Showing posts with label Real Stories. Show all posts
Showing posts with label Real Stories. Show all posts

Monday, September 8, 2014

நிச்சயமான ஓட்டம் - சுவிசேஷகர் பில்லிகிரகாம்

புகழ்பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரகாம் அவர்களுக்கு தற்போது 96 வயதாகிறது (நவம்பர் மாதம் 1918ம் வருடம் பிறந்தார்). அவருக்கு பார்க்கின்ஸன் என்னும் வியாதி உள்ளது.
.
2000ம் வருடம் ஜனவரி மாதத்தில் வட கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பில்லி கிரகாமை கௌரவிக்கும் பொருட்டு, ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
.
ஆரம்பத்தில் அந்த கூட்டத்திற்கு போக அவர் மனமில்லாதிருந்தார். ஆனால் அந்த கூடடத்தை ஒழுங்கு செய்திருந்தவர்கள், 'நீங்கள் பெரிய பேச்சொன்றும் பேச வேண்டாம். நீங்கள் வந்தாலே போதும், அது எங்களுடைய பாக்கியம், நாங்கள் உங்களை கௌரவிக்கவே விரும்புகிறோம்' என்று கூறினர். பின் அவர் சம்மதித்தார்.
.
அவரை குறித்த புகழாரங்களை சூட்டி முடித்தபிறகு, பில்லி கிரகாம் பேச எழுந்தார். எழுந்து அங்கு கூடியிருந்தவர்களிடம், 'இன்று எனக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களை குறித்த ஞாபகம் வருகிறது. அவர் ஒரு நாள் நியுயார்க் நகருக்கு செல்லும் இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வரிசையாக மக்களிடம் பரிசோதனை செய்து கொண்டு வந்தார். அவர் ஐன்ஸ்டனிடம் அவர் பயண டிக்கெட்டை காட்டும்படிக் கேட்டார். அவரும் தனது கோட் பாக்கெட்டில் கையை விட்டு துளாவினார். டிக்கெட்டை காணவில்லை. அவரது இக்கட்டான நிலையை கண்ட பரிசோதகர், 'ஐயா உங்களை இந்த நாடே அறியும், நானும் உங்களை அறிவேன். நீங்கள் டிக்கெட் எடுக்காமல் இருக்க மாட்டீர்கள். சிரமப்பட்டு கொள்ள வேண்டாம்' என்று ஆறுதலோடு பேசினார். எனினும் ஐன்ஸ்டினுக்கு சமாதானமில்லை. 'என்னை யார் என்று உங்களுக்கு தெரியும், நான் யார் என்று எனக்கு தெரியும், ஆனால், இப்போது என்னுடைய பிரச்சனை என்னவென்றால், நான் நியுயார்க் பெருநகரில் எந்த ஸ்டெஷனில் இறங்க வேண்டும் என்பது எனக்கு தெரியாதே' என்று அங்கலாய்த்தார்.
.
இதை பில்லிகிரகாம் சொல்லிவிட்டு, 'இப்போது நீங்கள் பார்க்கிறீர்களே, நான் அணிந்திருக்கும் இந்த சூட், இது புத்தம் புதிய சூட்டாகும், என்னுடைய பிள்ளைகளும், எனது பேர பிள்ளைகளும், நான் இந்த வயதான காலத்தில் கொஞ்சம் மெதுவாக எல்லாவற்றிலும் இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நான் எப்போதும் வேகமாக காரியங்களை செய்து பழகினவன். அதனால் இந்த விசேஷித்த கூட்டத்திற்கு நான் போய் இந்த சூட்டை வாங்கி அணிந்து வந்தேன். இதற்கு மட்டுமல்ல, வேறு ஒரு முக்கிய நாளிலும் இதே சூட்டை அணிவேன். அந்த நாள் என்னவென்றால், நான் மரித்து அடக்கம்பண்ணப்படும்போது இதே சூட்டை அணிவேன். நான் மரித்தேன் என்று நீங்கள் கேள்விப்படும்போது, நான் அணிய இருக்கும் இந்த உடையை எண்ணாமல், நான் இப்பொது சொல்ல இருக்கும் வார்த்தைகளை நினைவு கூருங்கள். அது என்னவென்றால், நான் யார் என்பதும் எனக்கு தெரியும், மட்டுமல்ல, நான் மரித்தபின் எங்கே போவேன் என்பதும் எனக்கு நிச்சயமாக தெரியும்' என்று கூறினார்.
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டினுக்கு இந்த உலகத்தில் தான் எங்கே போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் பில்லிகிரகாம் அவர்களுக்கு தான் மரித்த பிறகு தான் போகும் இடத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். நாம் எங்கே எதை நோக்கி போய் கொண்டிருக்கிறோம் என்று நம்மால் கூற முடியுமா? ஆனால் நாம் எங்கு போய் கொண்டிருக்கிறொம் என்ற இலக்கு தெரியாவிட்டால் நமது நிலைமை எத்தனை பரிதாபம்!
.
'நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்' என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னார். அவருக்கும் தான் என்ன செய்கிறோம், எதை நோக்கி ஓடுகிறோம் என்று நிச்சயம் இருந்தது. ஒரு ஓட்டபந்தயம் என்று இருந்தால் அதற்கான இலக்கு குறிக்கப்படும். அந்த இலக்கை நோக்கி சரியான தடத்தில் ஓடி, முதலில் வந்தாலே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இலக்கு இல்லாதபடி ஓடினால், நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் எந்த பயனும் இல்லை. நாம் தடம் மாறி ஓடினாலும் நாம் தோற்றவர்களே!
.
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம் (1கொரிந்தியர் 9:25).

Thursday, September 4, 2014

விழாமல் காத்திடுமே

ஒரு போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஒரு இராணுவ அதிகாரி தன் போர் வீரர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பார்வையிட சென்றிருந்தார். அவர் எதிரிகளுக்கு எதிரான சுவர் போன்ற ஒரு இடத்தில் நின்று கொண்டு எதிரியின் படைகளை பார்க்க சென்றார். அப்போது அந்த இராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள், 'இந்த இடத்தில் நீங்கள் குனிந்து செல்ல வேண்டும். எதிரிகள் சுடுவார்கள்' என்று எச்சரித்தனர். 

ஆனால் அவரோ, 'ஒரு யானையே நின்றாலும் அவ்வளவு தூரத்தில் இருந்து எதிரிகளுக்கு தெரியாது' என்று கூறியவாறு பார்வையிட்டு கொண்டிருந்தார். அவர் சொல்லி முடிக்கவும், அவர் மேல் எதிரியின் ஒரு குண்டு பாய்ந்து, அந்த இடத்திலேயே உயிர் இழக்க நேரிட்டது. எதிரியை குறித்து அத்தனை தவறாக எடை போட்டார். அதனால் அவர் உயிருக்கே ஆபத்து வந்தது.
.
'தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நீங்கள் எத்தனை ஆவிக்குரியவர்களாயிருந்தாலும் சரி, எத்தனை சோதனைகளை ஜெயித்தவர்களாயிருந்தாலும் சரி, வசனம் சொல்கிறது விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்ககடவன் என்று. சத்துருவுக்கு எதிரான நம்மை காத்து கொள்வதில் நாம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, ஒரு இரயிலில் போய் ஏறி, காலை வரை தூங்கி, பின் நம் இடத்திற்கு செல்லும் சொகுசான வாழ்க்கை அல்ல. 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' (1பேதுரு 5:8) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது.

