Showing posts with label singer. Show all posts
Showing posts with label singer. Show all posts

Saturday, January 19, 2013

ட்ரோஜான் குதிரை (Trojan Horse)

நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள். அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.
.
இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், 'மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்' என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் 'இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது' என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.
.
இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

Monday, December 10, 2012

கிறிஸ்துவுடனேகூட நாம்

ஒரு மனிதர் அநேக இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல், பணமோ வசதியோ இல்லாமல், வறுமையினால் நிறைந்தவராய், ஒரு நாள் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். கடலின் ஓரமாய் அவர் நடந்து சென்றபோது, அவருடைய காலில் ஒரு பாட்டில் இடறியது. அதை அவர் பார்த்தபோது, அதற்குள் ஒரு கடிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டிலை உடைத்து பார்த்தபோது, 'இந்த பாட்டிலை கிடைக்க பெறும் அதிர்ஷ்டசாலிக்கும், என்னுடைய வக்கீலுக்கும் என் முழு எஸ்டேட்டையையும் எழுதி வைக்கிறேன். இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவும்' என்று எழுதப்பட்டிருந்தது. அதை அப்படி எழுதி அனுப்பியவர் டெய்ஸி சிங்கர் அலெக்ஸாண்டர் என்னும் சிங்கர் தையல் மிஷன் உரிமையாளர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள தேமஸ் ஆற்றில் ஒரு பாட்டிலில் இவ்வாறு எழுதி போட்டிருந்தார். அது பன்னிரண்டு வருடங்கள் கழித்து, கலிபோர்னியாவில் உள்ள கடலில், ஜேக் உர்ம் (Jack Wurm) என்னும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தவரின்; கைகளில் கிடைத்தது. அது அவரை ஒரே நாளில் மிகவும் பெரிய பணக்காரராக மாற்றியது. எத்தனை ஆச்சரியம் பாருங்கள்!

டெய்சி சிங்கர் தன் ஐசுவரியத்தை, தன் உயிலை ஒரு பாட்டிலில் போட்டு வைத்தார், ஏனெனில் அவரால் தான் செல்லும் இடத்திற்கு எந்த ஐசுவரியத்தையும் கொண்டு போக முடியாது. அதே போல ஜேக்கும் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது. இந்த உலக ஐசுவரியம் இந்த உலகத்தோடு முடிந்து விடுகிறது. எத்தனை பெரிய ஐசுவரியவானாயிருந்தாலும் ஒன்றையும் தான் மரிக்கும்போது, தனக்காக ஒரு வீட்டை கட்டவோ, தனக்காக சொத்து சேர்த்து வைக்கவோ ஒரு பைசாவையும் கூட எடுத்துச் செல்ல முடியாது.