Sunday, August 12, 2012

உலகின் ஒளி நாமே

திடீரென்று வீட்டில் கரண்ட் கட் ஆனது. மெழுகுவர்த்தி வைத்த இடத்தை நோக்கி தட்டுதடுமாறி போய் மெழுகுவர்த்திகளை எடுத்து கொண்டு திரும்புகையில், 'அங்கேயே நில்' என்ற சத்தம் கேட்டது. யார் என்று தேடும்போது, 'நான்தான், உன் கையில் இருந்துதான் பேசுகிறேன்' என்று குரல் கேட்டது, பார்த்தால் கையிலிருந்த மெழுகுவர்த்தி! அது என்னிடம், ' என்னை இங்கிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று கூறினது. நான் ' என்ன!' என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, அது என்னிடம், 'என்னை இந்த அறையிலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று சொன்னது. 

நான் அதனிடம், 'நீ என்ன சொல்கிறாய்? நீ மெழுகுவர்த்தி, உன்னுடைய வேலை இருளான இடத்தில் ஒளியை கொடுப்பதுதான்!' என்று கூறினேன். அதற்கு அந்த மெழுகுவர்த்தி, 'நான் இன்னும் தயாராகவில்லை, என்னை இந்த
இடத்திலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று மீண்டும் என்னிடம் கூறினது. 'நான் இன்னும் ஆயத்தமாகவில்லை, நான் ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன், அது முடிந்த பிறகு என்னை கொண்டு போ' என்று கேட்டு கொண்டது. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. 'சரி, நீ மட்டும் தான் இந்த அலமாரியில் இல்லை, உன்னை அணைத்து விட்டு, நான் மற்ற மெழுகுவர்த்திகளை கொண்டு போகிறேன்' என்று கூறினபோது, மற்ற மெழுகுவர்த்திகளும் 'நாங்களும் உன்னுடன் வரமாட்டோம்' என்று முரண்டு பண்ணின. இது என்னடா வம்பாயிருக்கிறது என்று நான் அவைகளிடம், 'வெளியே ஒரே இருட்டாக இருக்கிறது நீங்கள் யாரும் வரவல்லை என்றால், யார் ஒளியை கொடுக்க முடியும்' என்று கேட்டதற்கு, ஒரு மெழுகுவர்த்தி, 'ஒளியை கொடுப்பது எத்தனை முக்கியமானது என்று மற்றவர்களுக்கு விளக்கி கொண்டிருக்கிறேன், நீயும் வேண்டுமானால் கலந்து கொள்' என்று கூறினது. எல்லாம் ஒளியின் முக்கியத்துவத்தை குறித்து ஆராய்ந்து கொண்டும் பேசி கொண்டும் இருந்தனவே அன்றி, இறுதி வரை எந்த மெழுகுவர்த்தியும் தன் ஒளியை எடுத்து கொண்டு வெளியே வர விரும்பவில்லை. அதற்குள் கரண்டும் வந்து விட்டது.

No comments:

Post a Comment