Showing posts with label Mission. Show all posts
Showing posts with label Mission. Show all posts

Monday, September 1, 2014

முதலிடம் யாருக்கு? - எரிக் லிடல் - சீனா மிஷனெரி

ஸ்காட்லாந்தை சேர்ந்த எரிக் லிடல் என்னும் வாலிபர்; தன்னை சீனாவுக்கு மிஷனெரியாக செல்ல அர்ப்பணித்திருந்தார்;. அவருக்கு பல சிறப்பு திறமைகளும் காணப்பட்டன. குறிப்பாக கால்பந்து வீரனாகவும், ஓட்டப்பந்தய வீரனாகவும் சிறந்து விளங்கினார். கால்பந்தில் ஸ்காட்லாந்து தேசிய அணியிலும், ஓட்டப்பந்தயத்தில் இங்கிலாந்திலும் பிரபலமாக திகழ்ந்தார். 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் எரிக் நிகழ்த்திய சாதனையை இங்கிலாந்தில் 35 வருடங்களுக்கு யாராலும் முறியடிக்க முடியவில்லை. 1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவருக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஓட்டப்பந்தயத்திற்கான தேர்வு ஓட்டம் ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு குறிக்கப்பட்டிருந்தது. எரிக் ஞாயிற்றுகிழமை ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஓட மறுத்து விட்டடார். உலகின் புகழை சம்பாதிப்பதைவிட தேவனுக்கு கீழ்ப்படிவதே சால சிறந்தது என்பதே அவர் நன்கு அறிந்திருந்தார், மட்டுமல்ல, அதே ஞாயிற்றுகிழமையில் ஒரு ஆலயத்தில் பிரசங்கம் பண்ண ஒப்புக்கொண்டு அதை நிறைவேற்றினார். இவருடைய இச்செயலை தேவன் கனம் பண்ணினார். எப்படியெனில், மூன்று நாட்களுக்கு பின் நடந்த அந்த ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் சிறப்பாக வெற்றி பெற்று உலக சாதனை நிகழ்த்தினார். தம்மை கனம் பண்ணுகிறவர்களை கனம் பண்ணுகிற தேவனல்லவா நம் தேவன்!
.
தான் அர்ப்பணித்திருந்தபடியே சீனாவுக்கு மிஷனெரியாக சென்று மகிமையான ஊழியத்தை நிறைவேற்றினார். 1945ஆம் ஆண்டு மறுமைக்குள் பிரவேசித்தார். இவருடைய பெயர் பரலோகில் மட்டுமல்ல, இப்பூமியிலும் எல்லோராலும் கனப்படுத்தப்பட்டது.
.
இதை வாசிக்கிற நாம் நம் தேவனுக்கு எப்படி முதலிடம் கொடுககிறோம்? எத்தனை நாட்கள் சிறு சிறு காரியங்களை சாக்குபோக்காக காட்டி ஞாயிறு ஆராதனையை புறக்கணித்திருக்கிறோம்! சிலரது வாழ்க்கையில் இடறல்கள், போராட்டங்கள, பாடுகள், துன்பங்கள் வந்தாலொழிய மற்ற எவ்விதத்திலும் தேவனை தேடுகிற உணர்வே அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள்; முதலிடம் கொடுப்பது சமுதாய அந்தஸ்திற்கும் ஐசுவரிய வாழ்விற்குமே!
.
தாவீது தன் மகன் சாலமோனிடம், 'நீ தேவனை தேடினால் உனக்கு தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் என்றைக்கும் கைவிடுவார்' என்று கூறுகிறார். அவ்வசனத்தை நமக்கு அன்பான ஆலோசனையாகவும், அதே வேளையில் எச்சரிப்பாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். - (மத்தேயு 6:33).

Friday, May 2, 2014

ஆச்சரியமான தேவ அன்பு - ஜோசப் பார்க்கர்


இங்கிலாந்து நாட்டின் போதகர் ஜோசப் பார்க்கரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'இயேசுகிறிஸ்து யூதாஸ் காரியோத்தை ஏன் தமது சீஷராக தெரிந்துக் கொண்டார்? அவருக்கு தெரியுமே அவன் அவரை காட்டிக் கொடுப்பான் என்று' என்பதுதான் அந்தக் கேள்வி. போதகர் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். ஆனால் பதிலைக் கூட முடியவில்லை. அந்தக் கேள்வி அவரை திணறடித்துவிட்டது. ஆனால் அதே கேள்வி அவருக்கு மற்றொரு கேள்வியை உருவாக்கியது. அதுவும் அவரை திணறடித்தது, அந்தக் கேள்வி, 'தேவன் ஏன் என்னை தெரிந்துக் கொண்டார்?' என்பதே.
.
ஒரு சிலருடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது நம் இருதயத்தில் மிகவும் துக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒழுங்கீனமாய் வாழ்கிறார்களே? அவர்களையெல்லாம் எப்படி தேவன் தெரிந்துக் கொண்டார் என்று அங்கலாய்க்கிறோம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால், மற்றவர்களை குற்றப்படுத்தி பார்க்கிற கண்ணோட்டத்தினால் தான் நாம் அவ்வாறு நினைக்கிறோம் என்பதை நாம் உணருகிறதில்லை. இதைத்தான் பிரபல சுவிஷேசகராகிய பில்லிகிரகாம் அவர்கள் கூறும்போது. 'மீட்கப்பட்ட எந்தவொரு பாவியும் பிறரைப் பார்த்து பாவி என்று சொல்ல எந்தவொரு நியாயமுமில்லை' என்று சொல்கிறார்.
.
நாம் காண்கின்ற மனிதர்கள் எல்லாரும் தேவ சாயலில் பூரணப்பட்டவர்கள் கிடையாது என்பதை நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். நம்மைப் போல் அவர்களும் தேவ சாயலில் முழுமைப் பெற தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களே! இதில் சிலர் தேவகிருபையில், பெலத்தில், சீராக வாழ முடிகிறது. சிலரோ குறைவுள்ளவர்களாய், பெலவீனர்களாய் காணப்படுகிறார்கள். 'அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்' (ரோமர் 15:1-2) என்று வசனம் கூறுகிறது. ஆம், அப்படிப்பட்ட பெலவீனமுள்ளவர்களை நாம் நியாயந்தீர்க்காமல், அவர்களை தாங்க வேண்டும், அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என் கிறிஸ்து நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.
.
ஜோசப் பார்க்கரிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்பட்டால், நாம் என்ன பதில் சொல்வோம்? பாவத்தில் வாழும் மனிதர்களை மீட்கும்படி, இரட்சிக்கும்படி தேவ அன்பு வெளிப்பட்டதே! அந்த அன்பு பாவியாகிய என்னை சந்தித்ததே! அதேப் போல மற்றவர்களையும் பெலவீனர்களையும் சந்திக்கக்கூடாது? தேவன் தகுதியற்ற நம்மிடத்தில் காண்பிக்கின்ற அவருடைய ஆச்சரியமான அன்பிற்காக அவரை துதிப்போமா?
.
பெலவீனமுள்ளவர்களும், நான் பெலவீனன், என்னால் பரிசுத்தமாக வாழ முடியாது, என்னால் கர்த்தர் விரும்புகிற தரத்திற்கு உயரமுடியாது என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிராமல், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும் (பிலிப்பியர் 2:12)

