Showing posts with label God's will. Show all posts
Showing posts with label God's will. Show all posts

Wednesday, December 18, 2013

கர்த்தரை நம்பு

இரு வாலிபர்கள் (ஒருவன் விசுவாசி, மற்றவன் அவிசுவாசி) ஒரு மலையின் மேல் நடந்துப் போய்க் கொணடிருந்தார்கள். அப்போது விசுவாசியான வாலிபன், கர்த்தருடைய அநாதி திட்டங்களையும், அவருடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் பேசிக் கொண்டே இருவரும் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு எந்தவித கவலையும் இல்லை ஏனென்றால் என்னுடைய நடைகளை அவர் தீர்மானிக்கிறார். அவருடைய பாதுகாப்பு எனக்கு இருப்பதால் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை’ என்று விசுவாசியான வாலிபன் கூறினான்.
.
அதற்கு அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில் வளர்ந்து இருக்கிறது. அதையும் கர்த்தர்தான் வைத்தார் என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறாய்’ என்று அந்த மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன் நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான். இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள்.
.
விசுவாசியான வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு, தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும் முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும் மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல் தொடர்ந்தனர். தேவன் அவிசுவாசியான வாலிபனோடு பேச ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு ஊழியக்காரனாக அவன் மாறினான்.

Monday, October 14, 2013

உம்முடைய சித்தம்

ஒரு விவசாயிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். ஒருவளை ஒரு விவசாயிக்கும், மற்றவளை ஒரு குயவனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் இரண்டு பிள்ளைகளையும் அடிக்கடி போய் பார்த்து வருவது அவரது வழக்கம். அப்படி ஒரு முறை அவர் மூத்தவள் வீட்டிற்கு சென்றபோது, அவள் தன் தகப்பனிடம், 'அப்பா, தேவன் நல்ல மழையை கொடுக்கும்படி அவரிடம் வேண்டி கொள்ளுங்கள். பயிர்கள் மழை இல்லாமையினால் வாடி போய் கொண்டு இருக்கின்றன' என்று கூறினாள்.
.
அவர் மற்ற பெண்ணை பார்க்க போனபோது, அவள், தன் தகப்பனிடம், 'அப்பா நல்ல வெயில் அடிக்கும்படி ஜெபித்து கொள்ளுங்கள். அப்போதுதான் என் கணவர் செய்த மண் பாத்திரங்கள் நன்றாக காய முடியும்' என்று கேட்டு கொண்டாள்.
.
இப்போது தகப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு பேருக்காகவும் ஜெபிக்க வேண்டும்! ஆகவே கடைசியில் அவர் தைரியமாக, 'தேவனே உம்முடைய சித்தம் எதுவோ அதுவே ஆகக்கடவது' என்று ஜெபித்தார்.
.
நம் தேவன் நம்முடைய காலங்களை அறிந்தவரல்லவா? நம் இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்த தேவன், நமக்கு என்ன தேவை என்றும் அறிந்திருக்கிறார். ஒரு சிறு பிள்ளை கத்தி வேண்டும் என்று அடம் பிடித்தால், அதை அந்த பிள்ளைக்கு அதனுடைய பெற்றோர் தருவார்களோ? நிச்சயமாக இல்லை. அதுப்போல நாம் அநேக தேவைகளை குறித்து ஆண்டவரிடம் கேட்கலாம்.

Thursday, April 11, 2013

வில்லியம் கேரி - வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி (William Carey) (ஆகஸ்ட் 17, 1761ஜூன் 9, 1834) ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக (இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்) இந்தியாவில் ஊழியம் செய்தவர். இவர் ’தற்கால ஊழியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். பப்திஸ்த மிஷினெரி சங்கத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் டச்சுக் காலனியான செராம்பூர், கொல்கத்தாவில் மிஷனரியாக பணியாற்றி வந்தவர், இவர் விவிலியத்தை பெங்காலி, சமஸ்கிருதம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷயரில் பவுலஸ்புரி என்ற கிராமத்தில் எட்மண்ட், எலிசபெத் கேரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். தந்தை எட்மண்ட் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் ஆறு வயதாக இருக்கும் போது தந்தை அக்கிராமத்தின் பாடசாலை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. செடிகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மிகவும் இள வயதிலேயே இலத்தீன், கிரேக்க மொழி]]களை தானே கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்.
தமது தந்தையின் விருப்பத்தின்படி, பதினான்காவது வயதில் அருகே உள்ள ஹெக்கில்டன் என்னும் கிராமத்தில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் கீழ் மாணவராகச் சேர்ந்தார். இவரது எஜமானன் கிளார்க் நிக்கோலஸ் அவரைப்போலவே ஆலயம் செல்லுபவராகவே காணப்பட்டார். அவரது சக மாணவராக இருந்த ஜோன் வார் என்பவர் கடமைக்காக மாத்திரம் ஆலயம் செல்வதை வெறுப்பவர். அவரிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து அறிந்து, தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். இங்கிலாந்து திருச்சபையில் இருந்து விலகிய கேரி ஹெக்கில்டன்னில் ஒரு சிறிய குழு கூடுகை(Congregational) திருச்சபையை ஆரம்பித்தார். நிக்கோலஸ் கேரிக்கு, தனது கிராமத்தில் கல்லூரி சென்று பயின்ற ஒருவர் மூலம் கிரேக்கம் கற்றுக்கொடுத்தார்.

