Showing posts with label salvation. Show all posts
Showing posts with label salvation. Show all posts

Wednesday, July 2, 2014

புல்லுக்கு ஒப்பான ஜீவியம்

ஒரு வைத்தியர் தன்னுடைய நோயாளி ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, 'நீங்கள் செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான செய்தி தெரிய வேண்டுமா?' என்று கேட்டார். அப்போது நோயாளி, 'முதலில் எனக்கு கெட்ட செய்தியை சொல்லுங்கள்' என்று கூறவும், டாக்டர், 'நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயோ, இதைவிட கெட்ட செய்தி ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் சொன்னீர்களே, இதை விட மோசமான செய்தி என்று, அது என்ன? என்று கேட்டபோது, டாக்டர், 'இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார்.
.
நம்முடைய வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை அத்தனை குறைவானது. நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. மனிதனுக்கு தான் இன்று தான் மரிக்கபோகிறோம் என்று தெரிந்தால் கடைசி நிமிடம் வரை பாவம் செய்து, கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி கொள்ளலாம் என்று பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே இருப்பான். அதனால்தான் கர்த்தர் அதை இரகசியமாகவே வைத்திருக்கிறார்.

நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. - (யாக்கோபு 4:14).

Tuesday, June 3, 2014

சத்தம் கேட்கும் ஆடு


2001-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி கடத்தப்பட்ட வானூர்தி (Aeroplane) அமெரிக்காவில் உள்ள பென்டகனில் மோதிய போது, அநேக மக்கள் அங்கு வேலை செய்பவர்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் அங்கு அந்த பிளேன் மோதியதால் உண்டான பயங்கரமான புகை மண்டலத்திற்குள் சிக்கி, புகை அவர்கள் கண்களை மறைத்தபடியால், வெளியே வர முடியாமல், மிகவும் அவதிக்குள்ளாயினர். அவர்கள் அங்கு மூச்சு விட முடியவில்லை, சரியாக காண முடியவில்லை. அப்போது ஐசக் ஹுப்பி (Issac Hoopi) என்னும் போலீஸ் அதிகாரி, உள்ளே ஓடி, உயிரோடு மக்கள் இருக்கின்றனரா என்று தேடினார். உள்ளே இருக்கும் நிலவரத்தை கண்டவுடன், சற்று வெளியே வந்து, 'என் சத்தத்தை கேட்டு அந்த சத்தத்தை பின்தொடர்ந்து வாருங்கள்' என திரும்ப திரும்ப உரத்த சத்தத்தோடே கூறிக் கொண்டே இருந்தார். அவருடைய அந்த சத்தத்தை கேட்டு அநேகர், வெளியே வந்தனர். உள்ளே ஒன்றுமே தெரியாத புரியாத நிலையில் இருந்த அவர்கள் அந்த சத்தத்தை கேட்டு, வெளியே வந்து உயிர் தப்பினர்.
.
'என் சத்தத்தை கேட்டு என் பின்னே வாருங்கள்' என்று நம் நேசர் இயேசுகிறிஸ்து வழிதவறி போன ஆடுகளை நோக்கி அழைத்து கொண்டே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவே நல்ல மேய்ப்பர்;. 'வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்' என்று யோவான் 10:3 ல் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அறிந்திருக்கிற தேவன் நம் தேவன். அவர் நம்மை அழைத்து, நம்மை புல்லுள்ள இடங்களுக்கு நடத்தி கொண்டு செல்கிறார்.
.
இந்த உலகத்தின் பாவத்திலும், துன்பத்திலும், வெளியே வர முடியாதபடி தவிக்கிற ஒவ்வொருவரையும் தேவன் அழைத்து, என் பின்னே வாருங்கள் என்று அழைக்கிறார். அப்படி அவருடைய சத்தத்தை கேட்டு வரும்போது, நாம் பத்திரமாக கரை கொண்டு சேர்க்கப்படுவோம்

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது - (யோவான் 10:4).

