Showing posts with label Stories. Show all posts
Showing posts with label Stories. Show all posts

Monday, October 14, 2013

குயவனே குயவனே

ஒரு கணவனும் மனைவியும் ஒரு அழகான கலைபொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றார்கள். அங்கு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு வரும்போது காப்பி குடிக்கும் கிண்ணங்கள்; அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு கிண்ணம் மிகவும் இவர்களை கவர்ந்தது. அதை வாங்கும் நோக்கத்துடன் அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் கிண்ணம் அவர்களோடு பேச ஆரம்பித்தது.
.
“இப்போது நீங்கள் பார்க்கிற நான் ஆரம்பத்தில் இதுப் போல இல்லை. நான் வெறும் சிவப்பான களிமண்ணாகத்தான் இருந்தேன். என்னை உருவாக்கின குயவனார் என்னை உருட்டி திரும்ப திரும்ப அடித்து என்னை மெதுவாக்கினார். நான் அவரிடம் ‘போதும் என்னை விட்டு விடுங்கள், என்று கெஞ்சினேன். அவர் இன்னும் முடியவில்லை என்றார். பிறகு என்னை திரிகையிலே போட்டு சுற்ற ஆரம்பித்தார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நான் என்னை விட்டுவிடும் என்று கதறினேன். ஆனால் அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின் தனக்கு பிடித்தமான ஒரு பாத்திரமாக என்னை உருவாக்கி, என்னை நெருப்பில் இட்டார். எனக்கு தாங்க முடியாத உஷ்ணம், என்னை வெளியே எடுத்துப் போடும் என்று கதறினேன். அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின்னர் என்னை எடுத்து குளிர்ச்சியாக்கும்படி வெளியே வைத்தார். அப்பா! என்ன ஒரு விடுதலை! நான் குளிர்ந்து கொண்டிருக்கும்போதே என்மேல் படங்களை வரைய ஆரம்பித்தார். பின் நான் மூச்சு விடுவதற்குள் திரும்பவும் என்னை நெருப்பில் இட்டு காய வைத்தார். அது முன் இருந்ததுப் போல அல்ல, இரண்டு மடங்கு சூடு அதிகம். நான் அவரிடம் கெஞ்சினேன், கதறினேன், அழுதேன் இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது என்று நான் என் நம்பிக்கையை இழக்கும் நேரத்தில், அவர் என்னை வெளியே கொண்டு வந்து ஆற வைத்தார். இன்னும் என்னச் செய்யப்போகிறாரோ என்று மிகவும் அஞ்சியிருந்த நேரத்தில், என்னிடம் ஒரு கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டி, ‘பார் உன்னைப் பார்’ என்றார். நான் பார்த்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை நானா அது என்று. அத்தனை அழகாய் மாறிவிட்டேன். பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தார்: ‘நான் உன்னை தட்டி உருட்ட ஆரம்பித்தபோது உனக்கு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் நான் உன்னை அப்படியே விட்டிருந்தால் நீ காய்ந்துப் போயிருப்பாய். உன்னை திருகியில் வைத்து சுற்றும்போது உனக்கு தலை சுற்றியிருக்கும் ஆனால் நான் அதை செய்யாதிருந்தால் நீ உதிர்ந்திருப்பாய். உன்னை நெருப்பில்இட்டு காய வைக்காதிருந்திருநதால் நீ காய்ந்து கடினமாகாதிருந்திருப்பாய். இத்தனைக்கும் பிறகு நீ இப்போது நான் விரும்பும் பாத்திரமாக வனைந்து உருவாக்கப்படடிருக்கிறாய்’ என்றுக் கூறினார் என்றது”.
.
நம்மில் அநேகர் இந்த உலகத்தின் பாடுகளை அனுபவித்து போதும் ஆண்டவரே என்று கதறிக் கொண்டிருக்கிறோமா? உங்களை இந்த உபத்திரவத்தின் குகையில் தெரிந்துக் கொள்ளவும், உங்களை தனக்கு பிரயோஜனமான பாத்திரமாக உருவாக்கவுமே கர்த்தர் இதை அனுமதித்திருக்கிறார்.

