Saturday, March 23, 2013

பால் யாங்கி சோ சொன்ன சம்பவம்

போதகர் பால் யாங்கி சோ அவர்கள் கீழ்கண்டசம்பவத்தை கூறினார்கள். கொரியாவில் நடந்த போரில் 500 கிறிஸ்தவ போதகர்களை பிடித்து, உடனே அவர்களை துப்பாக்கியால் சுட்டு  வீழ்த்தினார்கள். 2000 தேவாலயங்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டது. மற்றும் கொரியாவில் Inchon என்னுமிடத்தில் கம்யூனிச தலைவர்கள் ஒரு போதகரை அவரையும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை குடும்பத்தோடு பிடித்து, அவர்களை ஒரு பெரிய குழியில் வைத்து, அந்த போதகரிடம், ‘இத்தனை வருடங்கள் நீர் இந்த மக்களை வேதாகமம் என்னும் புத்தகத்தை வைத்து, அநேக மூடநம்பிக்கைகளுக்குள் நடத்தி இருக்கிறீர். இப்போது இந்த மக்களின் முன் நீர் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும். மறுதலித்தால் நீரும் உம்முடையகுடும்பமும் தப்புவிக்கப்படுவீர்கள். இல்லையென்றால், முதலாவது உம்முடைய பிள்ளைகளையும் பின் உங்களையும் இந்த குழியில் உயிரோடு புதைத்து விடுவோம்’ என்று பயமுறுத்தினர்.


அதை கேட்ட பிள்ளைகள், ‘அப்பா, அப்பா எங்களை நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் சாவதை விரும்பவில்லை’ என்று கதற ஆரம்பித்தனர். அதை கேட்ட தகப்பனின் இருதயம் கரைந்தது. தன் இரு கைகளையும் தூக்கி, ‘நான் என் கிறிஸ்தவ நம்பிக்கையை .. என்று ஆரம்பித்தபோது,   பக்கத்திலிருந்த அவரது மனைவி, ‘அப்பா, நீங்கள் கர்த்தரை மறுதலிக்காதீர்கள்!’ என்று கூறிவிட்டு, பிள்ளைகளிடம், ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், இன்று இரவு நாம் அனைவரும் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் விருந்து சாப்பிடப் போகிறோம்’ என்று கூறி உற்சாகப்படுத்தினார்கள். பின், ‘In the sweet by and by’ என்னும் பாடலை பாட ஆரம்பித்தார்கள். போதகரும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து பாட, கம்யூனிசவாதிகள் அவர்கள் மேல் மண்ணை போட ஆரம்பித்தார்கள். மண் அவர்களுடைய கழுத்தளவு வரும்வரை அவர்கள் பாடினார்கள். அப்படியே அவர்கள் குடும்பமாக மறுமைக்கு கடந்து சென்றார்கள். அந்நேரத்தில் தேவன் அவர்களை விடுவிக்கவில்லை. ஆனால், அதை பார்த்து கொண்டிருந்த அத்தனை பேரும் அவர்கள் முகத்திலிருந்த ஒளியை கண்டு கிறிஸ்தவர்களாக மாறினர்.

No comments:

Post a Comment