Sunday, August 4, 2013

ஊழியம்

கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த ஒரு பெண்மணி வெகுநாளாய் 'ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும் . தரிசனத்திலோ சொப்பனத்திலோ உம் முகத்தை காண் வேண்டும்' என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது அனுதின ஜெபத்தில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. ஒருமுறை அவர்கள் வெளி மாநிலத்திற்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்தார்கள். அச்சமயம் தன் குடும்பத்தினரோடு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தார்கள்.
.
அப்போது வழியருகே ஒருவர் சரியான ஆடையின்றி படுத்திருப்பதை கண்டு அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் காரை நிறுத்தும்படி கூறினார்கள். உடனிருந்தோர், 'இம்மனிதன் குடித்துவிட்டு படுத்திருக்கலாம், நமக்கு ஏன் வீண் வம்பு, போகலாம்' என்றனர். இருப்பினும் இவ்வூழியரது வற்புறுத்தலால் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது அவர் மிகவும் உடல் நலக்குறைவினால் கவனிப்பாரற்று படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை கனிவோடு விசாரித்து விட்டு தங்களிடமிருந்த உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு சென்றார்.
.
ஒரு சில நாட்களுக்கு பின் தன் ஜெப வேளையிலே ஆண்டவரே, நான் உம்மை எப்படியாவது பார்க்க வேண்டும். அதுவே என் உள்ளத்தின் வாஞ்சை என ஜெபித்தார்கள். அந்த நொடிப் பொழுதில் 'இரண்டு தினங்களுக்கு முன்பு என்னை வெளிப்படுத்தினேனே, என்னை நீ பார்த்தாயே' என்று ஆண்டவர் உணர்த்துவதைக் கண்டார். எப்போது ஆண்டவரே என்ற போது, 'அன்று சாலையோரத்தில் உன்னிடம் உணவு பொட்டலத்தையும் தண்ணீரையும் பெற்றுக் கொண்டது நான்தான்' என உணர்த்தினார். அப்போது மத்தேயு 25-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட சம்பவம் அவ்வூழியரின் நினைவிற்கு வந்தது. அந்த வேதப்பகுதியை நாம் தியானிக்கலாம்.

Tuesday, June 25, 2013

இயேசுவை அறிவிக்க போகிறேன்


அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர்.

வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?' என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார்.

குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது.

தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே!

யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது.

ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை.

'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார்.

விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை

Thursday, June 20, 2013

மரணமே உன் கூர் எங்கே? வீர வாலிபனின் கடைசி வரிகள்

நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது - (உன்னதப்பாட்டு 8:6).
.
புஷ்யோக் என்னும் ரஷ்ய வாலிபன் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பான். அவனை காண்பவர்களை கவர்ந்திழுக்கும் உள்ளத்தை உடையவனாய் இருந்தான். மட்டுமல்ல, இனிமையாக பாடி வாத்திய கருவிகளை இசைப்பதில் அவனுக்கு இணை அவன்தான்.
.
அவனது பெற்றோர் அவனை இசைக்கல்லூரியில் சேர்த்தனர். சங்கீதத்தை முறைப்படி கற்றது மட்டுமல்ல, எல்லா இசைக் கருவிகளையும் திறமையாக மீட்டுவதிலும் பிரசித்திப் பெற்றவனாக இருந்தான். தன்னோடு சுட படிக்கும் மாணவன் மூலமாக கிறிஸ்து தம் ஜீவனை கல்வாரியில் எபபடி கொடுத்தார் என்பதை அறிந்தான். அவன் உள்ளம் கிறிஸ்துவுக்காக பொங்கியது. கிறிஸ்து தம் ஒரே ஜீவனை எனக்காக அர்ப்பணித்தாரென்றால் ஏன் என் திறமை தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்பணிக்கக்கூடாது என தீர்மானித்தான்.
.

அவன் பட்டம் பெறும் நாள் வந்தது. அவனது அருமையான பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு, ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அவனுடைய ஆசிரியர்கள் பெருமையோடு தம்தம் ஆசனங்களில் வந்து அமர்ந்தனர்.
..
ரஷ்யாவில் நாடோடிப்பாடலான 'பொன் வாத்தின் மதுரக்கீதம்' என்ற பாடலையே தன் பட்டம் பெறும் பாடலாக தெரிந்தெடுத்தான். தன் முழு