இரகசிய உயில்

ஒரு பணக்கார தகப்பனும் மகனும் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வியட்நாம் போர் நடைபெறவே, மகன் அந்த போருக்கு போக வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் போரில் மிகவும் நன்றாக போரிட்டு, மற்றும் அநேக போர் வீரர்களை காப்பாற்றினான். அப்படி ஒரு வீரனை காப்பாற்றும்போது, அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. தகப்பனுக்கு அந்த செய்தி போய் தனது ஒரே மகன் இறந்த துக்கத்திலே இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டு கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது ஒரு வாலிபன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் சொன்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய போர் வீரரில் நானும் ஒருவன். உங்கள் மகன் உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவான். நீங்கள் ஓவியங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று. நான் ஒரு பெரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகனை நான் வரைந்துள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டிக் கொணடான். தகப்பன் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘இல்லை இல்லை உங்கள் மகனால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறி படத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் அந்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து, வருகிற ஒவ்வொருவருக்கும் காட்டினார்.
.
சில மாதங்கள் கழித்து அவரும் மரித்தார். அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு வந்தன. புகழ்பெற்ற ஓவியங்களாக இருந்தபடியால் அவற்றை வாங்க அநேகர் வந்திருந்தனர். ஏலத்தை நடத்துபவர், முதலாவது அவருடைய மகனின் அந்தப் படத்தைக் காட்டி ‘யார் இதை வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்தை ஆரம்பித்தார். அங்கு அமைதி நிலவியது. திரும்பவும் அவர் 'யார் வாங்குகிறீர்கள்? 200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?' என்று கேட்டார். பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருடைய மகனின் படத்தை வாங்க வரவில்லை. மற்ற ஓவியங்களை ஏலமிட ஆரம்பியுங்கள் என்று கேட்டது. ஏலமிடுபவரோ, ‘அவருடைய மகன்; அவருடைய மகன் யார் வாங்க முன்வரகிறீர்க்ள்’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்த வீட்டில் தோட்டக்காரனாயிருந்தவர், 10 டாலர் எனக் குரல் கொடுத்தார். உடனே ஏலமிடுபவர் யாராவது 20 டாலர் என்றுக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ‘10 டாலர் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்தை அந்தத் தோட்டக்காரனுக்குக் கொடுத்தார். மற்றவர்கள் பொறுமையை இழந்து, ‘மற்ற ஓவியங்களை ஆரம்பியுங்கள்’ என்றுக் கத்தினார்கள். ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம் முடிந்தது’ என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு ‘எனக்கு முன்னமே இரகசிய உயிலைப் பற்றி சொல்லப்பட்டது. யார் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு அவருடைய எஸ்டேட்டும் எல்லா ஓவியங்களும் சொந்தம் என்று அவர் உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆகையால் யார் மகனுடைய ஓவியத்தை வாங்கினார்களோ அவர்களுக்கே எல்லாம் சொந்தம்’ என்று கூறி ஏலத்தை முடித்தார்.
.
2000 வருடங்களுக்கு முன்பு தமது சொந்தக் குமாரன் என்றும் பாராமல், அவரை ஒப்புக் கொடுத்த தேவன் ‘இதோ என் மகன், அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் - யோவான் 1:12. மட்டுமல்ல, அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளி இருக்கிறார். ஆனால், எத்தனைப் பேர் அவரை புறக்கணித்து, கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கே சொந்தம் என்று அவரை அடையாமற் இருக்கிறார்க்ள. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எத்தனை பாக்கியம்! மற்றவர்களும் இந்த பாக்கியத்தை அடையும்படிக்கு நாம் திறப்பின் வாசலில் நிற்போமா? அவர்களுக்கு சத்தியத்தை சொல்வோமா?

Thursday, May 2, 2013

நோபல் பரிசு - "ஆல்பர்ட் நோபல்"

நூறாண்டுகளுக்கு முன் ஒரு நாள் செய்தித்தாளை பார்த்த ஒருவர் தன்னுடைய மரண செய்தியை காண நேரிட்டது. தவறுதலாக வேறு யாருக்கோ பதிலாக அவருடைய பெயரும், புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. அவருடைய புகைப்படத்தின் கீழ் டைனமெட் உண்டாக்கிய இராஜா என்றும், மரணத்தின் வியாபாரி என்றும் எழுதப்பட்டிருந்தது.
.
அதை பார்த்தவுடன் அந்த மனிதர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

மரணத்தின் வியாபாரி என்றா என்னை மக்கள் நினைவு கூருவார்கள் என்று
திடுக்கிட்டது. அது அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
தன்னை யாரும் அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை. உடனே
அந்நாளில் இருந்துதானே அவர் சமாதானத்திற்கான காரியங்களில் ஈடுபட
ஆரம்பித்தார். அவர் வேறு யாருமில்லை ஆல்பர்ட் நோபல் ஆவார். அவர்
பேரில் இன்றும் ஒவ்வொரு வருடமும் சமாதானத்திற்கும், மற்ற அறிவியல்
ஆராய்ச்சிகளை கண்டுபிடித்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Friday, February 22, 2013

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

Saturday, February 16, 2013

ஆவிக்குரிய முன்னேற வேண்டும்

ஒரு பெரிய கடை ஒன்று இருந்தது. அதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொள்ளும் வண்ணம், ஒரே கூரையின் கீழ் கிடைக்கத்தக்கதாக பெரியதாக இருந்தது. அதில் வேலைக்கு சேருவதற்காக ஒரு வாலிபன் விண்ணப்பித்திருந்தான். அவனை வேலைக்கு சேர்த்த முதலாளி இன்னும் இரண்டு நாளில் அவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்க்க போவதாக கூறினார். அதன்படி, இரண்டு நாள் கழித்து அவனால் ஏதாவது லாபம் வந்ததா என்று பார்க்க வேண்டி, அவனை அழைத்தார். 'இந்த நாளில் நீ எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்? எத்தனை வாடிக்கையாளர்களை சந்தித்தாய்?' என்று கேட்டார். அந்த வாலிபன், ஒரே ஒருவரைதான் என்று கூறினான். அதற்கு முதலாளி, 'என்னது? ஒரே ஒரு வாடிக்கையாளர்தானா? மற்றவர்கள் எல்லாம் ஒரு நாளில் 30 40 வாடிக்கையாளர்களை சந்தித்து, நமது கடைக்கு லாபம் கொண்டு வருகிறார்கள், நீ என்னடா என்றால் ஒரே ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் வியாபாரம் செய்திருக்கிறாய்? எவ்வளவு சம்பாதித்தாய்?' என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன், '15,00,000 ரூபாய்கள'; என்றதும், ஆ! அது எப்படி? என்று வியப்புடன் முதலாளி கேட்டார்.
அந்த வாலிபன் விவரிக்க ஆரம்பித்தான், 'இந்த நாள் காலையில் அந்த மனிதருக்கு நான் ஒரு சிறிய மீன் பிடிக்கும் தூண்டிலை விற்றேன். அதன்பிறகு அவர் வந்து இதைவிட பெரிய தூண்டில் வேண்டும் என்றார், அதன்பிறகு அதைவிட பெரிய தூண்டில் என்று மூன்றை அவரிடமே விற்றேன். அதன்பிறகு, மீன் பிடிப்பதற்கு தேவையான எல்லா சாதனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அவரிடம் விற்றேன். அதன்பிறகு அவரிடம், இவை எல்லாவற்றையும் கொண்டு போக ஒரு படகு வேண்டுமே என்று சொல்ல, அவர் அதையும் வாங்கினார். இந்த படகை தன்னுடைய பழைய கார் இழுத்து கொண்டு போக முடியாதென்று சொல்ல, அவருக்கு தற்போதுள்ள புதிய மாடலில் ஒரு காரையும் வாங்க வைத்தேன். இப்படியாக ஒரே வாடிக்கையாளரிடம் இத்தனையும் சம்பாதித்தேன்' என்று கூறினான். அப்போது முதலாளி, 'ஒரு சிறிய மீன் தூண்டிலை வாங்க வந்த நபரிடம் இத்தனை காரியத்தையும் நீ விற்றாயா?' என்று கேட்க, அவன், ' இல்லை, அவர் என்னிடம் தன் மனைவியிடம் சண்டையிட்டு, வேறு அறையில் உறங்குவதற்காக ஒரு கம்பளி வாங்க வந்தார். நான் அவரிடம், உமக்கு இந்த வார கடைசி வீணாக வேண்டாம், போய் மீன் பிடிப்பீர்களானால் உமது பொழுது போகும்' என்று கூறினேன்' என்றான். அந்த முதலாளி அந்த வாலிபனின் வியாபார நுணுக்கத்தை மெச்சி கொண்டார்.

