Showing posts with label Anudhina manna. Show all posts
Showing posts with label Anudhina manna. Show all posts

Friday, November 21, 2014

மரண நாள்

ஒரு அரசன் மரண தருவாயிலிருந்த தனக்கு பிரியமான அமைச்சரை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவரிடம், “நீர் அமைச்சராயிருந்தபோது எனக்கு அநேக நன்மையான ஆலோசனைகள் கூறினீர். ஆகையால் நீர் இப்போது எதை கேட்கிறீரோ அதை தருகிறேன்” என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர், “அரசே, நான் சாவதற்குமுன் ஒரு நாள் எனக்கு கூட்டி தர வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அரசர், 'என்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட எந்த காரியத்திலும் நீர் எதை கேட்டிருந்தாலும் நான் அதை உமக்கு கொடுத்திருப்பேன், என்னால் இயலாத காரியத்தை கேட்கிறீர், மன்னிக்கவும், என்னால் அதை தர முடியாது' என்று கூறினார்.
.
ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை என்று வேதம் நமக்கு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. நாம் யாவரும் ஒரு நாளில் மரிக்கவே போகிறோம். ஆனால் அதை குறித்த பயம் தான் மற்ற எல்லா பயங்களிலும் அதிக கடினமானது. கொடுமையானது. நாம் அதை விரும்புகிறோமோ இல்லையோ, ஒரு நாள் நாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். நாட்டை ஆளுகிற பெரிய அரசனானாலும், ஒன்றுமே யில்லாத ஆண்டியானாலும் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். அதை பணத்தை கொடுத்து நிறுத்த முடியாது.
.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27) என்று வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரிக்கவே வேண்டும். ஆனால் மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. அநேக மதங்கள் வித்தியாசமாய் போதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் என்ன போதிக்கிறது? நாம் உலகில் வாழ்வது, நிரந்தரமல்ல, ஆனால் மறுமையில் வாழ்வதே நிரந்தரம் என்று போதிக்கிறது. அதாவது நாம் இந்த பூலோகத்தை விட்டு, தேவனோடு என்றும் வாழும்படியாக நித்திய ஜீவனை பெற்றவர்களாக என்றென்றும் வாழுவோம் என்று வேதம் கூறுகிறது.

Wednesday, September 24, 2014

சுவிசேஷ துண்டு பிரதி - மிகப்பெரிய ஊழியம்

ஒரு சுவிசேஷ துண்டு பிரதி மாபெரும் எழுப்புதலை உண்டாக்கியது. ஒன்பது மிஷனெரிகளை உலகிற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆத்மீக சுகத்தையும பெற செய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அதை படித்தார்? அதன்; மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ பணியா?
.
ஆம், ஒரு நாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது நண்பரை பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் கண்களில்பட்டது, அந்த துண்டு பிரதி! அதின்தலைப்பு 'உலகத்தின் மனந்திரும்புதல்'. கண்டதும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்வை இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார்;. அவர் தனது ஏழு மகன்களையும் இரண்டு மகள்களையும் மிஷனெரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரது குடும்பத்திலுள்ள 43 பேர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களே!
.
ஜான் ஸ்கடரின் பேத்திதான் நம் வேலூரில் C.M.C. மருத்துவமனையை நிறுவி மருத்துவ பணியோடு, சுவிசேஷ பணியையும் செய்த ஐடா ஸ்கடர் அம்மையார் ஆவார். தலைமுறை தலைமுறையாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணியை செய்து வருமாயின் அது சரித்திரத்திலேயே சிறந்த உதாரணம் தானே! ஒரு கைபிரதி ஒருவரை மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வந்துள்ளனர்.
.
தேவன் நமக்கு கொடுத்துள்ள கட்டளை 'நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள' என்பதே. அப்படியென்றால் முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் கடமையுள்ளது.

Tuesday, September 9, 2014

காலத்தை பிரயோஜனப்படுத்து

ஒரு மனிதன் தன் விடுமுறை நாளில், மீன் பிடிப்பதற்காக சென்றான். அப்போது ஒரு அழகிய மீன் அவனுடைய தூண்டிலில் சிக்கியது. அதைப் பார்த்து, அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த மீன் பேச ஆரம்பித்தது, ‘தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், நான் உங்களுடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றுகிறேன்’ என்று சொன்னது. அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனது ஐந்து ஆசைகளை நிறைவேற்று, நான் உன்னை விட்டு விடுகிறேன்’ என்றுக் கூறினான். அதற்கு அந்த மீன், ‘எனக்கு மூன்று ஆசைகளை நிறைவேற்றதான் சக்தி இருக்கிறது’ என்று சொன்னது, அப்போது அந்த மனிதன், ‘இல்லை, எனக்கு நாலரை ஆசைகளையாவது, நிறைவேற்ற வேண்டும்’ என்று திரும்ப பேரம் பேசினான். ‘ஓ, என்னால் மூன்றுதான் முடியும் என்று சொன்னேனே, தயவு செய்து என்னை விட்டுவிடு’ என்று அவனிடம் கெஞ்சியது. ஆனால் அந்த மனிதனோ, ‘சரி, குறைந்த பட்சம் நான்காவது கொடு’ என்று சொல்லி முடிப்பதற்குள் இந்த மீன் அவனது கைகளிலேயே மடிந்துப் போனது. அவன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பேரம் பேசியே நழுவ விட்டான்.
.
ஒரு வேளை இந்த வாரம் உங்களுக்கு உங்கள் தகுதிக்கு மேல் செய்யும்படியாக, ஒரு வேலை வரலாம், ஆனால், நீங்கள் ஐயோ, என்னால் செய்ய முடியாது என்று நினைக்கலாம், ஒருவேளை நான் செய்யப் போய் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைக்கலாம், ஆனால் ஒருவேளை அது வெற்றியாக முடிந்து விட்டால்? சில நல்ல காரியங்களில், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களை நாம் நழுவ விடக் கூடாது. ஜெபித்து, ஞானமாய் அதை முயற்சி செய்ய வேண்டும். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்ற வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது.