Friday, June 20, 2014

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஒரு மனிதன் லண்டனில் ஒரு இடத்திற்கு போவதற்காக இரயிலில் ஏறினான். அவனுக்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள். இரயில் புறப்பட்டு 20 நிமிடம் இருக்கும். அந்த இரண்டு வாலிபர்களில் ஒருவனுக்கு திடீரென்று வலிப்பு வந்து, இழுக்க ஆரம்பித்தது. உடனே பக்கத்தில் இருந்த மற்ற வாலிபன், தன் மேல் உடையை கழற்றி, வலிப்பு வந்த வாலிபனின் தலைக்கு அடியில் வைத்து, வாயில் வந்த நுரையை துடைத்து, அந்த வலிப்பு நிற்கும் வரை காத்திருந்து, வேர்வையை துடைத்து, அந்த வாலிபனை மீண்டும் அவன் இடத்தில் அமர பண்ணினான். அதை ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்த மற்ற பிரயாணியிடம் திரும்பி, 'ஐயா, ஒரு நாளில் இவனுக்கு மூன்று அல்லது நான்கு முறை இந்த வலிப்பு வருகிறது. நானும் இவனும் நண்பர்கள். நாங்கள் இரண்டு பேரும், வியட்நாம் போரில் ஈடுபட்டவர்கள். அந்த போரில் இரண்டு பேரும் அடிபட்டோம். ஏன் இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்து, நான் நடக்க முடியாமல் போனது, இவனது தோளில் ஒரு குண்டு பாய்ந்தது. எங்களை காப்பாற்ற வர வேண்டிய ஹெலிகாப்டர் ஏதோ காரணத்தினால் வரவேயில்லை.
.
இந்த என் நண்பன், நடக்க முடியாத என்னை தன் தோளில் சுமந்து கொண்டு, மூன்றறை நாட்கள் நடந்து ஒரு பெரிய காட்டை கடந்தோம். வழியில் வியட்நாம் போர் வீரர்கள் எங்களை குறி வைத்து, குண்டுகளை வீசி கொண்டே இருந்தார்கள். நான் இவனிடம், 'என்னை கீழே போட்டு விட்டு நீ தப்பித்து கொள்' என்று எத்தனையோ முறை சொன்னேன். ஆனால் இவனோ என்னை கீழே விடவே யில்லை. அந்த பயங்கர காட்டிலிருந்து தப்பி எப்படியோ வெளியே வந்தோம். என் உயிரை இவன் காப்பாற்றினான். எதற்கு காப்பாற்றினான், எப்படி காப்பாற்றினான் என்பதை நான் அறியேன். நான்கு வருடங்களுக்கு முன்பு இவனுக்கு இந்த வியாதி இருப்பதை கண்டேன். நான் நியூயார்க் நகரத்தில் இருந்த வீட்டை விற்று விட்டு, இவனை கவனித்து கொள்ள இவனோடு கூட நான் இருக்கிறேன். இவன் எனக்கு செய்தததற்காக நான் என்ன வேண்டுமானாலும் இவனுக்காக செய்ய தயார்!' என கண்களில் நீர் மல்க கூறினான்.

அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17:15-19).

Thursday, May 1, 2014

நம்பிக்கையின் வைரம் - (Hope Diamond)


உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற விலையேறப்பெற்ற கல்லாக நம்பிக்கை வைரம் (Hope Diamond) இன்றளவும் விளங்குகிறது. இது முதலில் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பட்டதாகவும், அதை ஒரு பிரஞ்ச் வாணிபர் வாங்கி, Evalyn Walsh McLean என்பவருக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வைரத்தை உரியவர்களுக்கு அது சாபத்தையும், சாவையும் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அது அநேகருடைய கை மாறினாலும், அது சாபத்தை கொண்டு வந்ததால், அத உரியவர்கள் உடனே மற்றவர்களுக்கு விற்றனர். கடைசியில் இப்போது அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் (Smithsonian) என்னும் கூடத்தில் தானமாக கொடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
.
விலையுயர்ந்த கற்கள் எப்போதும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வைக்கப்படும். அதை அடைவதற்காக யுத்தங்களும் நடந்ததுண்டு. சிலர் தங்களுடைய மனைவிகளுக்கு வைரத்தால் செய்த மோதிரங்களை தங்களின் அன்பின் அடையாளங்களாக தருவதுண்டு. எப்போதும் அதனுடைய மதிப்பு போற்றதக்கதே!

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். - (1பேதுரு 2:5).

