Friday, October 4, 2013

பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது

ஒரு முறை சுவிசேஷகர் பில்லிகிரஹாம் அவர்கள் செய்தியளிக்கும்படி லண்டனில் ஒரு நற்செயதி கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார்கள். பில்லிகிரஹாம் இங்கே கூட்டம் நடத்த வரக்கூடாது என்று பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. 'காஸ்பல் சர்க்கஸ் நடத்த பில்லிகிராஹம் வருகிறார்' என்றெல்லாம் மீடியாக்கள், பத்திரிக்கையெல்லாம் அவரைக் கிண்டல் பண்ணி சரமாரியாக எழுதினர். திருச்சபைகள் கூட அவரை எதிர்த்தன.
.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரும், அவருடைய மனைவியும் கப்பலில் வந்து லண்டன் துறைமுகத்தில் இறங்கியவுடன் பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு, 'எங்கள் லண்டனை மாற்ற வந்திருக்கிறீர்களே, உங்கள் அமெரிக்காவை மாற்றி விட்டீர்களா?' என்றெல்லாம் ஆளாளுக்கு பல விதமான கேள்விகளைக் கேட்டு பரியாசம் பண்ணினார்கள். சுவிசேஷத்தை அறிவிக்க வந்த ஒரு கிறிஸ்தவ நாடு இப்படியாக இருக்கிறதே என்றெண்ணி, பில்லிகிரஹாம் மனமுடைந்து போனார். துறைமுகத்திலிருந்து, தாங்கள் செல்ல வேண்டியப் பட்டணத்திற்கு ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, 'இயேசுவே காரியங்கள் இப்படியிருக்கிறதே, எப்படி நான் இங்கு போய் ஊழியம் செய்ய போகிறேன்?' என்று இருதயம் நொறுங்குண்டு தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்த்தார்.
.
'அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்' என்ற வேத வசனத்தின் மூலம் தேவன் அவரோடு பேசினார். உடனே அவர், 'ஆண்டவரே, என்ன நிந்தை, நெருக்கம், அவமானம், போராட்டம் வந்தாலும் அவைகளை சகித்துக் கொள்ளக் கூடிய கிருபையை எனக்கு தாரும்' என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார். உடனே பாரமெல்லாம் மாறி அவரது உள்ளம் இலகுவாகி விட்டது. இரயிலிலிருந்து அவர்கள் இறங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். 'உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா?' என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதை கண்ட பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
.
பிரியமானவர்களே, நீங்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினிமித்தமோ, அவரை மற்றவர்களுக்கு அறிவித்ததினிமித்தமோ உங்கள் குடும்பத்தாராலும், மற்றவர்களாலும் நிந்தனையும், அவமானத்தையும் அடைந்து வருகிறீர்களோ? கலங்காதீர்கள்! கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் சகலத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகித்துக் கொள்ளும். அப்பொழுது தேவ அன்பு நம் இருதயத்திற்கு மருந்தாய் அமையும். யார் உங்கள் மேல் எரிச்சலானார்களோ, அவர்களே உங்கள் பக்கம் வரும்படி தேவன் அவர்களை மாற்றுவார். அப்படி அவர்கள் வராவிட்டாலும், தேவ அன்பு உங்களை மூடிக் கொள்ளும். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரிப்பீர்கள். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆத்துமாக்கள் உங்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மனம் சோர்ந்து போகாதிருங்கள்.

No comments:

Post a Comment