Friday, February 8, 2013

காதலர் தினம் - இது வாலிபர்களுக்கு மட்டும்

அன்பு தேவனின் பிள்ளைகளே, இந்த வலைப்பகுதியில்
காதலர் தினம் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். இந்த நாள் பல வாலிபர்களின் மனதில் சில மின்சார மின்னலை தட்டி செல்கிற நாள். பல கிறிஸ்தவ வாலிபர்கள் இந்த காதல் வலையில் விழ வைக்க சாத்தான் பயன்படுத்தும் ஓர் கூர்வாள். உங்களோடு சில வேத வசனங்களை பகிர்ந்து கொள்கிறேன். திருமணத்திற்கு முன்னால் காதலிப்பது தவறல்ல என்று பல சபைகளும், கிறிஸ்தவ ஊழியகாரர்களும் உளற ஆரம்பித்து விட்டார்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. நீதிமொழிகளில் சாலலோன் உன் இளவயது மனைவியோடு மகிழ்ந்திரு என்கிறார். என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார். கல்லூரியில் படிக்கும் போது காதல் வயப்படும் அன்பு வாலிபர்களே, நீங்கள் காதலிப்பவர்கள் தான் தேவன் உங்களுக்கு ஏறப்படுதினார் என்று எதை வைத்து முடிவு பண்ணினீர்கள்? ஒரு வேளை அவர்கள் உங்களுக்கு என்று இல்லை என்றால்? வேதம் சொல்கிறது "பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்." ஜாக்கிரதை. காதலிக்கும் வாலிபர்கள் எப்படி ஜெபிப்பார்கள் என்றால்: 1. தேவனே இந்த பெண்ணை / பையனை எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள். என்னால் அவரை மறக்க முடியவில்லை. 2. தேவனே, இந்த பெண்ணை / பையன் என் மனதை பாதித்து விட்டான். எங்களை சேர்த்து வைத்து விடுங்கள். 3. தேவனே இந்த பெண்ணை / பையனை நான் காதலிப்பது உம் சித்தமா? (இதையே ஆயிரம் முறை கேட்பது) அதாவது, கையில் முடிவை வைத்து கொண்டு, தேவனின் சித்தை அதில் திணிக்க வைக்க துடிப்பது. சிலர் பல ஊழிகாரர்களிடமும் தங்கள் சந்தேகத்தை கேட்க துடிப்பார்கள். அதாவது, தங்கள் முடிவை யாரவது ஆதரிக்க மாட்டார்களா என்று அலைவது. "நீங்கள் செய்வது சரி" என்று யாரவது சொல்லிவிட மாட்டார்களா என்று எல்லா வாலிப கூட்டங்களிலும் கேள்வி கேட்பது. உங்கள் வாலிபத்தை விற்று விடாதீர்கள். தேவன் அழைத்தது போல "உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து..." நீ காதலிக்கும் பொது உன் முழு பலத்தையும், இருதயத்தையும், உன் சிந்தையையும் இழந்து விடுவாய். இரண்டு எஜமானுக்கு உன்னால் ஊழியம் செய்யவும் முடியாது. எட்டு கால் பூச்சி வலையில் மாட்டின "ஈ" யின் ஓடு மட்டும் தான் நம் கண்களுக்கு தெரியும். அதன் உடம்பின் உள்ளே உள்ள அனைத்தையும் பூச்சி உறிஞ்சி எடுத்து விடும். அதை போல தான், சாத்தான் உன்னை ஊழியத்தில் வைத்திருப்பான், பெரிய காரியத்தை செய்வதை போல செய்வான், அனால் முடிவில் உன் இருதயம், உன் பலம், உன் ஆத்துமா என்று எல்லாவற்றையும் உறிஞ்சி விடுவான். வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. பிரசங்கி 11 - 10,11, நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. நீங்கள் தேவனிடத்தில் நெருங்கி வாழ ஒப்புகொடுங்கள். ஆத்துமாக்களை கொள்ளைஇடுங்கள். ஊழியம் செய்யுங்கள். உங்கள் வாலிபத்தில் மகிமையான காரியங்களை செய்ய முடியும். அதை தேவனுக்கு வல்லமையாய் பயன்படுத்துகள் என்று பிரசங்கி கதறுகிறான். கடைசியாக ஒரு கருத்து உன் வாழ்க்கையில் என்றும் தேவ அன்பை பிடித்து கொள் . வாலிபத்தில் பெற்றோரை மதித்து கொள். திருமண வாழ்க்கையில் காதலை வளர்த்துக் கொள். லூக்கா 10: 16. நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 17. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். 25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; 31. தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 32. இந்த இரகசியம் பெரியது வாழ்த்துக்களுடன் கிறிஸ்டோ செல்வன்

