Showing posts with label பாடல் பிறந்த கதை. Show all posts
Showing posts with label பாடல் பிறந்த கதை. Show all posts

Friday, June 6, 2014

காரிருளில் என் நேச தீபமே - பாடல் பிறந்த கதை

காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்,
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்
.
மேற் கண்ட வரிகள் ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய பாடலின் முதற்கவி ஆகும். இந்த நான்கு வரிகளை மீண்டுமொருமுறை கருத்தாய் வாசியுங்கள். உன்னத கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு அற்புத சத்தியம் இதில் அடங்கியுள்ளது. காரிருள்போல தோன்றும் வாழ்க்கiயின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். இன்றைய நாட்களில் விசுவாசிகள் அநேகர் தீர்க்கதரிசனமுள்ளவர் என யாரையாவது குறித்து கேள்விபட்டால் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இது அநேக நேரங்களில் அஞ்ஞானிகள் குறி கேட்பது போல ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பாடலின் கருத்து நம் வாழ்க்கைக்கு மிகமிக அவசியாமானது. நாளைய தினத்தை கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், இன்றைய தினத்திற்கான கிருபையை மட்டும் சார்ந்து வாழ நாம் கற்று கொள்வது அவசியம்.
.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவருடைய கரத்தில் நமது காலங்களும் நமது வாழ்க்கையும் இருப்பதால், அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்போது, நம்மை யாரும், எதுவும் நிச்சயமாக அசைக்க முடியாது.
.
இந்த பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம். 1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது.
.
அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம்.

Thursday, April 11, 2013

சருவ லோகாதிபா, நமஸ்காரம் - பாடல் பிறந்த கதை


சருவ லோகாதிபா, நமஸ்காரம்...
சருவ லோகாதிபா, நமஸ்காரம்! சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்! தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம்.
 இந்த அருமையான துதிப் பாடலை எழுதிய  அருள்திரு. வேதமாணிக்கம்,
1864-ம் ஆண்டு கல்லுக் கூட்டத்தில், மதுரநாயகம். - தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20-வது வயதில், வேதமாணிக்கம் மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.

 வேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு  அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன் இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது. ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.

சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பட பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார். தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். இந்நிகழ்ச்கிகளில் பாட, “சுவிசேஷப் படையெழுச்சிக் கீதங்கள்,” என்ற 16 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தை வெளியிட்டார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார்.
ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்களையும், கதாகாலட்சேபங்களையும் நடத்தி வந்தனர். வெள்ளி, மற்றும் ஞாயிறு இரவு ஜெபக் கூட்டங்கள் வாத்தியக்கருவிகளுடன் பாட்டுகள் முழங்க நடைபெற்றன. 1917-ம் ஆண்டு மே  மாதம் 8-ம் தேதி, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில், 10-5-1917 அன்று, தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப
காலமல்லோ,” “ஜீவ வசனம் கூறுவோம்,”
என்ற பாடல்களும், திருச்சபைக்
கீர்ததனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் - பாடல் பிறந்த கதை

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்...


இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்


இந்த பாடல் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இப்பாடல் ஒரு இரத்தசாட்சி தன் மரண தருவாயில் இயற்றிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரியத்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் கதை இது. 
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஜெர்மனி போன்ற தேசங்களிலிருந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்காக பலர் வந்தனர். அவர்களில் வெல்ஷ் தேச மிஷனெரி ஒருவர் வடகிழக்கு இந்தியாவில் ஒரு கிராமத்தில் இரு பிள்ளைகளடங்கிய ஒரு சிறிய குடும்பத்தை ஆண்டவருகாக ஆதாயப்படுத்தினார். கிறிஸ்தவராக மாறிய அந்த மனிதனின் விசுவாசம் அந்த கிராமத்திலுள்ள மற்றவர்களையுயும் அசைத்தது. இதனால் கோபமடைந்த அந்த கிராமத்தலைவர் எந்த கிராமத்திலுள்ளவர்கள் எல்லாரையும், அந்தக் கிறிஸ்தக் குடும்பத்தையும் கூட்டி " நீங்கள் எல்லாருக்கும் முன்பாக உங்கள் விசுவாசத்தை விட்டு விலகுங்கள்- இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் " என் எச்சரித்தான்.
அச்சமயத்தில் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அந்த மனிதன் ஒரு பாடலை இசைத்துப் பாடினார்,
" இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் (மூன்று முறை)
I have decided to follow Jesus
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்"
No trning back No turuning back

