Showing posts with label God's Love. Show all posts
Showing posts with label God's Love. Show all posts

Friday, December 5, 2014

தகப்பனின் அன்பு

ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அந்த பிள்ளையும் அந்த தகப்பனிடம் அன்புடன் வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவர் அந்த பிள்ளையை பார்த்து, 'நீ இன்று வெளியில் விளையாட போக வேண்டாம்' என்று கூறினார். அவள் தினமும் தன் தோழிகளோடு விளையாடுவது வழக்கமாக இருந்தது. அவளும் தன் தகப்பனிடம் சரி என்று கூறிவிட்டு, தன் அறையில் வேறு ஏதாவது செய்யலாம் என்று அமர்ந்தாள். அப்படி அவள் அமர்ந்த போது, அவளுடைய தோழிகள் விளையாடும் சத்தம் கேட்டது. அவளால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. சற்று நேரம் பார்த்தாள். அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை, சரி, தகப்பன் வேலைக்கு போயிருப்பார், நான் விளையாடுவது அவருக்கு எங்கே தெரிய போகிறது என்று நினைத்து, விளையாட சென்று, நன்கு விளையாடிவிட்டு, எல்லாருக்கும் பை சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போதுதான் அவளுடைய மனதில் வேதனை ஆரம்பித்தது, தன் தகப்பனின் சொல்லிற்கு கீழ்ப்படியவில்லை என்று, அதையே நினைத்து சென்று கொண்டிருந்தபோது, முன்னால் மாட்டப்பட்டிருந்த படத்தை காணாமல், போய் இடித்து, அது அந்த படம் கீழே விழுந்து, நொறுங்கி போனது, அவளுக்கும் தலையில் நல்ல அடி!
.
அவள் இருதயத்தில் தகப்பனுக்கு கீழ்ப்படியவில்லை என்ற துக்கம், தலையின் வேதனை வேறு, வேகமாக தன் அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து, விசும்ப ஆரம்பித்தாள். அப்போது அந்த வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண், 'நீ போய் உன் அப்பாவை பார், நடந்ததை சொல்' என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ளையோ, ஷநான் எப்படி என தகப்பனின் முகத்தில் விழிப்பேன், நான் அவர் சொல்லை கேட்கவில்லையே' என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு அந்த பணிப்பெண், 'உன் தகப்பனின் அன்பு நீ செய்கிற காரியத்தை பொறுத்தா இருக்கிறது? நீ அவருடைய மகள் அல்லவா?' என்று கூறினாள். அதனால் தைரியமுற்று, அந்த பிள்ளை தன் தகப்பனிடம் சென்று, 'அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்' என்று அவருடைய கரத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அவளுடைய தந்தை, 'மகளே, நீ என் சொல்லை கேளாமல், விளையாட போனதும் தெரியும், விளையாடிவிட்டு, வரும் வழியில் மாட்டப்பட்டிருந்த படத்தில் மோதி, தலைக்கு அடிபட்டதும் தெரியும், நீ வருவாய் என காத்திருந்தேன், அந்த வலிக்கு தடவி கொடுக்கலாம் என்று, ஆனால் நீ என்னிடம் வரவேயில்லை' என்று கூறினார். 'அது எப்படி உங்களுக்கு தெரியும், நீங்கள் வேலைக்கு போகவில்லையா?' என்று அந்த பிள்ளை கேட்டாள். அதற்கு தந்தை 'இன்று நான் உன்னுடன் நேரத்தை செலவழிப்பதற்காக விடுமுறை போட்டேன், ஆனால், நீ விளையாட போய் விட்டாயே' என்று கூறி, 'மகளே, நீ என்னுடைய மகள், ஆகையால் நீ தவறு செய்தாலும் நீ என்னிடம் வரும்போது, நான் உன்னை மன்னித்து, உன்னை ஏற்று கொள்வேன். ஆனால் நீ தான் நான் ஏற்று கொள்வேனோ மாட்டேனோ என்று தயங்கி என்னிடம் வராமல் போனாய்' என கூறினார். அப்போது மகள், அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு, ஷநன்றி அப்பா' என கூறி முத்தமிட்டாள்.
.
நம்முடைய தேவனும் அப்படித்தான், அவர் நம்மேல் அன்புகூருவது நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற பாடுகளுக்காகவோ அல்ல, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் மாத்திரமே அவர் நம்மேல் அன்பு கூறுகிறார். 'கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' - (யோவான் 1:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது.

