Tuesday, February 26, 2013

எல்லாம் நன்மைக்கே - கவலைபடதிருங்கள்

பல ஆண்டுகளுக்கு முன் சீன கிராமம் ஒன்றில் ஒரு வயதான விவசாயியும் அவரது மகனும் வாழ்ந்து வந்தனர். சிறு வயலையும் ஒரு குடிசையையும் தவிர அவருக்கிருந்த ஒரே சொத்து நிலத்தை உழும் குதிரை மட்டும் தான்.

ஒருநாள் அந்த குதிரை அவரை விட்டு ஓடிவிட்டது. ஆகவே, விவசாயியால் குதிரை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் போயிற்று.

அவர் மீது நல்லெண்ணம் கொண்ட கிராம மக்கள் குதிரையை இழந்து தவிக்கும் விவசாயிக்கு ஆறுதல் சொல்ல அவர் வீட்டுக்கு சென்றனர். "ஐயா! இந்த இழப்பு உங்களுக்கு துரதிர்ஷ்டவசமானது. உங்கள் இழப்புக்காக நாங்களும் வருந்துகிறோம்" என்றனர்.

தனக்கு ஆறுதல் சொல்ல வந்த கிராம மக்களுக்கு நன்றி சொல்லிய விவசாயி "குதிரை ஓடிப் போனதை துரதிர்ஷ்டமான காரியம் என்று எப்படி சொல்கிறீர்கள், ஒருவேளை இதிலும் ஒரு அதிர்ஷ்டம் இருக்கலாமே? ஆகவே உங்கள் வேலையை பார்க்க போங்கள்" என்றார்.

இந்த பதிலை கேட்ட கிராம மக்கள், இந்த விவசாயி குதிரை தொலைந்ததில் குழம்பிப் போய்விட்டார் என்று சொல்லிக் கொண்டு போய்விட்டனர்.

ஒரு வாரம் கழித்து தொலைந்து போன குதிரை மற்றொரு குதிரையை கூட்டிக் கொண்டு திரும்பி வந்தது.

செய்தியறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டனர். மீண்டும் விவசாயி வீட்டுக்கு சென்றனர். " தொலைந்த குதிரை மீண்டும் வந்துவிட்டதாமே, அதுவும் இன்னொரு குதிரையையும் அழைத்து வந்திருக்கிறதாமே? இந்த அதிர்ஷ்டத்திற்கு வாழ்த்து சொல்ல வந்தோம்" என்றார்கள்.

தனக்கு வாழ்த்து சொல்ல வந்த கிராம மக்களுக்கு நன்றி சொல்லிய விவசாயி, "தொலைந்து போன குதிரை மற்றொரு குதிரையையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்ததை அதிர்ஷ்டம் என்று எப்படி சொல்கிறீர்கள்? யாருக்கு தெரியும் இது துரதிர்ஷ்டமாக கூட இருக்கலாமே? உங்கள் வேலையை பார்க்க போங்கள்" என்றார்.

கடுப்பான கிராம மக்கள், இந்த கிழவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல என்று சொல்லிக் கொண்டே வீடு திரும்பினர்.

ஒரு மாதம் கழித்து, விவசாயியின் மகன் புதிதாக வந்த குதிரையை லாயத்தில் கட்டிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென குதிரை அவனுக்கு ஒரு உதை கொடுத்தது. அதில் அவனது கால் எலும்பு முறிந்தது.

வைத்தியரிடம் அழைத்து சென்று வீடு திரும்பினார் விவசாயி. செய்தி அறிந்த கிராம மக்கள், விவசாயிக்காக இல்லாவிட்டாலும் அவரது மகனுக்காக அவரை போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர். மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து "துரதிர்ஷ்டவசமாக உங்களது மகன் காயப்பட்டதை அறிந்தோம். ஆகவே, இந்த துக்கத்தில் இருக்கும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தோம்" என்றனர்.

தனக்கும், மகனுக்கும் ஆறுதல் சொல்ல வந்த கிராம மக்களுக்கு நன்றி சொன்ன விவசாயி " எனது மகனின் கால் முறிந்ததை துரதிர்ஷ்டம் என்று எப்படி சொல்கிறீர்கள். யாருக்கு தெரியும் ஒரு வேளை இது அதிர்ஷ்டமாக கூட இருக்கலாம்" என்று சொல்லி கதவை மூடினார்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் "இந்த கிழவனுக்கு அறிவே இல்லை. இனி யாரும் இவரது சுக துக்கத்தில் பங்கெடுக்கக் கூடாது" என்று முடிவெடுத்தனர்.

சில மாதங்களில் ஜப்பான சீனாவின் மீது போர் தொடுத்தது. ஆகவே சீன அரசு தனது நாட்டிலுள்ள திடமான இளைஞர்கள் அனைவரையும் இராணுவத்தில் சேர உத்தரவிட்டது.

விவசாயியின் கிராமத்துக்கும் இராணுவ அதிகாரிகள் வந்து எல்லா இளைஞர்களையும் வலுகட்டாயமாக தூக்கி சென்றனர். ஆனால் விவசாயியின் மகனை மட்டும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் விட்டுவிட்டனர்.

இப்போது தான் கிராம மக்களுக்கு விவசாயி சொன்ன பதிலின் அர்த்தம் புரிந்தது. துக்கத்தினால் துவண்டு போகவும் கூடாது , மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கவும் கூடாது. துக்கமும், மகிழ்ச்சியும் வாழ்வின் அங்கமே என்று உணர்ந்தனர்.

எனக்கு அருமையானவர்களே! இதுதான் வாழ்க்கை. நமது தோல்வியும், இழப்பும் நிரந்தரம் அல்ல. அதுபோலவே நமது வெற்றியும் மகிழ்ச்சியும்.

இந்த உலகில் நிலையானது தேவ அன்பும், அவரோடு நமது உறவும் மட்டுமே. ஆகவே, எதை குறித்தும் கவலைப்படாமல் தேவனுக்குள் சந்தோஷமாய் வாழுங்கள்.

அட, நம்ம ஆண்டவர் சொன்னது இப்பதான் ஞாபகம் வருது,

மத்தேயு 6:27,31 - 34
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

No comments:

Post a Comment