Saturday, March 30, 2013

இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பு

இங்கிலாந்தை சேர்ந்த அநேக வீடுகளுக்கு சொந்தக்காரரான ஒருவர், புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்தபடியால், தன் வீடுகளில் தங்கியிருக்கும், வாடகை குடிமக்களுக்கு, தேவனுடைய இரட்சிப்பு எப்படி இலவசம் என்பதை வெளிப்படுத்த வேண்டி, தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலங்களின் சுவற்றில், ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை பத்து மணியிலிருந்து, 12 மணிவரை தான் ஒரு குறிப்பிட்ட லாட்ஜில் இருக்கப் போவதாகவும், யார்யார் தன்னிடம் கடன் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில் ஒட்டியிருந்தார்.
அநேகர் அந்த போஸ்டரை பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா என்று அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள். சிலர் இதில் ஏதோ தந்திரம் இருப்பதாக சொல்லி கொண்டார்கள். குறிப்பிட்ட அந்த நாள் வந்த போது, அந்த லாட்ஜின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. சரியாக தான் சொன்னபடியே, அந்த வீட்டு சொந்தக்காரர் ஓரு காரில் வந்து இறங்கினார். யாரிடமும் ஒன்றும் பேசாமல், உள்ளே போய் அலுவலகத்தில் அமர்ந்தார். வெளியே கதவு சாத்தப்பட்டிருந்தது.
கதவுக்கு வெளியே பெரிய கூட்டம். ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள். நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா? ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று நினைத்து தள்ளிவிடுவாரா? நான் முதலில் போக மாட்டேன், வேறு யாராவது போகட்டும் பின் நான் போகிறேன் என்று ஒவ்வொருவரும் பேசி கொண்டு நின்றிருந்தார்களே ஒழிய யாரும் முதலில் போக துணியவில்லை. அப்படியே நேரம் கழிந்து கொண்டிருந்தது.
கடைசியல் 12 மணி ஆகப்போகும் நேரம், ஒரு வயதான தம்பதியினர், அங்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் ‘வீட்டு சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?’ என்று கேட்டனர், ‘ஆம் இருக்கிறார் ஆனால் இதுவரை யாருக்கும் கடன் மன்னிக்கப்படவில்லை’ என்று கூறினர். அப்போது அந்த தம்பதியினர் கண்ணீருடன், ‘அவர் ஒட்டியிருந்த போஸ்டர்களை பார்த்து நாங்கள் தொலை தூரத்திலிருந்து வந்தோம், இது பொய்யென்று எங்களுக்கு தெரியாது’ என்று திரும்ப போக எத்தனிக்கையில், ஒருவர் ‘யாரும் இதுவரை உள்ளே செல்லவில்லை’ என்று கூறினார். அத்தம்பதியினர், ‘அப்படியா? அப்படியானால் நாங்கள் உள்ளே போகிறோம்’ என்று போக முயற்சித்த போது மற்றவர்கள், ‘அவர் என்ன சொன்னார், உங்கள் கடன்களை மன்னித்தாரா என்று எங்களுக்கு திரும்ப வந்து சொல்லுங்கள், நாங்களும் போய் கேட்க வேண்டும்’ என்று கூறினார்கள். அதற்கு அத்தம்பதியினர் சம்மதித்து, உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி, அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அந்த காரியதரிசி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு மிகவும் நன்றியுடன் அவருக்கு நன்றி செலுத்தி வெளியே செல்ல முற்படுகையில் காரியதரிசி, ‘நீங்கள் 12 மணி ஆகும் வரை வெளியே செல்ல கூடாது’ என்று கூறினார். அப்போது அவர்கள், வெளியே மற்ற மக்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய காத்திருப்பதாக சொன்னார்கள். அப்போது காரியதரிசி, ‘உங்களுக்கு சொன்னது போல தான் மற்றவர்களுக்கும் சொல்லப்பட்டது. அவர்கள் உள்ளே வந்தால், அவர்களுடைய கடன்களும் மன்னிக்கப்படும்’ என்று கூறி அவர்கள் அமர்த்தினார். சரியாக 12 மணியானதும் கதவுகள் திறக்கப்பட்டது. முதலில் அந்த வயதான தம்பதியினர் வெளியே வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், ‘என்ன உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றினாரா’ என்று மாறி மாறி கேள்விகள் கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். ‘பின் ஏன் எங்களிடம் வந்து சொல்லவில்லை’ என்று கேட்டனர். அப்போது அந்த தம்பதியினர், ‘அவர் எங்களை உள்ளே அமர சொன்னார். நாங்கள் உள்ளே போய், அவரிடம் மன்னிப்பு பெற்றது போல நீங்களும் உள்ளே வந்தால் மன்னிக்கப்படும் என்று கூறினார். எங்களை உள்ளேயே இருக்க சொன்னார்’ என்று கூறினர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும் காரியதரிசியும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள் பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு ‘ஐயா எங்களுக்கும் மன்னியும்’ என்று கதறினர். அப்போது அந்த எஜமானர், ‘இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தி கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால் நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை’ என்று கூறினார்.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24)

No comments:

Post a Comment