Friday, November 23, 2012

இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையின் வளர்ச்சி

Dr. Thomas cokeமெதடிஸ்ஸம் இங்கிலாந்தெங்கும் பரவிய காலத்தில் இதனை உலகின் வேறு பாகங்களுக்கும் கொண்டுசெல்ல ஊக்கமும் ஆர்வமும் மிகுதியாயிருந்தது. அக்காலத்தில் 1809 இல் இலங்கையின் பிரதான நீதிபதியாக இருந்த சேர் அலக்சாண்டர் ஜோன்சன் இலங்கை மெதடிஸ்ஸத்தை பரப்ப ஏற்ற இடம் என குறிப்பிட்டார்.இவரது கருத்தை துணிவுடன் எடுத்தவர் டாக்டர்.
Dr. Thomas coke
தோமஸ் குக், போதகரும் சட்ட நிபுணருமாயிருந்தவர். பெரேகன் எனும் வேல்ஸ்ஸிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது செல்வத்தின் பெரும்பகுதியை மேற்கிந்திய தீவுகளிலும் மேற்கு அமெரிக்காவிலும் கிறிஸ்தவத்தை பரப்ப செலவழித்தார். 30 வருடங்களுக்கு மேலாக ஆசியாவிற்கு கிறிஸ்தவத்தை எடுத்து செல்லவேண்டும் என்ற நோக்கம் பிரித்தானியர் இலங்கையை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றும் வரை கைகூடவில்லை. ஜூலை 1813ல் லிவர்பூல் இல் நடைபெற்ற மெதடிஸ்த மாநாட்டில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் இவருடன் 6 மிஷனரிமாரையும் செல்ல அனுமதித்தது. டிசம்பர் 31, 1813 ல் தமது பிரயாணத்தை ஆரம்பித்தனர். 'கபல்வா' என்ற கப்பலில் தோமஸ் குக், பென்ஞமின் குளோவ், வில்லியம் ஹவார்ட் அவரது மனைவியும், ஏனைய 4 மிஷனரிகளான ஜேம்ஸ் லின்ஞ், வில்லியம் ஓல்ட் மற்றும் அவரது மனைவி, ஜோர்ஜ் எஸ்கின் ஆகியோர் 'லேடி மெல்விலே' என்ற கப்பலிலும் பயணித்தனர். கப்பல்கள் 1200 தொன் சுமையை தாங்கியவாறு நன்னம்பிக்கை முனை வழியே 6 மாதங்களுக்கு பயணித்தன. பயணத்தில் புயல்கள் குறுக்கிட்டன. வழியிலே வில்லியம் ஓல்ட்டின் மனைவி வியாதியினால் மரித்தார். ஹவார்ட் நோய்வாய்ப்பட்டார். இந்தியாவை அடைய 3 வாரங்கள் இருந்த நிலையில் தோமஸ் குக் இன் உடல்நிலை மோசமானது. மே 3ம் திகதி தோமஸ் குக் இறந்தார். தங்கள் தலைவரின் திடீர் மறைவு ஏனைய மிஷனரிகளுக்கு ஒரு பேரிடியாக இருந்தது. தோமஸ் குக் இலங்கையை அடையவில்லை. ஏதிர்பார்த்திராத தலைவரின் மறைவு, பணவசதியின்மை போன்ற பிரச்சினைகள் இருந்த போதும் 6 மிஷனரிகளும் கடவுளையே முழுமையாக நம்பி 1814 மே 21 ல் இந்தியாவின் பம்பாயை அடைந்தனர். அவர்கள் எதிர்பாராத வழிகளிலிருந்து உதவிகள் கிட்டியது. ஹவார்ட் மற்றும் அவரது மனைவி நோய்வாய்ப்பட்டதால் அவர்களின்றி 20ம் திகதி இலங்கைக்கான தமது பயணத்தை தொடர்ந்தனர்.அப்போது இலங்கையின் ஆளுநராக இருந்த ரொபட் பிறவுன்றிக் மெதடிஸ்த மிஷனரிகளின் இலங்கை வருகை குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார். 2 படகுகள் மிஷனரிகளுக்காக அனுப்பப்பட்டன. காலி கடற்பகுதியிலே தரையிறங்க திட்டம் தீட்டியும் இறுதியில் பலத்த காற்றும், அலைகளும் மிஷனரிகளை வெல்கம குடாவிலே போய் சேர்த்தது. ஜீன் 29 ல் கரையை அடைந்தனர். இதுவே இலங்கை மெதடிஸ்த மிஷனுக்கான முதற்படியாகும்.Sir Robert Brownriggஜீலை 3, 1814 ஞாயிறு அன்று மிஷனரிகள் தமது முதலாவது ஆராதனையை ஒல்லாந்து சபையில் நடத்தியமை மறக்கமுடியாத நிகழ்வாகும். இளம் வைத்தியரான வில்லியம் அலக்சாண்டர் லல்மூன் தன்னை மெதடிஸ்த மிஷனுக்காக அர்ப்பணித்தார். இவரே இம் மிஷனின் முதற்கனியாவார். இவர் 48 வருடங்களுக்கு மேல் இப்பணியில் விசுவாசமாக இருந்தார். 11ம் திகதி ஜீலையில் இடம்பெற்ற மாநாட்டில் குறித்த இடங்களுக்கு மிஷனரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம்- ஜேம்ஸ் லின்ஞ் தோமஸ் குயின்ஸ்மட்டக்களப்பு- வில்லியம் ஒல்ற் காலி- பென்ஜமின் குளோவ் மாத்தறை- ஜோர்ஜ் எஸ்கின் கொழும்பு- மார்ட்டின் ஹவார்ட். தற்போது 198 ஆண்டுகள் கடந்த நிலையில் விதைக்கப்பட்ட மெதடிஸ்ஸத்தின் பலன் அறுக்கப்படுகிறது. நாமும் எழுந்து கட்டுவோம் வாருங்கள். கர்த்தரில் மகிழ்ச்சியாயிருப்பதே எமது பெலன். நாமும் இவ் உலக நீதியை கருத்திற்கொண்டு கடவுளுக்கு விசுவாசமுள்ள சேவகர்களாக மற்றவர்கள் நலம்பெற உதவுவோம்.கஷ்டத்தால் வாடும் மக்களை இனங்கண்டு அவர்களுக்கு தோள் கொடுத்து மனிதாபிமானத்துடன் சேவை செய்வோம்.பின் தங்கிய இடங்களில் வெஸ்லி அவர்களை போன்று குழுக்களை நியமித்து முன்னேற்றத்துக்காக முயற்சிப்போம்.இனி மேல் அடையப்போகும் நன்மைகளுக்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தி பரிசுத்த ஆவியின் வழிநடத்தலில் தங்கியிருப்போம். இதுவரை நம்மை நடத்தி வந்த கரம் இனிமேலும் நம்மை வழிநடத்தும். ஆகவே நாங்கள் நம்பிக்கையுடன் முன்னோக்கி சென்று தொடர்ந்து இவ்வுலகில் பிரகாசிக்க வேண்டும்.