Tuesday, December 2, 2014

வெள்ளியை போல புடமிடுகிறவர்

ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்தை குறித்து போதித்து கொண்டிருந்தபோது, அதில் பங்கெடுத்த சில சகோதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ளியை சுத்திகரிப்பான் என்றும், அந்த காரியம் எப்படி தேவனோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறது என்றும் பார்க்க தோன்றியது. அதன்படி ஒரு சகோதரி, தான் போய் தட்டானுடைய இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, அடுத்த வாரம் அதை குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள போவதாக சொல்லி போனார்கள்.
.
அதன்படி, ஒரு வெள்ளி தட்டானை கண்டுபடித்து, அவர் எப்படி அதை சுத்திகரிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டு ஒரு நாளை குறித்து, அதன்படி அங்கு போனார்கள். தான் எதற்காக அப்படி கேட்கிறார்கள் என்பதை அந்த மனிதரிடம் எதுவும் சொல்லாமல், அவர் செய்வதை பார்க்க ஆரம்பித்தார்கள்.
.
அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோது, அந்த தட்டான் தன் கையிலிருந்த வெள்ளியை எடுத்து, நெருப்பில் காட்ட ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்னார், 'இந்த வெள்ளி, நெருப்பின் நடு மையத்தில் வைத்து, சூடு காட்டப்பட வேண்டும். ஏனென்றால், நடுவில்தான் நெருப்பின் அதிகபட்சம் சூடு இருக்கும், அப்படி காண்பித்தால்தான், வெள்ளியிலிருக்கிற அழுக்கு எல்லாம் மாறும்' என்று கூறினார்.
.
அப்போது அந்த சகோதரி 'அவர் உட்கார்ந்து’ என்ற இடத்தை நினைவு கூர்ந்து, அந்த தட்டானிடம், “நீர் உட்கார்ந்து தான் அதை நெருப்பில் காட்ட வேண்டுமா” என்று கேட்டதற்கு, அவர், “ஆம், அந்த வெள்ளி நெருப்பில் காட்டி முடியும்வரை நான் இங்கு உடகார்ந்து தான் ஆக வேண்டும், மட்டுமல்ல என் கண்கள் அதன் மேலேயே இருக்க வேண்டும், ஒரு நிமிடம் அதிக நேரம் இந்த வெள்ளி நெருப்பில் இருந்தாலும், அது ஒன்றுமில்லாமற் சேதமாகி போய் விடும்” என்று கூறினார். அதை கேட்ட அந்த சகோதரி, சற்று நேரம் அமைதலாய் இருந்த பின், ‘நீர் எப்படி இந்த வெள்ளி சுத்தமாயிற்று என்று அறிவீர்’ என்று கேட்டதற்கு, அவர், 'அது மிகவும் சுலபம், என் சாயல் அதில் தெரியும்' என்று கூறினார்.
.
ஓ! எத்தனை உண்மை! நம் தேவன் எத்தனை அருமையானவர்! நீங்கள் ஒரு வேளை நெருப்பின் நடுவில் போடப்பட்ட வெள்ளியை போல இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னால் தாங்க முடியாத வேதனைகளும் சோதனைகளும் என்னை சூழ இருக்கிறது என்று துவண்டு போயிருக்கிறீர்களா? தேவன், உங்களை உட்கார்ந்து, வெள்ளியை புடமிடுகிறது போல புடமிட்டு கொண்டிருக்கிறார்.