Wednesday, March 5, 2014

கடைசி கால கொடுமைகள்

இஸ்ரவேலருக்கும், காசாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரைக் குறித்து பார்த்தோம். இந்த நாளிலும் தொடர்ந்து, மேலே சொல்லப்பட்ட வார்த்தையின்படி நடைபெறும் சம்பவங்களைக் குறித்து காண்போம்.
.
இத்தனை நாட்கள் இல்லாதபடி, திடீரென்று ஒரு பயங்கரமான, இரக்கமில்லாத, கடூரமான தீவிரவாத இயக்கம் ஈராக்கில் தோன்றியுள்ளது. அதற்கு பெயர் Islamic State of Iraq and Relevant எனப்படும் ISIS ஆகும். இந்த ஐசிஸ் இயக்கத்தினருக்கு அனைவரும் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால், அவாகள் சொல்லும் வரியை செலுத்த வேண்டும். செலுத்த முடியாவிட்டால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கொல்லப்படுவார்கள். இந்த இயக்கத்தினரால், இஸ்லாமியருக்கே மிகுந்த பிரச்சனை ஏறபட்டுள்ளது. தங்கள் சுன்னி மார்க்கத்தை பின்பற்றாதவர்களை அவர்கள் கடுகளவும் இரக்கமின்றி, கைகளை பின்னாக கட்டி, கண்களை கட்டி சுட்டு கொல்லுகிறார்கள்.
.
இந்த இயக்கத்தினர் ஈராக்கில் அநேக இடங்களை கைப்பற்றி, அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். மோசுல் என்னும் இடத்தையும் கைப்பற்றி, அநேக ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருக்கும் அந்த இடத்தில் உள்ள கிறிஸ்தவர்களை வரிப்பணம் கட்ட சொல்லி வற்புறுத்துவதால், அநேகர் தங்கள் சொந்த வீடுகளை வசதிகளை, இழந்து, வேறு இடத்திற்கு ஓடிவந்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் அவர்கள் சொல்லும் வரிப்பணத்தை கட்ட முடியாத காரணத்தினால், தகப்பனுக்கு முன்பாகவே மனைவிiயும், மகளையும் கற்பழித்ததை கண்ட தகப்பன், தாங்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார். அங்கிருந்த யோனாவின் கல்லறையும், தானியேல் தீர்க்கதரிசி இருந்த கல்லறையையும், பழங்காலத்திலிருந்து தொழுதுக் கொண்டு வரப்பட்ட ஒரு தேவாலயத்தையும் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.
.
இந்த இயக்கத்தினர் மத்திய கிழக்கு பகுதிகளில் ஒருவித பீதியையும், கலகத்தையும் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களை கொன்று, அவர்கள் தலைகளை கையில் பிடித்துக் கொண்டு சிரிக்கும் காட்சிகள் அனுதினமும் முகநூலில் காண முடிகிறது. இந்த இயக்கத்தின் தலை நசுக்கப்படவும், இவர்களின் யோசனைகள் அபத்தமாகி, ஒன்றுமில்லாமற் போகவும் நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கத்தான் வேண்டும்.
.
நைஜீரியாவில் பொக்கொ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 வாலிப பிள்ளைகள் இன்னும் தங்கள் பெற்றோரை வந்து சேரவில்லை. நைஜீரியாவில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பில்லை. பொக்கோ ஹராம் தீவிரவாத இயக்கம், சபை நடந்துக் கொண்டிருக்கும்போது, உள்ளே நுழைந்து கிறிஸ்தவர்களை கொல்லுகிறார்கள். சபையோடு அப்படியே எரித்து விடுகிறார்கள்.
.
மேலே சொன்ன சம்பவங்கள் வெகு சிலதே. மற்ற நாடுகளில் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்ற பெயருக்காகவே சித்தரவதை செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். 'என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்' என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தை இந்த நாட்களில் துல்லியமாக நிறைவேறி வருகிறது.
.
கர்த்தர் தீர்க்கதரிசனமாக சொன்ன மற்றொரு காரியம், கொள்ளை நோய்கள். இப்போது எபோலா என்கிற கொல்லும் நோய் ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது, இது காணப்பட்டு சில வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரித்திருக்கிறார்கள். இந்த நோயை கொண்டவர்கள் தங்கள் நாடுகளில் வந்துவிடக் கூடாது என்று ஆப்ரிக்க நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு வரும்போது ஏகப்பட்ட சோதனைகள் செய்து, சரியானப்பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் பாஸ்கரன் என்ற தேனியை சேர்ந்தவர் பல பரிசோதனைக்கட்கு உட்பட்டு பின்தான் சொந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது செய்தியின் வழியாக நாம் அறிந்ததே.
.
இந்த எபோலா (Ebola) வைரஸ் குரங்குகள், சிம்பன்சிகள் மூலமாக பரவுகின்றன. இந்த வைரஸை உடையவர்களின் இரத்தமோ, மற்ற உடலிலுள்ள எந்த நீரோ மற்றவர்களின் கையில் காலிலுள்ள சிறுசிராய்ப்பு அல்லது, வெட்டுகளின் மேல் பட்டு, மற்ற எந்த வகையிலாவது, அவரின் இரத்தத்தோடு கலந்து விட்டால், அவருக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும். இந்த வைரஸ் நோய் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக இந்த வைரஸ் தாக்கிய தங்கள் அன்புக்குரியவர்களையே தெருவில் வீசும் அவலம் தற்போது லைபிரியாவில் காணப்படுகிறது. எத்தனை பயங்கரம் பாருங்கள்!
.
சமீபத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சீனாவில் அநேகர் மரித்திருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போதோ நடந்தவை அல்ல, ஒரு மாதம், அல்லது அதற்குள்ளாகவே நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள்!
.
இவையெல்லாம் கடைசி நாட்களின் அறிகுறிகள். இயேசுகிறிஸ்து சொன்னார் இவையெல்லாம் வேதனையின் ஆரம்பம் என்று. வேதனைகளின் ஆரம்பம் ஆரம்பித்து விட்டது. இனிமேல் தொடர்ந்து வேதனைகளைத்தான் செய்தித்தாள்களில் வாசிக்க முடியும்.
.
ஒரு வேளை நாம் இருக்கும் நாடுகளில நம் சொந்த தேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாடுகள் வந்தால் நாம் எத்தனை தூரம் கர்த்தருக்காக நிற்போம்? என் உயிர் போனாலும் நான் கர்த்தரை மறுதலிக்க மாட்டேன் என்கிற உறுதி நம் இருதயத்தில் இருக்கிறதா? மத்திய கிழக்கு பகுதிகளில் ஆரம்பித்துள்ள சம்பவங்கள் நாம் வாழும் தேசங்களையும் சந்திக்க வெகு தொலைவில் இல்லை. ஆனால் நாம் நம் விசுவாசத்திலும், கர்த்தரைப் பற்றிய வைராக்கியத்திலும் உறுதியாய் நிற்போம். கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக, அந்த நோய் மற்ற நாடுகளில் பரவாமலிருக்க ஜெபிப்போம். மற்ற நாடுகளில் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் துன்பப்படுகிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். இது நாம் சுகமாய் இருக்கும் இந்த நாட்களில் செய்ய வேண்டிய கடமையாகும். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது. ஆமென் மாரநாதா!

Monday, November 4, 2013

எமி கர்மைக்கேல் அம்மையார்

எமி கர்மைக்கேல் அம்மையார் இந்தியாவிற்கு வந்து அனாதைகள், இளவயதுள்ள விதவைகள் மற்றும் தேவதாசிகள் என்னப்பட்ட சிறுமிகளை வைத்து 50 வருடங்களுக்கு மேலாக காப்பகம் வைத்து நடத்தி வந்தார். இன்றும் டோனாவூரில் அந்த காப்பகம் நடைபெற்று வருகிறது. வயதான காலத்தில் சிலமுறை கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு, தனது கடைசி இருபது வருடங்கள் படுத்த படுக்கையாகிவிட்டார்கள்.
.
அப்படியிருந்தும் அவர்கள் படுக்கையிலிருந்தபடியே அநேக புத்தகங்களையும், பாடல்களையும் கவிதைகளையும் எழுதினார்கள். அது அநேக ஆயிரங்களுக்கு ஆறுதலை கொண்டு வந்தது.
.
தனது உதவியற்ற நிலைமையிலும் அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்தார்கள். “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்தே தமது பெலன்” என்று அவர்கள் மகிழ்ந்திருந்தபடியால் அவர்களுடைய படுக்கைக்கு அவர்களை காணச் சென்றவர்கள் தேற்றப்பட்டு, கர்த்தரை துதித்தபடி வந்தார்கள்.
.
ஒரு முறை உலகபிரசித்திப் பெற்ற தேவ ஊழியர் பில்லிகிரகாம் இந்தியாவிற்கு வந்திருந்தபோது டோனாவூரில் கார்மைக்கேல் அம்மையாரை சந்திக்கச்சென்றிருந்தார். திரும்பும்போது அவரை ஜெபிக்க வேண்டினர். அவர் ஜெபித்த போது தேவனுடைய பிரசன்னம் அந்த அறையில் அளவில்லாமல் நிரம்பியிருந்தபடியால் அவர் தொடர்ந்து ஜெபிக்க முடியாமற்போயிற்று. ஏமி அம்மையார் ஜெபித்து முடித்தார்கள். மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று, கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. - (1 இராஜாக்கள். 8:11)
.
நமது குறைகளில் நாம் முறுமுறுத்துக் கொண்டே இருக்கிறோம் அல்லவா? நமது குறைகளிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமது பெலன் என்று நாம் கர்த்தரை துதிக்க கற்றுக் கொண்டால் தேவ பிரசன்னம் நம்மை அளவில்லாமல் சூழ்ந்து கொள்ளும்;

Friday, July 26, 2013

கோபம் அன்பை கொல்லும்


ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.

அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது.

நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று

ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.

பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.

தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.

முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.

எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.




www.dailymail.co.uk

Tuesday, July 9, 2013

உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்

பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை மாறாக
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்

மத்தேயு 10: 28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

முதல் கிறிஸ்தவர் கொல்லப்பட்ட, ஒரிசா கந்ரஹம் பகுதியில் கிறிஸ்தவர்கள் தங்கள் இடிந்து போன வீடுகள் முன்பாக இயேசு கிறிஸ்துவை ஆடி பாடி கொண்டாடுகின்றனர். இப்பகுதி கலவரத்தில், கொல்லப்பட்டார்.

இக்கலவரத்தில் முதன் முதலாக எரிக்கப்பட்டவர் சகோதரர் ரசனந்த் பிரதான். இவருடைய சகோதரர் இரபின்றா பிரதான் - ஐ வீட்டோடு வைத்து எரித்து விட்டார்கள். தேவனின் அநாதி தீர்மானத்தினால் உயிர் பிழைத்த இவர் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை அறிக்கையிட தன் கிராமத்து மக்களோடு தயாராகி வருகிறார்கள்.

"என் சகோதிரர் தன் உயிரை இழந்தது வீணாய் போய்விடவில்லை. புதிதாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எங்கள் சபை ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

இந்த பகுதியில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தீக்கிரையக்கபட்டன.. ஆனாலும் உயிர் பிழைத்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சொந்த குடும்பத்தில் பலரை இழந்தாலும் கிறிஸ்துவை இழந்து விடவில்லை. மறுதலிக்கவும் இல்லை. தொடர்ந்து தேவனை ஆராதித்து வருகின்றனர்.

இவர்களின் விசுவாசத்தை, தைரியத்தை, கொன்றவர்களை மன்னிக்கும் தேவ அன்பை கண்ட பல இந்து குடும்பங்கள் இன்று இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டுள்ளனர். சிலுவையின் அன்பு இன்றும் பல கலவரக்காரர்களை மாற்றி வருகிறது.

தேவனுக்கே நன்றி. அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்கு பின் இதுவரை பல கோடிகணக்கான பேர் கொல்லப்பட்டும் கிறிஸ்தவம் இன்றும் மேலோங்கி நிற்ப்பதற்கு காரணம் சிலுவையின் அன்பை ஒவ்வொரு கிறிஸ்தவனும் உலகுக்கு வெளிபடுத்தி கொண்டிருக்கிறான். இந்த தேவ அன்பு தான் இன்று பல புறமதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்துவின் மந்தையில் இணைத்து வருகிறது.

இந்த அன்பிற்கு நீங்களே சாட்சி. இந்த தெய்வத்திற்கு நம் வாழ்க்கை சாட்சி. பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை. ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களை, அவர்களின் வாழ்க்கையை படித்து வருகின்றனர். சாட்சியாக வாழ்வோம். தேவனின் நாமத்தை உயர்த்துவோம். ஆமென்.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

கமல் சலீம் - தீவிரவாதி விசுவாசியான சாட்சி

கமல் சலீம் - ஓர் சவுல் மீண்டும் நடுரோட்டில் இயேசுவை கண்ட அதிசயம்
முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி
இன்றைய தீவிர விசுவாசி

1957 ஆம் ஆண்டு லெபனானில் பிறந்த இவர் ஒரு சுன்னி முஸ்லிம் ஆவார். அதோடு சலீம் ஒரு தீவிர யூத விரோதியாவர்.

இன்றோ, கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

4 வயது குழந்தையாய் இருக்கும் போதே இவருடைய தாயார் அமெரிக்கர்களையும், யூதர்களையும் கொன்று குவித்து முகமதிய சமயத்திற்காக உயிர் துறக்கும் தியாகியாக மாற வேண்டும் என்று போதிக்கபட்டார்
7 வயதில் முதற் முயற்சியாக ஆயுதங்களை கடத்தும் குழந்தையாக அப்போதைய பாலஸ்தீன தீவிரவாத தலைவர் யாசர் அராபாத்துக்காக செயல்பட்டார்.
15 வயதில் வெடிமருந்துகளில் மன்னனான இவர், லிபிய முன்னாள் அதிகாரியான முகமது கடாபியின் ஆட்சிகாலத்தில் அங்குள்ள பாலைவன தீவிரவாத முகாம்களில் உள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார்.

வாலிபனான பொது இவரின் தீவிரவாத மூர்க்கம் அதிகரித்தது. பாரிஸ், லண்டன், ஆப்கானிஸ்தான், செல்வசெளிபுள்ள அரபு ஷேக்குகளிடம் சென்று தீவிரவாத இயக்கங்களுக்கு தேவையான நிதிகளை திரட்டி வந்தார். உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதே இதன் அடிப்படை. அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள நலிந்த மக்களை தன்னுடைய திறமையால் முகமதிய மதத்திற்கு மாற்றினார்.

இதன் மத்தியில் ஓர் நாள் கொடுமையா விபத்தொன்றில் சிக்கினார். இவர் இவரின் இயக்கங்களுக்கு பணம் திரட்டிய போதும் தன்னை பற்றியோ, குடும்பத்தை பற்றியோ கவலை பட்டதில்லை. மருத்துவ காபீடோ, குடும்பத்தில் போதிய பணமோ இல்லாததினால் படுத்த படுக்கை ஆனார். இவரை கவனிக்க ஆளில்லாமல் மிகவும் வருத்தப்பட்டார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர்.

