Monday, April 22, 2013

ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்

ஜெபசீலன் தன் பெயருக்கேற்ப ஒரு ஜெப வீரர். தன் குடும்பத்தோடு மலையடிவார கிராமம் ஒன்றில் குடியிருந்தார். ஞாயிறு தவிர தினமும் மலையில் ஏறி, விறகுகளை வெட்டி, தனது இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி வந்து பக்கத்து கிராமங்களில் விற்று வந்து குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் பக்தி வைராக்கியம் நிறைந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முழுமையான இரட்சிப்பின் அனுபவத்தில் வாழாதவர்.
.
வழக்கம் போல அன்றும் விறகுகளை வெட்டி தன் வண்டியில் ஏற்றி கொண்டு புறப்பட்டார். பலத்த மழை பெய்தது. சற்று நேரம் மழைக்கு ஒதுங்கி விட்டு வண்டியை ஓட்டி வந்தார். வழியில் சக்கரம் சேறு நிறைந்த ஒரு குழியில் மாட்டி கொண்டது. வண்டியை வெளியே கொண்டு வர மாடுகளை முடுக்கி விட்டார். வண்டி நகரவில்லை. கண்ணீரோடு ஜெபித்தார். ஜெபித்து விட்டு வண்டியை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாடுகளை அதட்டினார். வண்டி ஒரு அடி கூட நகரவில்லை. மீண்டும் ஒரு முறை ஜெபித்தார். பலனில்லை. மூன்றாவது முறை, 'என்ன ஆண்டவரே, நான் உம் பிள்ளையல்லவா? ஜெபத்தில் எதை கேட்டாலும் செய்வேன் என்று சொல்லியிருக்கிறீரே, நான் இரண்டு முறை ஜெபித்தேன். நீங்கள் வண்டியை வெளியே வர செய்யவில்லையே' என்றார். ஆண்டவர் சொன்னார், ' ஜெபசீலன், நீ ஒரு ஜெபவீரன் என்பது உண்மை. நான் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன் என்பதும் உண்மை. அதே நேரத்தில் உன்னுடைய முயற்சியும் வேண்டும். நீ இப்பொழுதே போய் குழியில் மாட்டியிருக்கும் சக்கரத்தை இழு, நான் உனக்கு உதவியாய் இருப்பேன்' என்றார். அப்படியே ஜெபசீலன் சக்கரத்தை இழுக்க முயற்சித்த போது ஆண்டவருடைய கரமும் இணைந்து செயல்பட்டது. வண்டி குழியை விட்டு வெளியே வந்தது. ஆண்டவருக்கு நன்றி கூறி வண்டியை ஓட்டினார்.

Sunday, April 21, 2013

இஸ்ரவேலரை நடததினார். இன்றும் நம்மையும் நடத்துகிறார்

ஒரு முறை ஒரு இஸ்ரவேல் ரபியிடம் ஒரு மாணவர், 'தேவன் ஏன் ஒரு வருடத்திற்கு வேண்டிய உணவை ஒரே நாளில் கொடுக்காமல், ஒவ்வொரு நாளுக்கு வேண்டிய உணவை மாத்திரம் ஒவ்வொரு நாளும் வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேலருக்கு கொடுத்தார்?’ என கேட்டார். அதற்கு அந்த ரபி, ‘நான் உனக்கு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்' என்றுகூறி, ‘ஒரு ராஜாவுககு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு ஒரு வருடத்திற்கு வேண்டிய செலவை ஒரு குறிப்பிட்ட நாளில் முழுவதுமாக அந்த ராஜா கொடுப்பது வழக்கம். ஆனால் என்று அந்த பணத்தை கொடுப்பாரோ அந்த நாளில் மட்டுமே அந்த மகனை அவரால் காண முடிந்தது. மற்ற நாட்களில் பார்க்க வேண்டும் என்றாலும் அவரால் பார்க்க முடியாதபடி மகன் அந்த பணத்தை கொண்டு சந்தோஷமாய் செலவழித்து கொண்டிருந்தான். 

அப்போது அந்த ராஜா நினைத்தார். ‘என் மகனுக்கு தினந்தோறும் வேண்டிய பணத்தை மாத்திரம் தருவேன். அப்போது அவன் தினந்தோறும் என்னிடம் வருவான்' என்று நினைத்து, தினந்தோறும் அந்த நாளுக்கு வேண்டிய பணத்தை மாத்திரம் கொடுக்க ஆரம்பித்தார். அப்போது அந்த மகன், அவரிடம் தினமும் வந்து, பணத்தை வாங்க வேண்டி அவரிடம் வர ஆரம்பித்தான். அவன் தினமும் வர ஆரம்பித்தபோது, தகப்பனுடயை அன்பையும் ஞானத்தையும் மகனோடு உள்ள ஐக்கியத்தையும், உணர ஆரம்பித்தான். அதுப்போலத்தான், நம் கர்த்தர் வனாந்தரத்திலே அந்த இஸ்ரவேலரை நடததினார். இன்றும் நம்மையும் நடத்துகிறார் என விளக்கினார்.

வெட்கப்பட வேண்டாம்

மேரி அன்னா மார்ட்டின் என்னும் சிறுமி, தன் பெற்றோருக்கு ஒரே மகளாக வளர்ந்தவள். அவள் வாழ்ந்த நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் மாபெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. அவளுடைய தகப்பன் சொந்தமாக ஒரு பேக்கரி கடை வைத்திருந்தார். அவர் எப்போதும் சந்தோஷமாக காணப்பட்டார். அவருடைய மனைவியும் எப்போதும் பாடி கொண்டு அவர்கள் ஒரு சந்தோஷமான குடும்பமாக வாழ்ந்தனர். பஞ்சத்தின் காரணமாக அவர் தன் பேக்கரி கடையை இழக்க வேண்டியிருந்தது.
.
அதனால் அவர் வேறு எந்த வேலையும் செய்ய ஆயத்தமாயிருந்தார். எப்படியாவது தன் குடும்பத்திற்கு உணவை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் வேலையை தேடி கொண்டிருந்தார். அவருக்கு பெரிய பெரிய வீடுகளை சுத்தம் செய்து காவல் காக்கும் வேலை கிடைத்தது. ஆனால் அதினால் அவர் மனம் சோர்ந்து போகாமல், பாட்டு பாடியபடியே தன் வேலைளை ஒழுங்காக செய்து வந்தார். மேரி அன்னா மார்ட்டினுக்கு அவர் எங்கு வேலை செய்கிறார் என்று தெரியாமல் இருந்தது. அவள் தனது 13 ஆவது வயதில் உயர்நிலை பள்ளியில் சேர்ந்தாள். அவளுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் இருந்தது. ஒரு நாள் ஒரு பள்ளி மாணவி தன் உணவை தரையில் கொட்டி விட்டாள். அதினால் அவளுடைய ஆசிரியர் அவளுடைய தகப்பனின் பெயரை உரக்க சொல்லி கூப்பிட்டார். அப்போது தான் அவளுக்கு தெரிந்தது, தன் தகப்பன் அந்த பள்ளியில் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்கிறார் என்று. அப்போது அவளுடைய தந்தை சுத்திகரிக்கும் பொருட்களை எடுத்து கொண்டு வந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
.
அவளுடைய தோழி ஒருத்தி அவளிடம், 'அவருடைய பெயரும், உன்னுடைய பெயரும் ஒன்றாக இருக்கிறதே, அவரை உனக்கு தெரியுமா' என்று கேட்டாள். அப்போது அவள் தன் தலையை உயர்த்தி, சுத்தம் செய்யும் தன் தகப்பனை பார்த்து விட்டு, 'இவரை நான் முன்பின் பார்த்ததே இல்லை' என்று கூறினாள். அவளுடைய தகப்பானாருக்கு அவள் சொன்னது கேட்கவில்லை. அதை சொல்லிவிட்டப்பின், அவளுக்கு தன் மேலேயே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. சே, என்ன சொல்லி விட்டோம் என்று. பின், தன் தகப்பனின் தலையை தடவி, அவரோடு மிகவும் அன்பு கூர்ந்தவள் போல நடந்து கொண்டாலும், தன் தோழியிடம் அவள் கூறிய காரியத்தை அவளால் மறக்க முடியவில்லை. என்ன செய்தாலும், அவளுக்கு தன் தகப்பனை மறுதலித்த காரியமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.
.
வருடங்கள் கழிந்தது. அவளுடைய தகப்பனார் மிகவும் உடல்நிலை குறைவால் படுக்கையில் இருந்தார். அவரருகே அமர்ந்திருந்த அவள், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அதை கவனித்த அவளுடைய தாயார், ஏன் என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவள் நடந்த காரியத்தை கூறிவிட்டு, 'கடந்த 15 வருடங்களாக என் மனதை இந்த காரியம் அலைகழித்து கொண்டிருக்கிறது, நான் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டாலும், என் மனம் என்னை குற்றவாளியாக வாதித்து கொண்டே இருக்கிறது' என்று கதறினாள்.
.
அவளுடைய தாயார், அவளை கட்டியணைத்து கொண்டு, ' உன் தகப்பனாருக்கு தெரியும், நீ அவரை நேசிக்கிறாய் என்று. நீ அவரை தெரியாது என்று சொன்னதை அவர் அன்று கேட்டிருந்தாலும், அவர் உன்னை நிச்சயமாய் நேசித்திருப்பார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைய கொண்டு செல்லும்போது, சீமோன் பேதுரு அவரை தெரியவே தெரியாது என்று சாதித்ததை அறிந்த போதும், அவர் அவனை நேசித்தாரே' என்று ஆறுதல்படுத்தினார்கள். அதை கேட்ட அன்னாவின் இருதயம் அமைதியானது.

Saturday, April 20, 2013

டைட்டானிக் கதாநாயகன் கதை - ஜான் ஹார்ப்பர்

தண்ணீரில் மறைந்த கோதுமை மணி
டைட்டானிக் கதாநாயகன் கதை

உங்கள் அனைவருக்கும் டைட்டானிக் கதை நன்றாகவே தெரிந்திருக்கும். மனிதன் தனக்கு மீறின சக்தி ஒன்று உண்டு என்று உறுதியாய் நம்பின வருடம் 1912... இதை பற்றின பல கதைகளை கேட்டிருப்பீர்கள். இதோ மரண ஓலத்தில் எப்படியாவது பிழைத்துவிட மாட்டோமா என்று அனைவரும் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த போது மரணத்தை பார்த்து பயப்படாத ஓர் கிறிஸ்தவனை பற்றின உண்மை கதை.