Wednesday, January 30, 2013

கிணற்றில் எறியப்பட்ட சாது சுந்தர் சிங்

1908-ம் ஆண்டு திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்தமதமே பிரதானமாக இருந்ததால் அம்மதம் நசிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமையான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார். ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிசேஷத்திற்கு வரவேற்பில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்று ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்ததை பிரசங்கித்த குற்றத்திற்காகவும் லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.
.
திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி சுந்தர் ஒரு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லபட்டார். அவரது உடைகளை உரிந்து விட்டு எலும்பு குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கைதோள் பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எங்கும் இருளாக இருந்தது. இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும் எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த இடமெல்லாம் அழுகிய மாம்சமும் எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகள் தான் அவர் நாவிலும் வந்தன. ‘ஏன் என்னை கைவிட்டீர்?’ துர்நாற்றம் பசி, தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்கு தூக்கம் வரவில்லை.
.
மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் ‘கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்’ என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்

Saturday, January 19, 2013

ட்ரோஜான் குதிரை (Trojan Horse)

நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள். அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.
.
இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், 'மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்' என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் 'இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது' என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.
.
இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

போஷிப்பவர் - உண்மை சம்பவம்

மதுரையில் வசிக்கும் ஒரு குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. காரணம் வாடகை ஆட்டோ ஓட்டி, குடும்பத்தை நடத்தி வந்த கணவருக்கு வீட்டு செலவுக்கு கொடுக்கக் கூட அவரிடம் பணமிருப்பதில்லை. இதில் வீட்டில் தவழ்ந்து விளையாடி வந்த இரட்டை பெண் பிள்ளைகளும் அவ்வப்போது பசியினால் அழுவது பெற்றவர்களின் மனதை கசக்கி பிழிந்தது.
.
இந்த குடும்ப போராட்டத்தில் இயேசுகிறிஸ்துவை இறுக பிடித்து கொண்ட மனைவி ஞாயிறு தோறும் ஒரு சபைக்கு சென்று ஆண்டவரை ஆராதித்து வந்தாள். ஆண்டவரை நம்பும்படியும், ஜெபிக்கும்படியும் கணவரிடம் அடிக்கடி கூறுவாள். ஆனாலும் அவளது வார்த்தைகளுக்கு அவர் சற்றும் செவிசாய்க்கவில்லை. ஒரு நாள் காலை பிள்ளைகள் இருவரும் பசியால் அழுதனர். அடுப்பில் உணவோ. கையில் காசோ இல்லை. பக்கத்து வீட்டில் போய் உணவோ கடனோ கேட்கவும் தன்மானம் ஒத்து வரவில்லை.
.
ஆகவே இடுப்பில் ஒரு பிள்ளையையும் கையிலொரு பிள்ளையையும் பிடித்து கொண்டு இருதயம் கனத்தவளாக கலங்கிய கண்களோடு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்று, ஒரு டம்ளர் பாலும், இரண்டு பன்னும் வாங்கி விட்டு, தயங்கியவளாக, 'அண்ணா காசு நாளைக்கு கொடுக்கிறேன்' என்று கூறினாள். டீக்கடைக்காரரோ 'என்னம்மா, இப்போதுதானே உன்கிட்ட நின்ற பெரியவர் காசு கொடுத்து விட்டு போனார்' என்றார். இவளால் நம்பி முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். அப்படி யாருமில்லை. யாராக இருக்கும்? என்று குழம்பி கொண்டிருக்கையில் உன்னை போஷிக்கிற தேவன் நானல்லவா? என்று உள்ளத்தில் அழுத்தமாய் கர்த்தர் நினைவுப்படுத்தினார். அவளடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாலில் பன்னை தொட்டு சாப்பிட்டு விட்டு திருப்தியாய் தூங்கினர் இரட்டையர்கள்.

Sunday, January 13, 2013

இயேசு ஏன் பிறந்தார்?

ஒரு ஊரை சேர்ந்த மக்கள் வித்தியாசமான ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதை கேள்விப்பட்ட ஒரு புகழ்பெற்ற மருத்துவர்
அந்த நோயை ஆராய்ந்து, நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்தார். தனதுமிகுந்த அலுவல்கள் மத்தியிலும் அந்த மருத்துவர் ஒரு நாளை நியமித்து அன்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். இச்செய்தியைக் கேட்ட ஊரார் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவருக்கு பெரிய அளவில் மரியாதையும் வரவேற்பும் கொடுக்க விரும்பினர். அந்த நாளும் வந்தது. மக்கள் அவரை குதிரையில் ஏற்றி, வீதி வீதியாய ஊர்வலம் வந்து கௌரவப்படுத்தினர். பட்டடாசுகள் வெடித்தனர். பல பிரமுகர்கள் அவரை வாழ்த்திப் பேசி புகழாரம் சூட்டினர். பின் அவருக்கு அறுசுவை உணவுகளை தயாரிப்பதிலும், அவரை கவனிப்பதிலும் மூழ்கிப்போன அந்த மக்கள் அவரிடம் சிகிச்சை பெற கவனம் செலுத்தவில்லை. மாலை வந்தபோது மருத்துவர் அவசர வேலையாக ஊருக்கு திரும்பினார். அவர்களோ தொடர்ந்து நோயாளிகளாகவே இருந்தனர்.
.