கிறிஸ்தவர்களின் அன்பு இவரின் மனதை மாற்றியது. இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தேவனை அதிகமாக நேசிப்பவர். இவரை காபற்றின கிறிஸ்தவர் கமல் சலீமை தன்னுடைய வீட்டில் தங்க சொன்னார். கமல் சலீம் குணம் அடைய கிறிஸ்தவ கூடுகைகளில் ஜெபம் செய்யப்பட்டது. இவருக்காக காணிக்கையும் எடுத்தார்கள். இதை பார்த்த கமல் சலீமின் மனம் உடைந்தது. அல்லாவிடம் ஜெபம் செய்தார். தீவிரவாத முகாம்களில் அன்பை பற்றி போதிதிராத காரணத்தினால் இவர் இகிரிஸ்தவரின் அன்பை புரிந்து கொள்ளவில்லை. ஏன்? அல்லா தன்னை கைவிட்டு விட்டாரோ? ஏன் என்னை இனிலமைக்கு ஆளாக்கினார் என்று இவர் கேள்விக்கு அல்லாஹ்விடம் இருந்து பதில் வரவில்லை.
"அல்லாஹ், என்னை ஏன் எதிரிகள் கைகளில் ஒப்படைத்தாய்? இவர் அல்லாஹ்வின் அற்புதத்தை பார்க்க விரும்பினார். "அல்லாஹ்.. நீர் இருப்பது உண்மையானால், நான் உன் குரலை கேட்க வேண்டும்" என்று கதறினார். ஒன்றும் நடக்கவில்லை.

அநேரத்தில் இவரின் மனதில் "ஏன் நாம் ஆபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாகோபின் தேவனை கூப்பிடகூடாது?" என்ற கேள்வி எழுந்தது. அதி முதல் 'யேகோவா தேவனை" நோக்கி கூப்பிட ஆரம்பித்தார். அப்போது ஆணிகள் கடாவபட்ட இரு கரங்கள் இவருக்கு முன்பாக பயங்கர பரிசுத்த தேவன் காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து கமல் சலீமிடம் பேச ஆரம்பித்தார். அவரின் இனிய குரலை முதன் முதலாக கமல் சலீம் கேட்டார். பரிசுத்த தேவன் தான் கமல் சலீமை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதை அன்போடு, கனிவோடு பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு கமல் சலீமின் காயங்கள் முழுவதும் ஆறிப்போனது. அதிசயத்தின் தேவன் மீண்டும் ஓர் சவுலை பவுலாக மாற்றினார். அல்லேலூயா.... ஆமென்..


வேதாகமத்தை வாசிக்க வாசிக்க தேவன் தன்னிடம் பேசுவதை உணர்ந்தார். இன்று கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

அன்பார்ந்த கிறிஸ்தவ விசுவாசிகளே, இவரை போன்ற ஆயிரம் ஆயிரம் சாட்சிகள் நம்மை சுற்றிலும் உள்ளன. ஜெபியுங்கள். அன்பு கூறுங்கள். தேவன் உங்கள் அருகில் உள்ள அனைவரிடமும் பேச முடியும். நம்மை முழுவதுமாக தாழ்த்துவோம்.

எபிரெயர்.12: 1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

இரத்த சாட்சி - சவுதி அரேபியாவில் விழுந்த கோதுமை மணி



சவுதி அரேபியாவில் விழுந்த கோதுமை மணி
“Oh history record and witnesses witness (that) we are Christians walking on the path of the Messiah.” - Fatima Al-Mutairi

"வரலாறுகளும், சாட்சிகளும் நாங்கள் கிறிஸ்தவர்கள் (இயேசு கிறிஸ்து) மேசியாவின் வழியில் நடப்பவர்கள் என்று சாட்சி கூறும்" இது பாத்திமா அல் முதைரி எழுதின ஓர் கவிதையில் இருந்து எடுக்கப்பட்டது.

சவுதி அரேபியா கிழக்கு பிரதேசம், புரய்தஹ்வை சேர்ந்த முகமதியர் ஒருவர், தன் சொந்த தங்கை பாத்திமா அல் முதைரி யை சில நாட்களாகவே சந்தேகப்பட்டு வந்தார். பாத்திமா அல் முதைரி அவர்கள் அடிக்கடி கடவுளை பற்றி தன் குடும்பத்தாருடன் கருத்தை பகிர்ந்துள்ளார். இதனால் பாத்திமா அல் முதைரி வின் சகோதிரர் இவருடைய கணினி (கம்ப்யூட்டர்), புத்தகங்களை தோண்ட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு சில பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள், இயேசு கிறிஸ்துவை பற்றின காரியங்கள் மற்றும் பாத்திமா அல் முதைரி வின் கணினியில் ஓர் சிலுவையும் இருந்துள்ளது. இதை பற்றி பாத்திமாவிடம் விசாரித்தார். கடும் கோபம் வந்தது. பாத்திமாவை ஓர் அறையில் அடைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.

தனக்கு ஏதோ நிகழபோகிறது என்று புரிந்துகொண்ட பாத்திமா அல் முதைரி தன் கணினியை எடுத்து தன் கடைசி கடிதத்தையும் கவிதையையும் தேவனுகேன்று எழுத ஆரம்பித்தார்.
அக்கடிதத்தில் தனக்கும் குடும்பத்தாருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. "நான் மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன்."மாறிவிடு, இல்லையென்றால் குற்றவாளியாவாய்" என்று சகோதிரர் மிரட்டினார். "என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுவிட்டன" என்று நான் கூறினேன். பிறகு எனக்கு தெரியாமல் என் சகோதிரர் கணினியை பார்த்து நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினதை கண்டுபிடித்து விட்டார். நான்கு மணிநேரம் இந்த அறையில் அடைபட்டு கிடப்பது எனக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் "கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவர் என் வெளிச்சமும், ரட்சிப்புமானவர். யாருக்கு அஞ்சுவேன்?"

இது கடைசியாக பாத்திமா எழுதின கடிதம்.
இவர் எழுதின கவிதையிலிருந்து (http://gch1.org/ar)ஒரு சில வரிகள்
"ஒ முகமதியர்களே, தேவன் உங்களை வழிநடத்தட்டும்
மற்றவர்களை நேசிக்க உங்கள் இருதயத்தில் போதிப்பாராக
நாங்கள் சிலுவையை வணங்கவில்லை, இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கிறோம்.
முகமதுவின் வழியில் நாங்கள் இல்லை, உண்மையான மேசியாஹ் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறோம்.
எங்களை வாழ விடுங்கள்
என் கண்ணீர் என் தாடையை தடவி பார்கிறது
இதயம் சோகத்தில் உள்ளது
கிறிஸ்தவர்கள் மேல் இவ்வளவு மூர்க்கம் கொள்கிறீர்களே?
மேசியாவின் வார்த்தை "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்"
எங்களோடு மறித்து கல்லறையில் நீங்கள் அடக்கம் பண்ண படபோவதில்லை
உங்கள் பட்டயத்தை பற்றி கவலையில்லை, நான் பயப்படவில்லை
தேவனால் மரணத்திற்கு ஒப்புகொடுக்கிறேன், ஒ கிறிஸ்தவர்களே, இந்த சோகமான வாழ்க்கைக்காக என் கண்களில் கண்ணீர் வருகிறது.
வரலாறுகளும், சாட்சிகளும் நாங்கள் கிறிஸ்தவர்கள் (இயேசு கிறிஸ்து) மேசியாவின் வழியில் நடப்பவர்கள் என்று சாட்சி கூறும்
என்னுடைய கடைசி வார்த்தை "இந்த உலகத்தில் உள்ள மேசியாவான இயேசுவிடம் ஜெபிக்கிறேன், வெளிச்சத்தின் பாதையில் நடத்துபவர், எங்கள் எண்ணங்களை மாற்றியவர், சரியாக நீதி நிலைநிருத்துபவர், முகமதியர்கள் மத்தியில் அன்பை பகிர்ந்து கொள்ளுவார்"

இது தான் இவர் எழுதின கடைசி கவிதை. நான்கு மணிநேரம் கழித்து வந்த இவர் சகோதிரர் உயிரோடு பாத்திமாவை எரித்தார். பிறகு அவர் நாக்கை வெட்டினார். கொலை செய்தார்.

