Showing posts with label story. Show all posts
Showing posts with label story. Show all posts

Saturday, January 19, 2013

ட்ரோஜான் குதிரை (Trojan Horse)

நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள். அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.
.
இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், 'மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்' என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் 'இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது' என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.
.
இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

Sunday, January 13, 2013

இயேசு ஏன் பிறந்தார்?

ஒரு ஊரை சேர்ந்த மக்கள் வித்தியாசமான ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதை கேள்விப்பட்ட ஒரு புகழ்பெற்ற மருத்துவர்
அந்த நோயை ஆராய்ந்து, நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்தார். தனதுமிகுந்த அலுவல்கள் மத்தியிலும் அந்த மருத்துவர் ஒரு நாளை நியமித்து அன்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். இச்செய்தியைக் கேட்ட ஊரார் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவருக்கு பெரிய அளவில் மரியாதையும் வரவேற்பும் கொடுக்க விரும்பினர். அந்த நாளும் வந்தது. மக்கள் அவரை குதிரையில் ஏற்றி, வீதி வீதியாய ஊர்வலம் வந்து கௌரவப்படுத்தினர். பட்டடாசுகள் வெடித்தனர். பல பிரமுகர்கள் அவரை வாழ்த்திப் பேசி புகழாரம் சூட்டினர். பின் அவருக்கு அறுசுவை உணவுகளை தயாரிப்பதிலும், அவரை கவனிப்பதிலும் மூழ்கிப்போன அந்த மக்கள் அவரிடம் சிகிச்சை பெற கவனம் செலுத்தவில்லை. மாலை வந்தபோது மருத்துவர் அவசர வேலையாக ஊருக்கு திரும்பினார். அவர்களோ தொடர்ந்து நோயாளிகளாகவே இருந்தனர்.
.

இந்த ஜனங்கள் செய்தவை யாவும் நல்ல செயல்கள்தான். ஆயினும் முக்கிய
நோக்கத்திற்கு அவர்கள் முதல் கவனம் செலுத்தவில்லை. இதுப்போலவே
பாவிகளை இரட்சிக்க உலகத்தில் உதித்த இயேசுகிறிஸ்துவின் பிறப்பை
கோடிக்கணக்கானோர் வெகு விமரிசையாக வருடந்தோறும்
கொண்டாடுகிறார்கள். டிசம்பா மாதம் வந்துவிட்டால் விசேஷ
ஆராதனைகள், பாடல் நிகழ்ச்சிகள், வண்ண விளக்குகள், புத்தாடைகள்,
இனிப்பு, விருந்து என கொண்டாட்டத்தின் நாட்களாக அவை மாறி
விடுகின்றன. இன்னும் அநேக இடங்களில் குடித்து கும்மாளமிடுவதும்
கிறிஸ்மஸின் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால்
இயேசுகிறிஸ்து எதற்காக வந்தார்? என் பாவத்திலிருந்து விடுதலையளிக்க
அல்லவா வந்தார். அதை நான் பெற்றிருக்கிருக்கிறேனா என்று அநேகர்
சிந்திப்பதில்லை.
.


பொதுவாக எல்லா மனிதர்களிடமும் பாவம் என்ற கொடிய நோய்
காணப்படுகிறது. அதன் வெளிப்பாடுகள் தான் தவறான சுபாவம், தவறான
இயல்பு. தவறான செயல், தவறான மனநிலை ஆகும். அந்த பொல்லாத
பிசாசின் கிரியைகளை அழித்து, நமக்கு விடுதலையளிக்கவே
இயேசுகிறிஸ்து உலகத்திற்கு வந்தார். அவர் நமது கனத்தையும்,
மரியாதையையும், காணிக்கையையும் பெறுவதை பிரதான நோக்கமாக
கொண்டு பூமிக்கு வரவில்லை, ஒரு விசேஷ செயலை ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் செய்ய வந்தார். அதாவது நமக்குள் இயங்கும் பாவத்தின்
ஆதிக்கத்தை அழித்து அப்புறப்படுத்தவே வந்தார்.