Thursday, November 20, 2014

நம் பரம தகப்பனின் அன்பு

ஒரு சபையின் ஆராதனையில் போதகர் ஆராதனையை முடித்து விட்டு, அன்று பேச வந்திருந்த விசேஷித்த போதகரை குறித்து அறிமுகம் செய்து விட்டு போய் உட்கார்ந்தார். அந்த வயதான போதகரும் ஒரு உதாரணத்தின் மூலம் செய்தியை சொல்ல ஆரம்பித்தார்.
.
'ஒரு தகப்பனும், அவருடைய மகனும், மகனுடைய நண்பனும், என்று மூவருமாக பசிபிக் கடலில் ஒரு படகில் உல்லாச பயணமாக சென்றிருந்தார்கள். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று புயல் உருவாக ஆரம்பித்தது. படகு நடுக்கடலில் மாட்டி கொண்டது. தகப்பன் படகை ஓட்ட நன்கு அறிந்திருந்தவரானாலும், படகு புயலில் சிக்கி கொண்டதால் என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் படகு கவிழ்ந்து மூன்று பேரும் கடலில் விழுந்தார்கள்' அவர் சொல்லி கொண்டிருந்த சம்பவத்தை இரு வாலிபர்கள் உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்ததை அந்த போதகர் கவனித்தவாறே அந்த சம்பவத்தை தொடர்ந்தார்.
.
அந்த தகப்பன், தன் கையில் கிடைத்த கயிற்றை ஒரு பக்கத்தை தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, மற்ற நுனியை இரண்டு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பது என்று மனதில் போராடியவாறு பொங்கி எழும் அலைகளின் மத்தியில் போராடும் தன் மனதை கட்டுப்படுத்தியவாறு, தன் மகன் இரட்சிக்கப்பட்டவன் என்பதையும், மற்றவனோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்த தகப்பன், தன் மகனிடம் 'மகனே, நான் உன்னை நேசிக்கிறேன்' என்று கதறியவாறே, அந்த கயிற்றின் மற்றொரு நுனியை எடுத்து, மற்ற பையனிடம் வீசினார். அதை பிடித்தவாறே இருவரும் படகை பிடித்து கொண்டு கரை வந்து சேர்ந்தனர். மகனோ, கொந்தளிக்கும் கடலில் கண்களின் முன்பாக மூழ்கி போவதை கண்டவாறே தகப்பன் கரையில் போய் விழுந்தார். அவனது சரீரம் திரும்ப கிடைக்கவே இல்லை.
.
இதை சொல்லிவிட்டு போதகர் சற்று நிறுத்தியபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அவர் என்ன சொல்ல போகிறார் என்று ஆவலோடு அவர் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
போதகர் தொடர்ந்தார், அந்த தகப்பன் தன் மகன் மரித்தாலும், இயேசுவோடு கூட என்றும் ஜீவித்திருப்பான் என்றும், மற்ற வாலிபனோ, ஒருவேளை மரித்திருந்தால், நித்திய நரகத்திற்கு சென்றிருப்பான் என்பதை அறிந்திருந்ததால், நண்பனை காப்பாற்ற வேண்டி தன் சொந்த மகனை அவர் தத்தம் செய்தார்.
.
நம் பரம தகப்பனும், தம்முடைய ஒரே பேறான குமாரனை நாம் இரட்சிப்படைய வேண்டி, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாரே, இன்றே அவர் அளிக்கும் பாதுகாக்கும் கயிற்றை பிடித்து கொண்டு அவரிடம் வந்து விடுங்கள், இன்றே இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள்' என்று கூறி, தன்னிடத்தில் வந்து அமர்ந்தார். அவருக்குப்பின் போதகர் வந்து, சபையை முடித்தபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அந்த வயதான போதகரின் முன் வந்து, 'நீர் எங்களுக்கு சொன்ன கதை அற்புதமாக இருந்தது, நீங்கள் சொன்ன மாதிரி எந்த தகப்பன், தன் சொந்த மகனை விட்டு விட்டு மற்றவனை காப்பாற்ற முடியும்?' என்று கேட்டார்கள். அப்போது அந்த வயதான போதகர், தன் கண்களை துடைத்து கொண்டு, 'உங்களால் நம்ப முடியவில்லை இல்லையா? உங்களுக்கு தெரியுமா? அந்த தகப்பன் நான் தான் என்றும், என் மகனின் அந்த நண்பன் உங்கள் போதகர் என்றும் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?' என்று கேட்டார்.
.
ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் பிள்ளையை மற்ற பிள்ளை இரட்சிக்கப்படும்படியாக பலியாக கொடுக்கும்போது, நமது பரம தகப்பன் தமது சொந்த குமாரனை நாம் இரட்சிக்கப்படும்படியாக அனுப்பியது அதிக நிச்சயமல்லவா?