உள்ளத்தையும் அந்த பாடலில் இணைத்து, உருக்கமாக பாடிக் கொண்டே வந்தான். அந்தப் பாடலோடு கூட அப்படியே கல்வாரியின் கீதத்தையும் இணைத்து இயேசுவின் அன்பு, அவரது தியாகத்தையும், உருக்கமான குரலில் பாடி முடித்தான். கல்லைப் போலுள்ள உள்ளங்கள் மெழுகைப்போல உருகின. அவனது ஆசிரியர்கள் திகைத்தார்கள். அரசாங்க அதிகாரிகள் உறுமினார்கள். அவன் மெதுவாய் மேடையில் எழுந்து நின்று, உறுதியான குரலில், 'பாரமான சிலுவையை தம் தோள்களிலே தூக்கிக் கொண்டு எருசலேம் வீதி வழியாக இரத்த வியர்வையோடு நடந்து, எனக்காக ஜீவனைக் கொடுதுது, தன் ஜீவனைப் பார்க்கிலும் என்னை அதிகமாக நேசித்தவரை நான் எப்படி நேசியாமல் இருக்க முடியும்?' என்று கூறினான்.
. 
அப்பொழுதே அவன் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன. அவன் பெற்றோர் கலங்கி தவித்தனர். அவன் அவர்கள் பக்கமாக திரும்பினான், 'அம்மா,கல்வாரி கீதத்தோடு என் வாழ்க்கையின் கீதத்தையும் இணைத்துக் கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்' என்றான். மரண தண்டனைக்காகஅவன் நடந்து சென்றான். அவன் நடையில் ஒரு கெம்பீரம் இருந்தது.

Thursday, May 2, 2013

டேவிட் பிரனாய்ட் (1718 -1747)

ஒருதங்கள் கிராமத்தின் மத்தியில் ஒரு வெள்ளை மனிதர் வந்து தங்கி, கூடாரம் போட்டிருக்கிறார் என்று அந்த கிராமத்தில் வாழும் செவ்விந்தியர்களுக்கு தெரிய வந்தது. அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு கூட்ட மக்கள் அவர் இருந்த கூடாரத்திற்கு வந்தார்கள். அந்த மனிதர் ஒருவேளை துப்பாக்கியோ மற்ற ஆயுதங்களோ வைத்திருக்கலாம் என்று எண்ணி, சத்தமில்லாமல் மெதுவாக அவர் இருந்த கூடாரத்தை சுற்றி வளைத்தார்கள்.
அவர்கள் எட்டிப்பார்த்தபோது, அந்த வெள்ளை மனிதர் முழங்கால் படியிட்டு,
கண்கள் மூடியிருப்பதையும், தலை உயர்த்தப்பட்டு, ஏதோ முணுமுணுத்துக்
கொண்டிருப்பதையும் கண்டார்கள். என்ன செய்கிறார் என்று நினைத்துக்
கொண்டிருந்தபோதே, அவருக்கு முன்னால், ஒரு நல்ல பாம்பு படமெடுத்து
ஆடிக்கொண்டிருப்பதை கண்டார்கள். அந்த பாம்பு அவரை கொத்தி,
இப்பொழுது அவர் மரித்து விழுவார் என்று அவர்கள் பார்த்துக்
கொண்டிருந்தபோதே, அந்த பாம்பு கொஞ்ச நோரம் அப்படியே
இருந்துவிட்டு, பின் தான் வந்தவழியே போய் விட்டது. நடந்த ஒன்றும் அந்த
மனிதருக்கு தெரியாது. ஆனால் அதை கவனித்து கொண்டிருந்த
செவ்விந்தியர்கள் ஒன்றும் பேசாமல் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி போய்
விட்டார்கள்.
அடுத்த நாள் வெள்ளை மனிதராகிய டேவிட் பிரனாய்ட் செவ்விந்தியர்களை

பேசும்படி அணுகியபோது, அவர் மேல் அவர்களுக்கு இருந்த கோபம்
தணிந்திருந்தது. முற்றும், பாம்பு சம்பவத்தை அவர்கள் தங்கள் கிராமத்தில்
அனைவருக்கும் அதற்குள் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த வெள்ளை
மனிதனுக்குள் இருக்கும் ஆவி மிகவும் வல்லமையுள்ளது என்றும் பேசிக்
கொண்டார்கள்.
.

.
1743 ஆம் ஆண்டு, டேவிட் பிரெனாய்ட் அவர்கள் தனது 25ஆவது வயதில்

ஸ்காட்லாந்து மிஷனெரி சங்கத்தால் அமெரிக்காவிற்கு மிஷனெரியாக
அனுப்பப்பட்டார். அவர் டிபி வியாதியால் தாக்கப்பட்டிருந்ததால், அடிக்கடி
இரத்த வாந்தி எடுத்து, மிகவும் பெலவீனமாயிருந்த போதிலும், அவர்
தனக்குள்ளிருந்த வல்லமையான பரிசுத்த ஆவியானவரால், அநேக
செவ்விந்தியர்களை கர்த்தருடைய அன்பிற்குள் கொண்டு வந்த பாத்திரமாக
செயல்பட்டார்./
அவருடைய ஊழியம் நான்கு வருடங்களே ஆனபோதிலும், அவருடைய
ஜெப வாழ்க்கையினாலும், தன்னுடைய தியாகமான வாழ்வினாலும்,
கர்த்தருடைய ஆவியானவர் அவருக்குள் இருந்து செயல்பட்டதினாலும்,
அநேகரை கர்த்தருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்த முடிந்தது. அவர் தனது
29ஆவது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும், அவருடைய
ஊழியத்தைக் குறித்து இன்றும் அநேகர் சொல்லும்படியாக அவருடைய
வாழ்க்கை அமைந்திருந்தது.

Thursday, April 11, 2013

இராபர்ட் மோரிசன் - மிஷனெரி வரலாறு

இராபர்ட் மோரிசன் 1782-1834

பத்தொன்பதாவது நூற்றாண்டில் முதல் பாதியிலே சீனா தேசத்திற்கு மிஷனெரியாகச் சென்றவர் இராபர்ட் மோரிசன். கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றின வேதத்தின் காலேப் இந்த மலைநாட்டை எனக்குத் தாரும் என்று ஜெபித்ததுபோல உலகிலே அதிக கடினமான பணித்தளத்தை எனக்குத் தாரும். அங்கு உமக்கென்று ஊழியம் செய்வேன் என்ற மோரிசனின் ஜெபத்திற்கேற்ப, சுவிசேஷம் வெளிப்படையாகச் சொல்ல அதிகத் தடை இருந்த சீனா தேசத்தில், 25 வருடம் பணிபுரிந்து, பல கடின பாதைகளைக் கடந்து, சீன மொழியில் வேதத்தை முதலாவது மொழி பெயர்த்து அழியாத கிறிஸ்துவின் வார்த்தையை சீன மக்களின் கரத்தில் தந்தவர் மோரிசன்.

