Wednesday, March 20, 2013

அன்னை தெரசா - குடிசை சகோதரி

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்.
தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை ‘குடிசை சகோதரி’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

No comments:

Post a Comment