இக்கொடூர சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்கு பிறகு டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து தப்பித்தவர்கள் நினைவு கூட்டத்திற்கு அழைக்கபட்டிருந்தார்கள். அங்கு வந்த ஓர் இளைஞன் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
இந்த இளைஞன் உடைந்து போன கப்பலின் நடுவே மாட்டிகொண்டு உயிருக்கு போராடிகொண்டிருந்தார். அப்பொழுது இவருடன் கப்பலில் வந்த ஜான் ஹார்ப்பர் என்பவர் இவரை காப்பாற்றி ஓர் சிறு படகில் ஏற்றினார். அவர் கேட்ட ஓர் கேள்வி "நீர் ரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?". அவ்விளைஞன் "இல்லை" என்றான். "இதனை விட அதிக மீட்பை கொண்ட ஒன்றை பற்றி உனக்கு தெரிய வேண்டி உள்ளது" என்று கூறின ஜான் அவருடன் சுவிஷேசத்தை பகிர்ந்து கொண்டார். பிறகு மீண்டும் ஜான் மற்றவர்களை காப்பாற்ற சென்று விட்டார். அச்சிறு படகில் சுமார் 6 பேரை காப்பாற்றினார். பலரை காப்பாற்றின இவர் தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பவர்களை பார்த்து "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்" என்று கத்தி கொண்டே இருந்தார். கடும் குளிரினால் தன் சக்தியை இழந்து தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த போதும் சுவிஷேசத்தை அறிவிப்பதில் இவர் தளரவில்லை. இயேசுவை பற்றி சொல்லிகொண்டே உயிரை இழந்தார்.

இதனை இந்த இளைஞன் கண்ணீருடன் கூறின போது அவ்வரங்கமே கலங்கிப்போனது. யாரிந்த ஜான் ஹார்ப்பர்?

மே 29, 1882 ல் பிறந்த இவர் தன்னுடைய 13 வயதில் இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். நான்கு வருடம் கழித்து அதாவது தன் 17 வது வயதில் இயேசுகிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் தீவிரமாக காணப்பட்டார். வேதத்தின் மேல் உள்ள வைராக்கியத்தினால் லண்டன் தெருவெங்கும் சுவிஷேசத்தை சொல்லிவந்தார். செப்டம்பர் 1896ம் வருடம் ஓர் சபையை நிறுவினார். தற்பொழுது "ஹார்ப்பர் நினைவு ஆலயம்" என்றைக்கப்படுகிறது. இந்த 13 வருட இடைவெளியில் திருமணம் செய்த ஜான் மனைவியை இழந்து ஓர் பெண் குழந்தையோடு "நேனா" வாழ்ந்து வந்தார்.

1912, ஏப்ரல் 14ம் நாள் டைட்டானிக் என்ற கப்பலில் பயணம் செய்த போது தான் விபத்தில் இவரும் இவரின் ஒரே பெண் குழந்தையும் மாட்டி கொண்டார்கள். உடனே இவர் தன் பெண் குழந்தையை அச்சிறு படகில் ஏற்றி தப்பிக்க செய்தார். அவளை முத்தம் செய்த இவருக்கு ஆவலுடன் தப்பிக்க மனது ஒத்துவரவில்லை. கடல் நீரில் உயிருக்கு போராடிகொண்டிருந்த ஆத்துமாக்களை கண்டு மனதுருகினார்.

தன் மகளை முத்தமிட்ட இவர் "உன்னை நிச்சயம் ஓர் நாள் சந்திப்பேன்" என்று கூறி விட்டு இந்த வாலிபனை காப்பாற்றி அச்சிறு படகில் ஏற்றினார்.

கலாத்தியர் 6:9. நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

இது எவ்வளவு பெரிய உண்மை...
2 தீமோத்தேயு 1:8. ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.

ரோமர் 10:13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14. அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15. அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.

மரணத்தை பற்றி எங்களுக்கு பயம் இல்லை
இறுதி மூச்சு வரை நாங்கள் ஓயாபோவதில்லை
கிறிஸ்துவை பகிர்வதை நிறுத்தவில்லை
பரலோகமே எங்கள் எல்லை
ஏன் என்றால்......
மார்தட்டி சொல்வேன்........நான் கிறிஸ்தவன்... 


தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Thursday, April 11, 2013

சகோதரி ஹேமா ஜான் சாட்சி


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துதல்களை கூறிக்கொள்கிறேன். உங்களை சந்திப்பதிலே ஆண்டவர் கொடுத்திருக்கிற இந்த கிருபைக்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். வேதம் சொல்கிறது "கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது". இயேசு கிறிஸ்து யார் என்று அறியாத ஓர் பிராமண குடும்பத்தில் இருந்து 89 ம் ஆண்டு ஆண்டவர் என்னை பிரித்து எடுத்தார். அவருடைய பிள்ளையாக மாற்றிக்கொண்டார். அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும்.

பிராமண குடும்பத்திலே பிறந்து வைராக்கியமான முறையிலே நான் வளர்க்கப்பட்டாலும் என்னுடைய படிப்பு கல்வி எல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளிலே தான் இருந்தது. கிறிஸ்தவ பள்ளியில் படித்தாலும் கூட உண்மையான ஆண்டவர் அன்பை அறியாமல் இருந்தேன். குடும்பத்திலே பல போராட்டங்களும் பிரச்சனைகளும் இருந்தது. என்னுடைய தகப்பனாருக்கு சரியான கண் பார்வை இல்லாதபடியினால் குடும்ப பாரத்தை சுமக்க கூடிய பொறுப்பு என் மீது வந்தது. வறுமையை தவிர குடும்பத்திலே மற்றொரு பெரிய பிரச்சனையையும் நான் சந்திக்கவேண்டி இருந்தது.

அது சமாதானமின்மை. சந்தோசமும், சமாதானமும் என் குடும்பத்திலே என் பெற்றோர்களிடத்தில் காணப்படவில்லை. அந்த சூழ்நிலையிலே நான் தேடுகிற நான் விரும்பிகிற சமாதானத்தை யார் கொடுக்க முடியும் என்கிற ஏக்கம் என் உள்ளத்திலே என் சிறு வயது முதலே இருந்து வந்தது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலையின் காரணமாக பாரம்பரியமாக பாடல் பாடுகிற கிருபை என் குடும்பத்திற்கு இருந்தபடியினால், என் முன்னோர்கள் அனைவரும் கர்நாடக சங்கீதத்திலே முறையான தேர்ச்சி பெற்றிருந்தபடியினால் எனக்குள்ளும் அந்த தாலந்து பாரம்பரியமாக வந்தது. இந்த தாலந்தை பல திரைப்பட பாடல்களை திரைப்பட குழுக்களில் பாடுவதின் மூலமாக நான் வெளிப்படுத்தி வந்தேன். இதன் மூலமாய் குடும்பத்தின் சூழ்நிலை மாறினாலும், வறுமையின் சூழ்நிலை மாறினாலும் குடும்பத்தில் சமாதானமும் நிம்மதியும் வரவில்லை.

அந்த வேளையிலே 89 ம் ஆண்டு அடையார் கேட் ஹோட்டல் என்று அழைக்கப்படுகிற ஐந்து நட்சத்திர ஹோட்டலிலே அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர்ந்த போது தான் "கல்பனா" "மேரி" என்ற இரண்டு சகோதிரிகளை சந்தித்தேன். என்னோடு பணிபுரிந்து வந்த அந்த சகோதிரிகள் ஆண்டவரை குறித்து எடுத்து சொன்னார்கள். அந்த இரண்டு நண்பர்களை சந்தித்ததன் மூலமாக "என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் இந்த ஆண்டவர் மட்டுமே என்பதை நான் புரிந்து கொண்டேன். உண்மையான கிறிஸ்தவன், அல்லது கிறிஸ்தவள் கிறிஸ்தவ பெயரை மாத்திரம் வைத்துகொண்டால் போதாது உண்மையாக ஆண்டவரை உள்ளத்தில் ஏற்று கொள்ள வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் என் இருதயத்திலே முழுமையாக இடம் கொடுக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையிலே எனக்கென்று ஓர் எதிர் காலத்தை யோசிக்க முடியாத அந்த சூழ்நிலையிலே

என்னுடைய குழுவில் ட்ரம்ஸ் வாசித்த ஜான் என்பவர் என்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் என்னில் திருமணமே செய்துகொள்ள விருப்பம் இல்லாதிருந்தது. என்னுடைய நண்பர்கள் சொன்னதன் காரணமாக 89ம் ஆண்டு அக்டோபர் மாதம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு சென்று ஜெபித்தேன். அப்போது அங்கிருந்த தேவ ஊழியர் "ராஜன் ஜான்" என்பவர் ஜெபத்தின் மூலமாக நான்கு காரியங்களை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். "உன் குடும்பத்திலிருந்து எனக்காக உன்னை பிரித்து எடுத்தேன்" "நீ என்னுடைய ஊழியத்தை செய்வாய்" உலகத்திற்காய், பணத்திற்காய், புகழுக்காய் நீ பாடி கொண்டிருக்கிறாய். ஆனால் என்னுடைய நாம மகிமைக்கென்று இந்த உலகம் முழுவதும் உன்னை அழைத்து செல்வேன் என்று வாக்கு பண்ணினார். "நீ எனக்கார் ஒரு அடி எடுத்துவைக்கும் போது நான் உனக்காய் யாவையும் செய்து முடிப்பேன்" என்று சொல்லும்போது என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் அந்த ஆண்டவர் மட்டும்தான் என்று புரிந்துகொண்டேன். அந்த ஜெபத்தின் முடிவிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டேன்.

24 வருடங்களாக நான் தேடி கொண்டிருந்த சமாதானமும் சந்தோசமும் அந்த ஜெபநேரத்திலே என் உள்ளத்திலே வந்தது. பலவித எதிர்ப்புகளின் மத்தியில் "ஜான்" அவர்களை 1990 ஆகஸ்ட் 24ம் நாள் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு முன் பல சினிமா பாடல்கள் பாடிகொண்டிருத நான் "பாடினால் இந்த ஆண்டவருக்கு மட்டும் தான் பாடுவேன்" என்று வைராக்கியமாய் ஒரு முடிவு எடுத்து என் தாலந்துகளையும், என் வாழ்க்கையையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புகொடுத்தேன். இந்த நாள் வரைக்கும் ஆண்டவரின் மகிமைக்காக பல ஆயிரம் பாடல்கள் பாட ஆண்டவர் உதவி செய்தார். 24 வருடமாக என் குடும்பத்திலே காணாத சமாதானத்தை தேவன் கொடுத்தார். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையுண்டாவதாக. பல ஒளிநாடக்களிலே பாடும்படியாக தேவன் வாய்ப்பு கொடுத்தார். குறிப்பாக சகோதரர் T . Agustin என்பவர் அதிகமாய் கிறிஸ்தவ பாடல்கள் பாடும்படியாக ஊக்கப்படுத்தினார்.