இதனால் கடுங்கோபமுற்ற அந்தக் கிராமத்தலைவன் அந்தக் கிறிஸ்தவனின் இரு பையன்களையும் கொல்லுமாறு தன் வில்வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அந்த இரு சிறுவர்களும் வில் அம்பினால் குத்தப்பட்டு கீழே விழுந்து கிடக்கையில்,அந்த கிராமத்தலைவன் அக்கிறிஸ்தவனை நோக்கி," இப்போதாவது நீ உன் விசுவாசத்தை விட்டு விட மாட்டாயா? பார் உன் இரு பையன்களும் நீ இழந்து விட்டாய். நீ உன் விசுவாசத்தை விட்டு விலகா விட்டால் நீ உன் மனைவியையும் இழந்து விடுவாய்" என கர்ஜித்தான்.அப்போது அந்த மனிதன்,

யாரில்லயெனினும் பின் தொடர்வேனே (மூன்று முறை)
Though no one joins me still i will follow
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
No turning back No turning back
என்று பாடினார்.

கடுங்கோபமுற்ற கிராமத்தலைவன் அவனுடைய மனைவியையும் கொல்ல உத்தரவிட்டான். ஒரு சில நிமிடங்களில் அவனுடைய மனைவியும் தன் இரு பிள்ளைகளைச் சாவில் சந்தித்தாள். கடைசியாக அந்த கிராமத்தலைவன், " நீ உயிர் பிழைப்பதற்கு ஒரு கடைசி தருணம் தருகிறேன், இப்போது இந்த உலகத்தில் உனக்கென்று யாருமே இல்லை. என்ன சொல்கிறாய்?" என்று வினவினான்.
அந்த கிறிஸ்தவ மனிதன் காலத்தால் அழியாத கடைசி கவியைப் பாடினான்:
"சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே
The Cross before me The World behind me
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
No turning back No turning back

இந்த மனிதனுடைய மரணத்தோடு கிறிஸ்தவம், நம் கிராமத்தில் ஒழிந்து விடும் என்று அக்கிராமத்திலுள்ள எல்லாரும் நினைத்தனர். ஆனால் அந்த மனிதனின் மரணம் ஒரு துவக்கமே. பரிசுத்த ஆவியானவர் அங்குள்ளவர்களின் மனதில் கிரியை செய்தார். இந்த மனிதன்,அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் 2000 வருடங்களுக்கு முன் வேறொரு தேசத்தில் வாழ்ந்து மரித்த ஒரு மனிதனுக்காக ஏன் மரிக்கவேண்டும்?" என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்ட அந்தக் கிராமத்தலைவன், " அந்தக் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு இயற்கைக்கப்பாற்பட்ட அற்புத சக்தி இருந்திருக்க வேண்டும். நானும் அந்த அற்புதத்தை பெற விரும்புகிறேன்" என்று தன் மனதில் நினைத்தான்.

உடனடியாக தன் விசுவாசத்தை அறிக்கையிட்ட அந்த கிராமத்தலைவன், " நானும் கிறிஸ்துவைச் சேர்ந்தவன் தான்" என்று கூறினான். தங்கள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட அந்த கிராமத்தவர்கள் அனைவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் யாரில்லயெனினும் பின் தொடர்வேனே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் சிலுவை என் முன்னே உலகம் என் பின்னே (மூன்று முறை) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

சந்தோஷம் பொங்குதே - பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே...

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
.....................

DME படிப்பை வெற்றியுடன் முடித்து, தன் விடுமுறை நாட்களைக் கழிக்கத் தன் அக்கா வீட்டிற்குச் சென்றான், 20-வயது நிரம்பிய வாலிபன் மைக்கேல். அக்காவின் கணவர் மறைத்திரு. D. Williams பட்டுக்கோட்டை CSI ஆலயப் போதகர். அந்நாட்களில் பிரதரன் அசெம்பிளி ஊழியர்கள் பாண்டிச்சேரியிலிருந்து அங்கு வந்து உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். மிஷினரி ஜான் கொடுத்த தேவசெய்தியின் மூலம் ஆவியானவர் பேச, 18.9.1969 அன்று மைக்கேல் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.