Thursday, July 24, 2014

அளவற்ற ஆழமான அன்பு

B.E. சிவில் இஞ்ஜினியரிங் படித்து முடித்த பிரபுவுக்கு அரபு நாடுகளில் ஒரு கட்டிடம் கட்டும் கம்பெனியில் வேலை கிடைத்தது. பிரபுவும் அவன் அம்மாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசித்ததினால், மகன் வெளிநாடு செல்வதை பிரபுவின் தாயார் விரும்பவில்லை. இருப்பினும், தன் குடும்ப பொருளாதார தேவைகளை நினைத்து சம்மதித்தார். பிரபு அரபு நாடு சென்றதும் அவனை ஆச்சரியப்பட வைத்தது, பேரீச்சம் மரங்களும், பேரீச்சம் பழங்களும் தான். அதுவும் அவ்வப்போது மரத்தில் பறிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். புதிய (Fresh) பேரீச்சம் பழங்களை பார்க்கும் பிரபுவுக்கு அவன் அம்மா ஞாபகம் வரும். காரணம் பிரபுவின் அம்மாவுக்கு பேரீச்சம் பழம் என்றால் உயிர். புதிய பேரீச்சம் பழம் இந்தியாவில் கிடைப்பது அரிது என்பதை அறிந்த பிரபு, ஒரு மாத லீவில் இந்தியா வந்த தன்னுடைய நண்பன் விநோத் மூலம் புதிய பேரீச்சம் பழப்பெட்டி ஒன்றை வாங்கி தன் தாயாருக்கு கொடுத்து அனுப்பினான்.
.
பலவித காரணங்களால், விநோத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று. நான்காம் நாள் வேகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று தன் குடும்பத்தாரை சந்தித்து விட்டு, பிரபுவின் வீட்டிற்கு சென்று, பொருட்களையும், பேரீச்சம் பழப்பெட்டியையும் கொடுத்தான். தன் மகன் அன்போடு, ஆவலோடு கொடுத்தனுப்பிய பெட்டியை உடைத்து ஆசையோடு பேரீச்சம் பழங்களை ருசித்தாள் தாயார். பழம் 'வெகு ஜோர்' என்று சொல்லி தன் கணவருக்கும், தன் மகளுக்கும் கொடுத்தார். இருவரும் பழத்தை சாப்பிட்டுவிட்டு முகத்தை சுழித்தனர். காரணம், பேரீச்சம் பழங்கள், பழசாகி விட்டன. கெட்டுப் போகிற வாசனை பெட்டியிலிருந்து வந்தது. ருசியும் குறைந்து விட்டது. பிரபுவின் அப்பாவும், தங்கையும் அவன் அம்மாவை சாடினார்கள். கெட்டுப் போன பழத்தை சாப்பிட்டுவிட்டு, நன்றாக, ருசியாக இருக்கிறது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பிரபுவின் அம்மா 'நான் ருசித்தது என் அன்பு மகன் பிரபுவின் அன்பையே தவிர, பேரீச்சம் பழத்தையல்ல' என்றாராம். பிரபுவின் அம்மாவின் பதில் இருவரையும் சிந்திக்க வைத்தது.
.
அன்பானவர்களே! மேற்கண்ட சம்பவத்தில் பிரபுவின் அம்மா கெட்டுப்போன பழத்தின் ருசியை அறியாமல் போனதற்கு காரணம், தன் மகன் தன் மேல் வைத்திருந்த அளவற்ற அன்பாகும். நாம் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கும் போது தான், மேலான தன்மைகள் நம்மில் வெளிப்படும்.

