Wednesday, December 3, 2014

அந்நிய பாஷை

அந்நிய பாஷை.. வரமா? பேசாதவர்களுக்கு சாபமா?
ஓர் கிறிஸ்தவராக இங்கே அதை ஆராய்ந்து பார்போமே?

அந்நிய பாஷை எப்போது ஆரம்பித்தது? யார் மூலமாக உலகத்திற்கு வெளிப்பட்டது? பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எல்லாம் அந்நிய பாஷையில் கர்த்தரோடு பேசினார்களா? அந்நிய பாஷை பேசினால் தான் கர்த்தரோடு ரகசியம் பேச முடியுமா? அந்நிய பாஷை பேசினால் தான் பரலோகமா? அந்நிய பாஷை பேசுபவர்கள் எல்லாம் அதிகப்ரசங்கிதனம் பண்ணுகிறார்களா? அவர்கள் மட்டும் தான் பரிசுத்தவான்களா? பரலோகம் செல்வதற்கு இது ஓர் அடையாளமா? அன்னியபாஷை பேசும்போது மட்டும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபடுகிறோமா? இயேசு கிறிஸ்து அன்னியபாஷை பேசினாரா? என்ற பல கேள்விக்கு இங்கே சில வரிகளில் பதில் தேடுவோமே?

முக்கியமாக அந்நிய பாஷைக்கு அடித்தளமாக அமைவது அப்போஸ்தலர் 2ம் அதிகாரம். பெந்தேகோஸ்தே நாளில் ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் அந்நிய பாஷை unknown tongues பேசவில்லை. பல பாஷைகளை Other Tongues பேசினார்கள். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. அந்நிய பாஷை என்பது ஒன்று தானா? அல்லது பல பாஷைகள் அடங்கியதா? இதற்கு பதில் அப்போஸ்தலர் 2:4 4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

ஆவியின் நிரப்புதல் அன்னியபாஷைகோர் அடையாளமா? அநேகர் அப் 2:1-4 வசனங்களை மேற்கோள்காட்டி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவேண்டும் என்றால் இடிமுழக்கமும், அக்கினிமயமான நாவுகளும், அந்நியபாஷையும் கண்டிப்பாக காணப்படவேண்டும். இதுவே பரிசுத்த ஆவியின் அடையாளம் என்று வாதிடுபவர்கள் உண்டு. வேதாகமத்தில் பல இடங்களில் பரிசுத்த ஆவியானவரால் தேவனின் பிள்ளைகள் நிரப்பட்டபோது பல அடையாளங்கள் நடந்தன.

1). அப் 4:31ல் மீண்டும் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது இடம் மட்டும் அசைந்தது. 2). ஸ்தேவான் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது தரிசனம் கண்டான் (7:55). 3). சமாரியர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபொழுது அடையாளங்கள் எதுவும் நிகழவில்லை. (8:16,17). 4). சவுல் பரிசுத்த ஆவியானல் நிறைந்தபொழுது மீன் செதில்கள் போன்றவைகள் கண்களிலிருந்து விழுந்தன (அப் 9:17). 5). பரிசுத்த ஆவியானவர் கொர்நேலியு வீட்டார்மீது இறங்கினபோது பல பாஷைகளைப் பேசினார்கள்(அப் 10:44-46). 6). எபேசுவின் சீஷர்கள் மீது ஆவியானவர் வந்தபொழுது அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள். தீர்க்கதரிசனமும் சொன்னார்கள் (19:6).

இவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி அவரவர்கள் பெற்ற அனுபவத்தைக்கூறி சாட்சி சொன்னால் என்ன நடக்கும்? ஒருவர் ஆவியானவரைப் பெற்றதற்கு அடையாளம் மீன் செதில்கள் போன்றவை கண்களிலிருந்து விழவேண்டும் என்பார். இன்னொருவர் இல்லை, தரிசனம் காணவேண்டும் என்பார். மற்றவர் இல்லவே இல்லை. அந்நியபாஷைதான் பேசவேண்டும் என்பார், இல்லை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்பார் வேறொருவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமாரியர் என்ன சொல்லியிருக்கவேண்டும். எங்களுக்கு ஒன்றுமே நடைபெறவில்லையே!. எனவே அடையாளம் ஒன்றும் அவசியமேயில்லை என்பார்கள்.

புதிய ஏற்பாட்டில் 16 பாஷைக்காரர்கள் உள்ளடக்கிய கொரிந்து சபையில் எழுந்த பாஷை பிரச்சனைக்காக அந்த ஒரு சபைக்காகமட்டும் பாஷைகளைக்குறித்து பவுல் எழுதுகிறார். யோவான் சின்ன ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு தன் தரிசனத்தைப்பற்றி எழுதும்போது அதில் பல விஷயங்களைப்பற்றி எழுதிய அவர் அந்நியபாஷைப்பற்றி எதையும் எழுதவில்லையே!