இயேசு அழைக்கிறார், சகோதரர் சாம் ஜெபத்துரை, சகோதரர் மோகன் சி லாசரஸ் என்று பெரிய ஊழியக்காரர்கள் ஒலிநாடாக்களில் பாடும்படியாக தேவன் எனக்கு கிருபை தந்தார். இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காக, நம் பாவங்களுக்காக, தன்னுடைய ஜீவனை கொடுத்தவர். என் குடும்பத்தின் சமாதானத்திற்கென்று பல இடங்களுக்கு சென்று, பல விக்கிரங்களை நான் தொழுது வந்திருக்கிறேன். ஆனால் ஒரு தெய்வத்தினாலும் என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொடுக்க முடியவில்லை. இந்த ஒரு ஆண்டவர் தான் எனக்காக யாவையும் செய்து முடித்தவர். எனக்காக தன ஜீவனை கொடுத்தவர்.

உங்கள் வாழ்க்கையிலும் கூட, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காய் ஜீவனை கொடுத்தவர், உங்களுக்காக மாட்டு தொழுவத்திலே பிறந்தவர் இந்த ஒரு தேவன் தான் என்பதை நீங்கள் புரிந்து அதை உங்கள் உள்ளத்திலே நீங்கள் அறிந்து அதை அறிக்கை செய்வீர்களேயானால் உங்கள் பாவமான வாழ்க்கையை விட்டு நீங்கள் திரும்புவீர்கலேயானால் உங்களுடைய உள்ளத்திலே இந்த ஆண்டவரால் வரமுடியும். என்னுடைய வாழ்கையில் செய்ததுபோல பல அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடைபெறும். ஆமென்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம் - பாடல் பிறந்த கதை


சருவ லோகாதிபா, நமஸ்காரம்...
சருவ லோகாதிபா, நமஸ்காரம்! சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்! தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம்.
 இந்த அருமையான துதிப் பாடலை எழுதிய  அருள்திரு. வேதமாணிக்கம்,
1864-ம் ஆண்டு கல்லுக் கூட்டத்தில், மதுரநாயகம். - தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20-வது வயதில், வேதமாணிக்கம் மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.

 வேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு  அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன் இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது. ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.

சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பட பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார். தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். இந்நிகழ்ச்கிகளில் பாட, “சுவிசேஷப் படையெழுச்சிக் கீதங்கள்,” என்ற 16 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தை வெளியிட்டார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார்.
ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்களையும், கதாகாலட்சேபங்களையும் நடத்தி வந்தனர். வெள்ளி, மற்றும் ஞாயிறு இரவு ஜெபக் கூட்டங்கள் வாத்தியக்கருவிகளுடன் பாட்டுகள் முழங்க நடைபெற்றன. 1917-ம் ஆண்டு மே  மாதம் 8-ம் தேதி, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில், 10-5-1917 அன்று, தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப
காலமல்லோ,” “ஜீவ வசனம் கூறுவோம்,”
என்ற பாடல்களும், திருச்சபைக்
கீர்ததனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இராபர்ட் மோரிசன் - மிஷனெரி வரலாறு

இராபர்ட் மோரிசன் 1782-1834

பத்தொன்பதாவது நூற்றாண்டில் முதல் பாதியிலே சீனா தேசத்திற்கு மிஷனெரியாகச் சென்றவர் இராபர்ட் மோரிசன். கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றின வேதத்தின் காலேப் இந்த மலைநாட்டை எனக்குத் தாரும் என்று ஜெபித்ததுபோல உலகிலே அதிக கடினமான பணித்தளத்தை எனக்குத் தாரும். அங்கு உமக்கென்று ஊழியம் செய்வேன் என்ற மோரிசனின் ஜெபத்திற்கேற்ப, சுவிசேஷம் வெளிப்படையாகச் சொல்ல அதிகத் தடை இருந்த சீனா தேசத்தில், 25 வருடம் பணிபுரிந்து, பல கடின பாதைகளைக் கடந்து, சீன மொழியில் வேதத்தை முதலாவது மொழி பெயர்த்து அழியாத கிறிஸ்துவின் வார்த்தையை சீன மக்களின் கரத்தில் தந்தவர் மோரிசன்.

பிறப்பும் வளர்ப்பும்

1782-ம் ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில் பிறந்த மோரிசன் எட்டுப் பிள்ளைகளில் கடைசி மகனாவார். தனது தந்தையின் காலணிகள் செய்வதற்கான மர அச்சுகளை உற்பத்தி செய்யும் கம்பெனியில், சிறு வயதிலிருந்தே உதவி வந்தார் மோரிசன். தேவ பக்தியுள்ள அவரது தந்தையின் மூலம் தனது ஓய்வு நேரத்தை வேதத்தைக் கற்பதில் செலவிட்டார். விளையாடுவதற்கு சிறிது நேரமே ஒதுக்கிவிட்டு, தனது சபைப் போதகரிடம் கிறிஸ்துவைக் குறித்தும் வேதப்பாடங்களை ஆராய்ந்து அறியவும் நேரம் செலவழித்தார்.

அழைப்பு

தனது 15-ம் வயதில், உண்மையான மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள் அனுதினமும் வளர ஆரம்பித்தார். சில மிஷனெரி ஸ்தாபனங்களின் மாத பத்திரிக்கைகளை வாங்கி வாசிக்கும்போது, இயேசுவைப் பற்றி அறியப்படாத வெளிநாட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்ற வாஞ்சை அவருக்கு ஏற்பட்டது. தானும் ஒரு மிஷனெரியாகச் செல்லவேண்டும் என்ற பாரம் அனுதினமும் அவரை உந்தித்தள்ள, தனது தரிசனத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் அவரது தாயாரோ தான் உயிருடன் இருக்கும் வரை வெளிநாட்டிற்கு எங்கும் மோரிசன் போகக்கூடாது என்பதில் அதிக உறுதியுடன் இருந்தார். தேவனின் வேளைக்காக காத்துக்கொண்டு, ஜெபித்துக் கொண்டே இருந்தார் மோரிசன். அவரது 20-வது வயதில் அவரது தாய் அதிக சுகவீனப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்ததால், தாயை அன்புடன் கவனித்து, அவரது கடைசி நாட்களில் கூட இருக்க கிடைத்த வாய்ப்பை நினைத்து தேவனைத் துதித்தார். 1802-ம் ஆண்டு அவரது தாயார் மரித்துப் போனார்.

தாயின் மரணத்திற்குப் பிறகு, இங்கிலாந்து சென்று, 2 வருடம் மிஷனெரிப் பயிற்சி பெற்றார். லண்டன் மிஷனெரி சங்கத்திற்கு விண்ணப்பித்தபோது, இவரை தங்களது மிஷனெரியாக ஏற்றுக்கொண்டனர். அதிக சந்தோஷமடைந்த மோரிசன், தனது குடும்பத்தினருக்கு இதை அறிவித்தபோது, ங்கிலாந்து தேசத்திலே ஊழியத்திற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும்போது, அந்நிய தேசத்தில்போய் உன் வாலிப வாழ்வை ஏன் வீணாக்கவேண்டும்? என்று சோர்வடையச் செய்தனர். எனினும், தனது ஊழிய அழைப்பில் மோரிசன் உறுதியாய் நின்றார். சீன தேசத்தைக் குறித்து பாரத்தைப் பெற்ற மோரிசன் அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, லண்டன் பட்டணத்திலே சீன மொழியைக் கற்க ஒரு வாய்ப்பை ஆண்டவர் தந்தார். லண்டன் மிஷனெரி ஸ்தாபனமும் இவருடன் சீனா செல்ல, ஏற்ற சக ஊழியர் கிடைக்கும் வரை காத்திருக்க சொன்னது. 1807-ம் ஆண்டு வரை சரியான சக ஊழியர் கிடைக்காது போனதால் இவரைத் தனியாகவே சீன தேசத்திற்கு அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனி இவரை கப்பலில் பயணம் செய்யவும், சீன தேசத்தில் குடியேறவும் அனுமதி தர மறுத்தது. எனவே முதலில் அமெரிக்க தேசம் சென்று அங்குள்ள மாநிலச் செயலாளரான ஜேம்ஸ் மாடிசனிடம் ஒரு அறிமுகக் கடிதம் பெற்றுக்கொண்டு, அமெரிக்கக் கப்பலில் சீன தேசத்திற்கு புறப்பட்டார்.

ஏழு மாதப் பிரயாணத்திற்குப் பிறகு 1807-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவிலுள்ள கேன்டன் என்ற பகுதிக்கு வந்து சேர்ந்தார். கேன்டனில் இருந்த அமெரிக்கக் கவுன்சில் இவரை ஏற்றுக்கொண்டது. ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியர் இவரை சந்தேகக்கொண்டு கண்காணிக்க ஆரம்பித்தனர். ஏனெனில் அந்நாட்களில் கிழக்கிந்தியக் கம்பெனியர் சுவிசேஷம் சொல்வதற்கு முற்றிலும் தடைசெய்து, வியாபாரத்தில் மட்டும் கவனத்தை செலுத்தினர். எனவே மோரிசனுக்கு சீனா மொழியைக் கற்பது கூட அதிக ரகசியமாகக் செய்யப்பட வேண்டியதாயிற்று. சக ஊழியர் கூட இல்லாதது, அதிக தனிமையை உணரவைத்தது. வீட்டிலிருந்தும் கடிதத் தொடர்பே இல்லாதது, அவரை அதிகம் சோர்வுறச் செய்தது. தனது நண்பனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் நேற்று உன்னிடமிருந்து நான் பெற்ற இரண்டாவது கடிதம். ஆனால் இதுவரை நான் 200 கடிதங்கள் எழுதியுள்ளேன். என் கடிதங்களைப் பெற்ற அனைவரும் அதிக வேலைப் பளுவினால் எனக்குக் கடிதம் எழுத இயலவில்லை போலும் என்கிறார்.