Sunday, August 24, 2014

மனமகிழ்ச்சி நல்ல மருந்து

ஒரு போதகரின் மனைவி ஒரு வாரத்திற்கு ஒரு கேம்ப் கூட்டத்திற்கு போக அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து தூரமாக அந்த இடம் இருந்ததால், அங்கு தங்குவதற்கான வசதிகளை குறித்து அறிய விரும்பினார்கள். விசேஷமாக பாத்ரூம் வசதிகளை குறித்து அவர்கள் அறிய விரும்பினார்கள். அதை எப்படி டாய்லெட் என்று எழுதுவது, அது அநாகரீகமாக இருக்குமே என்று எண்ணி, பல விதத்தில் யோசித்து, பாத்ரூம் கம்மோட் (Bathroom Commode) என்பதை குறிக்கும் வகையில் 'நான் இருக்க போகும் இடத்தில் சொந்தமாக ஒரு BC இருக்கிறதா' என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.
.
அதை பெற்று கொண்ட அந்த கூட்டத்தை ஒழுங்கிபடுத்தியவருக்கு BC என்றால் என்னவென்று தெரியவில்லை. கூட இருந்த அநேகரிடம் அதை குறித்து கேட்டபோது, அவர்களுக்கும் புரியவில்லை. கடைசியில் ஒருவர், 'அந்த அம்மா பாப்டிஸ்ட் சபையை சேர்ந்தவர்கள். ஆகவே Baptist Church என்பதை சுருக்கமாக BC என்று குறிப்பிட்டுள்ளார்கள்' என்று கூறினார்.
.
ஆகவே, அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தியவர், இவ்வாறு மறு பதில் அனுப்பினார், 'அன்புள்ள அம்மா, இந்த பதில் கடிதத்தை எழுதுவதற்கு சில காலம் எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும், நீங்கள் குறிப்பிட்டுள்ள BC ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. ஒரே நேரத்தில் 250 பேர் ஒன்றாக அமரக்கூடிய இடமாக உள்ளது. நீங்கள் அடிக்கடி போக வேண்டும் என்றால், அது கொஞ்ச தொலைவில் அமைந்துள்ளதால், கொஞ்சம் சிரமம் ஏற்படும் என்று நினைக்கிறேன். தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் தங்களுடனே சாப்பாட்டையும் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்கள் சீக்கிரமாக வந்து, நேரம் கழித்து தான் போகிறார்கள்.
.
நானும் என் மனைவியும் கடைசியாக சென்றது, ஆறு மாதங்களுக்கு முன்பு, அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆகவே இன்னும் அநேகர் உட்காரும்படியாக பணத்தை வசூலித்து கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து போகாதிருப்பது எனக்கு மிகவும் வேதனையாயிருந்தாலும், வயதாகிவிட்டால், அவ்வளவு தூரம் செல்வது கடினமாக உள்ளது. நீங்கள் இங்கு வருவதாயிருந்தால், நானே உங்களை அழைத்து கொண்டுபோய் உங்களோடு அமர்ந்து, மற்றவர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்தி வைப்பேன் நன்றி' என்று பதில்கடிதம் அனுப்பினார்.
.
இதை படித்து, நன்கு சிரித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. நாம் மனம் திறந்து, வாய் விட்டு சிரிக்கும்போது, நமது நுரையீரல்கள் விரிவடையும்போது, இரத்த ஓட்டம் நன்றாக செயல்படும். இரத்த ஓட்டம் நன்கு செயல்படும்போது, நோய்கள் மாறி போகும். அதைதான் நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. சிலர் வாய் விட்டு சிரிக்க கூடாது என்பார்கள். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பதாகும். நம் முன்னோர்கள் அதை அறிந்திருந்தபடியால்தான் அதை குறித்து பழமொழி எழுதி வைத்துள்ளார்கள்.

'மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்'. - (நீதிமொழிகள் 17:22).

Saturday, June 21, 2014

கர்த்தருடைய சாயல்

இங்கிலாந்தில் ஒரு பெண் மிகவும் அழுக்கான உடைகளைத் தரித்துக் கொண்டு, குப்பைத் தொட்டிகளுக்கு அருகே இருந்து அங்கிருந்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு, சடை பிடித்த முடிகளுடன் அலைந்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பக்கத்தில் யாராவது வந்தால், ‘நான் பெரிய குடும்பத்துப் பெண்ணாக்கும், என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்’ என்று சத்தம் போடுவாள். இப்படி 20 வருடங்களாக தெருதெருவாக அலைந்துக் கொண்டிருந்தாள். அவள் யாரோ பிச்சைக்காரி என்று யாரும் அவளைக் கண்டுக் கொள்ளவும் இல்லை.
.
ஒரு முறை அவள் ஏதோ சண்டை செய்தாள் என்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி, நேரமெடுத்து அவளை விசாரித்த போது, அந்தப் பெண் உண்மையாகவே பெரிய இடத்துப் பெண்தான் என்று தெரிய வந்தது. அவள் அங்கிருந்த பெரிய அரசாங்க அதிகாரியின் மகள் என்றும், அவள் ஒரு முறை கடைக்கு சென்றபோது, அவள் திருடர்களால், தலையில் அடிக்கப்பட்டு, மூளைகலங்கிப் போய் தான் இருக்கும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்ததாக தெரிய வந்தது.
.
20 வருடங்களாக குப்பையில் கிடந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வாழந்து வந்த அவள் அத்தனை நாட்களுக்குபிறகு, தன் குடும்பத்தோடு, சரியான இடத்திற்கு தன் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு உடன்சுதந்தரவாளியாக அழைத்து செல்லப்பட்டாள்.
.
நாம் அனைவரும் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டுள்ளோம். ஆனால் நம்முடைய பாவங்களினால் நாம் அவரை விட்டு தூரப் போய், அலைந்து திரிந்தாலும், நாம் நம் பாவங்களை விட்டு திரும்பி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, திரும்பவும் தேவனிடத்தில் வரும்போது, பரலோகத்தின் ஆசீர்வாதங்களுக்கு நாம் சுதந்தரவாளிகளாக மாறுகிறோம். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே என்று வசனம் நமக்கு கூறுகிறது.
.
கெட்ட குமாரன் தன் தந்தையின் சொத்துக்களில் தன்னுடைய பங்கை வாங்கிக் கொண்டு, ஊதாரியாக செலவழித்து, கடைசியில் பணமெல்லாம் செலவழிந்து, பன்றி சாப்பிடும் தவிட்டை சாப்பிட வாஞ்சித்தும் அது கிடைக்காதபடியால், மனம் திரும்பி, ‘எப்படியாவது என் தகப்பனிடம் போய் அவருடைய வேலையாட்களில் ஒருவனாக இருப்பேன்; என்று நினைத்துதான் அவன் தன் தகப்பனிடம் வந்தான். ஆனால் தகப்பனோ, எத்தனை கரிசனையுள்ளவராய்; அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். - (லூக்கா 15:20-24) என்று பார்க்கிறோம். நாம் நம் பாவங்களில் மடிவதை விரும்பாத தேவன் அவரிடத்தில் திரும்பி வருவதையே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறவராய், அந்த கெட்ட குமாரன் திரும்பி வந்தபோது எப்படி மகிழ்ந்தாரோ அதைப் போலவே நம் தேவனும் மகிழ்கிறவராய் இருக்கிறார்.

Tuesday, February 18, 2014

உயர பறக்கும் அனுபவம்

தங்கள் வழக்கம் போல காட்டு வாத்துக்கள் குளிர் காலத்தில் தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஒரு V வடிவிலே பறப்பதை கீழே இருந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அவைகள் இருந்தன.
.
அந்த வாத்துகளோடு பறந்து கொண்டிருந்த சேனி என்ற வாத்து கீழே பார்த்தது. அப்பொழுது வாத்துக்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை கண்டது. அங்கு அநேக வாத்துக்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் சோளத்தை ஆவலோடு பொறுக்கி தின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன், அவைகளோடு தானும் சென்று உண்ண வேண்டும் என்கிற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. அந்த எண்ணம் வந்த உடன், அது மற்ற வாத்துக்கள் சொல்வது ஒன்றும் கேட்காமல், ஒரு டைவ் அடித்து, கீழே மற்ற வாத்துக்களுடன் சேர்ந்து கொண்டது. அவைகளோடு சேர்ந்து, சோளத்தையும், மற்ற தானியங்களையும் சாப்பிட ஆரம்பித்தது. அது நினைத்தது, 'திரும்ப என் கூட்ட வாத்துக்கள் வரும்போது, அவைகளோடு நான் சேர்ந்து கொள்வேன்' என்று.
.
கொஞ்ச மாதங்கள் கழித்து, அந்த கூட்ட வாத்துக்கள், மேற்கு நோக்கி வர ஆரம்பித்தன. கீழே இருந்த சேனி, அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி, பறக்க ஆரம்பித்தது. ஆனால் அது அங்கு சாப்பிட்டு சாப்பிட்டு, எடை கூடி, அதனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்க முடியவில்லை. அது திரும்ப திரும்ப முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. அதன் கூட்டத்தில் இருந்த பறவைகள், அதை தாண்டி பறந்து சென்று விட்டன. சேனி, 'நான் மறுபடியும் இவர்கள் வரும்போது எப்படியாவது அவர்களோடு சேர்ந்து விடுவேன்' என்று எண்ணி கொண்டது.
.
அடுத்த முறையும் வந்தது. சேனி அவர்களோடு பறக்க ஆசைப்பட்டது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை, காரணம் அதனுடைய எடையும், பறக்காமலேயே இருந்தபடியால் அதனுடைய சிறகுகள் சக்தியையும் இழந்து விட்டன. அதனுடைய தோழ வாத்துக்கள் ஒவ்வொரு முறையும் சேனியை அழைத்தபடி பறந்து கொண்டிருந்தன. ஆனால் சேனியால் திரும்பவும் பறக்கவே முடியவில்லை.
.
மாதங்கள் ஆக, ஆக தோழ வாத்துக்கள் கூப்பிட்டாலும், அது அதை கவனிக்காமற் போக ஆரம்பித்தது. அது தான் ஒரு முறை உயர பறந்த வாத்து என்பதை மறந்து, ஒரு பண்ணை வாத்தாகவே மாறி விட்டது.
.
நாமும் கூட உயர பறப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனோடு உறவாடும்படியாக, அவர் வரும்போது அவரோடு மறுரூபமடைந்து, பறப்பவர்களாக மாறும்படியாகவே இந்த உலகத்தில் இருக்கும்போது அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்போது நம் கவனம் உலக காரியங்களில் ஈடுபாடு கொள்கிறதோ, அப்போது, நாம் நம் தரிசனத்தை இழந்தவர்களாக, அவைகளிலேயே சிக்கி கொள்கிறோம். மீண்டும் நாம் வரவேண்டும் என்று ஆசித்தாலும் வரமுடியாதபடி, அவை நம்மை இழுக்க ஆரம்பிக்கின்றன. உலக பாரங்களும், ஆசை இச்சைகளும் நம்மை மேலே பறக்க விடாதபடி தடை செய்து விடுகின்றன.