பின்னர் மைக்கேல் வேலையிலமர்ந்த போது, ஆண்டவரின் அழைப்பைத் தன் உள்ளத்தில் உணர்ந்தார். எனவே, அவருடைய ஊழியம் செய்ய, 1971-ம் ஆண்டு இந்திய இல்லந்தோறும் நற்செய்தி இயக்கத்தில் முழுநேரப் பணியாளனாகச் சேர்ந்தார். 1972-ம் ஆண்டு இவ்வியக்கத்தின் முன்னோடி மிஷனரியாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஹரூர் சென்றார். அங்கிருந்த சிலோன் இந்தியப்பொது மிஷன் ஆலயத்தை மையமாகக் கொண்டு இல்லந்தோறும் நற்செய்தியை அறிவித்தார்.

அந்நாட்களில் அத்திருச்சபையின் ஞாயிறுபள்ளிப் பொறுப்பும் மைக்கேலிடம் கொடுக்கபப்பட்டது. அந்த ஞாயிறு பள்ளிப் பிள்ளைகள் உற்சாகமாகப் பாடுவதைப் பார்த்து, அவர்களுக்குத்தான் அறிந்த பாடல்களைக் கற்றுக் கொடுக்க முயன்றார். ஆனால் அவையனைத்தும் அப்பிள்ளைகளுக்கு முன்னரே தெரிந்திருந்தது. எனவே, அப்பிள்ளைகளை உற்சாகப்படுத்த, புதுப்பாடல்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.

இந்நிலையில் தனது இரட்சிப்பின் அனுபவத்தையே தன் சாட்சிப் பாடலாகவும், அப்பிள்ளைகளுக்கு சவால் அழைப்பாகவும் இருக்க எண்ணி, இப்பாடலை இயற்றினார்.

பிள்ளைகள் புரிந்து பாடக்கூடிய எளிய நடையில் எழுதப்பட்;ட இப்பாடலின் 4 சரணங்களையும் சகோதரர் மைக்கேல் ஒரே நாளில் இயற்றி முடித்தார். இப்பாடலின் ராகத்தையும் அவரே அமைத்தார். அடுத்த ஞாயிறே, மைக்கேலின் ஆர்மோனியப் பின்னிசையுடன் ஞாயிறு பள்ளியில் இப்பாடல் அரங்கேற்றமானது. இந்த உற்சாகப் பாடலின் மூலம், பிள்ளைகள் இரட்சிப்பின் சந்தோஷத்தை அறிந்து கொண்டனர்.

பின்னர்IEHC-ன் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களில் மிஷனரிகள் இப்பாடலைப் பாடினர். 1974-ம் ஆண்டு IEHC நாகர்கோவில் பகுதிகளில் தங்கள் நற்செய்திப் பணியைச் செய்து வந்தனர். அக்குழுவில் IEHC-ன் முக்கிய பாடகரான சகொதரர் டி.தேவ பிச்சை முன்னோடி மிஷனரியாக இருந்தார். அந்த ஆண்டின் CSI திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களின் பாடல் பொறுப்பாளர் புதுப்பாடல்களைத் தேடி தேவபிச்சையிடம் வந்தார். சகோதரர் தேவபிச்சை அவருக்குப் பாடிக்காட்டிய பாடல்களில் இப்பாடலும் ஒன்று. இப்பாடலைத் தெரிந்தெடுத்து திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களில் பாடினர்.

பின்னர் 1975-ம் ஆண்டு, ஆசீர்வாத இளைஞர் இயக்க பிளெஸ்ஸோ முகாமிலும் இப்பாடல் பாடப்பட்டு பிரபலமானது. இதற்கு திருச்சி இசைவல்லுரனராக திரு. கூலிங் இசை அமைத்து, பிரபல பாடகியான திருமதி பாரதி பாடலைப் பாடவைத்து, பதிவு செய்து, இசைத் தட்டில் வெளியிட்டார். இதின் மூலம் இப்பாடல் பலருக்கும் அறிமுகமானது.

இப்பாடலின் வார்த்தைகளை ஆராய்ந்த நிபுணர்கள், “நானோ பரலோகத்தில்’ என்ற வரி சுய நல நோக்கை வெளிப்படு;த்துகிறது,’’ எனக் கருத்துத் தெரிவித்தனர். பாடலைக் கேட்பவரின் ஆசையைத் து}ண்டி, அவர்களையும் இவ்வரிக்கு உரிமையாளர்களாக மாற்றுவதே தன் எண்ணமாயிருந்தது, என சகோதரர் மைக்கேல் தெளிவுபடுத்துகிறார்

இயேசு அழைக்கிறார்... இயேசு அழைக்கிறார்... பாடல் பிறந்த கதை

இயேசு அழைக்கிறார்...