சுவிசேஷத்தை வெளிப்படையாகப் பிரசங்கிக்கக்கூடாது என்ற தடை கேன்டனில் இருந்த போதும், மோரிசன் தனது நேரத்தை வீணடிக்கவில்லை. இரண்டு ரோமன் கத்தோலிக்க நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் சீன மொழியைக் கற்றுக்கொள்ளச் சென்றபோது. அவர்கள் ஒப்புதல் தெரிவித்தபோதும், உமக்கு எங்கள் மொழியைச் சொல்லி தருவதால் எங்கள் உயிருக்கு ஆபத்து உண்டு. அதிகாரிகள் எங்களைக் கைதுசெய்து கொடுமைக்கு ஆளாக்குவதற்கு முன், நாங்களே எங்களை மாய்த்துக்கொள்ள எப்போதும் விஷம் வைத்து உள்ளோம் என்றனர். இவர்களிடம் ஜெபத்துடன் மொழியை நன்கு கற்றுக் கொண்டு முதலில் சீன அகராதியை உண்டு பண்ணி ரகசியமாக வேதத்தையும் மொழி பெயர்க்கலானார்.

கேன்டன் வந்து 18 மாதத்திலே சீன மொழியில் அகராதியை ஆயத்தம்பண்ணி, தந்த மோரிசனை கிழக்கிந்திய கம்பெனியார் பாராட்டி அவருக்கு மொழிபெயர்ப்பாளர் என்ற பதவியைத் தந்து மாத வருமானமும் தர முன்வந்தனர்.

குடும்ப வாழ்வு

சீன தேசத்தில் வாழ்ந்து வந்த இங்கிலாந்து மருத்துவரின் மகளான மேரி மார்டேனை திருமணம் புரிந்தார். சீனா தட்பவெப்ப சூழ்நிலையில் மேரி அதிக சுகவீனமடைந்து, 1815-ம் ஆண்டு, தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் இங்கிலாந்து போக நேர்ந்தது. அதிகமான வேதனையுடன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தனுப்பிய மோரிசன், தன்னுடைய முழு நேரத்தையும் ஊழியத்தில் செலவிட்டார். ஆறு வருடப் பிரிவுக்குப் பிறகு மேரியும் பிள்ளைகளும் 1821-ம் ஆண்டு சீனா வந்தபோதிலும் சிறிது நாட்களிலே மேரி சுகவீனமடைந்து மரித்துப்போனார். 9 வயது மகள் ரெபேக்காவும், ஏழு வயது மகன் ஜாணும் மறுபடியும் இங்கிலாந்து தேசத்திற்குக் கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். குடும்ப வாழ்வில் பல கஷ்டங்களையும், மனவேதனையையும் அனுபவித்த மோரிசன், பிள்ளைகள் போனபிறகு, தனிமையில் வேதத்தை மொழிபெயர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

சீன மொழியில் அவரது அறிவுத்திறன் வெகுவாக விருத்தியடைந்தது. சுவிசேஷத்திற்கு சீனாவில் முதல் மிஷனெரியாக இவர் கருதப்பட்டாலும் பகிரங்கமாக சுவிசேஷம் சொல்ல முடியவில்லை. ஊழியத்தின் முதல் விசுவாசி பட்டம், ஊழியம் ஆரம்பிக்கப்பட்டு, ஏழாவது வருடமே கிடைத்தது. மனித நடமாட்டம் இல்லாத இடத்தில், சீன அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகளின் கவனத்தில் இல்லாத பகுதியில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. சீனாவில் வாழ இடம் கிடைத்ததே கிழ்க்கிந்தியக் கம்பெனியரின் ஆதரவால்தான். கிழக்கிந்தியக் கம்பெனியர் இவரது சுவிசேஷப்பணிக்கு அதிகத் தடையாக இருந்தனர்.

1815-ம் ஆண்டு, சீன மொழியில் புதிய ஏற்பாட்டை, மொழிபெயர்த்து, வெளியிட்டபோது, கம்பெனியர் மோரிசனை வேலை நீக்கம் செய்தனர். அதிகக் கவலையுற்ற மோரிசன் தேவனைப்பற்றிக் கொண்டு ஜெபித்தபோது, அவரது வேலை நீக்க உத்தரவு அமலாக்கப்படாமல், ரத்து செய்யப்பட்டது. மோரிசனின் சீனமொழி ஞானம் கம்பெனியருக்கு அவசியமாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியரின் அச்சுறுத்தலும், சீனாவிலிருந்த ஒருசில கிறிஸ்தவர்களின் எதிர்ப்பும், இவரது ஊழியத்திற்கு அதிகத் தடையாக இருந்தது. எனினும் 1824-ம் ஆண்டு வேதத்தை முழுவதும் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இங்கிலாந்து தேசத்திற்கு விடுமுறைக்குச் சென்று, இரண்டு வருடம் அங்குள்ள பல பகுதிகளில் சீன தேசத்தின் தேவையை பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் மிஷனரியாக வர முன் வந்தவர்களுக்கு சீன மொழியை கற்றுக்கொடுத்தார். சீனப் பெண்கள் மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்படவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி தனது வீட்டிலே ஊழிய வாஞ்சையுள்ள பெண்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்தினார். அந்த வகுப்பில் பயின்ற அநேகர் பின் சீனாவிற்கு மிஷனெரியாகச் சென்றனர். அவர்களில் ஒருவர்தான் சீனா சென்ற மிஷனெரி மேரி அலடர்சே.

1826-ம் ஆண்டு மறுபடியும் சீனா வந்து, கேன்டன் பகுதியில் தனது பணியைச் செய்தார். சில கிறிஸ்தவ இலக்கியங்களையும் சீன மொழியில் மொழி பெயர்த்தார். இங்கிலாந்து, சீனா தேசத்திற்கு இடையேயுள்ள வியாபாரத் தொடர்புகளுக்கு மத்தியஸ்தராகப் பணி புரிந்தார். கம்பெனி வேலை, ஊழியம் என்று அதிக வேலைப் பளுவினால், பெலன் இழந்து, சுகவீனப்பட்டு 1834-ம் ஆண்டு மரித்துப்போனார். இவரது மரணத்திற்குப்பிறகு சில நாட்களிலே கிழக்கிந்திய கம்பெனியாரும், சின்ன அரசியல் நிலைமையினால் சீனாவைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சீனாவில் 25 வருடம் கடினமாகப் பணி செய்தும், சிலரை மட்டுமே கிறிஸ்துவுக்குள் வழிநடத்த முடிந்தபோதிலும், வேதத்தைச் சீன மொழியில் மொழிபெயர்த்து அழியாப்பணி செய்தார்.

கடினமான பணித்தளத்திலும் ஆண்டவருக்காகச் சாதனை புரிய நம்மில் எத்தனை பேர் ஆயத்தம்.

எலிசபெத் ஃப்ரை - மிஷனெரி வரலாறு

எலிசபெத் ஃப்ரை (1780-1845)
சிறைக் கைதிகளின் மிஷனெரி (1789-1845)
குற்றம் செய்த‌தால் பிடிக்கப்ப‌ட்டு, தண்டனை கிடைத்ததால் அடைக்கப்ப‌ட்டு, சிறைச் சாலையில் காலங்களைக் கழிப்பவர்களை சமூகம் பொருட் படுத்துவதில்லை. ஆனால் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அவர்களை மறப்பதில்லை. இன்று சிறை ஊழியம் பல நாடுகளிலும், பல சபைகளிலும் தொடர்ந்து நடத்தப்ப்ட்டு வரும் உன்னத ஊழியம். அவைகள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது எலிசபெத் ஃப்ரை ஆரம்பித்த ஊழியமே.

இங்கிலாந்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த எலிசபெத் வாலிபப் பருவத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டார். நார்விக் பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் நார்விக் நகரின் ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுப்பதும், ஏழைக் குழந்தைகளுக்கு ஞாயிறு பாட சாலை நடத்துவதும் அவருடைய ஊழியமாக இருந்தது. “குவேக்கர்ஸ்” என்னும் சபைப்பிரிவைச் சேர்ந்தவர் இவர்.

திருமணமான பின்பு எலிசபெத் ஃப்ரை எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் ஊழியத்தைத் தொடர்ந்தார். சுகவீனர்களைப் பராமரிக்கவும். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் துவங்கினார். ஆனால் அந்த ஊழியத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது.

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூகேட் என்று அழைக்கப்ப்டும் சிறைச்சாலையில் சீர்கெட்ட நிலைமைகள் இருப்பதாக அறிந்த எலிசபெத் உடனே செயல்பட ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மிகச்சிறிய அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். எவ்வித சுகாதாரமும் இல்லாமல் அழுக்கிலும், பயங்கரக் குளிரிலும் அவர்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், எலிசபெத் நகரத்தின் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அதுவரை கைதிகளைப் பற்றிய அக்கறை யாருக்குமே இல்லை. நாளடைவில் எலிசபெத்தின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. சிறைச்சாலையின் நிலைமையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.

ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் ஜெபமும், வேத வாசிப்பும் நடத்தப்பட்டது. தையற் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்ட‌து. இதுவரை வாழ்வை விரக்தியுடன் கழித்த கைதிகள் தையற் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதில் கிடைத்த வருமானம் அவர்களை நேர்மையுடனும், சுய மரியாதையுடனும் நடக்க உதவியது.

எலிசபெத் ஃப்ரை செய்த மற்றுமொரு முக்கிய சீர்திருத்தம் உண்டு. அந்த நாட்களில் லண்டன் நகரிலிருந்து கைதிகளைக் கப்பலில் ஏற்றி வெகு தூரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சிறைகளுக்குக் கொண்டு போய் விடுவது வழக்கம். அப்படிக் கொண்டு போகும் போது பெண் கைதிகளை அதிகாரிகள் மிகவும் ஈனமாக நடத்தினார்கள். நீண்ட கடல் யாத்திரையின்போது கூட கைதிகளின் விலங்குகளைக் கழற்றவில்லை. நோயுள்ளோருக்கு எந்தவித மருத்துவ சிகிட்சைகளையும் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவை அடைந்த பின்பும் கைதிகள் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

இவைகளை அறிந்த எலிசபெத் ஃப்ரை அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட ஆரம்பித்தார். அவருடைய விடாமுயற்சியினால், மேலே கூறப்பட்ட கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

நியூகேட்டில் ஆரம்பித்த சிறை சீர்திருத்தங்கள் விரைவில் நாட்டிலுள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் வலியுறுத்தப்பட்டது.