அருமையான குடும்பம் ஒரு அழகிய தோட்டம்

தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். - (எபேசியர் 5:28ன் பின்பகுதி).
.
நீங்கள் ஒரு நாள் இரண்டு வீடுகளுக்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு வீட்டில் உள்ள தோட்டம் அருமையானதாய் இருக்கிறது. அடுத்த வீட்டு தோட்டத்திலே எங்கு பார்த்தாலும் களைகளும், முட்செடிகளும், காய்ந்த புல்லுகளுமாயிருந்தது. இரண்டும் பக்கத்து பக்கத்து வீடுகள்தான். என்ன வித்தியாசம் பாருங்கள்! தேவன் பட்சபாதமுள்ளவராயிருந்து இவருக்கு அருமையான தோட்டத்தையும், அவருக்கு பிரயோஜனமற்ற தோட்டத்தையும் கொடுத்து விட்டாரோ? இல்லை. முதல் வீட்டிலுள்ள கணவனும், மனைவியும் அருமையான ஒரு தோட்டத்தை உருவாக்க அநேக மணி நேரங்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு தோட்டங்களும், இரு வேறு திருமண வாழ்வை சித்தரிக்கிற படம் போன்றது. ஒரு திருமணம் அருமையான ஒரு தோட்டம் போல் இருக்கிறது. அங்கேயும் அநேக களைகள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் அவர்கள் அன்றன்றே பிடுங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் களைகள் முளைக்கும்போதே அவை பிடுங்கப்பட்டு விட்டன.
.
அதன் பொருள் என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்ட தீவிரமாயிருந்தனர். பிரச்சனையை வளர விடவில்லை. அன்றைக்கே அப்பொழுதே மன்னிப்பு கேட்டு, அதை மறந்து அடுத்த காரியத்தை குறித்து பேச ஆரம்பித்து விட்டனர். ஆகவே தான் அவர்கள் திருமண வாழ்வாகிய தோட்டம் அருமையாக காணப்பட்டது

Saturday, July 20, 2013

சரித்திரம் தேவனுடைய கைகளில் - மாவீரன் அலெக்ஸாண்டர்

மாவீரன் அலெக்ஸாண்டரை பற்றி அறியாதவர்கள் யாரும் சரித்திரம் படித்தவர்களாக இருக்க முடியாது. தனது இள வயதில் மேசிடோனியாவின் அரசனான அவர், உலகத்தையே தன் காலின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தாகத்தோடு செயல்பட்டவர். பத்து வருடங்களில் உலகத்தை வென்று கொண்டே வந்தவர். அப்படி அவர் ஜெயித்து கொண்டே வந்தபோது, ஒவ்வொரு நாட்டிலும் பேசும் மொழிகளை குறித்தும், அவர்களுடைய கலாச்சாரங்களை குறித்தும் அவர் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். ஏனெனில் அவர் வெற்றி எடுக்கும் நாடுகளில் எந்த மொழியில் பேசுவது, எப்படி செல்வது என்று யோசித்து கொண்டிருந்தார். அதன்படி, அவர் தான் வெற்றி கொள்ளும் நாடுகளில் காலனிகளை அமைத்து, அங்கு கிரேக்க கலாச்சாரங்களை கற்பிக்க ஆரம்பித்தார்.
.
இந்த காரியங்கள் தேவனால் நியமிக்கப்பட்டது என்ற அலெக்சாண்டருக்கு தெரியாது. அவர், தான் உலகத்தையே வென்று, எல்லாரையும் தன் காலின் கீழ் கொண்டு வருவதாக நினைத்து கொண்டிருந்தார்.
.
தனது திட்டத்தின்படி காலனிகளில் அவர் கிரேக்க மொழியை கற்று கொடுக்க திட்டங்கள் தீட்டி, அதன்படி அவர் ஆட்களை கொண்டு அந்த இடங்களில் கிரேக்க மொழியை கற்று கொடுத்து, மக்கள் அதை பயில ஆரம்பித்தனர். அதனால் தான் செல்லும் இடங்களில் கிரேக்க மொழியில் பேச முடியும் என்பது அவர் எண்ணம். மட்டுமல்ல, அந்த நாடுகளில் முக்கிய பாதைகளையும் அவர் உண்டாக்க ஆரம்பித்தார். தான் பயணம் செல்லும்போது, தனக்கு வசதியாக இருக்கும் என்று காடுகளை வெட்டியும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளை இணைக்கும் பாதைகளை போட ஆரம்பித்தார். அவர் தான் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த காரியங்களை செய்தார். ஆனால் சர்வ ஞானியான நம் தேவன் அவற்றை குறித்து வேறு திட்டம் வைத்திருந்தார்.
.
அதன்படி, தனது 33 ஆவது வயதில் தான் மரிக்கும்முன், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதற்கான முக்கிய இரண்டு பணிகளை அவர் செய்து முடித்திருந்தார். அதாவது மொழி, மற்றும் நாடுகளுக்கு செல்வதற்கான சரியான பாதைகள்! கிறிஸ்துவுக்கு முன் 356 ஆம் ஆண்டு பிறந்த அவர், ராஜாதி ராஜாவின் சுவிசேஷம் பரவுவதற்கான பாதையை செம்மையாக்கினவராய் மாறினார். அவர் தான் செய்வது எதற்காக என்று அறியாதபடி செய்தார். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் அவற்றை தமது குமாரனை உலகத்திற்கு அனுப்புவதற்கான நோக்கத்தை உலக மக்கள் அறியும்படியாக அதை தமக்கு சாதகமாக்கினார்.
.
காலம் நிறைவேறினபோது, கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, நமக்கு இரட்சிப்பை, சிலுவையில் தமது சொந்த இரத்தத்தை சிந்தி வாங்கி கொடுத்து, அந்த சுவிசேஷத்தை சுவிசேஷகர்கள் உலகமெங்கும் பிரசித்தப்படுத்தும்படி, நல்ல பாதையையும், மொழியையும் அலெக்சாண்டர் மூலமாக செய்து கொடுத்தார். உலகத்தின் சரித்திரம் தேவனுடைய கைகளில்! அவர் அறியாமல் ஒரு அணுவும் அசைய முடியாது. அவர் தீமையையும் நன்மையாக மாற்றுகிற தேவன். ஒரு மனிதன் தன் பெருமைக்காக, தன் பெயர் நிலைத்திருக்கும்படியாக செய்த காரியங்களை நமது தேவன் தமது குமாரனின் பெயர் அறியாத மக்களுக்கு அறிவிக்கும்படியாக, தெரியாத, இருளில் வாழும் மக்களுக்கு தெரிவிக்கும்படியாக மாற்றினார். அல்லேலூயா!

