Saturday, September 8, 2012

ஊழியத்தில் சோர்வு வேண்டாம் - தேவன் உங்களை கணம் பண்ணுவார்

அன்பு நண்பர்களே, இந்த சம்பவம் உண்மையில் நடந்த சம்பவமாகும்.
 
ஒரு ஊழியர் தன் மனைவி பிள்ளைகளோடு, காரில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வந்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும், வெகுநேரம் காரில் இருந்தபடியால், ஒரு ஹோட்டலில் சாப்பிட வேண்டி இறங்கினார்கள். அந்த ஊழியர், வண்டி ஓட்டி வந்தபடியால், காலை கொஞ்சம் நீட்டி மடக்க வேண்டி, ‘நீங்கள் போங்கள், நான் கொஞ்சம் நடந்து விட்டு வந்து உங்களோடு சேர்ந்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார். அவர் அப்படி நடக்கும்போது, அவருடைய மனதில், ‘நான் கர்த்தருடைய ஊழியத்தை விரும்பிதான் செய்கிறேன். ஆனால் என்ன பிரயோஜனம், எனக்கு மனது பாரமாயிருக்கிறதே, நான் நினைக்கிற மாதிரி ஊழியத்தில் கனிகள் இல்லையே, என்னை விசாரிக்க யாரும் இல்லையே’ என்று சுய பரிதாபம் கொண்டு, அப்படி நினைத்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தார்.
.
அப்போது, அங்கிருந்த பொது தொலைபேசி அறையில் (Public Telephone Booth)-ல் டெலிபோன் ஒலிக்க ஆரம்பித்தது. அதை எடுக்க யாருமில்லை. அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தவரோ, அங்கு வந்திருந்த மக்களுக்கு சேவை செய்துக் கொண்டிருந்தார். அந்த போனை எடுக்க ஆளில்லை. இவர் யாருக்கோ வருகிற போன் என்று நினைத்து, அங்கிருந்து நகர்ந்த போதிலும், நானும் வேறு நகரத்திலிருந்து, இந்த நகரத்திற்கு வேறொரு காரியமாக வந்திருக்கிறேன், ஆனால் இந்த போன் அடித்துக் கொண்டே இருக்கிறதே, ஒருவேளை என்ன அவசர காரியமோ, யாரும் எடுக்கிற மாதிரி தெரியவில்லை, சரி போய் எடுத்துப் பேசுவோம் என்று எண்ணியபடி, மெதுவாக, அங்குச் சென்று, அந்த போனை எடுத்து, ‘ஹலோ’ என்றுச் சொன்னார்.
.
அந்த போனிலிருந்து உடனே, ‘இது தூர இடத்திலிருந்து வருகிற கால், என்றும், அந்த ஊழியரின் பெயரைச் சொல்லி, அவர் இருக்கிறாரா?’ என்று டெலிபோன் எக்ஸ்சேஞ்சலிருந்து ஒரு ஆண்குரல் கேட்டது, அந்த ஊழியருக்கு தூக்கி வாரிப் போட்டது, ‘நான் இங்கு இருப்பது யாருக்குத் தெரியும்? நான் சற்று காலார நடந்து வரத்தானே வந்தேன், இது எப்படி சாத்தியமாகும்?’ என்று நினைத்தவராக, ஒரு வார்த்தையும் பேசாமல், அப்படியே மலைத்து நின்றார். அந்த போனிலிருந்த குரல் மீண்டும், அந்த ஊழியரின் பெயரைச் சொல்லி, ‘தயவுசெய்து சொல்லுங்கள், அவர்அங்கிருக்கிறாரா?’ என்றுக் கேட்டது, அப்போது அவர் தன் நிலைக்கு வந்தவராக, ‘ஆம் நான் தான் பேசுகிறேன்’ என்றுச் சொன்னார். அப்போது ஒரு சகோதரி, அந்த போனில், ‘ஐயா, நான் இந்த இடத்திலிருந்து பேசுகிறேன். உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் நீங்கள் தேவ ஊழியர் என்று எனக்குத் தெரியும், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்’ என்று போனில் அழ ஆரம்பித்தார்கள். அப்போது, அந்த ஊழியர், ‘நான் உங்களுக்கு என்னச் செய்ய வேண்டும் சொல்லுங்கள்’ என்றுக் கேட்டார். அப்போது அந்த சகோதரி, ‘நான் என் பிரச்சனைகளினால் தற்கொலை செய்ய
நினைத்து, ஒரு பேப்பரில், நான் ஏன் தற்கொலை செய்கிறேன் என்பதையும் எழுதிவிட்டு, தேவனிடம், நான் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் என்ன செய்வது என்று அழுதபோது, எனக்கு நீங்கள் டெலிவிஷனில் பேசியக் காரியம் ஞாபகத்தில் வந்தது, அப்போது நான் உங்களோடு பேசினால் என் துயரம் தீரும் என்று எண்ணி, உங்களை அழைக்க நினைத்தேன். ஆனால் உங்கள் நம்பர் எனக்கு தெரியாது, உதவிச் செய்யவும் யாரும் இல்லை, என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் சில நம்பர்கள் தோன்றியது, அந்த நம்பர்களை எழுதி வைத்து, இது தேவனிடமிருந்து வருகிற அற்புதமாயிருந்தால், இது உங்களுடைய நம்பராக இருக்கும் என்று எண்ணி, அழைத்தேன், அது சரியாக உங்கள் நம்பராக இருக்கிறது, இது உங்களுடைய ஆபீசின் நம்பரா?’ என்று கேட்டார்கள். அப்போது அந்த ஊழியர் நடந்த காரியங்களை அந்த சகோதரிக்கு அறிவித்தபோது அவர்களும் வியந்து, கர்த்தருடைய வழிநடத்துதலுக்காக தேவனை ஸ்தோத்தரித்தார்கள். பின் அந்த ஊழியர், அந்த சகோதரியின் பிரச்சனைகளுக்கு ஆவியானவரின் நடத்துதலின்படி, உதவி செய்தபோது, அவர்கள் சந்தோஷமாய் அந்த தற்கொலையின் எண்ணத்திலிருந்த விடுபட்டு, தேவனை அந்த போனின் மூலமாகவே ஏற்றுக் கொண்டு, இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவித்தார்கள்.
.
அந்த ஊழியர், மிகவும் சந்தோஷப்பட்டவராய், ‘நான் எங்கு இருக்கிறேன் என்பதையும் என்ன செய்கிறேன் என்பதையும் அறிந்த தேவன் என்னோடு இருக்கையில் நான் எதற்காக தேவையில்லாமல் கவலைப்பட வேண்டும்’ என்று, விசுவாசத்தில் உறுதியடைந்தார்.

No comments:

Post a Comment