பிறப்பும் வளர்ப்பும்

1782-ம் ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில் பிறந்த மோரிசன் எட்டுப் பிள்ளைகளில் கடைசி மகனாவார். தனது தந்தையின் காலணிகள் செய்வதற்கான மர அச்சுகளை உற்பத்தி செய்யும் கம்பெனியில், சிறு வயதிலிருந்தே உதவி வந்தார் மோரிசன். தேவ பக்தியுள்ள அவரது தந்தையின் மூலம் தனது ஓய்வு நேரத்தை வேதத்தைக் கற்பதில் செலவிட்டார். விளையாடுவதற்கு சிறிது நேரமே ஒதுக்கிவிட்டு, தனது சபைப் போதகரிடம் கிறிஸ்துவைக் குறித்தும் வேதப்பாடங்களை ஆராய்ந்து அறியவும் நேரம் செலவழித்தார்.

அழைப்பு

தனது 15-ம் வயதில், உண்மையான மனமாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள் அனுதினமும் வளர ஆரம்பித்தார். சில மிஷனெரி ஸ்தாபனங்களின் மாத பத்திரிக்கைகளை வாங்கி வாசிக்கும்போது, இயேசுவைப் பற்றி அறியப்படாத வெளிநாட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்ற வாஞ்சை அவருக்கு ஏற்பட்டது. தானும் ஒரு மிஷனெரியாகச் செல்லவேண்டும் என்ற பாரம் அனுதினமும் அவரை உந்தித்தள்ள, தனது தரிசனத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் அவரது தாயாரோ தான் உயிருடன் இருக்கும் வரை வெளிநாட்டிற்கு எங்கும் மோரிசன் போகக்கூடாது என்பதில் அதிக உறுதியுடன் இருந்தார். தேவனின் வேளைக்காக காத்துக்கொண்டு, ஜெபித்துக் கொண்டே இருந்தார் மோரிசன். அவரது 20-வது வயதில் அவரது தாய் அதிக சுகவீனப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்ததால், தாயை அன்புடன் கவனித்து, அவரது கடைசி நாட்களில் கூட இருக்க கிடைத்த வாய்ப்பை நினைத்து தேவனைத் துதித்தார். 1802-ம் ஆண்டு அவரது தாயார் மரித்துப் போனார்.

தாயின் மரணத்திற்குப் பிறகு, இங்கிலாந்து சென்று, 2 வருடம் மிஷனெரிப் பயிற்சி பெற்றார். லண்டன் மிஷனெரி சங்கத்திற்கு விண்ணப்பித்தபோது, இவரை தங்களது மிஷனெரியாக ஏற்றுக்கொண்டனர். அதிக சந்தோஷமடைந்த மோரிசன், தனது குடும்பத்தினருக்கு இதை அறிவித்தபோது, ங்கிலாந்து தேசத்திலே ஊழியத்திற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும்போது, அந்நிய தேசத்தில்போய் உன் வாலிப வாழ்வை ஏன் வீணாக்கவேண்டும்? என்று சோர்வடையச் செய்தனர். எனினும், தனது ஊழிய அழைப்பில் மோரிசன் உறுதியாய் நின்றார். சீன தேசத்தைக் குறித்து பாரத்தைப் பெற்ற மோரிசன் அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, லண்டன் பட்டணத்திலே சீன மொழியைக் கற்க ஒரு வாய்ப்பை ஆண்டவர் தந்தார். லண்டன் மிஷனெரி ஸ்தாபனமும் இவருடன் சீனா செல்ல, ஏற்ற சக ஊழியர் கிடைக்கும் வரை காத்திருக்க சொன்னது. 1807-ம் ஆண்டு வரை சரியான சக ஊழியர் கிடைக்காது போனதால் இவரைத் தனியாகவே சீன தேசத்திற்கு அனுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனி இவரை கப்பலில் பயணம் செய்யவும், சீன தேசத்தில் குடியேறவும் அனுமதி தர மறுத்தது. எனவே முதலில் அமெரிக்க தேசம் சென்று அங்குள்ள மாநிலச் செயலாளரான ஜேம்ஸ் மாடிசனிடம் ஒரு அறிமுகக் கடிதம் பெற்றுக்கொண்டு, அமெரிக்கக் கப்பலில் சீன தேசத்திற்கு புறப்பட்டார்.

ஏழு மாதப் பிரயாணத்திற்குப் பிறகு 1807-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவிலுள்ள கேன்டன் என்ற பகுதிக்கு வந்து சேர்ந்தார். கேன்டனில் இருந்த அமெரிக்கக் கவுன்சில் இவரை ஏற்றுக்கொண்டது. ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியர் இவரை சந்தேகக்கொண்டு கண்காணிக்க ஆரம்பித்தனர். ஏனெனில் அந்நாட்களில் கிழக்கிந்தியக் கம்பெனியர் சுவிசேஷம் சொல்வதற்கு முற்றிலும் தடைசெய்து, வியாபாரத்தில் மட்டும் கவனத்தை செலுத்தினர். எனவே மோரிசனுக்கு சீனா மொழியைக் கற்பது கூட அதிக ரகசியமாகக் செய்யப்பட வேண்டியதாயிற்று. சக ஊழியர் கூட இல்லாதது, அதிக தனிமையை உணரவைத்தது. வீட்டிலிருந்தும் கடிதத் தொடர்பே இல்லாதது, அவரை அதிகம் சோர்வுறச் செய்தது. தனது நண்பனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் நேற்று உன்னிடமிருந்து நான் பெற்ற இரண்டாவது கடிதம். ஆனால் இதுவரை நான் 200 கடிதங்கள் எழுதியுள்ளேன். என் கடிதங்களைப் பெற்ற அனைவரும் அதிக வேலைப் பளுவினால் எனக்குக் கடிதம் எழுத இயலவில்லை போலும் என்கிறார்.

