Monday, September 29, 2014

விலையுயர்ந்த வைரம் - ஜெபிக்கிற ஜெபங்கள்

பல வருடங்களாக அந்த மரம் அக்காட்டிலே இருந்தது. மிகுந்த ருசியுள்ள நல்ல கனிகளைக் கொடுத்து, பறவைகள், விலங்குகள், வழிப்போக்கர்கள் என அனைவரும் பசியாற பழங்களைக் கொடுத்தது, ஆனால் ஒருநாள் வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது அந்த மரம். அவ்வழியே சென்ற ஒருவரும் அதை தூக்கி நிறுத்த முன்வரவில்லை. பரிதாபத்தோடு அதைப் பார்த்துவிட்டு சென்று விட்டனர். அந்த மரமோ, 'நான் எவ்வளவோ கனிகளைக் கொடுத்து மற்றவர்களுக்கு உதவியாகத்தானே இருந்தேன். எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே' என மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டது.
.
நாட்கள் உருண்டோடி வருடங்களாயின. மரம் மண்ணுக்குள் புதைந்து போனது. பூமியின் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தினால் அது நிலக்கரியாக மாறியது. ஒருநாள் சாலையமைப்பதற்காக ஆட்கள் வந்து தோண்டினபோது நிலக்கரி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். மேலும் தோண்டினபோது மிகவும் கடினமான கல்போன்ற ஒரு பகுதியை கண்டு அதை வெட்டி எடுத்து சோதித்தபோது அது விலையுயர்ந்த வைரம் என்று கண்டுபிடித்தனர். இறுதியில் சரியான அளவில் வெட்டப்பட்டு, ஜொலிக்கிற வைரமாக மாறினது.

பிரியமானவர்களே, நீங்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்ந்து மிகுந்த கனிகளை கொடுத்து வருகிறவர்களாக இருக்கலாம். ஆனால் அதினிமித்தம் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிதத்ள்ளி தனிமைப்படுத்தலாம். இருப்பினும் எல்லா கஷ்டங்களையும் அவதூறான வார்த்தைகளையும் பொறுமையாய் சகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்ணீரோடு மறைந்திருந்த ஜெபிக்கிற ஜெபங்கள் உங்களை விலையுயர்ந்ததாக்கி, உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிக்கும்.

No comments:

Post a Comment