மத்தேயு 11:28
பாடல் : F.J. செல்லத்துரை

ராகம் : F.J. செல்லத்துரை.


சென்னை மெரினா கடற்கரை!

கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர் ! வியாதியுற்றோர், பிள்ளைப் பேறற்றோர், வேலை தேடி சோர்வுற்றோர், பிரச்சனைகளில் சிக்குண்டோர், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து, ஆறுதலின்றித் தவிப்போர், என, எண்ணற்ற தேவைகள், ஏக்கங்கள் நிறைந்த அக்கூட்டத்தில் தேவ செய்தியளிக்க வருகிறார் சகோதரர் அறிவர் D.G.S.தினகரன் !

இசைக்குழு மென்மையாய் இசைக்க, தனக்கு விருப்பமான இப்பாடலை இனிமையான குரலில் பாடுகிறார். தேற்றரவாளனாகிய து}ய ஆவியானவரின் பிரசன்னம் மைதானத்தை நிரப்புகிறது. ஆறுதலும், அற்புத சுகமும் ஆண்டவரிடமிருந்து அநேகர் பெற்று நன்றியுடன் தோத்தரிக்கின்றனர் !

உலகின் பல நாடுகளில், பல பட்டணங்களில் வல்லமை நிறைந்த அற்புத ஊழியத்தை தேவ பெலத்துடன் செய்துவரும் சகோதரர் தினகரனின் நற்செய்திப் பணிக்கு, அவர் தெரிந்து கொண்ட தலைப்பு, “இயேசு அழைக்கிறார்” ஊழியங்கள் !.

ஆம்! தேவ ஆசீர்வாதம் நிரம்பிய இவ்வூழியங்களுக்குப் பெயர் கொடுத்த இப்பாடலை சகோதரர் தினகரனே அவரது நற்செய்திக் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார். இப்பாடலைக் கேட்கும் எவரும் சகோதரர் தினகரனையும் அவரது அற்புத ஆறுதல் ஊழியங்களையும் நினைவுகூருமளவிற்கு, இப்பாடல் அவரோடு ஒன்றிவிட்டது. எனவே, அவரோடு இவ்வாறு நெருக்கமாக இணைந்த இப்பாடலை இயற்றியது அவரே என அநேகர் எண்ணியதில் வியப்பொன்றுமில்லை. இதினால், சகோதரர் தினகரனே இப்பாடலாசிரியரைத் தன் நற்செய்திக் கூட்டங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இயேசுவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எளிய வார்த்தைகளுடன் அறிய உதவும் இப்பாடலை எழுதியவர் சகோதரர் கு.து. செல்லத்துரை ஆவார். இவர் ஜோதி-சைமன் தம்பதியருக்கு 26.08.1936 அன்று அரக்கோணத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அரக்கோணத்தில் முடித்து, பின்னர் சென்னையில் கல்லு}ரித் துவக்க வகுப்புவரை தொடர்ந்தார்.

சகோதரர் செல்லத்துரை 1972-ம் ஆண்டு ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். திருச்சபை மறுமலர்ச்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல திருச்சபைகளில் வேதபோதனை செய்தார். 02.07.1973 அன்று திருமணமான இவருக்கு ஒரு ஆண்மகனும், இரு பெண்பிள்ளைகளும் உண்டு. குடும்பமாக ஊழியத்தைத் தொடர்ந்த செல்லத்துரையை ஆவியானவர் பெலப்படுத்தி, பல பாடல்களுக்கான ராகங்களைத் தந்தார்.

மேனாட்டிசையில் அடிப்படைப் பயிற்சிபெற்ற சகோதரர் செல்லத்துரை ஒரு பாடகர் குழுவை அமைத்து பல நற்செய்திக் கூட்டங்களில் பாடல் ஆராதனையை முன்னின்று நடத்தினார். அக்கார்டியன், மவுத் ஆர்கன்;, மேண்டலின், மற்றும் கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றவர். நற்செய்திக் கூட்டங்களில் பாடுவதற்கென தமிழிலும், தெலுங்கிலும் சேர்;ந்து மொத்தம் 150 பாடல்களை இயற்றி, ராகம் அமைத்திருக்கிறார்.