இந்த ஜனங்கள் செய்தவை யாவும் நல்ல செயல்கள்தான். ஆயினும் முக்கிய
நோக்கத்திற்கு அவர்கள் முதல் கவனம் செலுத்தவில்லை. இதுப்போலவே
பாவிகளை இரட்சிக்க உலகத்தில் உதித்த இயேசுகிறிஸ்துவின் பிறப்பை
கோடிக்கணக்கானோர் வெகு விமரிசையாக வருடந்தோறும்
கொண்டாடுகிறார்கள். டிசம்பா மாதம் வந்துவிட்டால் விசேஷ
ஆராதனைகள், பாடல் நிகழ்ச்சிகள், வண்ண விளக்குகள், புத்தாடைகள்,
இனிப்பு, விருந்து என கொண்டாட்டத்தின் நாட்களாக அவை மாறி
விடுகின்றன. இன்னும் அநேக இடங்களில் குடித்து கும்மாளமிடுவதும்
கிறிஸ்மஸின் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால்
இயேசுகிறிஸ்து எதற்காக வந்தார்? என் பாவத்திலிருந்து விடுதலையளிக்க
அல்லவா வந்தார். அதை நான் பெற்றிருக்கிருக்கிறேனா என்று அநேகர்
சிந்திப்பதில்லை.
.


பொதுவாக எல்லா மனிதர்களிடமும் பாவம் என்ற கொடிய நோய்
காணப்படுகிறது. அதன் வெளிப்பாடுகள் தான் தவறான சுபாவம், தவறான
இயல்பு. தவறான செயல், தவறான மனநிலை ஆகும். அந்த பொல்லாத
பிசாசின் கிரியைகளை அழித்து, நமக்கு விடுதலையளிக்கவே
இயேசுகிறிஸ்து உலகத்திற்கு வந்தார். அவர் நமது கனத்தையும்,
மரியாதையையும், காணிக்கையையும் பெறுவதை பிரதான நோக்கமாக
கொண்டு பூமிக்கு வரவில்லை, ஒரு விசேஷ செயலை ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் செய்ய வந்தார். அதாவது நமக்குள் இயங்கும் பாவத்தின்
ஆதிக்கத்தை அழித்து அப்புறப்படுத்தவே வந்தார்.

ஜெபம் கேட்கப்படாததன் ஒரு காரணம்

ராஜன் ஒரு உதவியை எதிர்பார்த்து தன் நண்பனுக்கு போன் செய்தான். அநத நண்பர் காவல் துறையிலே உயர்ந்த பதவியில் இருந்தார். ராஜன் தொலைபேசியை எடுத்தான். எண்களை சுழற்றினான். நண்பர் இன்னும் போனை எடுக்கவில்லை. மணி அடித்து கொண்டேயிருந்தது. ராஜன் தனது தேவையை மளமளவென்று சொன்னான். போனை வைத்து விட்டான். மறுநாள் 'ஐயோ நான் அவரிடம் கேட்டேனே அவர் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே' என்று புலம்பினான். ஆனால் அவனோ அவரிடம் பேசவே இல்லை. அவர் மறுமுனையில் போனை எடுக்கவே இல்லை. ஆம் நம்மில் அநேகருடைய ஜெபமும் இப்படித்தான் இருக்கிறது, 'ஆண்டவரே இதுதான் என்னுடைய வேண்டுதல். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்'. ஆண்டவர் அந்த முனையில் போனை எடுக்ககூட இல்லை. இப்பொழுது நீங்கள் தேவனிடம் ஜெபிக்கவில்லை. உங்களிடமே ஜெபித்திருக்கிறீர்கள். 'நான் ஜெபித்து விட்டேன், தேவன் எனக்கு பதில் கொடுப்பார்' என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும் ஜெபங்கள் கேட்க கூடாதபடி சில தடைகள் நம் வாழ்வில் காணப்படுமேயானால், அதை திருத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இயேசுவே வழி

ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டு பகுதிகளில் ஒருவர் சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார். தான் தங்கியிருந்த கூடாரத்தை விட்டு அங்கு வாழும் பழங்குடி மக்களை தேடி சென்றார். அங்கு அவர் தன் ஊழியங்களை நிறைவேற்றி மாலை நேரத்தில் தான் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு திரும்பி வரும்படி புறப்பட்டார். அது எவ்வித பாதையும் இல்லாத காட்டு பகுதியாய் இருந்தபடியால், எந்த வழியாக தன் கூடாரத்தை சென்றடைவது என்று அறியாத அவர் அலைந்து திரிந்தார். மிக ஆபத்தான அக்காட்டுப்பகுதியில் கடைசியாக ஒரு சிறு குடிசை அவர் கண்களில் பட்டது. அது அப்பழங்குடியினரில் ஒருவனது குடிசையாயிருந்தது. அவர் அவனை அணுகி, தன் கூடாரத்திற்கு போகும் வழியை அறிந்து கொள்ள அவன் தனக்கு உதவி செய்யக்கூடுமா என கேட்டார். உடனே அம்மனிதன் அவருக்கு உதவி செய்ய சம்மதித்தான்.
.
அந்த சுவிசேஷகர் அவனுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டு, 'சரி நான் எந்த வழியாக செல்ல வேண்டுமென்று கேட்டார். அம்மனிதன் நடந்து வாரும் என்று சொல்லிவிட்டு, அவருக்கு முன்பாக நடக்க தொடங்கினான. ஒரு மணி நேரம் நடந்த பின்னர் அச்சுவிசேஷகர் மிகவும் களைத்து போனார். அவருடைய இருதயத்தில் அம்மனிதனை பின்தொடர்ந்து சென்று கடைசியில் தன் கூடாரத்தை அடைவது நிச்சயம் தானா என்ற கேள்வி எழுந்தது. எனவே அவர் அம்மனிதனை நோக்கி, 'இவ்வழியாகத்தான் போக வேண்டுமென்று உனக்கு நிச்சயமாக தெரியுமா? எந்த பாதையும் என் கண்களுக்கு புலப்படவில்லையே' என்று கேட்டார். அப்பழங்குடியான் அவரை பார்த்து, 'இவ்விடத்தில் பாதை ஒன்றுமில்லை. நான்தான் பாதை' என்று கூறினான். மிஷனெரி அவனை பின் தொடர்ந்து சென்று கடைசியில் காரிருள் சூழும் முன்பாக தன் கூடாரத்தை சென்றடைந்தார்.