ஆத்துமாவின் மேல் அக்கறை

இந்திராபுரியை ஒரு சிற்றரசன் பல காலமாக ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். தனது நான்காவது மனைவியை மற்ற மூவரைக் காட்டிலும் அதிகமாக நேசித்ததால் அவளை பொன் ஆபரணங்களால் அழகுபடுத்தி சிறந்த உணவு வகைகளை அவளுக்கு விருந்தாக்கி மகிழ்ந்தான். எல்லாவற்றிலும் சிறந்ததை மட்டுமே அவளுக்கு கொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியையும் நேசித்தான். ஆனாலும் அவள் மற்ற நாட்டு அரசர்களை கவரும
் வண்ணம் நடந்து கொள்வதால் தன்னை விட்டு என்றாவது ஒருநாள் போய்விடுவாள் என்ற அச்சம் கலந்த நேசம் வைத்திருந்தான்.

அரசனின் இரண்டாவது மனைவி மிகுந்த பொறுமையும், இரக்கமும் கொண்டவள். அரசனின் கடின பாதைகளில் அவனுக்கு ஆறுதலும் ஊக்கமும் சொல்லி ஊன்று கோலாய் திகழ்ந்தாள். ஆகவே அவளையும் அவன் நேசிக்க தவறவில்லை.