வரம் என்பது கர்த்தரால் கொடுக்கப்படவேண்டிய ஒன்று - கேட்கப்படவேண்டிய ஒன்றல்ல.

அன்னியபாஷை பேசுவது தவறா? பதில்: இல்லை. அந்நியபாஷையை பற்றி தேவன் குறித்துவைத்திருப்பதினால் அது தவறல்ல. தவறென்று சொல்பவர்கள் வேதத்திற்கு விரோதமானவர்கள். மாற்கு 16:14 ல் அந்நிய பாஷை விசுவாசிகளின் அடையாளம் என்று போடப்பட்டுள்ளது. 1 கொரிந்தியர் 12 தேவன் தம்முடைய தீர்மானத்தின்பாடு ஒருவருக்கு சுகமளிக்கும் வரத்தையும், மற்றொருவருக்கு தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தையும், மற்றொருவருக்கு நவமான பாஷைகள் பேசும் வரத்தையும் கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12: 7. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அந்நிய பாஷை பிரயஜோனமாய் இருக்காதென்றால் தேவன் அதை கொடுக்க மாட்டார்.

ஆதலால் அன்னியபாஷை பேசுவது தவறல்ல. ஆனால் அதை எப்படி கையாள வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் தெளிவாக கூறியிள்ளார். எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? ஆதலால் முக்கியமான வரத்தை நாடுங்கள்.

அந்நிய பாஷை என்ற பெயரில் பல பள்ளிகூடங்கள் சபைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். யாரையும் அந்நிய பாஷை பேச சொல்லி வற்புறுத்தாதீர்கள். அந்நிய பாஷை பேசுபவரை தடை செய்யாதிருங்கள். அது தேவன் கொடுத்த வரம். தேவனோடு ரகசியம் பேசுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரம். யாரும் இதை குறைவாக மதிப்பிட வேண்டாம். தவறாக கருத்தக்களையும் இங்கே பதிவிட வேண்டாம்.

அந்நிய பாஷை பரிசுத்த ஆவியானரின் நிரப்புதளுக்கு அடையாளம் அல்ல. இரட்சிப்பின் அடையாளம் அல்ல. பரலோகம் செல்ல கற்றுக்கொள்ளவேண்டிய மந்திரமும் அல்ல. ஜெபம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மொழியும் அல்ல. விசுவாசிகள் கட்டாயம் பெற்றுகொள்ளவேண்டிய நிச்சயம் அல்ல. போதகராய், ஊழியனாய் இருப்பதற்கு வேண்டிய ஆதாரமும் அல்ல.

இது தேவனின் வரம். அவனவனுக்கு பிரயோஜனம் உண்டாயிருக்கும்படி தேவன் வரங்களை பகிர்தளிகிறார். அன்பில்லாமல் அந்நியபாஷை பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! அந்நியபாஷை பேசுபவர்களிடத்தில் காணப்படும் பெருமையும், அந்நியபாஷை பேசாதவர்களை இவர்கள் தாழ்வாக காணும் மனப்பான்மையும்.. இவர்களின் அன்பின் தாழ்ச்சியையே காட்டுகிறது.

"அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியால், அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்" 1 கொரிந்தியர் 14:2
"அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்" 1 கொரிந்தியர் 14:4
"நீங்களெல்லாரும் அந்நியபாஷைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன் 1 கொரிந்தியர் 14:5,6
"அந்நியபாஷைகள்" கண்டிப்பாய் வியாக்கியானம் செய்யப்படவேண்டும்!

"இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைப் பண்ணாதிருங்கள். சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும், செய்யப்படக்கடவது"
இவ்வுலகத்தில் உன்னதமான கிறிஸ்தவர்களாய் திகழ்ந்தவர்கள், அந்நியபாஷை பேசினார்களோ இல்லையோ....ஆனால், இவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது முழு இருதயமான சொல்லிமுடியாத நேசம் கொண்டிருந்தார்கள்! பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற சீஶர்கள் அந்நியபாஷை பேசினார்கள்! ஆனால், நமக்குத் தெரிந்தவரை ஜான்வெஸ்லி, சார்லஸ் பின்னி, D.L.மூடி, A.B. சிம்ஸன், வில்லியம்பூத், C.T.ஸ்டட், வாட்ச்மேன் நீ போன்ற தேவ மனிதர்கள் ஒருபோதும் அந்நியபாஷை பேசியதேயில்லை! ஆனால், அவர்கள் அனைவரும் சிலுவையின் வழியில் நடந்து சென்றார்கள்! ஆம், இவைகள்தான் அவர்கள் வாழ்வின் "மையமாய்" இருந்தது... மற்ற அனைத்தும் அவர்களுக்கு இரண்டாவதாகவே இருந்தது!!

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment