Tuesday, February 26, 2013

அன்பை பகிர்ந்தளிப்போம்

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம். தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது. அப்போது திடீரென வந்த வெள்ளம் எறும்பை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.

உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது. இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையை சேர்ந்தது. தனக்கு உதவிய புறாவின் நல்ல குணத்தை மெச்சிக் கொண்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு வேடன் ஒருவன் மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி, அதை நோக்கி வில்லில் அம்பைப் பொருத்தி குறி பார்த்தான்.

அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது.அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது. புறாவும் அங்கிருந்து "சட்" என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் சுற்றத்தவருக்கு உதவ வேண்டும்.

வெறுமென பக்தியாக இருக்கிறேன் சொல்லிக் கொண்டு, பிறர் மீது அன்பு செலுத்தாது, மற்றவர் துயர் துடைக்காது இருப்பவரை கடவுள் ஏற்றுக் கொள்ளமாட்டார். அதனால் தான் வேதம் சொல்கிறது,

ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.( யாக் 2: 15-17)

ஆகவே! நம் சுற்றத்தாரின் துயர் துடைப்போம், அன்பை பகிர்ந்தளிப்போம், மனித நேயத்தால் தேவ நேயத்தை உலகிற்கு பறை சாற்றுவோம்.

_-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-

See more at கதம்பம் [இ-இதழ்]

No comments:

Post a Comment