புத்தியுள்ள ஸ்திரீ

ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சகோதரி கர்த்தருக்கு பயந்தவள். மற்றவள் பெயரளவில் கிறிஸ்தவளாக வாழ்ந்தவள். கர்த்தருக்கு பயந்த சகோதரி எந்த காரியத்தை செய்தாலும் கர்த்தரிடம் ஜெபித்து, அவருடைய சித்தத்திற்காக காத்திருந்து அதன்படி செய்கிறவளாக இருந்தாள். ஆனால் மற்றவளோ, தன் மனதிற்கு ஏற்றபடி செய்து வந்தாள்.
.
இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. கர்த்தருக்கு பயந்த சகோதரி, ஆரம்பத்திலிருந்தே தன் கணவனோடு பேசி, நம் குடும்பம் இப்படித்தான் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக, ஒழுங்காக சபைக்கு செல்பவர்களாக, தசம பாகத்தை என்ன சம்பாத்தியம் வந்தாலும் ஒழுங்காக கொடுப்பவர்களாக, உலக காரியத்திற்கு அந்நியர்களாக வாழ வேண்டும் என்று சொல்லி, தன் கணவனையும் கர்த்தருக்குள் நடத்தினவளாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.
.
மற்றவள் தன் கணவனோடு உலக உல்லாசங்களிலும், உலக காரியங்களிலும் ஈடுபட்டு, உலக இன்பங்களை அனுபவித்தாள். ஒரு நாள் வந்தது. அவளோடு கர்த்தர் இடைபட்டார். கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். தன் கணவனையும் அவள் கர்த்தரிடம் கொண்டு வரும்படி அவரிடம் பேச ஆரம்பித்தாள். ஆனால் கணவரோ, 'ஓ, நீ எப்படி வாழ்ந்தாய் என்று எனக்கு தெரியும். இப்போது திடீரென்று என்ன பெரிய பக்தி வாழ்கிறது?' என்று சொல்லி உலகப்பிரகாரமாகவே வாழ்ந்து வந்தார். எத்தனையோ நாள் கண்ணீரோடு அவள் ஜெபித்தும் அந்த மனிதர் மாறவில்லை. கடைசியில் ஒரு நாள் கர்த்தர் அவரை சந்தித்தார். அதுவரை அவள் வாழ்வு அவளுக்கு நரகமாகவே இருந்தது.

Thursday, June 20, 2013

உற்சாகமாய் கொடுப்போம்

ஹேட்டி வயாட் என்ற ஒன்பது வயது சிறுமி ஞாயிறு பள்ளிக்கு மிக ஆவலோடு சென்றாள். அங்கு அவள் உட்காருவதற்கு இடம் இல்லாதபடியால் சோர்வுடன் வீட்டிற்கு சென்று விட்டாள். பின்பு இரண்டு ஆண்டுகளில் அவளுடைய சரீரத்தில் ஏற்பட்ட கொடிய வியாதியின் காரணமாக சுகவீனமாகி, படுத்த படுக்கையாகி, இறுதியில் மரித்து போனாள். சில நாட்களுக்கு பின் அவள் தலையணையின் அடியில் ஒரு கவருக்குள் 57 சென்ட் பணம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் 'இந்த பணத்தை ஞாயிறு பள்ளி சிறுவர்கள் அதிக அளவில் உட்கார வசதியாக, நமது ஆலயத்தை பெரியதாக கட்ட இந்த காணிக்கையை உபயோகப்படுத்துங்கள்' என்று எழுதியிருந்தது.
.
சிறுமியின் இச்செயலை சபை ஆராதனையில் போதகர் கூறியபோது சபையார் மனதுருகினர். அதை தொடர்ந்து தேவனுக்கு கொடுக்க வேண்டுமென்ற தீவிர வாஞ்சை ஒவ்வொருவர் இருதயத்திலும் உண்டானது. அனைவரும் மனஉற்சாகமாய் காணிக்கை கொடுத்தார்கள். அந்த காணிக்கையை கொண்டு, பிலதெல்பியா என்னும் இடத்தில் 3,300 பேர் அமர்ந்து தேவனை ஆராதிக்கும் சபையும், அதனுடன் 1400 மாணவர்கள வேதாகம கல்வி பயிலும் பெரிய கல்லூரியும் கட்டப்பட்டது. அந்த சிறுபெண் கொடுத்த 57 சென்ட் பணம் எவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பார்த்தீர்களா?
.
அதுபோல வேதத்தில் ஒரு சிறுபையன் கொடுத்த 5 அப்பமும், இரண்டு மீனும் 5000 பேருக்கு அதிகமானோர் திருப்தியாய் சாப்பிட போதுமானதாய் இருந்தது. நாம் காணிக்கை கொடுப்பது எப்படி இருக்கிறது?
.
வருமானத்தில் பத்தில் ஒன்றை தசமபாகமாக கொடுக்க வேண்டியது வேதத்தின் சட்டம். அதை ஒழுங்காக கொடுக்கிறோமா? சிலர் இது பழைய ஏற்பாட்டு கட்டளை என்று கூறினாலும், இயேசுகிறிஸ்து 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே' (மத்தேயு 23:23) என்று கூறுகிறார். தசம பாகம் கொடுக்க வேண்டுமென்பது கட்டாயமாயிருந்தாலும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் அதை விட அதிகமாய் கொடுக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பூரண வளர்ச்சி

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டை சேர்ந்த திமான்தஸ் (Timanthes) என்ற வாலிபன் மிகச்சிறந்த ஓவியர் ஒருவரிடம் ஓவியம் கற்று வந்தான். அநேக ஆண்டுகளுக்கு பின் அவன் சுயமாய் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்தான். அது மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆகவே அதன் முன்பு அமர்ந்து அதன் அழகை ரசித்து கொண்டேயிருக்க ஆரம்பித்தான். இது அநேக நாட்களாக் நடந்து வந்தது. வேறெந்த வேலையும் செய்யமால், எதையும் புதிதாய் கற்று கொள்ளாமல் அந்த ஓவியத்தையே பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இதை கவனித்து வந்த குரு அந்த ஓவியம் முழுவதையும் பெயிண்ட் அடித்து அலங்கோலமாக்கினார். மறுநாள் அதை பார்த்த வாலிபன் தான் ரசனையாய் வரைந்த ஓவியம் அலங்கோலமாய் இருப்பதை கண்டு கடுங்கோபம் கொண்டு குருவிடம் ஓடினான்.
.
அவர், 'ஆம் இதை உன் நன்மைக்காகவே செய்தேன். இந்த ஓவியம் உன் வளர்ச்சியை பாதிக்கிறது. நீ புதிய புதிய ஓவியங்கள் வரைந்து இன்னும் வாழ்வில் முன்னேறி, உன் திறமைகளை வளர்த்து கொள்' என்று அறிவுரை கூறினார். அவன் அந்த அறிவுரையை கேட்டு மிகவும் கடினமாக உழைத்து மிக புகழ்பெற்ற பழங்கால ஓவியத்தை வரைந்தான்.