ஜெபம் கேட்கப்படாததன் ஒரு காரணம்

ராஜன் ஒரு உதவியை எதிர்பார்த்து தன் நண்பனுக்கு போன் செய்தான். அநத நண்பர் காவல் துறையிலே உயர்ந்த பதவியில் இருந்தார். ராஜன் தொலைபேசியை எடுத்தான். எண்களை சுழற்றினான். நண்பர் இன்னும் போனை எடுக்கவில்லை. மணி அடித்து கொண்டேயிருந்தது. ராஜன் தனது தேவையை மளமளவென்று சொன்னான். போனை வைத்து விட்டான். மறுநாள் 'ஐயோ நான் அவரிடம் கேட்டேனே அவர் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே' என்று புலம்பினான். ஆனால் அவனோ அவரிடம் பேசவே இல்லை. அவர் மறுமுனையில் போனை எடுக்கவே இல்லை. ஆம் நம்மில் அநேகருடைய ஜெபமும் இப்படித்தான் இருக்கிறது, 'ஆண்டவரே இதுதான் என்னுடைய வேண்டுதல். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்'. ஆண்டவர் அந்த முனையில் போனை எடுக்ககூட இல்லை. இப்பொழுது நீங்கள் தேவனிடம் ஜெபிக்கவில்லை. உங்களிடமே ஜெபித்திருக்கிறீர்கள். 'நான் ஜெபித்து விட்டேன், தேவன் எனக்கு பதில் கொடுப்பார்' என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும் ஜெபங்கள் கேட்க கூடாதபடி சில தடைகள் நம் வாழ்வில் காணப்படுமேயானால், அதை திருத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Saturday, December 22, 2012

பொறாமை என்னும் எலும்புருக்கி

சிற்பி ஒருவன் மிக சிறப்பானச் சிலை ஒன்றை செய்து மக்களின் பார்வைக்காக வைத்தான். அதன் அருகில் ஒரு கரும்பலகையையும் வைத்து பார்வையாளர்களின் கருத்தை எழுதும்படி குறித்திருந்தான். பார்த்தவர்கள் அனைவரும் அதன் கலை நுணுக்கத்தை வியந்து பாராட்டி, சிற்பியை புகழ்ந்து எழுதினார்கள். ஆனால் அங்கே இன்னொரு சிற்பி ஒருவன் வந்தான். மனதில் நிரம்பியிருந்த பொறாமை அவனுடைய கண்களை குறை கண்டுபிடிக்க ஏவியது. எனவே பல மணி நேரங்கள் சிலையை மிக கவனமாக சோதித்தான். இறுதியாக அதில் ஒரு குறையை கண்டுபிடித்தான். அந்த சிறிய குறையை பெரிய எழுத்துக்களில் அந்த கரும்பலகையில் எழுதினான். அதன் பின்னர் அங்கே வந்தவர்களெல்லாம் அந்த குறையையே கவனமாக பார்த்தனர். சிலையின் அழகு அவர்களுக்கு தெரியவில்லை.