அன்பு நண்பர்களே. இது ஒரு பகுதியில் நடந்த கதைதான். தன்னுடைய வாழ்க்கை முடிவது தெரிந்தாலும் தைரியமாக ஓர் அரேபிய இணைத்தளம் மூலம் இயேசுவை உலகதிருக்கு அறிவித்துவிட்டு மறித்து போனார். இவர் சார்ந்துள்ள "அல் முதைரி" இனத்திற்காக ஜெபிப்போமா? இவரை போல் பல ரகசிய கிறிஸ்தவர்கள், ஊழியர்கள், போதகர்கள் உள்ளனர். இவர்களை நீங்கள் நேரில் சந்திக்க முடியாது. ஆனால் ஜெபிக்க முடியும்.

பாத்திமா அல் முதைரி -- உம்மை பரலோகத்தில் நிச்சயம் சந்திப்பேன். ஆமென்

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

http://ministry-of-grace.org/?p=264
http://www.youtube.com/watch?v=oA-bBI5W9qY
http://www.stfrancismagazine.info/ja/Fatima%20of%20Saudi%20Arabia.pdf

சாட்சி - இயேசுவை அறியாமல் வாழ்ந்து வந்தேன்

என் பெயர் ஸ்ரீனி சாமுவேல். நான் இயேசுவை அறியாமல் வாழ்ந்து வந்தேன். எனக்கு பனிரெண்டு வயது இருக்கும்பொழுது என தந்தை வேலைக்கு செல்லாமல் இருந்ததால் எங்கள் குடும்பம் மிகுந்த வறுமை அடைந்தது. அப்பொழுது என தாயார் கேழ்வரகை வைத்து பலகாரம் செய்து கொடுப்பார். காலையில் பள்ளிக்கு செல்வேன், மாலையில் தெருக்களில் சென்று என தாய் செய்து கொடுக்கும் பலகாரங்களை விற்பேன். ஒரு இனிப்பு பத்து பைசாவிற்கு விற்றால் ஒரு நாளைக்கு பாத்து ரூபாய் வருமானம் மட்டுமே கிடைக்கும். பல நாட்கள் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டோம்.

அந்நாட்களில் என் தாயார் செய்து தரும் பலகாரம் மட்டுமே எங்கள் உணவாக இருக்கும். மதிய உணவு முடிந்தபின் மீதமாக வரும் சிறு அளவு சாதத்தில் மோர் கலக்கிக் கொடுப்பார் என் தாயார், பல நாட்கள் அதுவே என் இரவு உணவாக இருந்தது. முதலாவது என் சகோதரி ஏசுவை ஏற்றுக் கொண்டார். அதன்பின், என் தாயாரும் ஏசுவை ஏற்றுக் கொண்டார். அப்பொழுதெல்லாம் என் தாயாரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே நான் ஆலயம் செல்வேன். அதன்பின், எனக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. இப்பொழுது ஆலயத்தைக் காட்டிலும் வேலை எனக்கு முக்கியமாக தெரிந்தது. நண்பர்களோடு ஊர் சுற்றுவது, சினிமா என்று ஜாலியாக நாட்களை கழித்தேன்.

என் தாயார் ஆலயத்துக்கு அழைக்கும்போது எல்லாம் எனக்கு வேலை இருக்கிறதென்று சென்று விடுவேன். என் தாயார் எனக்காக அதிகமாக ஜெபிப்பார்கள். பின்னாட்களில் நானும் என் தாயரோடு ஆலயத்திற்கு செல்லத் தொடங்கினேன். என்னுடைய வழிகள் தவறானவை என்பதை உணர ஆரம்பித்தேன். எனக்குள்ளே பல மாற்றங்கள், வாரம் தவறாமல் சபைக்கு செல்ல தொடங்கினேன், என் தாயாரை விட அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆண்டவரை அறிந்த நாள் முதல் என் வாழ்வில் பெருத்த மகிழ்ச்சி, பூரண நிம்மதியுடன் வாழ்கிறேன், எங்கள் வீட்டில் ஒருநாளும் உணவில்லாமல் இருந்ததில்லை. என் குடும்பத்தில் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே என் மூத்த சகோதரிக்கு குழந்தை பிறந்தது, என் இளைய சகோதரிக்கு எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலை, என் தாயாருக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்துள்ளது. என் வாழ்வில் இப்படிப்பட்ட சாபங்கள் இருக்க கூடாது என்பதில் மிக உறுதியாக ஜெபித்து வந்தேன். எனக்கு திருமணமான முதல் ஆண்டிலேயே முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தை தேவன் தந்தார்.

எனக்கு அருமையான மனைவியை தேவன் கொடுத்துள்ளார். இப்பொழுதும் எனக்கு இரண்டு குழந்தைகள். நான் எக்க்ஸ்போர்டிலேயே தொடர்ந்து வேலை செய்து வந்தாலும், ஒரு குறைவும் இல்லாமல் என் தேவன் என்னை வழி நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் கண்ணின் மணியைப் போல பாதுகாத்து நடத்தி வரும் தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Thursday, May 2, 2013

நோபல் பரிசு - "ஆல்பர்ட் நோபல்"

நூறாண்டுகளுக்கு முன் ஒரு நாள் செய்தித்தாளை பார்த்த ஒருவர் தன்னுடைய மரண செய்தியை காண நேரிட்டது. தவறுதலாக வேறு யாருக்கோ பதிலாக அவருடைய பெயரும், புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. அவருடைய புகைப்படத்தின் கீழ் டைனமெட் உண்டாக்கிய இராஜா என்றும், மரணத்தின் வியாபாரி என்றும் எழுதப்பட்டிருந்தது.
.
அதை பார்த்தவுடன் அந்த மனிதர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

மரணத்தின் வியாபாரி என்றா என்னை மக்கள் நினைவு கூருவார்கள் என்று
திடுக்கிட்டது. அது அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
தன்னை யாரும் அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை. உடனே
அந்நாளில் இருந்துதானே அவர் சமாதானத்திற்கான காரியங்களில் ஈடுபட
ஆரம்பித்தார். அவர் வேறு யாருமில்லை ஆல்பர்ட் நோபல் ஆவார். அவர்
பேரில் இன்றும் ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்கும், மற்ற அறிவியல்
ஆராய்ச்சிகளை கண்டுபிடித்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Thursday, April 11, 2013

சகோதரி ஹேமா ஜான் சாட்சி


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துதல்களை கூறிக்கொள்கிறேன். உங்களை சந்திப்பதிலே ஆண்டவர் கொடுத்திருக்கிற இந்த கிருபைக்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். வேதம் சொல்கிறது "கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது". இயேசு கிறிஸ்து யார் என்று அறியாத ஓர் பிராமண குடும்பத்தில் இருந்து 89 ம் ஆண்டு ஆண்டவர் என்னை பிரித்து எடுத்தார். அவருடைய பிள்ளையாக மாற்றிக்கொண்டார். அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும்.

