Saturday, January 19, 2013

ட்ரோஜான் குதிரை (Trojan Horse)

நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள். அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.
.
இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், 'மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்' என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் 'இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது' என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.
.
இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

No comments:

Post a Comment