சுவிசேஷத்தை வெளிப்படையாகப் பிரசங்கிக்கக்கூடாது என்ற தடை கேன்டனில் இருந்த போதும், மோரிசன் தனது நேரத்தை வீணடிக்கவில்லை. இரண்டு ரோமன் கத்தோலிக்க நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் சீன மொழியைக் கற்றுக்கொள்ளச் சென்றபோது. அவர்கள் ஒப்புதல் தெரிவித்தபோதும், உமக்கு எங்கள் மொழியைச் சொல்லி தருவதால் எங்கள் உயிருக்கு ஆபத்து உண்டு. அதிகாரிகள் எங்களைக் கைதுசெய்து கொடுமைக்கு ஆளாக்குவதற்கு முன், நாங்களே எங்களை மாய்த்துக்கொள்ள எப்போதும் விஷம் வைத்து உள்ளோம் என்றனர். இவர்களிடம் ஜெபத்துடன் மொழியை நன்கு கற்றுக் கொண்டு முதலில் சீன அகராதியை உண்டு பண்ணி ரகசியமாக வேதத்தையும் மொழி பெயர்க்கலானார்.

கேன்டன் வந்து 18 மாதத்திலே சீன மொழியில் அகராதியை ஆயத்தம்பண்ணி, தந்த மோரிசனை கிழக்கிந்திய கம்பெனியார் பாராட்டி அவருக்கு மொழிபெயர்ப்பாளர் என்ற பதவியைத் தந்து மாத வருமானமும் தர முன்வந்தனர்.

குடும்ப வாழ்வு

சீன தேசத்தில் வாழ்ந்து வந்த இங்கிலாந்து மருத்துவரின் மகளான மேரி மார்டேனை திருமணம் புரிந்தார். சீனா தட்பவெப்ப சூழ்நிலையில் மேரி அதிக சுகவீனமடைந்து, 1815-ம் ஆண்டு, தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் இங்கிலாந்து போக நேர்ந்தது. அதிகமான வேதனையுடன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தனுப்பிய மோரிசன், தன்னுடைய முழு நேரத்தையும் ஊழியத்தில் செலவிட்டார். ஆறு வருடப் பிரிவுக்குப் பிறகு மேரியும் பிள்ளைகளும் 1821-ம் ஆண்டு சீனா வந்தபோதிலும் சிறிது நாட்களிலே மேரி சுகவீனமடைந்து மரித்துப்போனார். 9 வயது மகள் ரெபேக்காவும், ஏழு வயது மகன் ஜாணும் மறுபடியும் இங்கிலாந்து தேசத்திற்குக் கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். குடும்ப வாழ்வில் பல கஷ்டங்களையும், மனவேதனையையும் அனுபவித்த மோரிசன், பிள்ளைகள் போனபிறகு, தனிமையில் வேதத்தை மொழிபெயர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

சீன மொழியில் அவரது அறிவுத்திறன் வெகுவாக விருத்தியடைந்தது. சுவிசேஷத்திற்கு சீனாவில் முதல் மிஷனெரியாக இவர் கருதப்பட்டாலும் பகிரங்கமாக சுவிசேஷம் சொல்ல முடியவில்லை. ஊழியத்தின் முதல் விசுவாசி பட்டம், ஊழியம் ஆரம்பிக்கப்பட்டு, ஏழாவது வருடமே கிடைத்தது. மனித நடமாட்டம் இல்லாத இடத்தில், சீன அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகளின் கவனத்தில் இல்லாத பகுதியில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. சீனாவில் வாழ இடம் கிடைத்ததே கிழ்க்கிந்தியக் கம்பெனியரின் ஆதரவால்தான். கிழக்கிந்தியக் கம்பெனியர் இவரது சுவிசேஷப்பணிக்கு அதிகத் தடையாக இருந்தனர்.

1815-ம் ஆண்டு, சீன மொழியில் புதிய ஏற்பாட்டை, மொழிபெயர்த்து, வெளியிட்டபோது, கம்பெனியர் மோரிசனை வேலை நீக்கம் செய்தனர். அதிகக் கவலையுற்ற மோரிசன் தேவனைப்பற்றிக் கொண்டு ஜெபித்தபோது, அவரது வேலை நீக்க உத்தரவு அமலாக்கப்படாமல், ரத்து செய்யப்பட்டது. மோரிசனின் சீனமொழி ஞானம் கம்பெனியருக்கு அவசியமாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியரின் அச்சுறுத்தலும், சீனாவிலிருந்த ஒருசில கிறிஸ்தவர்களின் எதிர்ப்பும், இவரது ஊழியத்திற்கு அதிகத் தடையாக இருந்தது. எனினும் 1824-ம் ஆண்டு வேதத்தை முழுவதும் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இங்கிலாந்து தேசத்திற்கு விடுமுறைக்குச் சென்று, இரண்டு வருடம் அங்குள்ள பல பகுதிகளில் சீன தேசத்தின் தேவையை பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் மிஷனரியாக வர முன் வந்தவர்களுக்கு சீன மொழியை கற்றுக்கொடுத்தார். சீனப் பெண்கள் மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்படவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி தனது வீட்டிலே ஊழிய வாஞ்சையுள்ள பெண்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்தினார். அந்த வகுப்பில் பயின்ற அநேகர் பின் சீனாவிற்கு மிஷனெரியாகச் சென்றனர். அவர்களில் ஒருவர்தான் சீனா சென்ற மிஷனெரி மேரி அலடர்சே.

1826-ம் ஆண்டு மறுபடியும் சீனா வந்து, கேன்டன் பகுதியில் தனது பணியைச் செய்தார். சில கிறிஸ்தவ இலக்கியங்களையும் சீன மொழியில் மொழி பெயர்த்தார். இங்கிலாந்து, சீனா தேசத்திற்கு இடையேயுள்ள வியாபாரத் தொடர்புகளுக்கு மத்தியஸ்தராகப் பணி புரிந்தார். கம்பெனி வேலை, ஊழியம் என்று அதிக வேலைப் பளுவினால், பெலன் இழந்து, சுகவீனப்பட்டு 1834-ம் ஆண்டு மரித்துப்போனார். இவரது மரணத்திற்குப்பிறகு சில நாட்களிலே கிழக்கிந்திய கம்பெனியாரும், சின்ன அரசியல் நிலைமையினால் சீனாவைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சீனாவில் 25 வருடம் கடினமாகப் பணி செய்தும், சிலரை மட்டுமே கிறிஸ்துவுக்குள் வழிநடத்த முடிந்தபோதிலும், வேதத்தைச் சீன மொழியில் மொழிபெயர்த்து அழியாப்பணி செய்தார்.