இஸ்ரவேல் தேசம் - அதிசயமான உண்மை

இஸ்ரவேல் தேசம் மிகச் சிறியதாக இருந்தாலும், அதனை சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து, அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று அந்த தேசம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனையோ முறை பிரயத்தனம் பண்ணியும், 'இதோ, இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை' என்ற வார்த்தையின்படி தேவனே அந்த நாட்டை காக்கின்றபடியால், யாராலும் அந்த தேசத்தை அசைக்க முடியாது என்பதே அதிசயமான உண்மை.
.
ஆறுநாள் யுத்தத்தில் யுத்தக்களத்தில் நடந்த அற்புதங்கள்:
இஸ்ரவேல் வீரர் கூறின சாட்சி: ஆறு நாள் யுத்தத்தில் நாங்கள் விரைவாய் முன்னேறும்போது ஒரு பலத்த காற்று அடித்தது. பாலைவனத்தில் தாங்கள் ஒரு அடிக்கூட நகர முடியாமல் நிறுத்தப்பட்டனரென்றும், சில நிமிடங்கள் சென்று புயல் நின்றவுடன் தங்கள் முன்னே நிலக்கண்ணிகள் நிறைய வைக்கப்பட்டிருந்ததை புயற்காற்று மணலை முழுவதும் அடித்துச் சென்று தங்களுக்கு காட்டி விட்டதையும் அறிந்து, ஆண்டவர் எவ்வளவு ஆச்சரியமான பிரகாரமாக தங்களுக்கு வர இருந்த ஆபத்தைக் காட்டி கொடுத்து தங்களை காப்பாற்றினார் என்று ஆண்டவரை துதித்தோம் என்றார்.
.
இரண்டாவது வீரர்: இரண்டு வீரர் ஏலாத் துறைமுகத்துக்குப் பக்கத்தில் பாராசூட் மூலமாய் ஆகாயத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய எகிப்திய டாங்க் நின்று கொண்டிருந்தது, அதற்குள்ளிருந்து இரண்டு எகிப்திய வீரர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இரு இஸ்ரேலிய வீரரும் கவனமாக டாங்கினிடம் முன்னேறிப்போன போது டாங்கிலிருந்து 18 வீரர்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கி சரணடைந்தனராம். ஏன் இவர்கள் சரணடைந்தனர் என்று விசாரித்தபோது அவர்கள் தங்களால் ஒரு விரலை கூட அசைத்து டாங்கை ஓட்டவோ அல்லது பீரங்கியை இயக்கவோ முடியாமற் போனது என்றும் விவரிக்க முடியாத ஒரு பயம் தங்களை பிடித்தது என்றும், அதனால்தான் தாங்கள் சரணடைந்ததாகவும் கூறினர்.
.
மூன்றாவது வீரர்: இஸ்ரவேலின் டாங்கி படை ஒன்றை சீனாய் பாலைவனத்தில் ஒரு எகிப்திய டாங்க் படை தாக்கியது. அச்சமயம் இஸ்ரேலிய வீரர் கண்ட காட்சியை அவர்கள் பிற்பாடு கூறியது: ஆகாயத்தில் ஒரு வெண் வஸ்திரம் தரித்த உருவம் தன் கைகளை விரித்துப் பறந்ததாகவும், அவ்வுருவம் தன் வலது கையை தாழ்த்தினபோது, அப்பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இடது கையை தாழ்த்தினபோது இடது பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்தததாகவும் கூறினர்.
.
யுத்தத்தில் தப்பி வந்த எகிப்திய படைவீரன் சொன்னது: தேனீக்கள் போன்ற வண்டுகள் எங்களை துரத்திக் கொண்டே வந்தன. ஆகையால் நாங்கள் முன்னேற முடியாமல் பின்வாங்கி ஓடி வர வேண்டதாயிற்று. யாத்திராகமம் 23:28: 'உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையம் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்' என்ற வார்த்தையின்படி குளவிகளை அனுப்பி, தேவன் தம் ஜனத்தை காத்துக் கொண்டார்.
.
நான்காவது யுத்தம்: 1968க்கும், 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலின் எலலைப்பகுதி முழுவதிலும், மற்றும் இஸ்ரவேல் நாட்டிற்குள்ளும், இஸ்ரேலியர் சோர்ந்து போகும் வகையிலும் பலஸ்தீன கொரில்லாக்களும், சுற்றியிருக்கும் அரபு நாடுகளும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தன
.
ஐந்தாம் யுத்தம்: யாம் கிப்பூர் என்பதற்கு பாவ நிவாரண பலி செலுத்தும் நாள் என்று பொருள். கர்த்தருடைய கட்டளைப்படி அந்நா
ளில் அக்டோபர் 6, 1973ம் வருடம் படைவீரர் உட்பட இஸ்ரவேலர் யாவரும் ஒரு வேலையும் செய்யாமல் அனுசரிப்பார்கள் என்று அறிந்து, எகிப்து திடுதிப்பென்று அதிகாலை 4 மணிக்கு 3000 டாங்குகளோடும், 2000 கன பீரங்கிகளோடும், 1000 ஆகாய கப்பல்களோடும், 6,00,000 வீரர்களோடும் சூயஸ் நகர் சமீபத்தில் சூயஸ் கால்வாயையும் அதற்கு வடக்கே ஒரு பகுதியையும் தாண்டி இஸ்ரவேலர் காத்து வந்த பகுதிக்குள் முன்னேறி விட்டனர். அதே சமயத்தில் சீரியாவும் பலத்த ராணுவத்துடன் வந்து கோலன் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
.
முதலில் இஸ்ரவேல் ராணுவம் நிலைமையை சமாளிக்க அதிக கஷ்டப்பட்டாலும், தேவன் அவர்களுக்கு துணை செய்தததினால், போர்ட்செயிடை தன் வசப்படுத்தி, கெய்ரோவிற்கு 10 மைல் தூரமட்டும் எகிப்திற்குள் முன்னேறி விட்டனர். ஆனால் அதற்கு மேல் முன்னேற அமெரிக்க அனுமதி அளிக்கவில்லை. விட்டிருந்தால் எகிப்தையும் அவர்கள் கைப்பற்றியிருந்திருப்பார்கள்!
.
இந்த சமயத்தில் இஸ்ரவேலர் ஆண்டவருடைய பாதுகாப்பு தங்களுக்கு அதிகமாக் இருந்ததென்று கூறினர். யுத்தத்தின் ஆரம்ப நாளில் எகிப்திய இராணுவம் இஸ்ரவேலை சுற்றிலும் வளைத்துக் கொண்டபோது, இஸ்ரேலிய வீரர் சிறு புதர்களுக்கு பின்னாலும், சாக்கு மண்ல் மூட்டைகளுக்கு பின்னாலும் ஒளிந்தனர். சிறிது நேரத்தில் திடீரென்று வெண் வஸ்திரம் தரித்த ஒருவர் இஸ்ரவேல் படைகளுக்கும், எகிப்திய படைகளுக்கும் இடையில் காணப்பட்டார். அவ்வளவுதான்! எகிப்தியர் பக்கமிருந்து வெடிசத்தம் நின்றது. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு எகிப்தியர் ஓடினர்.

