Saturday, April 26, 2014

அதன் அழகை ரசி

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். - (1தெசலோனிக்கெயர் 5:11).

.
ஒரு வயதான முதியவர் மரண படுக்கையில் இருந்து, நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தார். ஒரு நாள் அவருக்கு தன் வீட்டின் கீழே இருந்து அவருக்கு பிடித்தமான ரவா கேசரி செய்யும் வாசனை வந்தது. அதை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, எழுந்து கீழே விழுந்து, சிரமப்பட்டு கீழே சென்றார்.
.
உயிரை கையில் பிடித்தபடி கீழே சமையறைக்குள் சென்றபோது, அவரால் நம்ப முடியவில்லை. அவருக்கு பிடித்தமான உணவு வகைகளும், கேசரியும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் நினைத்தார், 'கடைசியாக என் கணவர் நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மரித்து போகட்டும்' என்று தன் மனைவி ஆசையாய் சமைத்திருப்பதாக நினைத்து சேகரியை பக்கத்தில் இருந்த ஒரு கரண்டியில் எடுத்து, அதை வாயில் வைக்கும் தருவாயில், அவருடைய மனைவி கையில் ஒரு அடி கொடுத்து, ' இந்தபக்கம் வராதீர்கள், இது உங்கள் அடக்கத்திற்கு வருபவர்களுக்காக செய்தது' என்று முதியவரை துரத்தி விட்டார்கள்.
.
அந்த பாட்டியம்மா மாத்திரம் அல்ல, நாமும் கூட அநேக வேளைகளில் அப்படித்தான் இருக்கிறோம். உயிரோடு இருக்கும் நேரத்தில் நாம் அவர்களிடம் நீர் எத்தனை அருமையானவர் என்று சொல்வதில்லை. ஆனால் மரித்தப்பின் எத்தனை எத்தனை வார்த்தைகள் அவரை புகழ்நது பேசுகிறோம். அவர் உயிரோடு இருக்கும்போது அந்த வார்த்தைகளை சொன்னால் அவர் எப்படி மகிழ்வார்!
.
மலர்களை ஒரு மனிதர் மரித்தப்பின் சார்த்துகிறோம். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கொடுத்தால் அவர் அதன் அழகை இரசிப்பாரே!
.
நம்முடைய நாட்டில் மரித்தப்பின் அநேகருக்கு பெரிய பெரிய விருதுகளை கொடுப்பார்கள். அவர் ஒருவேளை மிகவும் வயதாகிதான் மரித்திருப்பார். அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுத்திருந்தால், அந்த வயதான காலத்தில் மகிழ்ச்சியோடே இருந்திருப்பாரே!
.
ஒருவேளை உங்களுக்கு யாராவது விசேஷித்தவர்களாக இருந்தால், அவர் மரிக்கும்வரை காத்திராதேயுங்கள். அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை வாழ்த்தி, உள்ளதை உள்ளபடி சொல்லி, அவரை மகிழ செய்யுங்கள்.
.
ஒருவர் செய்கிற நன்மையான காரியங்களை பாராட்ட மறவாதீர்கள். நீங்கள் பாராட்டுவதால் அவர் தலைகீழாக நிற்க போவதில்லை, ஆனால் அவர் கர்த்தருக்குள் இருந்தால் அவர் கர்த்தரை அதற்காக துதிப்பார், பெருமையடைய மாட்டார்.
.
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். ஆமென் அல்லேலூயா!

No comments:

Post a Comment