Sunday, June 1, 2014

நம் வாயின் வார்த்தைகள்


இரண்டு சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள் என வைத்து கொள்வோம். அவர்கள் என்ன பேசி கொள்வார்கள்? முதலில் நலம் விசாரிப்பார்கள், பின்பு அவரவர் தங்கள் கஷ்டத்தை கூறுவார்கள். தங்கள் குடும்ப நிகழ்வுகளை கூறுவார்கள். தங்கள் பிள்ளைகளை குறித்து பேசி கொள்வார்கள். அதோடு முடிந்து விடுமா? பக்கத்து வீட்டு காரர்களை பற்றியும், எதிர்த்த வீட்டுகாரர்களை பற்றியும் பேசாவிட்டால் அவர்களது பேச்சு முடியாது. அதனால் ஏதாவது பிரயோஜனமுண்டா?
.
வேதம் சொல்கிறது, கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் (எபேசியர் 4:29) என்று.
.
ஒரு முறை இரண்டு விசுவாசிகள் பேசி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னார், "பரிபூரணமாய் தமக்கு ஒப்புக்கொடுக்கிற மனுஷனை தேவன் வல்லமையாய் உபயோகப்படுத்த எவ்வளவு ஆவலாய் இருக்கிறார் தெரியுமா" என்றார். இந்த வார்த்தைகளை ஆறடி தொலையில் நின்று கொண்டிருந்த வாலிபனின் காதுகளில் விழுந்தது. பூரணமாய் ஒப்புகொடுக்கிற மனிதனை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த கூடுமானால், நான் ஏன் என்னை பூரணமாக ஒப்புகொடுக்க கூடாது? என்று எண்ணினான். ந்த வாலிபன்தான் பிரசித்து பெற்ற ஊழியரான் டீ.எல் மூடி என்பவர். இருவரின் சாதாரண உரையாடல் ஒரு வாலிபனை கர்த்தருக்கு பூரணமாக தன்னை அர்ப்பணிக்க வைத்தது. இதுதான் பக்தி விருத்திக்கேதுவான நல்ல வார்த்தை.
.
நமது வேலையிடத்தில் கொஞ்சநேரம் இடைவெளி கிடைத்தால் போதும், அங்கு வேலை செய்கிறவர்களிலிருந்து, ஒவ்வொருவரை குறித்தும் வெட்டியாக பேசி நம் நேரத்தை வீணாக செலவழித்து விடுகிறோம். அந்த நேரத்தில் மற்றவருடைய ஆத்துமா இரட்சிக்கப்படும்படி பேசினால் எத்தனை நலமாயிருக்கும்!

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. - (மல்கியா 3:16).
.

Sunday, August 4, 2013

இரட்சிப்பின் வழி

ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, 'அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம் போவதற்கு? என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒரு போதும் போதாது, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விடலாம். அந்த விமானம் மிகவும் உயர்ரக விமானம். அது அவனை சரியாக அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை.
.
எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால் அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே வீண்' என்று கூறினார்.

