Saturday, March 30, 2013

தேவனின் பதில் தாமதிப்பது ஏன்?

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.
 
வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

No comments:

Post a Comment