அரசனின் முதல் மனைவி அவனது நம்பிக்கைக்குரியவள். அவனது ஆஸ்திகளையும், செல்வத்தையும் உத்தமமாக நிர்வகித்து வந்தாள். அவளை அவன் நேசித்தாலும், அவளோடு அவன் அதிக நேரம் செலவழிக்க விரும்பமாட்டான். அவளுக்கென்று எதுவுமே அவன் தனது வாழ்நாளில் செய்ததே கிடையாது.

திடீரென்று ஒரு நாள், அரசன் கொடிய வியாதியில் சிக்கிக் கொண்டான். தனது மரண படுக்கையில் இருந்து, தனது ஆஸ்தி, பெருமை, புகழ் எல்லாவற்றையும் எண்ணி பார்த்து "எனக்கு இப்போது நான்கு மனைவிகள் உண்டு, ஆனாலும் நான் இறந்த பின் என்னோடு யார் வருவார் நான் தனியாக தானே செல்வேன். ?" என்று புலம்பி வருந்த ஆரம்பித்தான்.

அவன் தனது அருகில் இருந்த நான்காவது மனைவியிடம் "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "வாய்ப்பே இல்லை" என்று வெடுக்கென சொல்லி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள். அந்த வார்த்தை அவன் இருதயத்தை கத்தியினால் குத்தியது போல ஊடுறுவியது.

இந்த வருத்தத்தோடு மூன்றாவது மனைவியிடம் "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "இல்லை, வாழ்க்கை அற்புதமானது. நீங்கள் இறந்த பின் நான் வேறொருவரை மறுமணம் புரிந்து சந்தோஷமாக வாழ்வை தொடர்வேன்" என்று சொல்லி திரும்பி பார்க்காமல் வெளியேறினாள்.

இன்னொரு புறம் இருந்த மூன்றாம் மனைவியை நோக்கி, "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "அன்பரே என்னை மன்னிக்க வேண்டும். நானும் உங்களை நேசிக்கிறேன் ஆனால் உங்கள் கல்லறை வரை மட்டுமே என்னால் வர முடியும்" என்று சொல்லி விலகி நின்றாள். இந்த பதில் அரசனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. அவன் வேதனையில் தலையணை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

அப்போது அங்கொரு குரல், "நான் உங்கோடு வருவேன். எந்த சூழலிலும் நீங்கள் எங்கு சென்றாலும் நான் உங்களோடு வருவேன்" என்ற கேட்டது. சட்டென நிமிர்ந்து பார்தான். அங்கு அவனது முதல் மனைவி மெலிந்து, பொலிவிழந்து, அழகிழந்து நின்று கொண்டிருந்தாள்.

அரசன் அவளது தோற்றத்தை கண்டு மிக வேதனையோடு " எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உன்னை நான் நன்கு கவனிக்கவில்லை. ஆனால் என்னை விட்டு விலகிய இந்த மூன்று மனைவிகளையும் அதிகம் கவனித்துவிட்டேனே.இப்போது வருந்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே!" என்று அவளை கட்டி அணைத்து அழுதான்.

நண்பர்களே! ஒரு மனிதனின் சரீரமே! முதல் மனைவி. ஆடம்பர உடைகளால் , பொன் ஆபரணகளால் அலங்கரித்தாலும் அது நமது மரணத்தின் போது நம்மை விட்டு போய்விடும்.

ஒரு மனிதனின் ஆஸ்தி, செல்வம் எனபதே இரண்டாம் மனைவி. ஒருவன் மரித்த பின் அது வேறொரு மனிதனிடம் சென்றுவிடுகிறது.

ஒரு மனிதனின் உறவினர்களும், நண்பர்களும் அவனது மூன்றாம் மனைவி. அவன் மரிக்கும் போது இவர்கள் கல்லறை வரை மட்டுமே அவனோடு வர இயலும்.