.
கோலன் குன்றுகள் மத்தியில் சீரியா 1200 டாங்கிகளை இஸ்ரவேலுக்கு எதிராக நிறுத்தியிருந்தது. அப்பகுதியை காக்க, இஸ்ரவேல் இரண்டு டாங்கிகளை மாத்திரமே நிறுத்தியிருந்தது, பாவ நிவாரண பலி செலுத்தும் அந்நாளில் இஸ்ரவேலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சீரிய இராணுவம் என்ன காரணத்தாலோ முன்னேறாமல் அப்படியே நின்று விட்டது. அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஒரு இஸ்ரவேல் யூதர், அங்கு மிகப்பெரிய பழுப்பு நிறக் கை எதையோ தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சி தனக்கு தோன்றியதாகவும், ஆண்டவர்தான் சீரிய துருப்புகள் முன்னேறாதபடி தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அவர்களையும் வெற்றிக் கொள்ள தேவன் இஸ்ரவேலருக்கு கிருபை பாராட்டினார்.
.
ஈராக் - குவைத் யுத்தம்.
.
1991அம் ஆண்டு மார்ச் மாதம் சில அமெரிக்கர்கள் இஸ்ரவேல் தேசத்தை சுற்றி பார்க்க சென்றிருந்தபோது, யூதர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கென்று கொடுக்கப்பட்டிருந்த காஸ் மாஸ்க்குகளை உபயோகிக்காமல் உறையில் போட்டுக் கொண்டிருந்தார்களாம். ஏன் உபயோகிக்காமல் கட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில், ஆச்சரியத்தை உண்டு பண்ணினது. இராக்கியர் 39 ஸ்கட் ஏவுகணைகளை இஸ்ரவேலுக்கு எதிராக ஏவி விட்டனர்.
உபாகமம் 25:2-3 வசனங்களின்படி, 'குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்' இந்த வசனங்களின்படி யெகோவா நாற்பதாவது ஏவுகணையை இஸ்ரவேல் தேசத்தின் மேல் அனுப்பமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில் கட்டி வைக்கிறோம் என்பதே.
.
நாற்பது அடிகள் வரை அடிக்கலாம் என்ற விதி இருந்தாலும், தவறுதலாக நாற்பது அடிகளுக்கு மேல் அடித்து விட்டால் நீசன் என்று எண்ணப்படுவானேன் என்று காலக்கிரமத்தில் 39 அடிகளோடு நிறுத்திக் கொள்வது பழக்கமாகி விட்டது, அதன்படி 2 கொரிந்தியர் 11:24ம் வசனத்தில் பரி.பவுல் யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன் என்று கூறியிருக்கிறார்.
.
பிரியமானவர்களே, இஸ்ரவேல் தேசத்தை தேவன் இத்தனை உறுதியாக காத்து தம்முடைய வாக்குதத்தங்களை ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேற்றி இருப்பதைக் காணும்போது, நம் தேவன் எத்தனை அருமையானவர் என்று அவரை துதிக்காமல் இருக்க முடியுமா? நான் இந்த கட்டுரைகளை அநேக நாட்களாய் எழுத வேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன். அதை எழுதும்படியாக தேவன் கிருபை செய்ததை நினைத்து அவரை துதிக்கிறேன். இதற்கு உதவியாக இருந்த எ
ஸ்.டி அம்புரோஸ் அவர்களின் இஸ்ரவேல் என்ற புத்தகத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

மரணமே உன் கூர் எங்கே? வீர வாலிபனின் கடைசி வரிகள்

நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது - (உன்னதப்பாட்டு 8:6).
.
புஷ்யோக் என்னும் ரஷ்ய வாலிபன் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பான். அவனை காண்பவர்களை கவர்ந்திழுக்கும் உள்ளத்தை உடையவனாய் இருந்தான். மட்டுமல்ல, இனிமையாக பாடி வாத்திய கருவிகளை இசைப்பதில் அவனுக்கு இணை அவன்தான்.
.
அவனது பெற்றோர் அவனை இசைக்கல்லூரியில் சேர்த்தனர். சங்கீதத்தை முறைப்படி கற்றது மட்டுமல்ல, எல்லா இசைக் கருவிகளையும் திறமையாக மீட்டுவதிலும் பிரசித்திப் பெற்றவனாக இருந்தான். தன்னோடு சுட படிக்கும் மாணவன் மூலமாக கிறிஸ்து தம் ஜீவனை கல்வாரியில் எபபடி கொடுத்தார் என்பதை அறிந்தான். அவன் உள்ளம் கிறிஸ்துவுக்காக பொங்கியது. கிறிஸ்து தம் ஒரே ஜீவனை எனக்காக அர்ப்பணித்தாரென்றால் ஏன் என் திறமை தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்பணிக்கக்கூடாது என தீர்மானித்தான்.
.

அவன் பட்டம் பெறும் நாள் வந்தது. அவனது அருமையான பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு, ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அவனுடைய ஆசிரியர்கள் பெருமையோடு தம்தம் ஆசனங்களில் வந்து அமர்ந்தனர்.
..
ரஷ்யாவில் நாடோடிப்பாடலான 'பொன் வாத்தின் மதுரக்கீதம்' என்ற பாடலையே தன் பட்டம் பெறும் பாடலாக தெரிந்தெடுத்தான். தன் முழு

உள்ளத்தையும் அந்த பாடலில் இணைத்து, உருக்கமாக பாடிக் கொண்டே வந்தான். அந்தப் பாடலோடு கூட அப்படியே கல்வாரியின் கீதத்தையும் இணைத்து இயேசுவின் அன்பு, அவரது தியாகத்தையும், உருக்கமான குரலில் பாடி முடித்தான். கல்லைப் போலுள்ள உள்ளங்கள் மெழுகைப்போல உருகின. அவனது ஆசிரியர்கள் திகைத்தார்கள். அரசாங்க அதிகாரிகள் உறுமினார்கள். அவன் மெதுவாய் மேடையில் எழுந்து நின்று, உறுதியான குரலில், 'பாரமான சிலுவையை தம் தோள்களிலே தூக்கிக் கொண்டு எருசலேம் வீதி வழியாக இரத்த வியர்வையோடு நடந்து, எனக்காக ஜீவனைக் கொடுதுது, தன் ஜீவனைப் பார்க்கிலும் என்னை அதிகமாக நேசித்தவரை நான் எப்படி நேசியாமல் இருக்க முடியும்?' என்று கூறினான்.
. 
அப்பொழுதே அவன் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன. அவன் பெற்றோர் கலங்கி தவித்தனர். அவன் அவர்கள் பக்கமாக திரும்பினான், 'அம்மா,கல்வாரி கீதத்தோடு என் வாழ்க்கையின் கீதத்தையும் இணைத்துக் கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்' என்றான். மரண தண்டனைக்காகஅவன் நடந்து சென்றான். அவன் நடையில் ஒரு கெம்பீரம் இருந்தது.

Saturday, March 30, 2013

கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல்

ஒரு சிறு பெண் தன் தாயிடம் வந்து, 'அம்மா பாருங்கள், எனக்கு எல்லாம் ஒன்றும் சரியாகவே நடக்கவில்லை, கிளாஸில் டீச்சர் சொல்லி கொடுக்கிற அல்ஜீப்ரா பாடம் மனதில் பதிய மாட்டேன் என்கிறது, அதனால் பரிட்சையில் பெயில் ஆகி விட்டேன். என் அன்பு தோழி என்னை விட்டு விட்டு வேறு ஒருத்தியுடன் பிரண்ட் ஆகி விட்டாள், ஏனம்மா எனக்கு இப்படி நடக்கிறது' என்று அழுதாள்.
அப்போது அவளுடைய தாயார் கேக் செய்து கொண்டிருந்தார்கள். அவளிடம், 'உனக்கு கேக் செய்கிறேன், பிடிக்கும்தானே' என்று கேட்டார்கள். அப்போது அவள், 'ஆம், அம்மா எனக்கு நீங்கள் செய்கிற கேக் மிகவும் பிடிக்கும்' என்று கூறினாள்.
 
அப்போது அவளுடைய தாயார், ' இந்தா, கொஞ்சம் எண்ணெயை எடுத்து குடித்து கொள்' என்றார்கள். அதற்கு அவள், 'ஐயெ, சீ' என்றாள். 'சரி, இந்தா, இரண்டு பச்சை முட்டை அதையும் வாயிலே போட்டு கொள்' என்றார்கள், 'என்னம்மா, நீங்கள்' என்று அந்த பெண் கேட்டாள். அம்மா விடாமல், 'கொஞ்சம் மாவையும் அதோடு, சோடா உப்பையும் கூட சேர்த்து வாயில் போட்டு கொள்' என்று கூறினார்கள். அப்போது அந்த பெண், 'என்னம்மா நீங்கள் சொல்கிறீர்கள், அதையெல்லாம் எப்படி நான் அப்படியே வாயில் போட்டு கொள்ள முடியும்' என்று கேட்டாள்.
 