பிராமண குடும்பத்திலே பிறந்து வைராக்கியமான முறையிலே நான் வளர்க்கப்பட்டாலும் என்னுடைய படிப்பு கல்வி எல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளிலே தான் இருந்தது. கிறிஸ்தவ பள்ளியில் படித்தாலும் கூட உண்மையான ஆண்டவர் அன்பை அறியாமல் இருந்தேன். குடும்பத்திலே பல போராட்டங்களும் பிரச்சனைகளும் இருந்தது. என்னுடைய தகப்பனாருக்கு சரியான கண் பார்வை இல்லாதபடியினால் குடும்ப பாரத்தை சுமக்க கூடிய பொறுப்பு என் மீது வந்தது. வறுமையை தவிர குடும்பத்திலே மற்றொரு பெரிய பிரச்சனையையும் நான் சந்திக்கவேண்டி இருந்தது.

அது சமாதானமின்மை. சந்தோசமும், சமாதானமும் என் குடும்பத்திலே என் பெற்றோர்களிடத்தில் காணப்படவில்லை. அந்த சூழ்நிலையிலே நான் தேடுகிற நான் விரும்பிகிற சமாதானத்தை யார் கொடுக்க முடியும் என்கிற ஏக்கம் என் உள்ளத்திலே என் சிறு வயது முதலே இருந்து வந்தது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலையின் காரணமாக பாரம்பரியமாக பாடல் பாடுகிற கிருபை என் குடும்பத்திற்கு இருந்தபடியினால், என் முன்னோர்கள் அனைவரும் கர்நாடக சங்கீதத்திலே முறையான தேர்ச்சி பெற்றிருந்தபடியினால் எனக்குள்ளும் அந்த தாலந்து பாரம்பரியமாக வந்தது. இந்த தாலந்தை பல திரைப்பட பாடல்களை திரைப்பட குழுக்களில் பாடுவதின் மூலமாக நான் வெளிப்படுத்தி வந்தேன். இதன் மூலமாய் குடும்பத்தின் சூழ்நிலை மாறினாலும், வறுமையின் சூழ்நிலை மாறினாலும் குடும்பத்தில் சமாதானமும் நிம்மதியும் வரவில்லை.

அந்த வேளையிலே 89 ம் ஆண்டு அடையார் கேட் ஹோட்டல் என்று அழைக்கப்படுகிற ஐந்து நட்சத்திர ஹோட்டலிலே அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர்ந்த போது தான் "கல்பனா" "மேரி" என்ற இரண்டு சகோதிரிகளை சந்தித்தேன். என்னோடு பணிபுரிந்து வந்த அந்த சகோதிரிகள் ஆண்டவரை குறித்து எடுத்து சொன்னார்கள். அந்த இரண்டு நண்பர்களை சந்தித்ததன் மூலமாக "என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் இந்த ஆண்டவர் மட்டுமே என்பதை நான் புரிந்து கொண்டேன். உண்மையான கிறிஸ்தவன், அல்லது கிறிஸ்தவள் கிறிஸ்தவ பெயரை மாத்திரம் வைத்துகொண்டால் போதாது உண்மையாக ஆண்டவரை உள்ளத்தில் ஏற்று கொள்ள வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் என் இருதயத்திலே முழுமையாக இடம் கொடுக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையிலே எனக்கென்று ஓர் எதிர் காலத்தை யோசிக்க முடியாத அந்த சூழ்நிலையிலே

என்னுடைய குழுவில் ட்ரம்ஸ் வாசித்த ஜான் என்பவர் என்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் என்னில் திருமணமே செய்துகொள்ள விருப்பம் இல்லாதிருந்தது. என்னுடைய நண்பர்கள் சொன்னதன் காரணமாக 89ம் ஆண்டு அக்டோபர் மாதம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு சென்று ஜெபித்தேன். அப்போது அங்கிருந்த தேவ ஊழியர் "ராஜன் ஜான்" என்பவர் ஜெபத்தின் மூலமாக நான்கு காரியங்களை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். "உன் குடும்பத்திலிருந்து எனக்காக உன்னை பிரித்து எடுத்தேன்" "நீ என்னுடைய ஊழியத்தை செய்வாய்" உலகத்திற்காய், பணத்திற்காய், புகழுக்காய் நீ பாடி கொண்டிருக்கிறாய். ஆனால் என்னுடைய நாம மகிமைக்கென்று இந்த உலகம் முழுவதும் உன்னை அழைத்து செல்வேன் என்று வாக்கு பண்ணினார். "நீ எனக்கார் ஒரு அடி எடுத்துவைக்கும் போது நான் உனக்காய் யாவையும் செய்து முடிப்பேன்" என்று சொல்லும்போது என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் அந்த ஆண்டவர் மட்டும்தான் என்று புரிந்துகொண்டேன். அந்த ஜெபத்தின் முடிவிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டேன்.

24 வருடங்களாக நான் தேடி கொண்டிருந்த சமாதானமும் சந்தோசமும் அந்த ஜெபநேரத்திலே என் உள்ளத்திலே வந்தது. பலவித எதிர்ப்புகளின் மத்தியில் "ஜான்" அவர்களை 1990 ஆகஸ்ட் 24ம் நாள் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு முன் பல சினிமா பாடல்கள் பாடிகொண்டிருத நான் "பாடினால் இந்த ஆண்டவருக்கு மட்டும் தான் பாடுவேன்" என்று வைராக்கியமாய் ஒரு முடிவு எடுத்து என் தாலந்துகளையும், என் வாழ்க்கையையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புகொடுத்தேன். இந்த நாள் வரைக்கும் ஆண்டவரின் மகிமைக்காக பல ஆயிரம் பாடல்கள் பாட ஆண்டவர் உதவி செய்தார். 24 வருடமாக என் குடும்பத்திலே காணாத சமாதானத்தை தேவன் கொடுத்தார். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையுண்டாவதாக. பல ஒளிநாடக்களிலே பாடும்படியாக தேவன் வாய்ப்பு கொடுத்தார். குறிப்பாக சகோதரர் T . Agustin என்பவர் அதிகமாய் கிறிஸ்தவ பாடல்கள் பாடும்படியாக ஊக்கப்படுத்தினார்.