கடினமான பணித்தளத்திலும் ஆண்டவருக்காகச் சாதனை புரிய நம்மில் எத்தனை பேர் ஆயத்தம்.

எலிசபெத் ஃப்ரை - மிஷனெரி வரலாறு

எலிசபெத் ஃப்ரை (1780-1845)
சிறைக் கைதிகளின் மிஷனெரி (1789-1845)
குற்றம் செய்த‌தால் பிடிக்கப்ப‌ட்டு, தண்டனை கிடைத்ததால் அடைக்கப்ப‌ட்டு, சிறைச் சாலையில் காலங்களைக் கழிப்பவர்களை சமூகம் பொருட் படுத்துவதில்லை. ஆனால் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அவர்களை மறப்பதில்லை. இன்று சிறை ஊழியம் பல நாடுகளிலும், பல சபைகளிலும் தொடர்ந்து நடத்தப்ப்ட்டு வரும் உன்னத ஊழியம். அவைகள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது எலிசபெத் ஃப்ரை ஆரம்பித்த ஊழியமே.

இங்கிலாந்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த எலிசபெத் வாலிபப் பருவத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டார். நார்விக் பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் நார்விக் நகரின் ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுப்பதும், ஏழைக் குழந்தைகளுக்கு ஞாயிறு பாட சாலை நடத்துவதும் அவருடைய ஊழியமாக இருந்தது. “குவேக்கர்ஸ்” என்னும் சபைப்பிரிவைச் சேர்ந்தவர் இவர்.

திருமணமான பின்பு எலிசபெத் ஃப்ரை எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் ஊழியத்தைத் தொடர்ந்தார். சுகவீனர்களைப் பராமரிக்கவும். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் துவங்கினார். ஆனால் அந்த ஊழியத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது.

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூகேட் என்று அழைக்கப்ப்டும் சிறைச்சாலையில் சீர்கெட்ட நிலைமைகள் இருப்பதாக அறிந்த எலிசபெத் உடனே செயல்பட ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மிகச்சிறிய அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். எவ்வித சுகாதாரமும் இல்லாமல் அழுக்கிலும், பயங்கரக் குளிரிலும் அவர்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், எலிசபெத் நகரத்தின் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அதுவரை கைதிகளைப் பற்றிய அக்கறை யாருக்குமே இல்லை. நாளடைவில் எலிசபெத்தின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. சிறைச்சாலையின் நிலைமையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.

ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் ஜெபமும், வேத வாசிப்பும் நடத்தப்பட்டது. தையற் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்ட‌து. இதுவரை வாழ்வை விரக்தியுடன் கழித்த கைதிகள் தையற் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதில் கிடைத்த வருமானம் அவர்களை நேர்மையுடனும், சுய மரியாதையுடனும் நடக்க உதவியது.

எலிசபெத் ஃப்ரை செய்த மற்றுமொரு முக்கிய சீர்திருத்தம் உண்டு. அந்த நாட்களில் லண்டன் நகரிலிருந்து கைதிகளைக் கப்பலில் ஏற்றி வெகு தூரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சிறைகளுக்குக் கொண்டு போய் விடுவது வழக்கம். அப்படிக் கொண்டு போகும் போது பெண் கைதிகளை அதிகாரிகள் மிகவும் ஈனமாக நடத்தினார்கள். நீண்ட கடல் யாத்திரையின்போது கூட கைதிகளின் விலங்குகளைக் கழற்றவில்லை. நோயுள்ளோருக்கு எந்தவித மருத்துவ சிகிட்சைகளையும் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவை அடைந்த பின்பும் கைதிகள் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

இவைகளை அறிந்த எலிசபெத் ஃப்ரை அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட ஆரம்பித்தார். அவருடைய விடாமுயற்சியினால், மேலே கூறப்பட்ட கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

நியூகேட்டில் ஆரம்பித்த சிறை சீர்திருத்தங்கள் விரைவில் நாட்டிலுள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் வலியுறுத்தப்பட்டது.

எலிசபெத் ஃப்ரையின் கனிந்த இதயத்தைக் கைதிகள் கண்கூடாகக் கண்டனர். ஒவ்வொரு தடவையும் கைதிக் கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது, எலிசபெத் அங்கு சென்று எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு வேதாகமமும், கம்பளி உடைகள் பின்னுவதற்கு வேண்டிய நூல்களையும், ஊசிகளையும் கொடுத்து அன்புடன் வழியனுப்பிவிட்டு வருவார். இப்படி ஒன்றிரண்டு தடவைகள் அல்ல, 25 வருடங்களாக ஊழியம் செய்தார்.

பெண்கள் அதிகமாக வெளியே செல்வதை சமுதாயம் விரும்பாத காலக் கட்டத்தில் எலிசபெத் ஃப்ரையைத் துணிச்சலுடன் செயல்பட வைத்தது, கர்த்தர் மீது அவர் வைத்த அளவற்ற அன்பும், பயனுள்ள சேவையைச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தான். அவரை அவ்வாறான ஊழியத்திற்கு அழைப்பித்தது.