Saturday, March 30, 2013

இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பு

இங்கிலாந்தை சேர்ந்த அநேக வீடுகளுக்கு சொந்தக்காரரான ஒருவர், புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்தபடியால், தன் வீடுகளில் தங்கியிருக்கும், வாடகை குடிமக்களுக்கு, தேவனுடைய இரட்சிப்பு எப்படி இலவசம் என்பதை வெளிப்படுத்த வேண்டி, தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலங்களின் சுவற்றில், ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை பத்து மணியிலிருந்து, 12 மணிவரை தான் ஒரு குறிப்பிட்ட லாட்ஜில் இருக்கப் போவதாகவும், யார்யார் தன்னிடம் கடன் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில் ஒட்டியிருந்தார்.
அநேகர் அந்த போஸ்டரை பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா என்று அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள். சிலர் இதில் ஏதோ தந்திரம் இருப்பதாக சொல்லி கொண்டார்கள். குறிப்பிட்ட அந்த நாள் வந்த போது, அந்த லாட்ஜின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. சரியாக தான் சொன்னபடியே, அந்த வீட்டு சொந்தக்காரர் ஓரு காரில் வந்து இறங்கினார். யாரிடமும் ஒன்றும் பேசாமல், உள்ளே போய் அலுவலகத்தில் அமர்ந்தார். வெளியே கதவு சாத்தப்பட்டிருந்தது.
கதவுக்கு வெளியே பெரிய கூட்டம். ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள். நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா? ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று நினைத்து தள்ளிவிடுவாரா? நான் முதலில் போக மாட்டேன், வேறு யாராவது போகட்டும் பின் நான் போகிறேன் என்று ஒவ்வொருவரும் பேசி கொண்டு நின்றிருந்தார்களே ஒழிய யாரும் முதலில் போக துணியவில்லை. அப்படியே நேரம் கழிந்து கொண்டிருந்தது.
கடைசியல் 12 மணி ஆகப்போகும் நேரம், ஒரு வயதான தம்பதியினர், அங்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் ‘வீட்டு சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?’ என்று கேட்டனர், ‘ஆம் இருக்கிறார் ஆனால் இதுவரை யாருக்கும் கடன் மன்னிக்கப்படவில்லை’ என்று கூறினர். அப்போது அந்த தம்பதியினர் கண்ணீருடன், ‘அவர் ஒட்டியிருந்த போஸ்டர்களை பார்த்து நாங்கள் தொலை தூரத்திலிருந்து வந்தோம், இது பொய்யென்று எங்களுக்கு தெரியாது’ என்று திரும்ப போக எத்தனிக்கையில், ஒருவர் ‘யாரும் இதுவரை உள்ளே செல்லவில்லை’ என்று கூறினார். அத்தம்பதியினர், ‘அப்படியா? அப்படியானால் நாங்கள் உள்ளே போகிறோம்’ என்று போக முயற்சித்த போது மற்றவர்கள், ‘அவர் என்ன சொன்னார், உங்கள் கடன்களை மன்னித்தாரா என்று எங்களுக்கு திரும்ப வந்து சொல்லுங்கள், நாங்களும் போய் கேட்க வேண்டும்’ என்று கூறினார்கள். அதற்கு அத்தம்பதியினர் சம்மதித்து, உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி, அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அந்த காரியதரிசி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு மிகவும் நன்றியுடன் அவருக்கு நன்றி செலுத்தி வெளியே செல்ல முற்படுகையில் காரியதரிசி, ‘நீங்கள் 12 மணி ஆகும் வரை வெளியே செல்ல கூடாது’ என்று கூறினார். அப்போது அவர்கள், வெளியே மற்ற மக்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய காத்திருப்பதாக சொன்னார்கள். அப்போது காரியதரிசி, ‘உங்களுக்கு சொன்னது போல தான் மற்றவர்களுக்கும் சொல்லப்பட்டது. அவர்கள் உள்ளே வந்தால், அவர்களுடைய கடன்களும் மன்னிக்கப்படும்’ என்று கூறி அவர்கள் அமர்த்தினார். சரியாக 12 மணியானதும் கதவுகள் திறக்கப்பட்டது. முதலில் அந்த வயதான தம்பதியினர் வெளியே வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், ‘என்ன உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றினாரா’ என்று மாறி மாறி கேள்விகள் கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். ‘பின் ஏன் எங்களிடம் வந்து சொல்லவில்லை’ என்று கேட்டனர். அப்போது அந்த தம்பதியினர், ‘அவர் எங்களை உள்ளே அமர சொன்னார். நாங்கள் உள்ளே போய், அவரிடம் மன்னிப்பு பெற்றது போல நீங்களும் உள்ளே வந்தால் மன்னிக்கப்படும் என்று கூறினார். எங்களை உள்ளேயே இருக்க சொன்னார்’ என்று கூறினர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும் காரியதரிசியும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள் பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு ‘ஐயா எங்களுக்கும் மன்னியும்’ என்று கதறினர். அப்போது அந்த எஜமானர், ‘இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தி கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால் நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை’ என்று கூறினார்.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24)

Saturday, February 23, 2013

லூவாலஸ் - அமெரிக்க நாத்திகர்

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ் (Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.

இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.

வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை - சர்.ஜேம்ஸ் சிம்ஸன்

குளோரோபாம் கண்டுபிடித்த சர்.ஜேம்ஸ் சிம்ஸன்(1811-1870)சொல்கிறார்

"என்னுடைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு 1861 டிசம்பர் 25-ம் தியதி கண்டுபிடிக்கப்பட்டது.அது என்னவென்றால் நான் ஒரு பாவியாக இருந்தேன் என்பதும்,இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் என்பதுமேயாகும்"

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.