இயேசு அழைக்கிறார், சகோதரர் சாம் ஜெபத்துரை, சகோதரர் மோகன் சி லாசரஸ் என்று பெரிய ஊழியக்காரர்கள் ஒலிநாடாக்களில் பாடும்படியாக தேவன் எனக்கு கிருபை தந்தார். இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காக, நம் பாவங்களுக்காக, தன்னுடைய ஜீவனை கொடுத்தவர். என் குடும்பத்தின் சமாதானத்திற்கென்று பல இடங்களுக்கு சென்று, பல விக்கிரங்களை நான் தொழுது வந்திருக்கிறேன். ஆனால் ஒரு தெய்வத்தினாலும் என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொடுக்க முடியவில்லை. இந்த ஒரு ஆண்டவர் தான் எனக்காக யாவையும் செய்து முடித்தவர். எனக்காக தன ஜீவனை கொடுத்தவர்.

உங்கள் வாழ்க்கையிலும் கூட, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காய் ஜீவனை கொடுத்தவர், உங்களுக்காக மாட்டு தொழுவத்திலே பிறந்தவர் இந்த ஒரு தேவன் தான் என்பதை நீங்கள் புரிந்து அதை உங்கள் உள்ளத்திலே நீங்கள் அறிந்து அதை அறிக்கை செய்வீர்களேயானால் உங்கள் பாவமான வாழ்க்கையை விட்டு நீங்கள் திரும்புவீர்கலேயானால் உங்களுடைய உள்ளத்திலே இந்த ஆண்டவரால் வரமுடியும். என்னுடைய வாழ்கையில் செய்ததுபோல பல அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடைபெறும். ஆமென்.

எலிசபெத் ஃப்ரை - மிஷனெரி வரலாறு

எலிசபெத் ஃப்ரை (1780-1845)
சிறைக் கைதிகளின் மிஷனெரி (1789-1845)
குற்றம் செய்த‌தால் பிடிக்கப்ப‌ட்டு, தண்டனை கிடைத்ததால் அடைக்கப்ப‌ட்டு, சிறைச் சாலையில் காலங்களைக் கழிப்பவர்களை சமூகம் பொருட் படுத்துவதில்லை. ஆனால் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அவர்களை மறப்பதில்லை. இன்று சிறை ஊழியம் பல நாடுகளிலும், பல சபைகளிலும் தொடர்ந்து நடத்தப்ப்ட்டு வரும் உன்னத ஊழியம். அவைகள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது எலிசபெத் ஃப்ரை ஆரம்பித்த ஊழியமே.

இங்கிலாந்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த எலிசபெத் வாலிபப் பருவத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டார். நார்விக் பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் நார்விக் நகரின் ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுப்பதும், ஏழைக் குழந்தைகளுக்கு ஞாயிறு பாட சாலை நடத்துவதும் அவருடைய ஊழியமாக இருந்தது. “குவேக்கர்ஸ்” என்னும் சபைப்பிரிவைச் சேர்ந்தவர் இவர்.

திருமணமான பின்பு எலிசபெத் ஃப்ரை எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் ஊழியத்தைத் தொடர்ந்தார். சுகவீனர்களைப் பராமரிக்கவும். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் துவங்கினார். ஆனால் அந்த ஊழியத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது.

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூகேட் என்று அழைக்கப்ப்டும் சிறைச்சாலையில் சீர்கெட்ட நிலைமைகள் இருப்பதாக அறிந்த எலிசபெத் உடனே செயல்பட ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மிகச்சிறிய அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். எவ்வித சுகாதாரமும் இல்லாமல் அழுக்கிலும், பயங்கரக் குளிரிலும் அவர்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், எலிசபெத் நகரத்தின் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அதுவரை கைதிகளைப் பற்றிய அக்கறை யாருக்குமே இல்லை. நாளடைவில் எலிசபெத்தின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. சிறைச்சாலையின் நிலைமையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.

ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் ஜெபமும், வேத வாசிப்பும் நடத்தப்பட்டது. தையற் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்ட‌து. இதுவரை வாழ்வை விரக்தியுடன் கழித்த கைதிகள் தையற் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதில் கிடைத்த வருமானம் அவர்களை நேர்மையுடனும், சுய மரியாதையுடனும் நடக்க உதவியது.

எலிசபெத் ஃப்ரை செய்த மற்றுமொரு முக்கிய சீர்திருத்தம் உண்டு. அந்த நாட்களில் லண்டன் நகரிலிருந்து கைதிகளைக் கப்பலில் ஏற்றி வெகு தூரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சிறைகளுக்குக் கொண்டு போய் விடுவது வழக்கம். அப்படிக் கொண்டு போகும் போது பெண் கைதிகளை அதிகாரிகள் மிகவும் ஈனமாக நடத்தினார்கள். நீண்ட கடல் யாத்திரையின்போது கூட கைதிகளின் விலங்குகளைக் கழற்றவில்லை. நோயுள்ளோருக்கு எந்தவித மருத்துவ சிகிட்சைகளையும் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவை அடைந்த பின்பும் கைதிகள் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

இவைகளை அறிந்த எலிசபெத் ஃப்ரை அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட ஆரம்பித்தார். அவருடைய விடாமுயற்சியினால், மேலே கூறப்பட்ட கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

நியூகேட்டில் ஆரம்பித்த சிறை சீர்திருத்தங்கள் விரைவில் நாட்டிலுள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் வலியுறுத்தப்பட்டது.

எலிசபெத் ஃப்ரையின் கனிந்த இதயத்தைக் கைதிகள் கண்கூடாகக் கண்டனர். ஒவ்வொரு தடவையும் கைதிக் கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது, எலிசபெத் அங்கு சென்று எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு வேதாகமமும், கம்பளி உடைகள் பின்னுவதற்கு வேண்டிய நூல்களையும், ஊசிகளையும் கொடுத்து அன்புடன் வழியனுப்பிவிட்டு வருவார். இப்படி ஒன்றிரண்டு தடவைகள் அல்ல, 25 வருடங்களாக ஊழியம் செய்தார்.

பெண்கள் அதிகமாக வெளியே செல்வதை சமுதாயம் விரும்பாத காலக் கட்டத்தில் எலிசபெத் ஃப்ரையைத் துணிச்சலுடன் செயல்பட வைத்தது, கர்த்தர் மீது அவர் வைத்த அளவற்ற அன்பும், பயனுள்ள சேவையைச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தான். அவரை அவ்வாறான ஊழியத்திற்கு அழைப்பித்தது.

கட்டுண்டவர்களை விடுதலையாக்க வந்த கர்த்தராகிய இயேசுவை காவலில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்கும்போது, ‘காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்லி மகிழுவார்.
சிறை ஊழியங்களுக்காக ஜெபிப்போம்!
அகில உலகுக்கு எலிசபெத் ஃப்ரை ஒரு சிறை சீர்திருத்தக்காரர் என்று மட்டுமே தோன்றினாலும் கிறிஸ்தவ வட்டாரத்தில் அவர் சிறைக் கைதிகளின் மிஷனெரி என்றே கருதப்படுகிறார்