Saturday, December 22, 2012

பொறாமை என்னும் எலும்புருக்கி

சிற்பி ஒருவன் மிக சிறப்பானச் சிலை ஒன்றை செய்து மக்களின் பார்வைக்காக வைத்தான். அதன் அருகில் ஒரு கரும்பலகையையும் வைத்து பார்வையாளர்களின் கருத்தை எழுதும்படி குறித்திருந்தான். பார்த்தவர்கள் அனைவரும் அதன் கலை நுணுக்கத்தை வியந்து பாராட்டி, சிற்பியை புகழ்ந்து எழுதினார்கள். ஆனால் அங்கே இன்னொரு சிற்பி ஒருவன் வந்தான். மனதில் நிரம்பியிருந்த பொறாமை அவனுடைய கண்களை குறை கண்டுபிடிக்க ஏவியது. எனவே பல மணி நேரங்கள் சிலையை மிக கவனமாக சோதித்தான். இறுதியாக அதில் ஒரு குறையை கண்டுபிடித்தான். அந்த சிறிய குறையை பெரிய எழுத்துக்களில் அந்த கரும்பலகையில் எழுதினான். அதன் பின்னர் அங்கே வந்தவர்களெல்லாம் அந்த குறையையே கவனமாக பார்த்தனர். சிலையின் அழகு அவர்களுக்கு தெரியவில்லை.

Thursday, December 20, 2012

அற்பமாய் எண்ணப்பட்டவள் - தேவன் தெரிந்துகொண்டார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாள் வசந்தா. தோற்றத்திலும், பேச்சுத்திறமையிலும் யாருடைய கவனத்தையும் ஈர்க்க இயலாதவள். உலகத்தாரால் ஏன் குடும்பத்தாரால் கூட அற்பமாய் எண்ணப்பட்டவள். ஆனால் ஆண்டவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவளாய், ரூபவதியாய் இருந்தாள். காரணம் கர்த்தருக்கு பயப்படுவதிலும், வேத வசனங்களுக்கு கீழ்ப்படிவதிலும் அவ்வளவு உண்மையாய் காணப்படுவாள். ஒரு அலுவலகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது. அவளது அப்பாவித்தனத்தினிமித்தம் அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாள். அவர்கள் தங்கள் வேலையையும் அவ்வப்போது வசந்தாவின் தலையில் கட்டிவிடுவர். எதுவுமறியாத வெகுளியாக அதையும் முகமலர்வோடு செய்து முடிப்பாள்.
.
அவளுடைய திருமணக்காரியமும் ஒரு எட்டாக் கனியாகவே இருந்தது. இதனிமித்தம் வீட்டிலுள்ளவர்களுக்கு அவள் பாரமாகவே இருந்தாள். பெண் பார்க்க வந்த மாப்பிளளை; வீட்டாரும் அவளது வெளித்தோற்றத்தை வைத்து விலகிச் சென்றனர். ஆனால் மனிதன் பார்க்கிறபடியல்ல, இருதயத்தை பார்க்கிற தேவன் அவளுக்கு யாரும் எதிர்பாராத, பிரகாசமான வாழ்வை கொடுத்தார். அந்த மணமகன் கர்த்தருக்கு பயப்படுகிறவராய், அவளது உள்ளான அழகில் பிரியப்படுகிறவராய்,வெளித்தோற்றத்தையும் முழு மனதாய் ஏற்றுக் கொள்கிறவருமாய் அமைந்தார். இன்றும் அவர்கள் மனமகிழ்வோடு குடும்பமாய் வாழ்கிறார்கள்.
.
இந்த உலகத்தாரின் பார்வையில் அற்பமயாய் எண்ணப்படுபவர்கள் யாரோ, அவர்களை தூசியிலிருந்தும், குப்பையிலுமிருந்து எடுத்து அவர்ளை உயர்த்துவது தேவனுடைய உன்னத திட்டமாகும். காரணம் ஞானிகளும், பலமுள்ளவர்களும் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படி செய்தார் (1 கொரிந்தியர் 1:26-31) என்றுவேதம் கூறுகிறது. உலகம் ஞானமுள்ளவர்களை, கல்விமான்களை, பெலமுள்ளவர்களை, திறமையானவர்களை, அழகானவர்களை தெரிந்தெடுத்து பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்கிறது. இது உலகத்தின் தெரிந்தெடுப்பு.