ஆத்துமாவே! முதல் மனைவி. பணத்தாலும், புகழாலும், இன்பத்தாலும் வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப்படும் அத்துமாவே ஒரு மனிதனின் மரணத்திற்கு பின்பும் அவனோடு கூட பயணிக்கக் கூடியது. ஆகவே நமது ஆத்துமாவை தேவ வார்த்தையாலும், பிரசனத்தாலும் இப்போதே பெலப்படுதுவோம். ஆத்துமா ஒன்று தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க கூடியதும் , நித்திய காலம் வாழக் கூடியதுமாகும்.

உங்கள் ஆத்துமாவின் மேல் அதிக அக்கறை கொண்டு தன்னையே தத்தம் செய்த ஆத்தும நேசராம் இயேசு கிறிஸ்துவை அதிகமாய் நேசியுங்கள்.

[மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?]

மிஷனரிகள் எப்போது மரித்தார்கள்?

"இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆப்ரிக்கா கண்டம் மிஷனரிகளுக்கும் இருண்ட கண்டமாகவே அமைந்தது. இருளில் இருப்போருக்கு ஒளியை கொண்டு சென்ற வெளிச்சங்கள் அங்கு தீ-பந்தங்களை உருவாக்கி அணைந்து கொண்டன.

அந்நாட்களில் ஆப்ரிக்காவின் கடற்கரைக்கு வந்திறங்கிய மிஷரிகளின் சராசரி வாழ்நாள்-எதிபார்ப்பு(Life Expectancy) இரண்டு ஆண்டுகளே. ஆப்ரிக்காவில் பரவிக் கிடந்த வியாதிகள் அங்கு செல்பவரை ஓரிரு நாட்

களிலேயே தொற்றிக் கொள்ளும். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள் உயிரையே குடித்துவிடும். இது அந்நாட்களில் உலகறிந்த செய்தி.

ஆகவே, ஆப்ரிக்காவுக்கு தங்களை மிஷனரிகளாக ஒப்புக்கொடுத்த வீரர்கள் தங்கள் உடைமைகளை எடுத்து வர சரக்கு பெட்டிகளை பயன்படுத்தமாட்டார்கள். மிஷனரிகள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வரும் போது சவ-பெட்டிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உடைமைகளை எடுத்து வருவர்.

ஏனென்றால் இரண்டு ஆண்டுகளின் முடிவில் தங்கள் சரீரத்தை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல இந்த சவப்பெட்டி உதவி செய்யும் என்றே சவபெட்டியில் தங்கள் உடைமைகளை எடுத்து வந்தனர்."
என்று சில இளம்பிள்ளைகளுக்கு மிஷரிகளின் வரலாறு குறித்து விவரித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கிருந்த ஒரு தங்கை , "இந்த மிஷனரிகள் எப்போது மரித்தார்கள்?" என்று என்னிடம் கேட்டாள்.

உடனே ஆவியானவர் உள்ளத்தில் ஒரு பதிலை கொடுத்தார். அதை அவர்களோடு பகிர்ந்து ஜெபிக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர முடிந்தது,

அந்த பதில்,
"இவர்கள் தங்கள் நாட்டிலிருந்து கிளம்பும் முன்னே மரித்துவிட்டார்கள்."

கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக் கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர் கனம்பண்ணுவார்.( John 12: 23-26 )

இப்போது உங்களை நீங்களே நிதானித்து பாருங்களேன்?
 
SOURCE
https://www.facebook.com/TamilChristianForum?ref=stream

Sunday, November 11, 2012

சிட்சையின் பலன்

ஒரு பிடிவாதமான முரட்டு குணமுள்ள சிறுபிள்ளையிருந்தாள். சிறுவயதிலே தான் நினைத்த வழியில் சென்றாள். ஓரு நாள் ஒரு பெரிய விபத்தில் அகப்பட்டு ஆயுள் முழுவதும் நொண்டியாய் இருக்க வேண்டிய நிலை உருவானது. அது இன்னும் அவளை முரட்டு குணமுள்ளவளாக்கியது. 