Thursday, June 6, 2013

பொறுமையாய் இரு

ஒரு பெரிய சுய சேவை பொருள் அங்காடி ஒனிறில் ஒரு பெண் தன்னுடைய மூன்று வயது சிறுமியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வந்திருந்தாள். அங்குள்ள ஒவ்வொரு அலமாரியாக பார்த்து தனக்கு தேவையானவைகளை எடுத்து கையில் வைத்திருந்த கூடையில் சேகரித்துக் கொண்டே வந்தாள். அந்த சிறு குழந்தை கண்ணில் காணும் ஒவ்வொன்றையும் கேட்டு அழுதுகொண்டே வந்தது. இவற்றையெல்லாம் அங்கு பணிபுரியும் ஒரு நபர் பார்த்துக் கொண்டே இருந்தார்.
.
அவர்கள் பிஸ்கட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதிக்கு சென்றவுடன் அந்த குழந்தை பிஸ்கட் வேண்டுமென்று அடம்பிடித்தது. உடனடியாக அந்த பெண், அனித்தா அமைதியாக இரு. 10 நிமிடம் தான் பொறுத்துக் கொள் என்றாள். பின்பு சிறிது நேரம் கழித்து பொம்மைகளைக் கண்டவுடன் குழந்தை பொம்மை வேண்டுமென்று அழ ஆரம்பித்தது. உடனே, அனித்தா இன்னும் 5 நிமிடத்தில் நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம், பொறுமையாக இரு என்றாள். கடைசியாக வாங்கிய பொருட்களுக்கு பில் போடும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு சாக்லேட் இருப்பதை அச்சிறுமி கண்டவுடன் சாக்லேட் வேண்டுமென்று ஓவென்று அழ ஆரம்பித்தாள். உடனே தாயார் 'அனித்தா இதோ சாமான்களெல்லாம் வாங்கியாச்சி உடனே நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம் வீட்டிற்கு போய் ஒரு சுகமான குட்டி தூக்கம் போடலாம், பொறுமையாய் இரு,' என்றாள். இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்த நபர் அத்தாயாரை பார்த்து உங்கள் குழந்தை அனித்தா எவ்வளவு தொந்தரவு செய்தும் கோபப்படாமல், பொறுமையாகவும் கனிவாகவும் பேசி சமானித்து விட்டீர்களே என்று பாராட்டினார். அப் பெண் சிரித்துக் கொண்டே என் குழந்தையின் பெயர் மீனா என் பெயர் தான் அனித்தா, பொறுமையை இழந்துவிடாமலிருக்க நான் என்னிடம்தான் பேசிக் கொண்டேன் என்றார்.

Sunday, April 7, 2013

நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?


அந்த இளைஞன் படித்து முடித்து தனது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு தயாராகிக்கொண்டிருந்தான். நீண்ட நாட்களாக அவனுக்கு ஒரு ஆசை. அவன் கல்லூரிக்கு போகும் வழியில் ஒரு பிரபல டூ-வீலர் ஷோரூம் இருந்தது. அந்த ஷோரூமில் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தனது தந்தையால் அதை நிச்சயம் அவனுக்கு வாங்கித் தரமுடியும் என்று கருதிய அவன் தனது தந்தையிடம் போய், தான் விரும்புவதெல்லாம் அந்த பைக் ஒன்றை மட்டும் தான் என்றும் தனது பட்டமளிப்பு விழா நாளுக்கு முன்பு அதை வாங்கி தரும்படியும் கேட்டுக்கொண்டான்.

நாட்கள் ஓடின. அப்பா எப்படியாவது தான் விரும்பிய அந்த பைக்கை வாங்கித் தருவார் என்று அவன் ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அதற்குரிய அறிகுறியே தெரியவில்லை. பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. அன்று காலை, அவனது அறைக்கு அவன் தந்தை சென்றார். தனது மகனிடம் மிக அழகாக கிஃப்ட் பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலை கொடுத்தார்.