சகோதரர் செல்லத்துரை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செக்கந்திராபாத்தை மையமாகக் கொண்டு தனது ஊழியத்கைதத் தொடர்ந்தார். 1975-ம் ஆண்டு, ஒரு முறை அவர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இப்பாடலின் ராகத்தைதத் தந்தார். ராகத்திற்கேற்ற ஆறுதல் வார்த்தைகளுடன் இப்பாடலை இயற்றி, செக்கந்திரபாத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் முதன்முறையாகப் பாடினார். அப்போது கூட்டத்தில் அனைவரும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தனர். அன்றுமுதல் இப்பாடல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், அற்புத சுகத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொடுத்து வருகிறது.

எமில் ஜெபசிங் - ஜீவிக்கிறார் ! இயேசு ஜீவிக்கிறார் - பாடல் பிறந்த கதை

ஜீவிக்கிறார் ! இயேசு ஜீவிக்கிறார்!...

அந்த நற்செய்திக் கூட்டத்தில் சலசலப்பு! சிறப்புச் செய்தியாளர் இன்னும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டத்தைப்போல, “பிரசங்கியார் இதோ வந்துகொண்டே இருக்கிறார்!” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தாயிற்று. இப்போது கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்துவது? பாடுவதற்கு சிறப்புப் பாடல் கைப்பிரதியும் அச்சடிக்கவில்லை.

சமயோசித புத்தியுள்ள போதகர் மேடையில் எழுந்து வந்தார். “இப்போது நாம் ஆண்டவரைத் துதித்துப் பாடப் போகிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த சில பாடல்களைப் பாடுவோம்.” என்று கூறி, “மகிழ்வோம், மகிழ்வோம்….” எனப் பாட ஆரம்பித்தார். கூட்டத்தினரும் உற்சாகமாக இருகரம்தட்டி உற்சாகமாய்ப் பாடினர். அதைத்தொடர்ந்து, “அல்லேலூயா கர்த்தரையே, ஏகமாகத் துதியுங்கள்,” மற்றும், “இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்,” “பரிசுத்தர் கூட்டம் நடுவில்,” “ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் !” எனப் பாடல்கள் முழங்கின. செய்தியாளர் தாமதமாய் வந்த குறையை, ‘அப்பாடல் நேரம்’ நிறைவாக்கிற்று.

இப்படி, கிறிஸ்தவத் தமிழ் உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை, எல்லோருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்து, எல்லோராலும் உற்சாகமாய்ப் பாடப்படும் பல பாடல்களை இயற்றியவர், அகில உலக வானொலி ஊழியத்தின் தென் ஆசிய இயக்குனர், சகோதரர் எமில் ஜெபசிங் ஆவார். இந்திய தேசத்தின் மிகச் சிறந்த மிஷனரி இயக்கமாகத் திகழும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை வித்திட்டு, உரமிட்டு, வளர்த்திட்ட ஆதிகாலத் தலைவர்களில் இவரும் முக்கியமானவர். “பாடலென்றால் எமில்” என்று கூறுமளவிற்கு, இவ்வியக்க மக்கள் உற்சாகமாய்ப் பாட வழிவகுத்தவர். அழிந்து போகும் கோடிக்கணக்கான இந்தியர் மீதான இவரது உள்ளத்தின் ஆத்தும பாரம், இவரது பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் தொனிக்கும். இனிமையான ராகங்கள் இவரது பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் “பரிசுத்த பூமி” என, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959-ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும், மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப்பாடி, அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி, இப்பாடலை நேரடியாகக் கரும்பலகையில மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது.

“பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார் ! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ! சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் ! அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் !” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே,” என்ற ஆவியானவரின் பதில், வேதத்தின் அற்புதங்களைச் சிந்திக்கத் து}ண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம், என, பல அற்புதங்களை, ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும்பலகையில் பாடலாக உருவானது.

இப்பாடலை, கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர். அப்பெரிய வெள்ளிக்கிழமையானது, உயிர்த்தெழுந்து, சதா காலமும் ஜீவித்தரசாளும் மகிமை நிறை ஆண்டவரை, அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.