எலிசபெத் ஃப்ரையின் கனிந்த இதயத்தைக் கைதிகள் கண்கூடாகக் கண்டனர். ஒவ்வொரு தடவையும் கைதிக் கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது, எலிசபெத் அங்கு சென்று எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு வேதாகமமும், கம்பளி உடைகள் பின்னுவதற்கு வேண்டிய நூல்களையும், ஊசிகளையும் கொடுத்து அன்புடன் வழியனுப்பிவிட்டு வருவார். இப்படி ஒன்றிரண்டு தடவைகள் அல்ல, 25 வருடங்களாக ஊழியம் செய்தார்.

பெண்கள் அதிகமாக வெளியே செல்வதை சமுதாயம் விரும்பாத காலக் கட்டத்தில் எலிசபெத் ஃப்ரையைத் துணிச்சலுடன் செயல்பட வைத்தது, கர்த்தர் மீது அவர் வைத்த அளவற்ற அன்பும், பயனுள்ள சேவையைச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தான். அவரை அவ்வாறான ஊழியத்திற்கு அழைப்பித்தது.

கட்டுண்டவர்களை விடுதலையாக்க வந்த கர்த்தராகிய இயேசுவை காவலில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்கும்போது, ‘காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்லி மகிழுவார்.
சிறை ஊழியங்களுக்காக ஜெபிப்போம்!
அகில உலகுக்கு எலிசபெத் ஃப்ரை ஒரு சிறை சீர்திருத்தக்காரர் என்று மட்டுமே தோன்றினாலும் கிறிஸ்தவ வட்டாரத்தில் அவர் சிறைக் கைதிகளின் மிஷனெரி என்றே கருதப்படுகிறார்

வில்லியம் கேரி - வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி (William Carey) (ஆகஸ்ட் 17, 1761ஜூன் 9, 1834) ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக (இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்) இந்தியாவில் ஊழியம் செய்தவர். இவர் ’தற்கால ஊழியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். பப்திஸ்த மிஷினெரி சங்கத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் டச்சுக் காலனியான செராம்பூர், கொல்கத்தாவில் மிஷனரியாக பணியாற்றி வந்தவர், இவர் விவிலியத்தை பெங்காலி, சமஸ்கிருதம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷயரில் பவுலஸ்புரி என்ற கிராமத்தில் எட்மண்ட், எலிசபெத் கேரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். தந்தை எட்மண்ட் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் ஆறு வயதாக இருக்கும் போது தந்தை அக்கிராமத்தின் பாடசாலை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. செடிகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மிகவும் இள வயதிலேயே இலத்தீன், கிரேக்க மொழி]]களை தானே கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்.
தமது தந்தையின் விருப்பத்தின்படி, பதினான்காவது வயதில் அருகே உள்ள ஹெக்கில்டன் என்னும் கிராமத்தில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் கீழ் மாணவராகச் சேர்ந்தார். இவரது எஜமானன் கிளார்க் நிக்கோலஸ் அவரைப்போலவே ஆலயம் செல்லுபவராகவே காணப்பட்டார். அவரது சக மாணவராக இருந்த ஜோன் வார் என்பவர் கடமைக்காக மாத்திரம் ஆலயம் செல்வதை வெறுப்பவர். அவரிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து அறிந்து, தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். இங்கிலாந்து திருச்சபையில் இருந்து விலகிய கேரி ஹெக்கில்டன்னில் ஒரு சிறிய குழு கூடுகை(Congregational) திருச்சபையை ஆரம்பித்தார். நிக்கோலஸ் கேரிக்கு, தனது கிராமத்தில் கல்லூரி சென்று பயின்ற ஒருவர் மூலம் கிரேக்கம் கற்றுக்கொடுத்தார்.

இந்தியா வருகை

1781 ஜூன் 10 இல் டொலி என்பாரைத் திருமணம் செய்தார். பப்திஸ்த சபை பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் ஒரு மிஷனெரி, இந்தியாவின் கிறிஸ்தவ மத தேவைகளைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வில்லியம் கேரி, அந்தப் பேச்சின் மூலம் சவாலைப் பெற்றவராய், இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்லும்படியாகத் தன்னை அர்ப்பணித்தார்.
வில்லியம் கேரி, குடும்பத்துடன் 1793 நவம்பர் 9 கல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தார்.
கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும், மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் மொழியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்பொழுது வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும், தன் மனைவியையும் இழந்தார்.
இந்த சமயத்தில் செராம்பூரில் ஒரு இளம் மிஷனெரிக்குழுவுடன் இணைந்து வேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தனர். ஆனால் அவர்களுடைய அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் நெருப்புக்கு இரையானது. ஆனாலும் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்து வேத நூலை பல மொழிகளில் மொழிபெயர்த்தனர்.
வில்லியம் கேரி 1834 ஜூன் 9இல் மறைந்தார்

தமிழ் மறுமலர்ச்சியில் ராபர்ட் கால்டுவெல்

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன। காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.


வடமொழியைத் 'தேவ பாஷை' என உயர்த்தியும் தமிழை 'நீச்சபாஷை' எனத் தாழ்த்தியும், தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856, 1875 ) எனும் நூல் ஆகும்.

தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது. கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.

கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள 'கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று 'கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படி பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் 'அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் 'பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டி யிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புக்கொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார். கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது.

சென்னைக்கு வந்ததும் 'துருவர்' (Mr. Drew) எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலான வற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மி­சன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார். அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார். நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விரும்பாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.

மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் (Tracy) அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 2 தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையை அன்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது...
இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவு பெற்றவராக மாற்றினார். 1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 ரூபாய் அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் 'தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார். மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார். மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.


"திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே..." இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் (Dr. Gundert) ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப் பட்டுள்ளதே யெனினும் பொருந்தும் "(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் ...." தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.(தமிழ்வரலாறு, ப.33) எனவும் 'கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 4 எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.


கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளை யெல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது. அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் 'வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் 'லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.

கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார்.

கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84). கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக (யஷ்விஜுலிஸ்ரீ) கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 ஜனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.

கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெருநாடும், அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்து கொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்." இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

மார்ட்டின் லூத்தர் கடைசி வார்த்தைகள்

1546 பெப்ருவரி 18 காலையில் பரம வீடு ஏகினார்லூத்தர். அவரது கடைசி வார்த்தைகள் இவைகளே:

லூத்தரின் கல்லறையின் அருகில் நின்றுகொண்டுஅவர் ஈல்பன் (Eisleben) நகரில் செலவழித்த கடைசிநாட்களை நினைத்துப்பார்க்கலாம். 1546 ஜனவரி28இல் அந்நகர் வந்தடைந்தார். உடல்நலம் குன்றியிருந்தபோதும் பெப்ருவரி 17 வரையிலும் நடைபெற்றமாநாடுகளில் கலந்துகொண்டார்; நான்கு பிரசங்கங்கள் செய்தார்; மான்ஸ்பீல்ட் பகுதிக்கான சபை ஒழுங்குகளைப் பரிசீலனை செய்தார். 17ஆம் தேதி அவர்உடல்நிலை மிகவும் கெட்டுப்போனதால், அவரதுநண்பர்களான பிரபுக்கள் அவரை வீட்டைவிட்டுவெளியே போக அனுமதிக்கவில்லை. அன்றிரவு உணவுவேளையில், தம்மை நெருங்கிவரும் மரணத்தைப்பற்றிவெகுவாகப் பேசினார். அவ்வேளையில், மறு உலகில்நாம் ஒருவரையொருவர் அடையாளங்கண்டுகொள்ளமுடியுமா? என எழுப்பிய வினாவுக்கு, “முடியும் என்றேநினைக்கிறேன்” எனப் பதிலுரைத்தார். “நான் ஏன்இவ்வளவு களைப்பாய் இருக்கிறேன்?” என ஆச்சரியப்பட்ட அவர், “என் வேதனை முன்பைவிட மிகுதியாயுள்ளது. ஒரு அரைமணி நேரம் தூங்கினால்சரியாகிவிடும்” என்று சொல்லி, தூங்கப்போனார்.ஒன்றரைமணி நேரம் கழித்து பதினொரு மணிக்குஎழுந்த அவர் சுற்றியுள்ளோரைப் பார்த்து, “என்ன!இன்னுமா இங்கிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓய்வுவேண்டாமா?” எனக் கேட்டார்.

அங்கேயே இருக்கப்போவதாக அவர்கள் சொன்னபோது, லூத்தர் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தமிட்டார்:“என்னை மீட்டெடுத்த சத்தியபரனாகிய கர்த்தாவே,உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.அன்பு நண்பர்களே, ஆண்டவரின் நற்செய்திக்காகவும்,அதன் ஆளுகை விரிவாக்கத்திற்காகவும் ஜெபியுங்கள். ஏனெனில், சபைச் சங்கமும் (council of trent), போப்பும் அதனை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றனர்.” அதன்பின் ஒருமணி நேரம் தூங்கினார்.

எழுந்தபோது, “நான் மிகவும் சுகவீனமாயுள்ளேன்.நான் பிறந்த இடமாகிய இங்கேயே தங்கியிருத்தல்நல்லதென நினைக்கிறேன்” என்றார். வியர்வை வரும்படியாக அறையில் நடந்து பார்த்தார்; பின், படுத்துசுற்றிலும் அநேகத் துணிகளையும் தலையணைகளையும் வைத்துப்பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.பின்னர் ஜெபிக்கத் தொடங்கினார்: “என் பிதாவே,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, சகலஆறுதலின் ஊற்றே, நான் விசுவாசிக்கிற உமது பிரியகுமாரனை எனக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றிசொல்கிறேன். அவரையே அறிந்து, பிரசங்கிக்கிறேன்;அவரையே நேசித்து, அவரிலேயே மகிடிநகிறேன்; அவரையே போப்பும், பக்தியற்றோரும் நிந்திக்கின்றனர்.

எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இம்மைக்குரிய உடலைக் களைய ஆயத்தமாகிறேன். இவ்வாடிநவிலிருந்து நீங்கும் நேரம் நெருங்குகிறது. ஆயினும்,உம்மில் என்றென்றும் நிலைத்து வாடிநவேன் என்றறிவேன். சத்தியபரனாகிய கர்த்தாவே, நீரே என்னைமீட்டுக்கொண்டீர்; உமது கரங்களில் எனது ஆவியைஒப்படைக்கிறேன்.” அவரது கண்கள் மூட, மயக்கநிலைக்குள் ஆடிநந்தார். மறுபடி விழித்த வேளையில்,ஜோனாஸ், “பரிசுத்த தந்தையே, நீங்கள் போதித்தவிசுவாசத்தில் உறுதியோடுதான் மரிக்கிறீர்களா?”என்று கேட்டார். லூத்தர் கண்களைத் திறந்து, கூர்மையாய்ப் பார்த்து “ஆம்!” என்றார். பக்கத்திலிருந்தோர்பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெளிறிப்போனார்;உடல் குளிர்ந்தது; அவரது மூச்சு வேகமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில், ஓர் ஆழமான பெருமூச்சுடன், மார்ட்டின் லூத்தர் உயிர் நீத்தார். மகாஉயிர்த்தெழுதலின் நாள்வரையிலும், அவரது உடல்ஜெர்மனியின் விட்டன்பர்கில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அந்நாளிலே, அவரோடு நீயும் காணப்படுவாயா???

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் - பாடல் பிறந்த கதை

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்...


இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்


இந்த பாடல் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இப்பாடல் ஒரு இரத்தசாட்சி தன் மரண தருவாயில் இயற்றிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரியத்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் கதை இது. 
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஜெர்மனி போன்ற தேசங்களிலிருந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்காக பலர் வந்தனர். அவர்களில் வெல்ஷ் தேச மிஷனெரி ஒருவர் வடகிழக்கு இந்தியாவில் ஒரு கிராமத்தில் இரு பிள்ளைகளடங்கிய ஒரு சிறிய குடும்பத்தை ஆண்டவருகாக ஆதாயப்படுத்தினார். கிறிஸ்தவராக மாறிய அந்த மனிதனின் விசுவாசம் அந்த கிராமத்திலுள்ள மற்றவர்களையுயும் அசைத்தது. இதனால் கோபமடைந்த அந்த கிராமத்தலைவர் எந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லாரையும், அந்தக் கிறிஸ்தக் குடும்பத்தையும் கூட்டி " நீங்கள் எல்லாருக்கும் முன்பாக உங்கள் விசுவாசத்தை விட்டு விலகுங்கள்- இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் " என் எச்சரித்தான்.
அச்சமயத்தில் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அந்த மனிதன் ஒரு பாடலை இசைத்துப் பாடினார்,
" இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் (மூன்று முறை)
I have decided to follow Jesus
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்"
No trning back No turuning back

இதனால் கடுங்கோபமுற்ற அந்தக் கிராமத்தலைவன் அந்தக் கிறிஸ்தவனின் இரு பையன்களையும் கொல்லுமாறு தன் வில்வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அந்த இரு சிறுவர்களும் வில் அம்பினால் குத்தப்பட்டு கீழே விழுந்து கிடக்கையில்,அந்த கிராமத்தலைவன் அக்கிறிஸ்தவனை நோக்கி," இப்போதாவது நீ உன் விசுவாசத்தை விட்டு விட மாட்டாயா? பார் உன் இரு பையன்களும் நீ இழந்து விட்டாய். நீ உன் விசுவாசத்தை விட்டு விலகா விட்டால் நீ உன் மனைவியையும் இழந்து விடுவாய்" என கர்ஜித்தான்.அப்போது அந்த மனிதன்,

யாரில்லயெனினும் பின் தொடர்வேனே (மூன்று முறை)
Though no one joins me still i will follow
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
No turning back No turning back
என்று பாடினார்.

கடுங்கோபமுற்ற கிராமத்தலைவன் அவனுடைய மனைவியையும் கொல்ல உத்தரவிட்டான். ஒரு சில நிமிடங்களில் அவனுடைய மனைவியும் தன் இரு பிள்ளைகளைச் சாவில் சந்தித்தாள். கடைசியாக அந்த கிராமத்தலைவன், " நீ உயிர் பிழைப்பதற்கு ஒரு கடைசி தருணம் தருகிறேன், இப்போது இந்த உலகத்தில் உனக்கென்று யாருமே இல்லை. என்ன சொல்கிறாய்?" என்று வினவினான்.
அந்த கிறிஸ்தவ மனிதன் காலத்தால் அழியாத கடைசி கவியைப் பாடினான்:
"சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே
The Cross before me The World behind me
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
No turning back No turning back

இந்த மனிதனுடைய மரணத்தோடு கிறிஸ்தவம், நம் கிராமத்தில் ஒழிந்து விடும் என்று அக்கிராமத்திலுள்ள எல்லாரும் நினைத்தனர். ஆனால் அந்த மனிதனின் மரணம் ஒரு துவக்கமே. பரிசுத்த ஆவியானவர் அங்குள்ளவர்களின் மனதில் கிரியை செய்தார். இந்த மனிதன்,அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் 2000 வருடங்களுக்கு முன் வேறொரு தேசத்தில் வாழ்ந்து மரித்த ஒரு மனிதனுக்காக ஏன் மரிக்கவேண்டும்?" என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்ட அந்தக் கிராமத்தலைவன், " அந்தக் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத சக்தி இருந்திருக்க வேண்டும். நானும் அந்த அற்புதத்தை பெற விரும்புகிறேன்" என்று தன் மனதில் நினைத்தான்.

உடனடியாக தன் விசுவாசத்தை அறிக்கையிட்ட அந்த கிராமத்தலைவன், " நானும் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் தான்" என்று கூறினான். தங்கள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட அந்த கிராமத்தவர்கள் அனைவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் யாரில்லயெனினும் பின் தொடர்வேனே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

சந்தோஷம் பொங்குதே - பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே...

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
.....................

DME படிப்பை வெற்றியுடன் முடித்து, தன் விடுமுறை நாட்களைக் கழிக்கத் தன் அக்கா வீட்டிற்குச் சென்றான், 20-வயது நிரம்பிய வாலிபன் மைக்கேல். அக்காவின் கணவர் மறைத்திரு. D. Williams பட்டுக்கோட்டை CSI ஆலயப் போதகர். அந்நாட்களில் பிரதரன் அசெம்பிளி ஊழியர்கள் பாண்டிச்சேரியிலிருந்து அங்கு வந்து உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். மிஷினரி ஜான் கொடுத்த தேவசெய்தியின் மூலம் ஆவியானவர் பேச, 18.9.1969 அன்று மைக்கேல் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.

பின்னர் மைக்கேல் வேலையிலமர்ந்த போது, ஆண்டவரின் அழைப்பைத் தன் உள்ளத்தில் உணர்ந்தார். எனவே, அவருடைய ஊழியம் செய்ய, 1971-ம் ஆண்டு இந்திய இல்லந்தோறும் நற்செய்தி இயக்கத்தில் முழுநேரப் பணியாளனாகச் சேர்ந்தார். 1972-ம் ஆண்டு இவ்வியக்கத்தின் முன்னோடி மிஷனரியாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஹரூர் சென்றார். அங்கிருந்த சிலோன் இந்தியப்பொது மிஷன் ஆலயத்தை மையமாகக் கொண்டு இல்லந்தோறும் நற்செய்தியை அறிவித்தார்.

அந்நாட்களில் அத்திருச்சபையின் ஞாயிறுபள்ளிப் பொறுப்பும் மைக்கேலிடம் கொடுக்கபப்பட்டது. அந்த ஞாயிறு பள்ளிப் பிள்ளைகள் உற்சாகமாகப் பாடுவதைப் பார்த்து, அவர்களுக்குத்தான் அறிந்த பாடல்களைக் கற்றுக் கொடுக்க முயன்றார். ஆனால் அவையனைத்தும் அப்பிள்ளைகளுக்கு முன்னரே தெரிந்திருந்தது. எனவே, அப்பிள்ளைகளை உற்சாகப்படுத்த, புதுப்பாடல்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.

இந்நிலையில் தனது இரட்சிப்பின் அனுபவத்தையே தன் சாட்சிப் பாடலாகவும், அப்பிள்ளைகளுக்கு சவால் அழைப்பாகவும் இருக்க எண்ணி, இப்பாடலை இயற்றினார்.

பிள்ளைகள் புரிந்து பாடக்கூடிய எளிய நடையில் எழுதப்பட்;ட இப்பாடலின் 4 சரணங்களையும் சகோதரர் மைக்கேல் ஒரே நாளில் இயற்றி முடித்தார். இப்பாடலின் ராகத்தையும் அவரே அமைத்தார். அடுத்த ஞாயிறே, மைக்கேலின் ஆர்மோனியப் பின்னிசையுடன் ஞாயிறு பள்ளியில் இப்பாடல் அரங்கேற்றமானது. இந்த உற்சாகப் பாடலின் மூலம், பிள்ளைகள் இரட்சிப்பின் சந்தோஷத்தை அறிந்து கொண்டனர்.

பின்னர்IEHC-ன் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களில் மிஷனரிகள் இப்பாடலைப் பாடினர். 1974-ம் ஆண்டு IEHC நாகர்கோவில் பகுதிகளில் தங்கள் நற்செய்திப் பணியைச் செய்து வந்தனர். அக்குழுவில் IEHC-ன் முக்கிய பாடகரான சகொதரர் டி.தேவ பிச்சை முன்னோடி மிஷனரியாக இருந்தார். அந்த ஆண்டின் CSI திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களின் பாடல் பொறுப்பாளர் புதுப்பாடல்களைத் தேடி தேவபிச்சையிடம் வந்தார். சகோதரர் தேவபிச்சை அவருக்குப் பாடிக்காட்டிய பாடல்களில் இப்பாடலும் ஒன்று. இப்பாடலைத் தெரிந்தெடுத்து திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களில் பாடினர்.

பின்னர் 1975-ம் ஆண்டு, ஆசீர்வாத இளைஞர் இயக்க பிளெஸ்ஸோ முகாமிலும் இப்பாடல் பாடப்பட்டு பிரபலமானது. இதற்கு திருச்சி இசைவல்லுரனராக திரு. கூலிங் இசை அமைத்து, பிரபல பாடகியான திருமதி பாரதி பாடலைப் பாடவைத்து, பதிவு செய்து, இசைத் தட்டில் வெளியிட்டார். இதின் மூலம் இப்பாடல் பலருக்கும் அறிமுகமானது.

