதிய ஏற்பாடு உட்பட முழு வேதாகமமும் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. பிற்காலத்தில் மாட்டின் லூத்தரின் மொழிபெயர்ப்பு திருத்தி வெளியிடப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தருடைய மொழி பெயர்ப்பே பிரபல்யம் பெற்று விளங்கியதோடு, வேறு சில மொழி பெயர்ப்புகளுக்கு அடிப்படையான வேதாகமமாகவும் இருந்தது.
மாட்டின் லூத்தரின் காலத்தில் அவருடைய மொழிபெயர்ப்பிற்கு இணையான வேறு மொழி பெயர்ப்புகள் எதுவும் வெளிவரவில்லை. அக்காலத்தில் வேறு நபர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஜெர்மன் மொழி வேதாகமங்கள் மார்ட்டின் லூத்தரின் மொழி பெயர்ப்பின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தன. 1527 இல் ஹைரனி முஸ் எம்சர் என்பவர், ரோமன் கத்தோலிக்க சபைக்காக லத்தீன் மொழி பெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு மார்ட்டின் லூத்தரின் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட்டார். 1534 இல் ஜோஹான் டயட்டன்பேர்க் என்பவர் எம்சரின் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட்டார். இது மறுபடியுமாக 1630 இல் கஸ்பர் யுலென்பேர்க் என்பவரினாலும் 1662 இல் மானிஸ் என்னு மிடத்திலிருந்த போதகராலும் திருத்தப்பட்டு கத்தோலிக்க வேதாகமம் எனும் பெயரைப் பெற்றது. இதேபோல, வேறுசிலரும் லூத்தரின் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
1602 இல் ஜோஹான்னஸ் ஃபிஸ்ச்சர் என்பவர் முழுவேதாகமத்தையும் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1726 இற்கும் 1742 இற்கும் இடைப்பட்ட காலத்தில் லூத்தரது ஜெர்மனிய மொழி பெயர்ப்பையும், அக்காலத்தைய சில ஆங்கில மற்றும் சூரிக் மொழி பெயர்ப்புகளோடு ஒப்பிட்டு ஒரு திருத்தப்பட்ட ஜெர்மன் மொழி வேதாகமத்தை ஜோனஹன் ஹியூ என்பவர் 8 பகுதிகளாக வெளியிட்டார். பிற்காலத்தில் வேறு சிலரும் லூத்தரின் மொழி பெயர்ப்பைத் திருத்த முற்பட்டாலும், அவர்களது மொழி பெயர்ப்புகள் ஜெர்மனிய கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. 1863 இல் பல சபைகளையும் சேர்ந்த ஒரு குழுவினர் மார்ட்டின் லூத்தரது வேதாகமத்தைத் திருத்தும் பணியை ஆரம்பித்தனர். இவர்களது முயற்சி காரணமாக 1867 இல் புதிய ஏற்பாடும், 1883 இல் முழு வேதாகமமும் ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. இம்மொழிபெயர்ப்பு குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்களை கவனத்தில் கொண்டு மறுபடியுமாக சில திருத்தங்கள் செய்யப்பட்ட புதிய ஜெர்மன் மொழி வேதாகமம் 1892 இல் பிரசுரிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் பல நவீன ஜெர்மன் மொழிபெயர்ப்பு வேதாகமங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் 1926 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஹேர்மன் மென்கே என்பவருடைய “மென்கே வேதாகமம்” முக்கியமானது. இது இருபது வருட கால முயற்சியினால் உருவான மொழிபெயர்ப்பாகும். பல தடவைகள் தனது மொழி பெயர்ப்பைத் திருத்திய ஹேர்மன் மென்கே, 1939 இல் தனது 97 ஆவது வயதில் திருத்தப்பட்ட தனது இறுதி மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்தார்.
இதன் பின்னர் 1956 இல், லூத்தரின் திருத்தப்பட்ட இன்னுமொரு ஜெர்மன் வேதாகமம் வெளியிடப்பட்டது. அண்மைக் காலத்தில் சில புதிய ரோமன் கத்தோலிக்க ஜெர்மன் வேதாகமங்களும் வெளிவந்துள்ளன.