Monday, April 22, 2013

ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்

ஜெபசீலன் தன் பெயருக்கேற்ப ஒரு ஜெப வீரர். தன் குடும்பத்தோடு மலையடிவார கிராமம் ஒன்றில் குடியிருந்தார். ஞாயிறு தவிர தினமும் மலையில் ஏறி, விறகுகளை வெட்டி, தனது இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி வந்து பக்கத்து கிராமங்களில் விற்று வந்து குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் பக்தி வைராக்கியம் நிறைந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முழுமையான இரட்சிப்பின் அனுபவத்தில் வாழாதவர்.
.
வழக்கம் போல அன்றும் விறகுகளை வெட்டி தன் வண்டியில் ஏற்றி கொண்டு புறப்பட்டார். பலத்த மழை பெய்தது. சற்று நேரம் மழைக்கு ஒதுங்கி விட்டு வண்டியை ஓட்டி வந்தார். வழியில் சக்கரம் சேறு நிறைந்த ஒரு குழியில் மாட்டி கொண்டது. வண்டியை வெளியே கொண்டு வர மாடுகளை முடுக்கி விட்டார். வண்டி நகரவில்லை. கண்ணீரோடு ஜெபித்தார். ஜெபித்து விட்டு வண்டியை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாடுகளை அதட்டினார். வண்டி ஒரு அடி கூட நகரவில்லை. மீண்டும் ஒரு முறை ஜெபித்தார். பலனில்லை. மூன்றாவது முறை, 'என்ன ஆண்டவரே, நான் உம் பிள்ளையல்லவா? ஜெபத்தில் எதை கேட்டாலும் செய்வேன் என்று சொல்லியிருக்கிறீரே, நான் இரண்டு முறை ஜெபித்தேன். நீங்கள் வண்டியை வெளியே வர செய்யவில்லையே' என்றார். ஆண்டவர் சொன்னார், ' ஜெபசீலன், நீ ஒரு ஜெபவீரன் என்பது உண்மை. நான் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன் என்பதும் உண்மை. அதே நேரத்தில் உன்னுடைய முயற்சியும் வேண்டும். நீ இப்பொழுதே போய் குழியில் மாட்டியிருக்கும் சக்கரத்தை இழு, நான் உனக்கு உதவியாய் இருப்பேன்' என்றார். அப்படியே ஜெபசீலன் சக்கரத்தை இழுக்க முயற்சித்த போது ஆண்டவருடைய கரமும் இணைந்து செயல்பட்டது. வண்டி குழியை விட்டு வெளியே வந்தது. ஆண்டவருக்கு நன்றி கூறி வண்டியை ஓட்டினார்.

No comments:

Post a Comment