ஓரு நாள் அவளை சந்திக்க ஒரு ஊழியர் வந்தார். அவள் புரிந்து கொள்ளும் வண்ணமாக ஒரு கதையை சொன்னார். "ஆதியில் பூமி சமமான புல்வெளியாக
இருந்தது. அதில் நடந்த எஜமான், புல்வெளியிடம் 'உன்னில் ஏன் பூக்களில்லை' என வினவினார். புல்வெளி பதிலாக, 'என்னிடம் விதைகளில்லை' என்றது. பின்பு அவர் பறவைகளிடம் பேசினார். அவைகள் சகலவித பூவிதைகளையும் தூவியது. விரைவில் கல்வாழை, காட்டு செவ்வந்தி போன்ற ஒரு சில மலர்கள் பூத்தன. எஜமான் புல் வெளியிடம் 'அதிக மணம் தரும் செடிகள் எங்கே?' என்றார். புல்வெளி துயரக்குரலில் 'எஜமான், என்னால் அப்பூச்செடிகளை காப்பற்ற முடியவில்லை.
அவைகள் மேலோட்டமாக முளைப்பதினால் கடுங்காற்று வீசன உடனே அவைகள் பறந்து போகின்றன' என்றது.

எஜமான் பூமிக்கு கட்டளையிட்டார். பூமி அதிர்ந்தது. புல்வெளியின் இதயத்தை பிளந்தது. புல்வெளி வேதனையால் முனகியது. காயத்தால் வருந்தியது. பின்
அந்த பிளவினூடே நதி பாய்ந்தது. பறவைகள் மீண்டும் விதைகளை தூவின. மீண்டும் பூச்செடிகள் முளைத்தன. அப்போது கடும் காற்றடித்தாலும் அசைக்க முடியாத அளவிற்கு அவற்றின் வேர்களை ஆழமாய் விட முடிந்தது. சில நாட்களில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கின. எஜமான் இன்புற்று அங்கு இளைப்பாறினார்" என்று கதையை கூறி பின் அவ்ஊழியர் ஒரு வசனத்தை வாசித்தார். 'ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை' - (கலாத்தியர் 5:22-23) அதில் ஆவியின் கனி என வரும் இடத்தில் பூ என வாசித்து, பின்பு சாந்தம், நீடிய பொறுமை போன்ற பூக்கள்
பிளவில்தான் செழித்து வளர முடியும்" என்றார். அச்சிறுமியும், தன்னுடைய துன்பத்திலும் அப்படிப்பட்ட பூக்கள் பூக்க தேவனிடம் தன்னை அர்ப்பணித்தாள்.

தீமையினின்று காக்க

ஐரோப்பாவின் வடக்கில் உள்ள நாடுகளில் காடுகள் ஏராளம். அங்குள்ள ஒரு காட்டிற்கு சென்று, இன்பமாக நாளை கழிக்கலாமென்று ஒரு நண்பர் கூட்டம் எண்ணியது. அவர்கள் சுமார் பதினைந்து பேர் இருப்பார்கள். இரண்டு மூன்று வீட்டினர் ஒன்றாக வந்திருந்தனர். சமைத்த பண்டங்களை சாப்பிட்டபின் பேசி கொண்டிருக்கையில் தொலைவில் கண்ட ஒரு காட்சி அவர்களை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. என்னது புகை? நெருப்பு? அக்காட்டில் ஒரு பகுதியில் மூங்கில் போன்ற மரங்கள் ஒன்றோடொன்று மோதி உராய்ந்ததன் விளவாக தீப்பொறி பறந்தது. அது பெருந்தீயாக காட்டையே பற்றி கொண்டது. அதை கண்ணுற்ற அவர்கள் தங்களுக்கு இறுதிகட்டம் வந்தது என்று அறிந்து வேதனைப்பட்டனர்.