அப்போது அந்த தாயார், 'ஆம் மகளே, இவையெல்லாம் தனியாக பார்த்தால், அப்படியே சாப்பிட்டு விட முடியாது, அவையெல்லாம், பச்சையாக, பிரயோஜனமற்றதாக விரும்பதகாததாக தோன்றும், ஆனால், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து, சரியான முறையில் சமைக்கும்போது, எல்லரும் விரும்புகிற அருமையான கேக் ஆக மாறும்.

அதுபோல, தேவனும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு துன்பமான நிகழ்ச்சிகளையும், விரும்பதகாத காரியங்களையும், நாம் அவரை சார்ந்து கொள்ளும்போது, இனிமையாக மாற்றி தருவார்' என்று கூறினார்கள். அவர் எல்லா காரியத்தையும் தமது சித்தத்தின்படி செய்யும்போது, அவை நன்மையாக முடியும் என்பது அவருக்கு தெரியும். ஆனால், நாம் அவரை சார்ந்து, அவரை மாத்திரம் பற்றி கொண்டிருக்கும்போது, நம்முடைய எல்லா நம்பிக்கையற்ற நிலைமைகளையும் அவர் மாற்றி, நிச்சயமாக அற்புத விடுதலையை தருவார்.

லேசான உபத்திரவம் - நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது

இரண்டாம் உலகப்போரின் வெற்றியில்,அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ஐசன் ஹோவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதன் முதலாக இராணுவ பயிற்சியில் சேர்ந்தபோது தான் அங்கு படும் கஷ்டங்களை தினமும் தன் தந்தைக்கு கடிதமாக எழுதுவது வழக்கம். அதில் 'அதிகாலை 4 மணிக்கு எழும்ப வேண்டும். ஒரு நாளைக்கு 20 கி.மீ ஓட வேண்டும். மூன்று கி.மீ முள்வேலியினால் ஆன வலையில் முழங்கால் மற்றும் கைளினால் தவழ்ந்து சென்று கடக்க வேண்டும். சுமார் 40-45 டிகிரி வெப்பமுள்ள பாலைவனப்பகுதியில் பயிற்சி எடுக்கும்போது கிடைக்கும் ஆகாரம் 100 மில்லி பால் மட்டுமே'. இவ்வாறு தான் அனுபவிக்கின்ற கஷ்டங்களை கடிதமாக எழுதி அனுப்பினாலும் தந்தையிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. மூன்று மாதங்களில் அலுத்துப் போன ஐசன் நூறாவது கடிதத்தை 25 பக்கமுள்ள நீண்ட கடிதமாக எழுதினார். 'நீங்கள் இன்னும் இதற்கும் பதில் எழுதாவிட்டால், அல்லது இங்கிருந்து என்னை அழைத்து செல்லாவிட்டால், இதுவே என் கடைசி கடிதம். நான் என்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு சவப்பெட்டியில் வந்து சேர்வேன்' என்று எழுதி முடித்தார்.
.
இந்த நூறு கடிதங்களுக்கும் பதிலளிக்க அவரின் தந்தை ஒரு போஸ்ட்

கார்டில் ஒரு சம்பவத்தை எழுதினார், 'இரண்டு பேர் சிறையிலடைக்கப்பட்டனர். ஒருவன் தன்னுடைய பரிதாப நிலையைக் கண்டு
கண்ணீர் வடித்து தலை கவிழ்ந்வாறே அவ்வறையின் மணலை பார்த்தே துக்கத்துடன் தன் நாட்களை கழித்தான். மற்றவனோ துருப்பிடித்த ஜன்னல் வழியாக ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்து அவற்றின் அழகினையும், வெளிச்சத்தையும் கண்டு, சந்தோஷத்துடன் காலத்தை கழித்தான். நீ யாரைப்
போலிருக்க போகிறாய்?' என்று எழுதி கையெழுத்திட்டு மகனுக்கு அனுப்பி
வைத்தார், இந்த கடிதத்தை படித்த ஐசன் உற்சாகமடைந்து, சந்தோஷத்துடன்
இராணுவ பயிற்சியை முடித்து இருபதாம் நூற்றாண்டின் யுத்த வரலாற்றில்
ஒரு நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டார். அமெரிக்க தேசத்தின்
34ஆவது ஜனாதிபதியாகவும் மாறினார்.
.
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ பாடுகளின் வழியாக அவர் கடந்து சென்றாலும் கிறிஸ்துவுக்காக அத்தனை பாடுகளையும் பொறுமையாக சகித்தார். அந்த பாடுகளை குறித்து அவர் சோர்ந்து போகாமல், கிறிஸ்து தன்னை அழைத்த அழைப்பில் உண்மையாக இருந்தபடியால், தான் பட்ட பாடுகளை, 'இக்காலத்து இலேசான பாடுகள்' என்று ஆச்சரியவிதமாக கூறுகிறார். மட்டுமல்ல, அந்த உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என விசுவாசித்தார்..
 

நாமும் ஒருவேளை அநேக பாடுகளினூடே கடந்து சென்றுகொண்டிருக்கலாம். பாடுகளையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியதாகத்தான் தோன்றும். சிறையில் இருந்த கைதி மணலை பார்த்தபடியே தன் வாழ்நாளை கழித்தது போன்று, துக்கத்திலேயே நம் வாழ்நாளை கழித்து விடும்படியாகவே நேரிடலாம். நாம் படும் பாடுகள் எதுவும் நிலையானதல்ல, ஒரு நாள் அவை நம்மை விட்டு கடந்து போகத்தான் செய்யும். ஆனால் இப்படி ஆயிற்றே என்று நாம் துக்கத்தில் மூழ்கிப் போனால் யாராலும் நமக்கு உதவ முடியாது.

இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்

மேற்கு மிக்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமொதெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை, ஏனெனில் அவன் தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டி விட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில் கிட்டத்தட்ட வழுக்கை தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்கு திரும்பிய முதல் நாளில் வியப்பு அவனுக்கு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்பு கொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது இரக்கத்தை காட்டினர். நண்பர்களின் இச்செயல் அச்சிறுவனுடைய வேதனையை குறைத்தது.
.
ஒரு வேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்த ஜேக் வைர்ட்ஜன் என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடைய ஒருவருடன் உணவருந்த சென்றார். அந்நபர் வாயில் வைக்கும் உணவை மெல்ல முடியாமல் கொஞ்ச கொஞ்சமாக கீழே விழுந்து கொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செய்தி தாளை கட்டி வைத்து கொண்டு சாப்பிடுவார். ஆகவே யாரும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்து விடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இது ஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் ஒரு செயலாகும்.
.
எலியட் என்பவர் காலைதோறும் வேதத்தை தியானிக்கும் பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரை பார்க்க நேரிட்டால், தனது தியானத்தை நிறுத்தி விட்டு, வெளியே சென்று, இன்முகத்தோடு அவரை விசாரித்து, உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும் தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. இதுவும் இரக்கத்தின் விளைவுதானே! பால் என்பவர் ஹோட்டல் ஒனறிற்கு சென்றிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த ஃபிரட்டி என்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயே கிறிஸ்துவை ஏற்றுகொண்டார். சில காலம் கழித்து, ஃபிரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரை நாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள் அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப்போகும் இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார். இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்!

