Friday, August 1, 2014

நாம் கட்டும் வீடு

ஒரு வீடு கட்டிக் கொடுக்கும் மேஸ்திரி வயதாகிப்போனதினால் தன்வேலையிலிருந்து ஓய்வெடுக்க விரும்பினார். அதை தன் எஜமானிடம் சொன்னபோது, அவர், தனக்கு கடைசியாக ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், அதை ஒரு அருமையான நண்பருக்கு கொடுக்க வேண்டும் என்றும், அதை நல்லபடியாக கட்டிக் கொடுத்து விட்டு, நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார். அதைக் கேட்ட மேஸ்திரிக்கு வருத்தமாக இருந்தது, ‘நான் ஓய்வெடுக்கலாம் என்றால் இப்படி நமக்கு வேலைக் கொடுக்கிறாரே’ என்று, ‘நான் என் இஷ்டப்படி கட்டுவேன்’ என்று நினைத்தவராக, இருப்பதிலேயே குறைவான விலையில் சாமானங்களை வாங்கி, ஏதோ கட்டி முடிக்கவேண்டும் என்று கட்டி முடித்து, சாவியை எஜமானரிடம் கொடுத்தார்.
.
எஜமானர் அந்த சாவியை வாங்கி, ‘இந்த வீட்டை யாருக்கு கட்டச்சொன்னேன் தெரியுமா? அது உங்களுக்குத்தான்’ என்று சாவியை அவரிடமே திருப்பிக் கொடுத்தார். அதைக் கேட்ட மேஸ்திரி அதிர்ந்துப் போனார். ‘முதலிலேயே தெரிந்திருந்தால் நல்ல விலையேறப் பெற்ற சாமானங்களை வாங்கி, வீட்டைக் கட்டியிருப்பேனே’ என்று நொந்துக் கொண்டார்.
.
நாம் ஒவ்வொருவரும்கூட கிறிஸ்துவின் அஸ்திபாரம் என்னும் அவருடைய வார்த்தையின் மேல் அஸ்திபாரம் வைத்து, நம்முடைய சரீரமாகிய தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறோம். அவருடைய உபதேசம், விசுவாசம், நம்பிக்கை என்னும், பொன் வெள்ளி மற்றும் விலையேறப் பெற்ற கற்களினால் அதைக் கட்டும்போது ஒரு நாள் நியாயத்தீர்ப்பில் அக்கினியானது பரிசோதிக்கும்போது நமது சரீரமாகிய தேவனுடைய ஆலயம் நிலைத்து நிற்கும். ஆனால் அவருடைய உபதேசம் அல்லாத மற்றவற்றின் மேல் வீடு கட்டப்படுமானால் அது மரம், புல், வைக்கோலுக்கு சமானமாய், நெருப்பு பரிசோதிக்கும்போது பரிட்சைக்கு நில்லாது. அது அழிந்துப் போகும். ஆகவே நாம் கிறஸ்துவின் உபதேசத்தில் நமது வாழ்க்கை நிற்கும்படியாக கட்டுவதற்கு எச்சரிக்கையாக இருப்போம்.


போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். - (1கொரிந்தியர் 3:11-15)

No comments:

Post a Comment