கட்டுண்டவர்களை விடுதலையாக்க வந்த கர்த்தராகிய இயேசுவை காவலில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்கும்போது, ‘காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்லி மகிழுவார்.
சிறை ஊழியங்களுக்காக ஜெபிப்போம்!
அகில உலகுக்கு எலிசபெத் ஃப்ரை ஒரு சிறை சீர்திருத்தக்காரர் என்று மட்டுமே தோன்றினாலும் கிறிஸ்தவ வட்டாரத்தில் அவர் சிறைக் கைதிகளின் மிஷனெரி என்றே கருதப்படுகிறார்

வில்லியம் கேரி - வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி (William Carey) (ஆகஸ்ட் 17, 1761ஜூன் 9, 1834) ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக (இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்) இந்தியாவில் ஊழியம் செய்தவர். இவர் ’தற்கால ஊழியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். பப்திஸ்த மிஷினெரி சங்கத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் டச்சுக் காலனியான செராம்பூர், கொல்கத்தாவில் மிஷனரியாக பணியாற்றி வந்தவர், இவர் விவிலியத்தை பெங்காலி, சமஸ்கிருதம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் கேரி இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷயரில் பவுலஸ்புரி என்ற கிராமத்தில் எட்மண்ட், எலிசபெத் கேரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். தந்தை எட்மண்ட் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் ஆறு வயதாக இருக்கும் போது தந்தை அக்கிராமத்தின் பாடசாலை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. செடிகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மிகவும் இள வயதிலேயே இலத்தீன், கிரேக்க மொழி]]களை தானே கற்றுக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தார்.
தமது தந்தையின் விருப்பத்தின்படி, பதினான்காவது வயதில் அருகே உள்ள ஹெக்கில்டன் என்னும் கிராமத்தில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் கீழ் மாணவராகச் சேர்ந்தார். இவரது எஜமானன் கிளார்க் நிக்கோலஸ் அவரைப்போலவே ஆலயம் செல்லுபவராகவே காணப்பட்டார். அவரது சக மாணவராக இருந்த ஜோன் வார் என்பவர் கடமைக்காக மாத்திரம் ஆலயம் செல்வதை வெறுப்பவர். அவரிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து அறிந்து, தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். இங்கிலாந்து திருச்சபையில் இருந்து விலகிய கேரி ஹெக்கில்டன்னில் ஒரு சிறிய குழு கூடுகை(Congregational) திருச்சபையை ஆரம்பித்தார். நிக்கோலஸ் கேரிக்கு, தனது கிராமத்தில் கல்லூரி சென்று பயின்ற ஒருவர் மூலம் கிரேக்கம் கற்றுக்கொடுத்தார்.

இந்தியா வருகை

1781 ஜூன் 10 இல் டொலி என்பாரைத் திருமணம் செய்தார். பப்திஸ்த சபை பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் ஒரு மிஷனெரி, இந்தியாவின் கிறிஸ்தவ மத தேவைகளைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வில்லியம் கேரி, அந்தப் பேச்சின் மூலம் சவாலைப் பெற்றவராய், இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்லும்படியாகத் தன்னை அர்ப்பணித்தார்.
வில்லியம் கேரி, குடும்பத்துடன் 1793 நவம்பர் 9 கல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தார்.
கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும், மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் மொழியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்பொழுது வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும், தன் மனைவியையும் இழந்தார்.
இந்த சமயத்தில் செராம்பூரில் ஒரு இளம் மிஷனெரிக்குழுவுடன் இணைந்து வேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தனர். ஆனால் அவர்களுடைய அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் நெருப்புக்கு இரையானது. ஆனாலும் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்து வேத நூலை பல மொழிகளில் மொழிபெயர்த்தனர்.
வில்லியம் கேரி 1834 ஜூன் 9இல் மறைந்தார்

Monday, April 8, 2013

வைராக்கியம் உள்ள ஊழியக்காரன் - மர்பி

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர். வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?' என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர். ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார். குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது. தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே!
.
யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது. ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை. 'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார். விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை.
.
ஊழியம் செய்ததனிமித்தம், வந்த நிந்தனையால், உபத்திரவத்தினால், சொந்த ஜனத்தாரின் அவமானப் பேச்சினால் சோர்ந்து போயுள்ள அருமை சகோதரனே, சகோதரியே, நான் சவுக்கடி பட்டால் என்ன, என் விரல் போனால் என்ன? என்று கேட்ட பக்தர்களின் வைராக்கியம் உங்களையும் பற்றி பிடிக்கட்டும். 'அவர்கள் என்னை அவமானப்படுத்தினால் என்ன? என்னை நிந்தித்தால் என்ன? நான் மீண்டும் கிறிஸ்துவின் பணியை உற்சாகமாய் செய்வேன். நான் மீண்டும் அங்கு செல்வேன். என் இலக்கு பூமிக்குரியதல்ல, அதைவிட மேலான ஜீவ கிரீடமே! அதை யாரோ ஒருவரது வார்த்தைக்காக ஒருபோதும் இழக்க மாட்டேன்' என வைராக்கியமாய் இன்றே புறப்படுவோமா? கர்த்தர் நம்மோடிருக்கிறார்! ஆமென் அல்லேலூயா!

Wednesday, March 20, 2013

உண்மையான ஊழியன்

ரோட்டின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருபபு தைத்துக் கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக் கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்தபிறகு, அவனது தாயை கவனிக்க அது கைக்கொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ் போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய் நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான்.
.
எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், 'மிகவும் சிரத்தை

எடுத்து, கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும்
மற்றவர்களிடம இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் காணப்படுகிறதே அது
என்ன?' என்று கேட்டார். சிறுவன் மகிழ்ச்சியோடு, 'ஐயா நான் ஒரு
கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்துவின் குணநலன்களை என் வாழ்விலும்
செயல்படுத்த பிரயாசப்படுபவன், அதோடு ஒவ்வொருவருடைய
காலணிகளை நான் பழுதுபார்க்கும்போதும், இயேசுராஜா என்னிடம் வந்து
என் காலணிகளுக்கு பாலிஷ் போடு, என்று சொன்னால் நான் எப்படி செய்து
கொடுப்பேனோ அப்படித்தான் உங்கள் ஒவ்வொருவருக்கும் செய்கிறேன்'
என்று கூறினான். அந்த நபர் இவனது வார்த்தையின் மூலம் கிறிஸ்துவைக்
குறித்த அறிந்து வேதத்தை வாசித்து, கர்த்தரை தன் சொந்த இரட்சகராக
ஏற்றுக் கொண்டார்.