தாழ்மை - நற்பண்பு

ஒரு பெரிய
கர்வாலி மரமும் சிறிய புல்லும் பற்றிய ஒரு சிறுகதை உண்டு. அக்கர்வாலி மரம் தன்னருகில் வளர்ந்து வந்த சிறிய புல்லை நோக்கி, 'ஓ அற்பப்புல்லே, நீ எவ்வளவு பெலனற்றதும், நிலையற்றதும் சிறியதுமாயிருக்கிறாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கிறேன்' என்று அடிக்கடி பெருமையடித்துக் கொண்டது. தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அந்த புல்லுக்கு ஒன்றுமில்லாதிருந்தபடியால் அது எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஒரு நாள் ஒரு பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த கர்வாலி மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும், நேராக நிமிர்ந்து நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில் விழுந்து விட்டது.
.
.புயல் காற்று ஓய்ந்தபோது, கர்வாலி மரம் புல்லுக்கு என்ன நேர்ந்தது என்று
அறியும்படி மெதுவாக அதனை எட்டிப்பார்த்தது. புல் எப்போதும் போல்
தழைத்து நின்று கொண்டிருந்தது. அதை கண்ணுற்று வியப்படைந்த
கர்வாலிமரம், 'ஓ, சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே
அப்பலத்த புயற்காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய
அற்பப்புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப்புயலை சமாளிக்க
முடிந்தது?'என்று கேட்டது. அதற்கு அந்தப்புல் புன்முறுவுலுடன், 'அது
மிகவும் எளிதானது. காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை
குனிந்து கொள்வேன். அப்பொழுது அவை எனக்கு எந்த பிரச்சனையையும்
உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும்' என்று பதிலளித்தது,
.

.தாழ்மை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம் மற்றவரை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் மெய்யான மனத்தாழ்மையை கற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு ஆவியின் அடித்தளத்திலும் பெருமை நிறைந்திருக்கிறது. நம்மை யாராகிலும் தரக்குறைவாய் பேசி அவமதிக்கும்போது நம் மனம் புண்படுமாயின், உண்மையில் புண்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய பெருமையே ஆகும்.

Wednesday, March 20, 2013

சிலுவை அன்பினால் மாத்திரமே இணையும்

கம்யூனிச தேசங்களுக்கும் அமெரிக்க தேசத்திற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அமெரிக்க தேசத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் ருமேனியா தேசத்தில் வெளியரங்கமாய் சுவிசேஷம் அறிவிக்கத்தடை இருந்தும் இரகசியமாய் சில ஊழியங்கள் செய்யும்படி சென்றிருந்தார். ஒருநாள், கடும் குளிரிலே ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தெரு ஒன்றில் சென்று கொண்டிருந்தார். மக்கள் யாவரும் யாரையும் கண்டு கொள்ளாமல் அவரவர் தங்கள் வேலையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதனின் விசில் சத்தம் அவரை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, திடுக்கிட செய்தது. ஏனெனில் அவர் ‘மா பரிகாரியான இயேசு’ என்ற பாமாலை பாடலை விசில் அடித்தபடி அந்த மனிதன் சென்று கொண்டிருநதார்.
.
கிறிஸ்துவை மறுதலிக்கும் தேசத்தில் இப்படி ஒரு நபரா என மகிழ்ச்சியடைந்து, அம்மனிதனுக்கு பின்பாக இவ்வூழியரும் பின் தொடர்ந்தார். யாரும் பார்த்து விட்டால் பிரச்சனை வரலாம் என்பதால் சிறுது தூரம் அமைதியாய் சென்ற அவர், பின் அந்த பாட்டை இவரும் விசில் அடிக்க ஆரம்பித்தார். அந்த பாட்டைக் கேட்டவுடன் அந்த ருமேனியர் பிரகாசமுள்ள முகத்தோடு திரும்பி வந்து, ஊழியரை கட்டிப்பிடித்து கொண்டு தனது தாய் மொழியில் ஏதோதோ சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் தனது மொழி அவருக்கு புரியவில்லை என்பதை அறிந்து தனது இருதயத்தின் மேல் கைகளை வைத்தார். பின் கைகளை வானத்திற்கு நேராய் உயர்த்தினார். சிலுவை அடையாளத்தை வரைந்து காண்பித்தார். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியோடு மொழி, கலாச்சாரம், அரசியல் பின்னணி என ஏதோதோ வித்தியாசத்தில் வாழும் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லா அவ்விருவரும் ஒரு சில நிமிடத்தில் இணைக்கப்பட்டனர். காரணம் என்ன? கிறிஸ்துவின் இரட்சிப்பின் சந்தோஷமே!

Saturday, February 16, 2013

ஆவிக்குரிய முன்னேற வேண்டும்

ஒரு பெரிய கடை ஒன்று இருந்தது. அதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொள்ளும் வண்ணம், ஒரே கூரையின் கீழ் கிடைக்கத்தக்கதாக பெரியதாக இருந்தது. அதில் வேலைக்கு சேருவதற்காக ஒரு வாலிபன் விண்ணப்பித்திருந்தான். அவனை வேலைக்கு சேர்த்த முதலாளி இன்னும் இரண்டு நாளில் அவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்க்க போவதாக கூறினார். அதன்படி, இரண்டு நாள் கழித்து அவனால் ஏதாவது லாபம் வந்ததா என்று பார்க்க வேண்டி, அவனை அழைத்தார். 'இந்த நாளில் நீ எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்? எத்தனை வாடிக்கையாளர்களை சந்தித்தாய்?' என்று கேட்டார். அந்த வாலிபன், ஒரே ஒருவரைதான் என்று கூறினான். அதற்கு முதலாளி, 'என்னது? ஒரே ஒரு வாடிக்கையாளர்தானா? மற்றவர்கள் எல்லாம் ஒரு நாளில் 30 40 வாடிக்கையாளர்களை சந்தித்து, நமது கடைக்கு லாபம் கொண்டு வருகிறார்கள், நீ என்னடா என்றால் ஒரே ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் வியாபாரம் செய்திருக்கிறாய்? எவ்வளவு சம்பாதித்தாய்?' என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன், '15,00,000 ரூபாய்கள'; என்றதும், ஆ! அது எப்படி? என்று வியப்புடன் முதலாளி கேட்டார்.
அந்த வாலிபன் விவரிக்க ஆரம்பித்தான், 'இந்த நாள் காலையில் அந்த மனிதருக்கு நான் ஒரு சிறிய மீன் பிடிக்கும் தூண்டிலை விற்றேன். அதன்பிறகு அவர் வந்து இதைவிட பெரிய தூண்டில் வேண்டும் என்றார், அதன்பிறகு அதைவிட பெரிய தூண்டில் என்று மூன்றை அவரிடமே விற்றேன். அதன்பிறகு, மீன் பிடிப்பதற்கு தேவையான எல்லா சாதனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அவரிடம் விற்றேன். அதன்பிறகு அவரிடம், இவை எல்லாவற்றையும் கொண்டு போக ஒரு படகு வேண்டுமே என்று சொல்ல, அவர் அதையும் வாங்கினார். இந்த படகை தன்னுடைய பழைய கார் இழுத்து கொண்டு போக முடியாதென்று சொல்ல, அவருக்கு தற்போதுள்ள புதிய மாடலில் ஒரு காரையும் வாங்க வைத்தேன். இப்படியாக ஒரே வாடிக்கையாளரிடம் இத்தனையும் சம்பாதித்தேன்' என்று கூறினான். அப்போது முதலாளி, 'ஒரு சிறிய மீன் தூண்டிலை வாங்க வந்த நபரிடம் இத்தனை காரியத்தையும் நீ விற்றாயா?' என்று கேட்க, அவன், ' இல்லை, அவர் என்னிடம் தன் மனைவியிடம் சண்டையிட்டு, வேறு அறையில் உறங்குவதற்காக ஒரு கம்பளி வாங்க வந்தார். நான் அவரிடம், உமக்கு இந்த வார கடைசி வீணாக வேண்டாம், போய் மீன் பிடிப்பீர்களானால் உமது பொழுது போகும்' என்று கூறினேன்' என்றான். அந்த முதலாளி அந்த வாலிபனின் வியாபார நுணுக்கத்தை மெச்சி கொண்டார்.

Wednesday, February 13, 2013

நன்றியுள்ள இருதயம்

வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.
 
அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது, ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.