.
இந்த நிலையில் இத்தீயை சமாளிக்க சிறுவன் ஒருவன் முன் வந்தான். கையிலிருந்த தீப்பெட்டியினுள் ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி பின்பு சருகுகள் நிறைந்த இடத்தில் அதை போட்டான். காட்டுத்தீ பரவி தங்களை நோக்கி வருவதற்குள் இந்த பையன் வேறு பக்கத்திலேயே நெருப்பு வைத்து விட்டானே என்று எல்லாரும் அவனை அடித்து விட்டார்கள். அதற்குள் அவன் வைத்த நெருப்பு தன் வேலையை முடித்து விட்டது. சுமார் ஐம்பது அடி சுற்றளவிலுள்ள புல் பூண்டுகளெல்லாம் வெந்து சாம்பலாயின. அங்குள்ளளவர் மத்தியில் நின்று என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். அப்போது, காட்டுத்தீ அவர்களை சுற்றிலும் பரவி நன்றாக எரிந்தது. ஆனால் என்ன அதிசயம், அவர்களிடம் வரவேயில்லை. ஏனென்றால் அவர்கள் நின்றிருந்த இடம், வெந்து சாம்பலான இடம், காட்டு தீக்கு அங்கு இரை ஒன்றுமில்லை. பையன் வைத்த நெருப்பு ஏற்கனவே தன் வேலையை முடித்ததால் அந்த இடம் பாதுகாப்பானதாக மாறவே அனைவரும் பேராபத்தினின்று காப்பாற்றப்பட்டனர்.

Wednesday, November 7, 2012

பாஸ்டர். மோசஸ் ராஜசேகர் - வால்பாறையில் இருந்து சென்னையை நோக்கி கிளம்பிய புயல்

* சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் வால்பாறையில் இருந்து சென்னையை நோக்கி கிளம்பிய புயல், பாஸ்டர். மோசஸ் ராஜசேகர் அவர்கள்.

* "அப்பாலே போ சாத்தானே...! அப்பாலே போ சாத்தானே..." என்ற பாடலின் மூலமும் "கிறிஸ்தவன டிஸ்டப் பண்ணாதே...! அவன அசால்டாக எண்ணிவிடாதே" என்ற பாடலின் மூலமும் உலகெங்கும் பிரசித்தி பெற்றவர்
பாஸ்டர். மோசஸ் ராஜசேகர் அவர்கள்.

* இவர் 31.05.1967ஆம் ஆண்டு கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை என்னும் பகுதியில் உள்ள வேர்வேல்லி என்ற மலைபிரதேச ஊரில் திரு.மோசஸ் & திருமதி. மாரியம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

* பாஸ்டர். மோசஸ் ராஜசேகர் அவர்கள், 10ஆம் வகுப்பு படித்து முடித்த சில நாட்களில் சகோதரி. பத்மா முதலியார் அவர்களின் வேதாகம கல்லூரியில் சேர்ந்து தன்னுடைய இறையியல் படிப்பை முடித்தார்.

* இறையியல் படிப்பை முடித்த சில வருடங்களுக்கு பின்பு விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார். பின்பு நெசப்பாக்கம் பகுதியில் உள்ள Holy cross என்னும் பள்ளயில் ஆராதனை நடத்தி வந்த வேளையில், அதே பகுதியில் உள்ள சூளைப்பள்ளம் என்ற இடத்தில சொந்தமாக ஒரு இடத்தை வாங்க கர்த்தர் கிருபை செய்தார்.

* அந்த இடத்தில் குடிசை போட்டும், சுவருக்கு பதிலாக குடிசையை சுற்றிலும் சேலைகளை கட்டியும் ஆராதனை செய்து வந்தார்.

* தான் ஊழியம் செய்து வந்த இடத்தின் ஒரு மூலையில் தன் குடும்பத்தினரோடு வசித்து வந்தார்.

* பசி, பட்டினி, ஊழிய தேவைகள் என்று பல கஷ்டத்தின் மத்தியிலும் கர்த்தருக்காக ஒரு ஆலயத்தை கட்டவேண்டும்மென்று அயராது உழைத்தார்.

* தன்னுடைய 19ஆம் வயதிலேயே சக்கரை நோய் பாதிப்பு இருந்ததினால் அதிக பெலவீனம் மத்தியிலும் கர்த்தருக்காக உற்சாகமாய் ஊழியம் செய்து வந்தார். அந்த சமயத்தில் தான் கர்த்தர் அவருக்கு கொடுத்திருந்த பாடல் தாலந்தை பயன்படுத்த ஆரம்பித்தார் .

