Sunday, April 7, 2013

காணிக்கை


ஒரு ஊரில் ரூபன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தான். கப்பலில் சென்று வணிகம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை கப்பலில் சென்று கொண்டிருந்த பொழுது. பெரும் புயல் ஒன்று கப்பலை திடீரென தாக்கியது.

கப்பலில் இருந்த அனைவரும் ஐயோ !!!!! எங்களை காப்பாற்ற யாரும் இல்லையே!. கடவுளே எங்களைக் காப்பாற்றும் என்று கதறினார்.

கடவுளை அதிகம் தேடாத ரூபனும் வேறு வழியின்றி கடவுளிடம் மன்றாடி பார்ப்போம் என்று நினைத்தான். கடவுளே என் உயிரைக் காப்பாற்றும். என்னைக் காப்பாற்றினால் என் சொகுசு பங்களாவை விற்று அதில் வரும் பணத்தை உமக்கு காணிக்கையாக்குகிறேன் என்று பொருத்தனை செய்தான். பெரிய போராட்டதிற்குப் பின்பு ரூபனும் கப்பலில் இருந்த சிலரும் பிழைத்தனர் .

பத்திரமாக வீட்டை அடைந்த ரூபன், தன் ஆசை பங்களாவை விற்று வீதிக்கு வர விரும்பவில்லை. ஆகவே, தந்திர யோசனை செய்தான். தினசரிகளில், ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள பங்களாவை ஒரு லட்சத்திற்கு விற்பதாக அதிரடி அறிவிப்பு விடுத்தான். அடிமாட்டு விலைக்கு பங்களா கிடைக்கப் போகிறது என்ற அசையில் முண்டி அடித்துக் கொண்டு அநேகர் ரூபனின் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்கள் முன் நிபந்தனை ஒன்றை ரூபன் வைத்தான் !.

தனது பங்களாவை 1 லட்சத்திற்கு வாங்குவோர் தனது நாய்குட்டியை 95 இலட்சத்திற்கு வாங்க வேண்டுமென அதிரடியாக அறிவித்தான். இதை சற்றும் எதிர்பாராத பலர் தங்கள் ஆசையில் மண் விழுந்து விட்டது என வருந்தி முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு வந்த வழியே ஓட்டம் பிடித்தனர்.

ஆனால், ஒரு செல்வந்தன் நாயை 95 லட்சத்திற்கும் பங்களாவை 1 லட்சத்திற்கும் வாங்கினான்.
மகிழ்ச்சி அடைந்த ரூபன் வேகமாக ஆலயம் சென்று, “கடவுளே! நான் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன். இதோ எனது பங்களா விற்ற பணம் 1 லட்சத்தை காணிக்கையாக கொடுத்துவிடுகிறேன். நாய் விற்ற பணம் 95 லட்சம் எனக்கு!” என்று சொல்லி நடையை கட்டினான்.
ரூபனின் காணிக்கையில் கடவுள் பிரியப்படிருப்பாரா? யாருடைய காணிக்கையில் கடவுள் பிரியப்படுவார் என வேதமே சொல்கிறது,

(2 கொரி 9:7) அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

ஒரு நாள் ஆலயத்தில் தன்னிடமிருந்த கடைசி இரண்டு காசுகளை காணிக்கையாக கொடுத்து விட்டு, கடவுளே இனி எனது வாழ்விற்கு நீரே ஆதாரம் என்று தாழ்த்தி நின்ற விதவையை கிறிஸ்து சீஷர்களிடம் மெச்சினார். இதுவே சிறந்த காணிக்கையின் முன் உதாரணம்.

No comments:

Post a Comment