இப்பாடலின் வார்த்தைகளை ஆராய்ந்த நிபுணர்கள், “நானோ பரலோகத்தில்’ என்ற வரி சுய நல நோக்கை வெளிப்படு;த்துகிறது,’’ எனக் கருத்துத் தெரிவித்தனர். பாடலைக் கேட்பவரின் ஆசையைத் து}ண்டி, அவர்களையும் இவ்வரிக்கு உரிமையாளர்களாக மாற்றுவதே தன் எண்ணமாயிருந்தது, என சகோதரர் மைக்கேல் தெளிவுபடுத்துகிறார்

இயேசு அழைக்கிறார்... இயேசு அழைக்கிறார்... பாடல் பிறந்த கதை

இயேசு அழைக்கிறார்...

மத்தேயு 11:28
பாடல் : F.J. செல்லத்துரை

ராகம் : F.J. செல்லத்துரை.


சென்னை மெரினா கடற்கரை!

கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர் ! வியாதியுற்றோர், பிள்ளைப் பேறற்றோர், வேலை தேடி சோர்வுற்றோர், பிரச்சனைகளில் சிக்குண்டோர், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து, ஆறுதலின்றித் தவிப்போர், என, எண்ணற்ற தேவைகள், ஏக்கங்கள் நிறைந்த அக்கூட்டத்தில் தேவ செய்தியளிக்க வருகிறார் சகோதரர் அறிவர் D.G.S.தினகரன் !

இசைக்குழு மென்மையாய் இசைக்க, தனக்கு விருப்பமான இப்பாடலை இனிமையான குரலில் பாடுகிறார். தேற்றரவாளனாகிய து}ய ஆவியானவரின் பிரசன்னம் மைதானத்தை நிரப்புகிறது. ஆறுதலும், அற்புத சுகமும் ஆண்டவரிடமிருந்து அநேகர் பெற்று நன்றியுடன் தோத்தரிக்கின்றனர் !

உலகின் பல நாடுகளில், பல பட்டணங்களில் வல்லமை நிறைந்த அற்புத ஊழியத்தை தேவ பெலத்துடன் செய்துவரும் சகோதரர் தினகரனின் நற்செய்திப் பணிக்கு, அவர் தெரிந்து கொண்ட தலைப்பு, “இயேசு அழைக்கிறார்” ஊழியங்கள் !.

ஆம்! தேவ ஆசீர்வாதம் நிரம்பிய இவ்வூழியங்களுக்குப் பெயர் கொடுத்த இப்பாடலை சகோதரர் தினகரனே அவரது நற்செய்திக் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார். இப்பாடலைக் கேட்கும் எவரும் சகோதரர் தினகரனையும் அவரது அற்புத ஆறுதல் ஊழியங்களையும் நினைவுகூருமளவிற்கு, இப்பாடல் அவரோடு ஒன்றிவிட்டது. எனவே, அவரோடு இவ்வாறு நெருக்கமாக இணைந்த இப்பாடலை இயற்றியது அவரே என அநேகர் எண்ணியதில் வியப்பொன்றுமில்லை. இதினால், சகோதரர் தினகரனே இப்பாடலாசிரியரைத் தன் நற்செய்திக் கூட்டங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எளிய வார்த்தைகளுடன் அறிய உதவும் இப்பாடலை எழுதியவர் சகோதரர் கு.து. செல்லத்துரை ஆவார். இவர் ஜோதி-சைமன் தம்பதியருக்கு 26.08.1936 அன்று அரக்கோணத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்து, பின்னர் சென்னையில் கல்லு}ரித் துவக்க வகுப்புவரை தொடர்ந்தார்.

சகோதரர் செல்லத்துரை 1972-ம் ஆண்டு ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். திருச்சபை மறுமலர்ச்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல திருச்சபைகளில் வேதபோதனை செய்தார். 02.07.1973 அன்று திருமணமான இவருக்கு ஒரு ஆண்மகனும், இரு பெண்பிள்ளைகளும் உண்டு. குடும்பமாக ஊழியத்தைத் தொடர்ந்த செல்லத்துரையை ஆவியானவர் பெலப்படுத்தி, பல பாடல்களுக்கான ராகங்களைத் தந்தார்.

மேனாட்டிசையில் அடிப்படைப் பயிற்சிபெற்ற சகோதரர் செல்லத்துரை ஒரு பாடகர் குழுவை அமைத்து பல நற்செய்திக் கூட்டங்களில் பாடல் ஆராதனையை முன்னின்று நடத்தினார். அக்கார்டியன், மவுத் ஆர்கன்;, மேண்டலின், மற்றும் கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றவர். நற்செய்திக் கூட்டங்களில் பாடுவதற்கென தமிழிலும், தெலுங்கிலும் சேர்;ந்து மொத்தம் 150 பாடல்களை இயற்றி, ராகம் அமைத்திருக்கிறார்.

சகோதரர் செல்லத்துரை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு தனது ஊழியத்கைதத் தொடர்ந்தார். 1975-ம் ஆண்டு, ஒரு முறை அவர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இப்பாடலின் ராகத்தைதத் தந்தார். ராகத்திற்கேற்ற ஆறுதல் வார்த்தைகளுடன் இப்பாடலை இயற்றி, செக்கந்திரபாத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் முதன்முறையாகப் பாடினார். அப்போது கூட்டத்தில் அனைவரும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தனர். அன்றுமுதல் இப்பாடல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், அற்புத சுகத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொடுத்து வருகிறது.

எமில் ஜெபசிங் - ஜீவிக்கிறார் ! இயேசு ஜீவிக்கிறார் - பாடல் பிறந்த கதை

ஜீவிக்கிறார் ! இயேசு ஜீவிக்கிறார்!...

அந்த நற்செய்திக் கூட்டத்தில் சலசலப்பு! சிறப்புச் செய்தியாளர் இன்னும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டத்தைப்போல, “பிரசங்கியார் இதோ வந்துகொண்டே இருக்கிறார்!” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தாயிற்று. இப்போது கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்துவது? பாடுவதற்கு சிறப்புப் பாடல் கைப்பிரதியும் அச்சடிக்கவில்லை.

சமயோசித புத்தியுள்ள போதகர் மேடையில் எழுந்து வந்தார். “இப்போது நாம் ஆண்டவரைத் துதித்துப் பாடப் போகிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த சில பாடல்களைப் பாடுவோம்.” என்று கூறி, “மகிழ்வோம், மகிழ்வோம்….” எனப் பாட ஆரம்பித்தார். கூட்டத்தினரும் உற்சாகமாக இருகரம்தட்டி உற்சாகமாய்ப் பாடினர். அதைத்தொடர்ந்து, “அல்லேலூயா கர்த்தரையே, ஏகமாகத் துதியுங்கள்,” மற்றும், “இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்,” “பரிசுத்தர் கூட்டம் நடுவில்,” “ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் !” எனப் பாடல்கள் முழங்கின. செய்தியாளர் தாமதமாய் வந்த குறையை, ‘அப்பாடல் நேரம்’ நிறைவாக்கிற்று.

இப்படி, கிறிஸ்தவத் தமிழ் உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை, எல்லோருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்து, எல்லோராலும் உற்சாகமாய்ப் பாடப்படும் பல பாடல்களை இயற்றியவர், அகில உலக வானொலி ஊழியத்தின் தென் ஆசிய இயக்குனர், சகோதரர் எமில் ஜெபசிங் ஆவார். இந்திய தேசத்தின் மிகச் சிறந்த மிஷனரி இயக்கமாகத் திகழும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை வித்திட்டு, உரமிட்டு, வளர்த்திட்ட ஆதிகாலத் தலைவர்களில் இவரும் முக்கியமானவர். “பாடலென்றால் எமில்” என்று கூறுமளவிற்கு, இவ்வியக்க மக்கள் உற்சாகமாய்ப் பாட வழிவகுத்தவர். அழிந்து போகும் கோடிக்கணக்கான இந்தியர் மீதான இவரது உள்ளத்தின் ஆத்தும பாரம், இவரது பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் தொனிக்கும். இனிமையான ராகங்கள் இவரது பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் “பரிசுத்த பூமி” என, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959-ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும், மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப்பாடி, அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி, இப்பாடலை நேரடியாகக் கரும்பலகையில மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது.

“பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார் ! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ! சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் ! அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் !” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே,” என்ற ஆவியானவரின் பதில், வேதத்தின் அற்புதங்களைச் சிந்திக்கத் து}ண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம், என, பல அற்புதங்களை, ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும்பலகையில் பாடலாக உருவானது.

இப்பாடலை, கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர். அப்பெரிய வெள்ளிக்கிழமையானது, உயிர்த்தெழுந்து, சதா காலமும் ஜீவித்தரசாளும் மகிமை நிறை ஆண்டவரை, அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.

பாடல் பிறந்த கதை - நான் பாவிதான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்

நான் பாவிதான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்

இந்தப்பாடலை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடல், ஆத்தும இரட்சிப்பின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய தேவ ஊழியரான, பில்லி கிரகாம் அவர்கள், தன்னுடைய கூட்டங்களின் முடிவில், ஆத்துமாக்களை இரட்சிப்புக்கென்று அழைக்கும் போது இந்தப் பாடலை பாடி அழைப்பது வழக்கம்.

இந்தப் பாடலை எழுதியவர் சார்லட் எலியாட் (Charlotte Elliot) என்னும் அம்மையார் ஆவார். அவர் தனது 30 வயது வரை மிகவும், சந்தோஷமாய், எதைக் குறித்தும் கவலையில்லாதவராக, உற்சாகமானவராய், பாடிப் பறக்கும் பறவையைப் போல வாழ்ந்து வந்தார். அவர் 30 வயதை தாண்டிய போது, அவருக்கு ஒரு வியாதி வந்தது. அது அவரை படுக்கையை விட்டு எழுந்தரிக்க முடியாதபடி, அந்தப் பறவையின் காலை ஒடித்துப் போட்டதுப் போல படுக்கை கிடையாக்கிப் போட்டது.

அந்த அம்மையார் மனம் ஒடிந்துப் போனார்கள். தேவன் மேலும் உலகத்தில் உள்ள யாவர் மேலும் அவர்களுக்கு கோபம் வந்தது. சுயபரிதாபம் அவர்களை ஆட்கொண்டது. அப்பொழுது அவருடைய தகப்பனார், தங்கள் குடும்ப உறவினரும் கர்த்தருடைய ஊழியரும் பாடகருமான டாக்டர், சீசர் மலான் (Dr. Caesar Malan) என்னும் ஊழியரை தங்களது வீட்டிற்கு அழைத்தார். அவர் வந்துப் பேசினால் மகளுடைய இருதயம் மாறும் என்று நினைத்தார். அதுப்போல, அந்த டாக்டரும் வந்து சார்லட்டிடம் பேசிய போது, அவர்கள் தன் இருதயத்திலுள்ள வெறுப்பை எடுத்துக் கொட்டினார்கள். தேவனைப் பற்றிக் குறை கூறினார்கள். அதைக் கேட்ட அந்த டாக்டர், ‘நீங்கள் மிகவும் களைத்து இருக்கிறீர்கள், வெறுப்பையும், கோபத்தையும் உள்ளடக்கி, சோர்ந்துப் போயிருக்கிறீர்கள்’ என்றுச் சொன்னார். அப்போது, சார்லட், ‘நான் சந்தோஷத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னச் செய்ய வேண்டும் என்றுக் கேட்டார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும்’ என்றார். அப்போது அவர்கள், ‘நான் என்வாழ்வில் சில காரியங்கள் சரிசெய்ய வேண்டி உள்ளது. அவற்றை சரிசெய்தப் பிறகு நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன்Ï என்றுக் கூறினார்கள். அதற்கு டாக்டர், ‘நீங்கள் இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள், அவர் உங்களை ஏற்றுக் கொள்வார். மட்டுமல்ல, உங்கள் வெறுப்பு, கோபத்திற்கு பதிலாக, சந்தோஷத்தையும் சமாதானத்தையம் தருவார்’ என்றுக் கூறினார்.

அப்போதே அந்த அம்மையார், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அந்த நாளில்தானே இரட்சிக்கப்பட்டார்கள்.
அன்றிலிருந்து அந்த நாளை தனது ஆவிக்குரிய பிறந்தநாள் என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடினர்கள்.

பதினான்கு வருடங்கள் கழித்து, அவருடைய சகோதரன் ஒரு போதகராக இருந்தவர், அவர் ஏழையான ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, ஒரு பள்ளியை ஆரம்பிக்க விழைந்தார். ஆனால், அவருக்கு போதிய பண உதவி இல்லாததால், என்ன செய்வது என்று சார்லட்டிடம் கேட்டபோது, அவர்கள் ஒரு பாடலை எழுதி அதை வைத்து, நிதியை திரட்டலாம் என்றுக் கூறினார்கள். அப்போது அந்த சீசர் மலான் என்ற டாக்டர் சொன்ன ‘இருக்கிற வண்ணமாகவே கிறிஸ்துவிடம் வாருங்கள்’ என்றுச் சொன்ன வார்த்தைகளை, ஞாபகத்தில் வைத்து, இந்தப் பாடலை எழுதி, அதன் மூலம் பணத்தை திரட்டி, அந்தப் பள்ளியைக் கட்டினார்கள்.

சார்லட் தன் வியாதியிலிருந்து கடைசி வரை சுகமடையவில்லை என்றாலும், கடைசி வரை வீட்டிலேயே சிறைப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய இருதயம் தன் சிருஷ்டிகராகிய கர்த்தரை நித்தமும் துதித்து, அவர்கள், தன் தேவனிடத்தில் நேசத்தை வைத்திருந்தபடியால், 150 பாடல்களை இயற்றினார்கள். அவை ஆங்கில கிறிஸ்தவ வரலாற்றில், ஒரு எழுப்புதலை உருவாக்கிற்று என்பது உண்மை.

தங்கள் பெலவீனத்திலும் கர்த்தருக்கென்று பாடல்களை இயற்றி பாடிய அந்தக் கவிக்குயில், தனது 82ஆவது வயதில், நித்தியமான சுகத்தோடு, பெலவீனங்கள் மாறி தான் நேசித்த தேவனோடு என்றென்றும் வாழும்படி பறந்துச் சென்றது. ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அல்லேலூயா!

நான் பாவிதான் மெய்யாயினும் சீர் நேர்மை செல்வம் மோட்சமும் உம்மாலே பெற்று வாழவும் என் மீட்பரே, வந்தேன் வந்தேன்

சீகன் பால்கு - தமிழில் முதல் வேதாகமம்


சீகன் பால்கு

1682-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு. இவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார். தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த தரங்கம்பாடிக்கு (தற்போது நாகை மாவட்டத்தில் உள்ளது) வர ஆசைப்பட்ட அவரை டென்மார்க் அரசர் கப்பலில் அனுப்பி வைத்தார்.

சுமார் 3 மாதங்கள் பயணம் செய்து 1706-ம் ஆண்டு ஜுலை 9-ந் தேதி தரங்கம்பாடி மண்ணில் கால் பதித்தார். அப்போது இங்கு ஆட்சி செய்த அரசரும், தளபதியும் சீகன்பால்கு உளவாளி என்று நினைத்து கொடுமைப்படுத்தினர்.

தமிழ் அச்சு

அதை பெரிதாக நினைக்காத சீகன் பால்கு, பொதுமக்கள் உதவியுடன் தமிழ் மொழியை 11 நாளில் கற்றுக் கொண்டார். பின்பு அவர் 17 ஆயிரம் சொற்களை கொண்ட தமிழ் அகராதியை விரைவில் உருவாக்கினார். பிறகு பைபிளின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்தார்.

1710-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து தமிழ் அச்சு இயந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். பொறையாறு அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவி, மரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார். இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறை" என்றே அழைக்கப்படுகிறது.

1715-ம் ஆண்டு தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்கு முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானது, சிறப்பு அம்சமாகும்.

1718-ம் ஆண்டு இங்குள்ள கடற்கரை சாலையில் புதிய ஜெருசலேம் ஆலயத்தை கட்டினார். 1719-ம் ஆண்டு அதே இடத்தில் சீகன் பால்கு மறைந்தார். இன்று அவர் பெயர் விளங்கும் வகையில் கட்டப்பட்ட சுவிசேஷ லுத்தரன் ஆலயம் கம்பீரமான தோற்றத்தில் புதிய பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

அன்னை தெரெசா வாழ்க்கை

பல்லாயிரக்கணக்கான புகலிடமில்லாதோரைத் தாயினும் பரிவு காட்டி, அரவணைக்கும் அன்புள்ளம் ஒன்று 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி, தற்போதைய மாசிடோனிய குடியரசில் ஓர் எளிய குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக ஆக்னஸ் கோன்ஸா போஜாஸியு என்ற பெயரில் அவதரித்தது.

தன் 18ஆம் வயதில் லொரேட்டோ சகோதரிகளின் சபையில் இணைந்து துறவை ஏற்ற ஆக்னஸ், இந்திய மண்ணில் ஏழைகளுக்கு இறைப்பணி ஆற்ற விரும்பி பாடம் கற்பிக்க ஆங்கில மொழியைக் கற்றார். 1929ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்து, 24மே 1931இல் மத பிரமாணம் எடுக்கும் வேளையில் தெரேசா என்னும் பெயரைப் பூண்டார். 10செப்டம்பர் 1946இல், ஒரு இரயில் பயணத்தின் போது, ‘‘சேரிகளுக்குச் செல் - சேவைகளைச் செய்’’ என்ற இறைவனின் குரல் இதயத்தைத் தட்டுவதை உணர்ந்தார்.

அவ்வேளையில், இந்தியாவுக்கு இணையற்ற இலக்கியவாதிகளையும் , அறிஞர்களையும் அளித்த வங்க நிலம் ஏழைகள், அகதிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் என அநாதைகளின் இருப்பிடமாக இருந்தது. நெருக்கடியால் தெருவோரங்களிலும், இரயில் நிலையங்களிலும், தரிசு நிலங்களிலும் மக்கள் அவதியுற்றனர். நோய் பரவி, ஆங்காங்கே பிணங்கள் கேட்பாரின்றிக் கிடந்தன.

17ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய லொரேட்டோ மடத்தை விட்டு, போப் ஆண்டவரின் பிரத்தியேக அனுமதியின் பேரில் வெளியேறி, கல்கத்தாவின் மிக ஏழ்மையான மோட்டிஜில் சேரிக்கு மனம் நிறைந்த அன்புடனும், கையில் வெறும் ஐந்து ரூபாயுடனும் சென்றார். பல தரப்பட்ட அவமதிப்புகளினூடே தன் சேவையைத் தொடங்கித் தொடர்ந்தார்.

1950ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்து, தோட்டியா என்ற தாழ்த்தப்பட்ட இனத்தவர் அணியும் ஆடையை, அதற்கு அங்கீகரிக்கப்பட்ட உடையாக்கினார். 45வருடங்களுக்கு மேல் தொண்டாற்றிய அவர் முதலில் இந்தியாவின் பல இடங்களிலும், பின்னர் சர்வதேச அளவிலும் இத்தூய பணியை விரிவாக்கினார். 1952இல் ‘‘நிர்மல் இருதய்’’ என்ற இல்லத்தைத் திறந்தார். உயிர் பிரியும் தருணம் வரை கனிவுடனும், அன்புடனும் பராமரிக்கும் கருணை இல்லமாக அது செயல்பட்டது. இறைவனின் சாயலான மனிதனிடம் ஏசுவைக் கண்ட அன்னை தெரேசாவால் எந்தவொரு நோயாளியையும் அனாதையாக விட்டுவிட இயலவில்லை. பின்னர் 1957இல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தைத் தொடங்கினார்.

தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவுக்குக் குடியுரிமையும், பத்மஸ்ரீ விருதையும் 1962ஆம் ஆண்டில் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. 1972இல் ‘‘பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் விருது’’, 1980இல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான ‘‘பாரத ரத்னா’’ வழங்கப்பட்டன. சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும் ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக, 1979ஆம் ஆண்டில், ‘‘சமாதானத்துக்கான நோபல் பரிசு’’ பெற்றார். நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர், அதற்காகும் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ‘‘சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை’’ 1985ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் அன்னைக்கு வழங்கி கௌரவித்தார்.

தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக, 1962இல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்சின் ‘‘ரமோன் மேக்சேசே’’ விருதைப் பெற்றார்.

அவரது அதிகாரபூர்வமான வாழ்க்கை சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு, 1992இல் வெளியிடப்பட்டது.

அன்னையின் சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும், ஒரு சிலுவையும், ஒரு ஜெபமாலையுமே. ஆனால், விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர்  அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அன்பென்ற மழையில், இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள், அவரது 87வது வயதில், நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை 19அக்டோபர் 2003இல், அன்னை தெரேசாவிற்கு ‘‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’’ என்ற பட்டம் அளித்து