Saturday, December 15, 2012

தேவனுடைய பார்வையில் ஐசுவரியவான்

செல்வந்தனான மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான கார்களும், பெரிய மாளிகையும், அநேக வீட்டு வேலைக்காரர்களும் இருந்தார்கள். அந்த மனிதன் கடவுளைக் குறித்து எந்த பயமும் இல்லாதவராக, தன் பணத்தை தன் இஷ்டப்படி அனுபவித்து கொண்டிருந்தார்.
.
அவருக்கு ஜான் என்கிற ஒரு கிறிஸ்தவ வேலைக்காரன் இருந்தார். அவர் வேதத்தை வாசித்து, தினமும் ஜெபித்து கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிற மனிதனாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவருக்கு தேவன், அந்த ஊரில் உள்ள பணக்கார மனிதன் மரிக்க போகிறான் என்று வெளிப்படுத்தினார்.
.
ஜானுக்கு தெரியும், அந்த ஊரிலேயே மிகவும் பணக்கார மனிதர் தன் எஜமான்தான் என்று. அவருக்காக ஜெபித்து விட்டு, அந்த பணக்காரரிடம் சென்று, 'ஐயா இன்று நான் ஒரு கனவு கண்டேன், அது என்னை மிகவும் கலங்க வைத்திருக்கிறது. இந்த ஊரில் உள்ள பணக்காரர் இன்று இரவு 12 மணிக்கு மரிக்க போகிறார் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். உடனே நான் எழுந்து விட்டேன். ஐயா நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?' என்று மிகவும் அக்கறையுடன் கேட்டபோது, ஜானை அந்த பணக்காரர் மேலும் கீழும் பார்த்தார். ஏழ்மையான தோற்றம், பணக்காரரிடம் பேசுவதற்கும் அச்சப்பட்டு பேசினது போலிருந்தது அவருடைய சத்தம், ஆனால் நம்பத்தக்கதான அளவு விசுவாசம் நிறைந்த மனிதர். பணக்காரர் சிரித்து விட்டு, சொன்னார், 'ஜான் என்னைப் பற்றி கவலைப்படாதே, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்' என்று கூறிவிட்டு, வீட்டின் உள்ளே சென்று விட்டார்.
.
சற்று நேரம் அங்கே நின்று, கர்த்தரை இவர் ஏற்றுக் கொண்டுள்ளாரா? ஓன்றும் தெரியவில்லையே என்று நினைத்தவாரே, ஜான் அவருக்காக ஜெபித்து விட்டு, தேவன் ஏன் தனக்கு இந்த காரியத்தை வெளிப்படுத்தினார் என்று யோசித்தவாறே தன் வீட்டிற்கு சென்றார். பணக்காரருக்கோ, ஜான் சொன்ன காரியம் உறுத்திற்று. சரி, குடும்ப வைத்தியரை அழைத்து, தன்னை பரிசோரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்த வைத்தியரை அழைத்தார்.
.
அந்த வைத்தியரிடம் காரியத்தை சொல்லி, இரவு 12 மணி வரை அவரை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவராக, அவரோடு சீட்டு விளையாடிவிட்டு, உலகத்தின் காரியங்களை சுற்றி வலம் வந்து பேசி கொண்டிருந்தபோது, 12 மணியாக ஐந்து நிமிடம் இருந்தது. அந்த கடைசி ஐந்து நிமிடங்கள் அந்த பணக்காரரை இருப்புக் கொள்ளாமல் செய்தது.
.
மூன்று நிமிடம், இரண்டு நிமிடம், கடைசியாக ஒரு நிமிடமும் கடந்து, கடிகாரம் 12 அடித்தது. அந்த பணக்காரர் நிம்மதி பெருமூச்சு விட்டார். தான் சாகவில்லை என்ற உணர்வு அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன்னோடு இருந்த வைத்தியருக்கு விடைக் கொடுத்து அனுப்பி விட்டு, தன் படுக்கைக்கு சென்று படுத்திருப்பார், வீட்டு வாசலின் மணி வேகமாக அடித்தது. யார் இந்த நடுராத்திரியில் வந்து கதவை தட்டுவது என்று நினைத்தவராக, கதவை திறந்தபோது, ஒரு சிறுமி, கலைந்த தலையுடனும், ஏழ்மையான உடைகளுடனும், அழுது சிவந்த கண்களோடு நின்றிருந்தாள்.
.
பணக்காரர், 'யார் நீ? உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார், அதற்கு சிறுமி, 'என் தகப்பனார் சற்று நேரம் முன்புதான் இறந்தார்' என்று கூறினாள். அந்த பணக்காரர் 'யார் உன் தகப்பன்?' என்று கேட்டபோது, அந்த சிறுமி, 'உங்கள் வீட்டில் வேலை செய்யும் ஜான்தான் என் அப்பா' என்று கூறினாள். ஜான் தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தபடியால், அவரே தேவனுடைய பார்வையில் ஐசுவரியவானாக, விலைமதிப்பற்றவராக காணப்பட்டார்.