பைக்கை எதிர்பார்த்து காத்திருந்த மகனுக்கு ஏமாற்றம் ஒரு பக்கம் . அந்த கிஃப்ட் பேக்கினுள் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் ஒரு பக்கம். வேகவேகமாக அந்த பேக்கை பிரித்தான். உள்ளே அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு பைபிள் இருந்தது. அவனோ கோபத்தில், “உன்கிட்டே இருக்குற பணத்துல போயும் போயும் உன்னால எனக்கு பைபிள் தான் வாங்கித் தர முடிஞ்சதா? இதை நான் படிச்சதேயில்லையா?” என்று கத்திவிட்டு பைக் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

ஆண்டுகள் உருண்டோடுகின்றன. வீட்டை விட்டு வெளியேறியவன் நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி நல்ல நிலைக்கு வந்துவிடுகிறான். அவனுக்கென்று அழகான வீடு, அன்பான குடும்பம் அமைகிறது.
அப்போது தான் அவனுக்கு தனது தந்தையின் ஞாபகம் வருகிறது. வீட்டை விட்டு வெளியேரியதிலிருந்து அவன் அப்பாவை பார்க்கவில்லை.

“அப்பாவுக்கு இப்போ ரொம்ப வயசாகியிருக்கும். அவரை கூப்பிட்டு வந்து நம்ம கூட வெச்சிக்கணும்” என்று தோன்றுகிறது.

பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும்போதே அவனுக்கு ஒரு டெலிக்ராம் வருகிறது. அவன் தந்தை காலமாகிவிட்டதாகவும், உடனே வீட்டுக்கு வரும்படியும், தனது சொத்துக்களை எல்லாம் இவன் பெயருக்கு அவர் எழுதி வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

சோகம் ததும்ப, நெஞ்சம் அடைக்க உடனே தனது வீட்டுக்கு விமானம் மூலம் விரைகிறான். வீட்டில் தனது தந்தையின் அறைக்கு சென்று அழுதுகொண்டே பார்க்கிறான். அங்கே ஷெல்பில் அந்த பைபிள் தென்படுகிறது. கலங்கிய கண்களுடன் அதை எடுக்கிறான். பக்கங்களை புரட்டுகிறான். ஒரு பக்கத்தில் புக்மார்க் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு வசனத்தை அவன் தந்தை ஸ்கெட்ச் பேனாவில் அடிக்கோடிட்டிருந்தார்.

" பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? "
- மத்தேயு 7:11

Saturday, March 30, 2013

ஊழியத்தின் மேல் உள்ள வைராக்கியம் - Damien

பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (

Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
.
1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்த தீவில் அவர் கொண்டு வந்தார். ஏதோ குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளை கொடுத்து, ஜனங்களை ஆறுதல் படுத்தினார்.
.
ஒரு நாள் அவர் குளிக்க செல்லும்போது, தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில் பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஓ, அவருக்கும் தொழுநோய் பற்றி கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம், 'நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன்' என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் 'தொழுநோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்' என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே தான் அளவு கடந்த அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டு பாராமல், தன் உடலையும், உயிரையும் தொழு நோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதை எடுத்து காட்டின அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.

Saturday, February 23, 2013

இயேசுகிறிஸ்துவின் அன்பு

பாலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் தந்தையும், மழலை மகளும். கீழே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தந்தை மகளிடம் சொன்னார்

“மகளே.. எனது கையைப் பிடித்துக் கொள். அப்போது விழமாட்டாய்”

மகள் சொன்னாள் ,’ இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”

தந்தைக்கு ஆச்சரியம். “இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? நீ பிடித்தால் என்ன ? நான் பிடித்தால் என்ன ” ஆச்சரியப்பட்ட தந்தை கேட்டார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஒரு வேளை நான் கையை விட்டு விடும் வாய்ப்பு உண்டு. பாதை வழுக்கினால் கூட நான் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்தால், என்ன தான் நடந்தாலும் நீங்கள் என் கையை விடமாட்டீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு” மகள் சொன்னாள்.

தந்தை நெகிழ்ந்தார். மகளை தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நடந்தார்.

இறைவன் சொல்கிறார்

“நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கை விடுவதும் இல்லை”

இயேசு நமது கைகளை இறுகப் பிடித்து நடக்கிறார். நாமோ அவருடைய கையை உதறிவிட்டு பல வேளைகளில் ஓடி விடுகிறோம்.

எதையும் தனியாய் செய்யும் துணிச்சலும், வீராப்பும் இருக்கும் வரை இறைவனின் கையை விட்டு உதறித் தள்ளுவதையே அனைவரும் விரும்புகிறோம்.