இந்தியா வருகை

1781 ஜூன் 10 இல் டொலி என்பாரைத் திருமணம் செய்தார். பப்திஸ்த சபை பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் ஒரு மிஷனெரி, இந்தியாவின் கிறிஸ்தவ மத தேவைகளைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வில்லியம் கேரி, அந்தப் பேச்சின் மூலம் சவாலைப் பெற்றவராய், இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்லும்படியாகத் தன்னை அர்ப்பணித்தார்.
வில்லியம் கேரி, குடும்பத்துடன் 1793 நவம்பர் 9 கல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தார்.
கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும், மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் மொழியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்பொழுது வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும், தன் மனைவியையும் இழந்தார்.
இந்த சமயத்தில் செராம்பூரில் ஒரு இளம் மிஷனெரிக்குழுவுடன் இணைந்து வேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தனர். ஆனால் அவர்களுடைய அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் நெருப்புக்கு இரையானது. ஆனாலும் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்து வேத நூலை பல மொழிகளில் மொழிபெயர்த்தனர்.
வில்லியம் கேரி 1834 ஜூன் 9இல் மறைந்தார்

Saturday, March 30, 2013

கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல்

ஒரு சிறு பெண் தன் தாயிடம் வந்து, 'அம்மா பாருங்கள், எனக்கு எல்லாம் ஒன்றும் சரியாகவே நடக்கவில்லை, கிளாஸில் டீச்சர் சொல்லி கொடுக்கிற அல்ஜீப்ரா பாடம் மனதில் பதிய மாட்டேன் என்கிறது, அதனால் பரிட்சையில் பெயில் ஆகி விட்டேன். என் அன்பு தோழி என்னை விட்டு விட்டு வேறு ஒருத்தியுடன் பிரண்ட் ஆகி விட்டாள், ஏனம்மா எனக்கு இப்படி நடக்கிறது' என்று அழுதாள்.
அப்போது அவளுடைய தாயார் கேக் செய்து கொண்டிருந்தார்கள். அவளிடம், 'உனக்கு கேக் செய்கிறேன், பிடிக்கும்தானே' என்று கேட்டார்கள். அப்போது அவள், 'ஆம், அம்மா எனக்கு நீங்கள் செய்கிற கேக் மிகவும் பிடிக்கும்' என்று கூறினாள்.
 
அப்போது அவளுடைய தாயார், ' இந்தா, கொஞ்சம் எண்ணெயை எடுத்து குடித்து கொள்' என்றார்கள். அதற்கு அவள், 'ஐயெ, சீ' என்றாள். 'சரி, இந்தா, இரண்டு பச்சை முட்டை அதையும் வாயிலே போட்டு கொள்' என்றார்கள், 'என்னம்மா, நீங்கள்' என்று அந்த பெண் கேட்டாள். அம்மா விடாமல், 'கொஞ்சம் மாவையும் அதோடு, சோடா உப்பையும் கூட சேர்த்து வாயில் போட்டு கொள்' என்று கூறினார்கள். அப்போது அந்த பெண், 'என்னம்மா நீங்கள் சொல்கிறீர்கள், அதையெல்லாம் எப்படி நான் அப்படியே வாயில் போட்டு கொள்ள முடியும்' என்று கேட்டாள்.
 
அப்போது அந்த தாயார், 'ஆம் மகளே, இவையெல்லாம் தனியாக பார்த்தால், அப்படியே சாப்பிட்டு விட முடியாது, அவையெல்லாம், பச்சையாக, பிரயோஜனமற்றதாக விரும்பதகாததாக தோன்றும், ஆனால், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து, சரியான முறையில் சமைக்கும்போது, எல்லரும் விரும்புகிற அருமையான கேக் ஆக மாறும்.

அதுபோல, தேவனும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு துன்பமான நிகழ்ச்சிகளையும், விரும்பதகாத காரியங்களையும், நாம் அவரை சார்ந்து கொள்ளும்போது, இனிமையாக மாற்றி தருவார்' என்று கூறினார்கள். அவர் எல்லா காரியத்தையும் தமது சித்தத்தின்படி செய்யும்போது, அவை நன்மையாக முடியும் என்பது அவருக்கு தெரியும். ஆனால், நாம் அவரை சார்ந்து, அவரை மாத்திரம் பற்றி கொண்டிருக்கும்போது, நம்முடைய எல்லா நம்பிக்கையற்ற நிலைமைகளையும் அவர் மாற்றி, நிச்சயமாக அற்புத விடுதலையை தருவார்.