வெள்ளிகாசு உவமை - கலாச்சாரம்

மேற்கண்ட உவமையில், ஒரு வெள்ளிகாசு காணாமற்போனபோது அந்த பெண் ஜாக்கிரதையாக தேடுவதைக் காண்கிறோம். நாம் நினைக்கலாம், என்ன ஒரு வெள்ளிக்காசுதானே என்று. ஆனால் இயேசுகிறிஸ்து வாழ்ந்த அந்நாட்களில், அத்தேசத்தில் இருந்த கலாச்சாரத்தை நாம் பார்க்கும்போது, அது எவ்வளவு முக்கியமானது என்று விளங்கும்.
.
ஒரு பெண்ணை திருமணம் செய்தப்பின் கணவன், அப்பெண்ணுக்கு பத்து வெள்ளிக்காசுகளால் ஒரு செயினை போல செய்து, அதை அப்பெண்ணிடம் கொடுத்து, தங்கள் திருமணத்தை உறுதி செய்வான். அதை அந்த பெண் தன் நெற்றியில் அணிந்து கொள்வாள். இக்காலத்தில் கைகளில் மோதிரம்போடுவதை போன்று, அக்காலத்தில் கல்யாணம் ஆன பெண்கள் அந்த வெள்ளிக்காசை தங்கள் நெற்றிகளில் அணிந்து கொள்வார்கள். அதில் ஒரு வெள்ளிக்காசு காணமற்போனால் அது அவள்தன் கணவனுக்கு துரோகம் செய்ததாக கருதப்படும். ஆகையால், ஒரு வெள்ளிக்காசு காணாமற் போகும்போது, அப்பெண் தன்னுடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு எப்படியாவது அந்த வெள்ளிக்காசை தேடி கண்டுபிடித்து தன் திருமணத்தை காப்பாற்ற முயலுவாள். அதை கண்டுபிடிக்கும் வரைக்கும் அவளுக்கு வேறு எதுவும் ஓடாது. ஏனெனில் அவளுடைய நடத்தையை குறித்தே சந்தேகம் வரும்பட்சத்தில் அவள் அதை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடுவாள் அல்லவா? கண்டுபிடித்தபின், அதை மீண்டும் தன் நெற்றியில் உள்ள செயினில் கோர்த்து, நிம்மதி பெருமூச்சுடன் மகிழ்வாள். அதைதான் இயேசுகிறிஸ்து உவமையாக, கண்டுபிடித்தபின்பு தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் என்று கூறினார்.

Monday, December 10, 2012

நன்றியோடு இருக்க வேண்டாமா?

ஒரு குருடனான சிறுவன் முக்கியமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தான். அவனுக்கு பக்கத்தில் ஒரு போர்டில் 'நான் குருடனாயிருக்கிறேன். எனக்கு உதவுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகே சிலர் போட்ட நாணயங்கள் சிதறி கிடந்தது.
.
அந்த வழியாக ஒரு மனிதன் கடந்து போனார். அப்போது சில நாணயங்களை எடுத்து அவன் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டு விட்டு, அந்த சிறுவனின் பக்கத்தில் இருந்த போர்டில் சில எழுத்துக்களை எழுதினார்.
.
சற்று நேரத்தில் அவனது பாத்திரம் நாணயங்களால் நிரம்ப ஆரம்பித்தது. சிலர் நின்று அவனுக்கு பணத்தை கொடுத்து சென்றார்கள். சாயங்கால வேளையில் அந்த போர்டை மாற்றி எழுதின மனிதர் என்ன நடக்கிறது என்று அறிய வந்தார். அவரது காலடி சத்தத்தை கேட்டு, அவர்தான் என்று அறிந்த சிறுவன், 'ஐயா நீர் யார்? நீர் என்ன எழுதினீர்? எனக்கு பணம் குவிகிறதே' என்று கேட்டான்.
.
அதற்கு அவர், 'நான் உண்மையைதான் எழுதினேன், நீ எழுதினதையே சற்று மாற்றி எழுதினேன்' என்றார். அதற்கு சிறுவன் 'என்னதான் எழுதினீர்கள் சொல்லுங்கள்' என்றான். அதற்கு அவர், 'இந்த நாள் இனிய நாள், அழகு மிகுந்த நாள், என்னால்தான் அதை பார்க்க முடியவில்லை' இதைத்தான் நான் எழுதினேன் என்றார்.
.
முதலாவது எழுதியிருந்த பலகையில் நான் குருடன் எனக்கு உதவுங்கள் என்று மாத்திரம் எழுதியிருந்தது. ஆனால் மற்றதிலோ இதை காணும் மக்களாகிய நீங்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள், எனக்கு அந்த பாக்கியம் இல்லையே என்று மக்களை அவர்களது பாக்கியத்தை உணர வைத்தது.

கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள்

ஒரு சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான். அவன் முகம் மிகவும் கோபமாக இருந்தது. அதை கண்ட அவனுடைய தாத்தா அவனை அழைத்து 'என்ன நடந்தது? ஏன் கோபமாய் இருக்கிறாய்' என்று கேட்டார். அதற்கு அவன், 'பின்ன என்ன தாத்தா? நானும் அப்பாவும் கடைக்கு போயிருந்தோம். அப்பா எனக்கு ஒரு ஏரோபிளேனை விளையாட வாங்கி தந்தார். நான் அதை வெளியில் எடுத்து கொண்டு போய் பார்த்து கொண்டிருந்தபோது, சில பொறுக்கி பசங்க என்னோடு சண்டையிட்டு, நான் அப்பாவை கூப்பிடுவதற்குள் அதை பறித்து கொண்டு போய் விட்டார்கள். அவன்கள் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால்...' என்று கோபமுடன் கூறினான். அதை கேட்டு கொண்டிருந்த தாத்தா, ' நீ கோபப்பட்டு இப்போது என்ன ஆகப் போகிறது? உன்னுடைய ஏரோப்ளேன் போனது போனதுதான். அது கிடைக்க போகிறது இல்லை, உனக்கு தெரியுமா, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு நரிகள் எப்போதும் இருக்கின்றன. ஓன்று வெள்ளை நரி, மற்றொன்று கறுப்பு நரி. இந்த இரண்டு நரிகளும் எப்போதும் சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. வெள்ளை நரி, போனால் போகட்டும் என்று கூறும், அன்போடு நடந்து கொள்ளும்படி கூறும். ஆனால் கறுப்பு நரி, அது எப்படி, அதை சும்மா விடுவது என்று அதிகமாக வம்பை வளர்த்து கொண்டிருக்கும்' என்று கூறினார். அப்போது அந்த சிறுவன், 'எந்த நரி ஜெயிக்கும்' என்று கேட்டான். அதற்கு தாத்தா, 'எதற்கு நாம் அதிகமாய் தீனி போடுகிறோமோ அதுதான்' என்றார்.