* பல மேடைகளிலும் , ஆலயங்களிலும் கர்த்தருடைய பாடல்களை பாடி ஆண்டவருடைய நாமத்தை உயர்த்தினார் .

* தன்னுடைய "கிருபையே தேவ கிருபையே" என்ற பாடல் சிடியை 1998ஆம் ஆண்டு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அப்போஸ்தல கிறிஸ்தவ சபையில் வைத்து அந்த சபையின் மூத்த போதகர்.சாம் சுந்தரம் ஐயா அவர்கள் வெளியிட்டார்கள்.

* சூளைப்பள்ளம் என்ற பகுதியில் ஊழியம் நடந்து வந்த இடத்தில இடம் பற்றாகுறையால் அதே பகுதியில் வெங்கட்ராமன் சாலை போலீஸ் பூத் அருகில் இருந்த ஒரு காய்கறி கடையை வாடகைக்கு எடுத்து சபையை நடத்தினார் .

* குக்கிராமங்களையும், எளியமனிதர்களையும் வெகுவாய் கவரும் "கதைப்பாடல்" வடிவத்தை இவர் பெரிதும் உபயோகித்தார்.இவர் வெளியிட்ட பாடல்கள் (CD Vol 1 to 17, MP3, DVD) கிறிஸ்தவ உலகில் ஒரு எழுப்புதலை உண்டாக்கியது.

* சாதாரணமாக எளிய மக்கள் பேசும் கொச்சை தமிழில் எழுதப்பட்ட பல பாடல்கள் அடித்தட்டு மக்களால் மிகவும் விரும்பி கேட்கப்பட்டன. சென்னைப் புகழ் "கானா" இசையில் இவர் மெட்டமைத்த பாடல்கள் ஒலிக்காத குப்பங்கள் இல்லையென்று சொல்லலாம்.

* வாடகை இடத்தில் ஊழியம் செய்து, பின்னர் அதையே சொந்தமாக வாங்க கர்த்தர் கிருபைசெய்தார்.

* இதற்கிடையில் 2005ஆம் ஆண்டு இரு சிறுநீரகமும் இழந்ததினால் இரத்த மாற்று அறுவை சிகிச்சை எடுத்து வந்தார். ஆனாலும் கடுகளவும் சோர்ந்து விடாமல் கர்த்தருடைய ஊழியதிற்கென்றும் , கர்த்தருக்காக ஒரு ஆலயத்தை கட்டிமுடிக்க வேண்டுமென்றும் அயராது உழைத்து வந்தார்.

* எட்டு வருடங்களில் சுமார் 2600க்கும் அதிகமான முறை இரத்தமாற்றம் சிகிச்சை செய்துக்கொண்டார்.

*2008ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பயங்கரமான போரட்டத்தை சந்தித்தார், தன் இரண்டு கண்களையும் இழந்தார். ஆனாலும் போதகர் அவர்கள் சற்றும் சோர்ந்து போகாமல் கர்த்தர் தனக்கென்று கொடுத்த ஊழியத்தை செய்துவந்தார்.

* 2011ஆம் ஆண்டு ஒரு மகிமையான ஆலயத்தை கர்த்தருக்கென்று கட்டிமுடிக்கவும் அதனை சகோதரர்.மோகன் சி.லாசரஸ் அவர்களால் திறந்து வைக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.

* இப்படி பல சோதனையின் பாதையிலும், கண்ணீரின் பாதையிலும் கர்த்தருக்காக உழைத்த போதகர் அவர்கள் 05.11.2012ஆம் நாள் இரவு 8மணிக்கு தான் மிகவும் நேசித்த இயேசுவிடம் சேர்ந்தார் .

* போதகருக்கு ரூத் ராஜசேகர் என்ற மனைவியும், பிரியா ராஜ்குமார் மற்றும் பிலோமினா நாகுல் என்ற மகள்களும் கிங்க்ஸ்லி ராஜசேகர் என்ற மகனும் உள்ளனர்.

* இவருடைய குடும்பதிற்க்காகவும், இவர் விட்டு சென்ற ஊழியதிற்க்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.