Sunday, March 17, 2013

கிறிஸ்தவ விசுவாசத்தின் மேன்மை

Title Link - http://www.youtube.com/watch?v=kY-l551hK0I

மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே என்ற வெற்றி முழக்கங்கள் கேட்பது கிறிஸ்துவின் அடியார்களிடம் மட்டுமே.ஆம் ஆதி கிறிஸ்தவ சபை அப்படித்தான் அஸ்திபாரப்படுத்தப்பட்டது.கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள அன்புக்கும்,விசுவாசத்துக்கும் எதிராக உலகின் எந்த ஒரு சக்திக்கும் நிற்கமுடியவில்லை.நாமும் ஆண்டவருக்காக நம்மை அர்பணிப்போமாக.

Sunday, February 24, 2013

FMPB - முதல் மிஷனரியான Rev.Harris Hilton

FMPB (Friends Missionary Prayer Band) என்ற மிஷனரி ஸ்தாபனத்தின் முதல் மிஷனரியான Rev.Harris Hilton (வயது 75) அவர்கள் 2012 டிசம்பர் 16ம் தேதி கர்த்தருக்குள் மரித்தார். அவர் சிமெண்ட் ஃபேக்ட்டரியில் சூப்ரவைசராக பணியாற்றி, பின்பு மிஷனிரி ஊழியத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்தார். ஆசியாவிலேயே மிக அதிக மிஷனரிகளை கொண்ட ஸ்தாபனம் FMPB மிஷனரி ஸ்தாபனமாகும். டாக்டர்.சாம்கமலேசன், சகோ.P.சாமுவேல், Dr.Rev.தியோடர் வில்லியம்ஸ் இன்னும் சிலரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் FMPB மிஷனரி ஸ்தாபனம். சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் FMPB பொது செயலாரராக பல வருடங்கள் பொறுப்பேற்று, FMPB முழுநேர ஊழியராகவும் பணியாற்றினார். 

1969ம் வருடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியமலை (சந்தனமர வீரப்பன் வாழ்ந்த அடர்த்தியான வனமாகும்) என்ற மலையில் வாழும் ஆதிவாசிகள் வசிக்கும் பணிதளத்தில் சுவிசேஷம் அறிவிக்கும் முதல்மிஷனரி பணியை FMPB தொடங்கியது. அப்போது டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நானும், முதல் மிஷனரியாக சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களுடன் அந்த மலையில் வைத்து FMPB தலைவர்களால் முதல் மிஷனரிகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நாங்கள் இருவரும் அங்கு பன்றி வளர்க்கும் குட்டையான குடிசைக்குள் தங்கி ஊழியம் செய்தோம். நடுவில் மிஷனரி ஊழியம் பணம் இல்லாததால் தடைப்பட்டது. நாங்களும் டேனிஷ்பேட்டைக்கே திரும்பி வந்தோம். பணம் FMPB ஸ்தாபனத்துக்கு சேரும்வரை தற்காலிகமாக சிலமாதம் மிஷனரி ஊழியம் நிறுத்தி வைக்கப்பட்டது. சில வாரங்களில் மிஷனரி பணி மீண்டும் தொடங்கப்பட்டபோது நான் என் குடும்ப பொறுப்பு காரணமாக மிஷனரி ஊழியத்துக்கு போகாமல் பழையபடி டாக்டர் தொழில் செய்யவேண்டிய இக்கட்டான நிலை என் வீட்டில் ஏற்பட்டது. ஆனால் ஹாரிஸ் ஹில்டனும் வேறு சிலரும் அதே மலைக்கு மிஷனரிகளாக மறுபடியும் புறப்பட்டு சென்றனர். ஹாரிஸ் ஹில்டன் மிகுந்த ஆத்தும பாரம் உள்ளவர். அவருக்கு மனைவி, நான்கு பிள்ளைகள் உண்டு. பல கஷ்டங்களுக்கு மத்தியில் அற்புதமாக ஊழியம் செய்தார். மலையில் சபை உருவாயிற்று, ஆலயம் கட்டப்பட்டது, தேவ நாமம் மகிமைப்பட்டது.

சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்கள் வேதாகம கல்லூரிக்கு அனுப்பபட்டு ஆயராக ஆக்கப்பட்டு FMPBயின் எல்லா மிஷனரி பணிதளங்களை சந்தித்து செயல்படும் ஊழியராக பொறுப்பேற்றார். அதன்பின் மிஷனரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சர்க்கரை நோயினால் ஒருகால் வெட்டி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மனைவியும் மரித்தார். இப்படி பல போராட்டங்கள் மத்தியிலும் தொடர்ந்து மிஷனரி ஊழியத்தை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தார், நல்ல ஓட்டத்தை முடித்தார்.
2012 டிசம்பர் 16ம் தேதி கிட்னி பெயிலியர் ஏற்பட்டு மரண தருவாயில் டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நல்ல ஆயத்தத்துடன் தன் ஆத்துமாவை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். 

கடந்த மாதம் நான் ராஜஸ்தான் சென்றபோது டெல்லி சென்று ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அவரை சந்தித்து மரணத்துக்கு அவரை ஆயத்தப்படுத்தி ஜெபித்து வந்தது எனக்கு திருப்தியாக இருந்தது. அவருக்கோ அன்றைய என் ஜெபம் ஆத்ம பெலனாக இருந்தது. அவரின் நல்ல ஊழியத்துக்காக, அவரின் சாட்சியுள்ள ஜீவியத்துக்காக தேவனைத் துதிக்கிறேன்.

அவர் பெற்ற பிள்ளைகள் நான்கு பேரும் ஊழியத்தில் இருக்கிறார்கள். மருமக்களும் ஊழியத்தை செய்கிறார்கள். அவருடைய பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் கர்த்தர் ஆறுதலை அளிப்பாராக. ஆமென்.

Thursday, January 31, 2013

உணமையான ஊழிய அர்ப்பணிப்பு - டாமியன்

பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
.
1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்த தீவில் அவர் கொண்டு வந்தார். ஏதோ குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளை கொடுத்து, ஜனங்களை ஆறுதல் படுத்தினார்.
.
ஒரு நாள் அவர் குளிக்க செல்லும்போது, தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில் பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஓ, அவருக்கும் தொழுநோய் பற்றி கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம், 'நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன்' என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் 'தொழுநோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்' என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே தான் அளவு கடந்த அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டு பாராமல், தன் உடலையும், உயிரையும் தொழு நோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதை எடுத்து காட்டின அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.