Monday, April 8, 2013

இயேசுவையே துதிசெய் - நீ மனமே இயேசுவையே துதிசெய் - பாடல் பிறந்த கதை

வேதநாயம் சாஸ்திரியார்
தஞ்சாவூரின் மன்னராக சரபோஜி அவர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். அவருடைய பள்ளித்தோழனாகிய வேதநாயம் சாஸ்திரியார் அவர்கள் கிறிஸ்தவராக இருந்தபோதிலும், சபையின் கவியாக இருந்தார். அவர் எப்போதும் கிறிஸ்துவை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தபடியால், அவர் மேல் பொறாமை கொண்ட அந்த அவையின் மற்ற கவிஞர்கள் மன்னரிடம் ஒரு நாள், தங்கள் இஷ்ட தெய்வத்தை பாடும்படி சாஸ்திரியாருக்கு பணிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அடுத்த நாள் அந்த தெய்வத்தின் நாளாக இருந்தபடியால் அந்த நாளன்று அவர் அவையில் அந்த தெய்வத்தை புகழ்ந்து பாட வேண்டும் என்று இராஜாவின் மூலமாக கட்டளை பிறந்தது.
.
அதைக் கேட்ட சாஸ்திரியார் திடுக்கிட்டுப் போனார். இதுவரை இந்த மாதிரியான சந்தர்ப்பம் நேரிட்டதில்லையே, காத்தரை துதிக்கும் வாயால் நான் எப்படி மற்ற கடவுளை புகழ முடியும் என்று வருத்தத்தோடே தன் வீட்டிற்கு சென்றார். அவர் வருத்தமாய் இருந்ததை கவனித்த அவருடைய மனைவி, என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அதற்கு அவர் நடந்ததை சொன்னார். ஆதற்கு அவர்கள், நம்முடைய உயிரே எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இந்த இடத்தை விட்டு நம்மை வெளியே போகச்சொல்லி தள்ளிவிட்டாலும் என்ன நடந்தாலும், கர்த்தரை பாடின இந்த வாயால் நீங்கள் ஒருபோதும் மற்ற தெய்வத்தை புகழக்கூடாது என்று அவரிடம் கூறினார்கள். இருவரும் ஒன்றாக இணைந்து ஜெபித்து விட்டு, அவர் படுக்க சென்றார்
.
அடுத்த நாள் அவையில் மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. சாஸ்திரியார் என்ன பாட்டுப்பாட போகிறார் என்று கேட்பதற்காக.
ல்லாரும் சூழ நின்று பார்த்திருக்க, மன்னர் அவரையே நோக்கி கொண்டிருக்க, எல்லாரும் வியக்கும்வண்ணம், இன்றும் காலத்தால் அழியாத சுவையான, இனிமையான அந்த பாடலை தைரியமாய் தன்னுடைய கணீர் குரலால் கிறிஸ்துவை உயர்த்தி பாட ஆரம்பித்தார்:
.
இயேசுவையே துதிசெய் - நீ மனமே
இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே துதிசெய்
நீ மனமே இயேசுவையே துதிசெய்
.
மாசணுகாத பராபர வஸ்து
நேசக்குமாரன் மெய்யான கிறிஸ்து
இயேசுவையே துதிசெய் நீ மனமே
இயேசுவையே துதி செய்

என்று தொடர்ந்து மூன்று அடிகளை மனமுருக பாடி முடித்தார். உன்னிப்பாக
கேட்டுக் கொண்டிருந்த மன்னரிடமிருந்து, முதலாவது கைத்தட்டல்
ஆரம்பித்தது. மன்னரே கைத்தட்டினப்பின் அந்த பொறாமை கொண்ட மற்ற
கவிஞர்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் அமைதியாக தங்கள்
தோல்வியை உணர்ந்து ஒப்புக் கொண்டார்கள்.
.

.
இன்றளவும் சபைகளில் இந்த பாடல் பாடப்பட்டு, தேவனுடைய நாமம்

மகிமைப்பட்டு வருகிறது. நான் ஈரோட்டில் இருக்கும்போது, அங்குள்ள பிரப்
ஆலயத்தில் வருஷத்திற்கு ஒருமுறை அவருடைய மகனாகிய சாஸ்திரியார்
அவர்கள் வந்து பாடல்களை பாடி எங்களை மகிழ்விப்பார்கள். கர்த்தருடைய
நாமம் அவர் மூலமாய் மகிமைப்படும். இன்றளவும் அவர்களுடைய குடும்பம்
கர்த்தரைப் பாடி மகிமைப்படுத்தி வருகிறார்கள். சகோதரன் கிளமெண்ட்
சாஸ்திரியார் அவர்கள் வயலினில் பாடல்களை வாசித்து, கர்த்தருடைய
நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள். கர்த்தர் தொடர்ந்து அவர்கள்
மூலமாய் தம் நாமத்தை மகிமைப்படுத்தி, அந்த குடும்பத்தை
ஆசீர்வதிப்பாராக!