Saturday, December 15, 2012

தேவனுடைய பார்வையில் ஐசுவரியவான்

செல்வந்தனான மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான கார்களும், பெரிய மாளிகையும், அநேக வீட்டு வேலைக்காரர்களும் இருந்தார்கள். அந்த மனிதன் கடவுளைக் குறித்து எந்த பயமும் இல்லாதவராக, தன் பணத்தை தன் இஷ்டப்படி அனுபவித்து கொண்டிருந்தார்.
.
அவருக்கு ஜான் என்கிற ஒரு கிறிஸ்தவ வேலைக்காரன் இருந்தார். அவர் வேதத்தை வாசித்து, தினமும் ஜெபித்து கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிற மனிதனாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவருக்கு தேவன், அந்த ஊரில் உள்ள பணக்கார மனிதன் மரிக்க போகிறான் என்று வெளிப்படுத்தினார்.
.
ஜானுக்கு தெரியும், அந்த ஊரிலேயே மிகவும் பணக்கார மனிதர் தன் எஜமான்தான் என்று. அவருக்காக ஜெபித்து விட்டு, அந்த பணக்காரரிடம் சென்று, 'ஐயா இன்று நான் ஒரு கனவு கண்டேன், அது என்னை மிகவும் கலங்க வைத்திருக்கிறது. இந்த ஊரில் உள்ள பணக்காரர் இன்று இரவு 12 மணிக்கு மரிக்க போகிறார் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். உடனே நான் எழுந்து விட்டேன். ஐயா நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?' என்று மிகவும் அக்கறையுடன் கேட்டபோது, ஜானை அந்த பணக்காரர் மேலும் கீழும் பார்த்தார். ஏழ்மையான தோற்றம், பணக்காரரிடம் பேசுவதற்கும் அச்சப்பட்டு பேசினது போலிருந்தது அவருடைய சத்தம், ஆனால் நம்பத்தக்கதான அளவு விசுவாசம் நிறைந்த மனிதர். பணக்காரர் சிரித்து விட்டு, சொன்னார், 'ஜான் என்னைப் பற்றி கவலைப்படாதே, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்' என்று கூறிவிட்டு, வீட்டின் உள்ளே சென்று விட்டார்.
.
சற்று நேரம் அங்கே நின்று, கர்த்தரை இவர் ஏற்றுக் கொண்டுள்ளாரா? ஓன்றும் தெரியவில்லையே என்று நினைத்தவாரே, ஜான் அவருக்காக ஜெபித்து விட்டு, தேவன் ஏன் தனக்கு இந்த காரியத்தை வெளிப்படுத்தினார் என்று யோசித்தவாறே தன் வீட்டிற்கு சென்றார். பணக்காரருக்கோ, ஜான் சொன்ன காரியம் உறுத்திற்று. சரி, குடும்ப வைத்தியரை அழைத்து, தன்னை பரிசோரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்த வைத்தியரை அழைத்தார்.
.
அந்த வைத்தியரிடம் காரியத்தை சொல்லி, இரவு 12 மணி வரை அவரை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவராக, அவரோடு சீட்டு விளையாடிவிட்டு, உலகத்தின் காரியங்களை சுற்றி வலம் வந்து பேசி கொண்டிருந்தபோது, 12 மணியாக ஐந்து நிமிடம் இருந்தது. அந்த கடைசி ஐந்து நிமிடங்கள் அந்த பணக்காரரை இருப்புக் கொள்ளாமல் செய்தது.
.
மூன்று நிமிடம், இரண்டு நிமிடம், கடைசியாக ஒரு நிமிடமும் கடந்து, கடிகாரம் 12 அடித்தது. அந்த பணக்காரர் நிம்மதி பெருமூச்சு விட்டார். தான் சாகவில்லை என்ற உணர்வு அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன்னோடு இருந்த வைத்தியருக்கு விடைக் கொடுத்து அனுப்பி விட்டு, தன் படுக்கைக்கு சென்று படுத்திருப்பார், வீட்டு வாசலின் மணி வேகமாக அடித்தது. யார் இந்த நடுராத்திரியில் வந்து கதவை தட்டுவது என்று நினைத்தவராக, கதவை திறந்தபோது, ஒரு சிறுமி, கலைந்த தலையுடனும், ஏழ்மையான உடைகளுடனும், அழுது சிவந்த கண்களோடு நின்றிருந்தாள்.
.
பணக்காரர், 'யார் நீ? உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார், அதற்கு சிறுமி, 'என் தகப்பனார் சற்று நேரம் முன்புதான் இறந்தார்' என்று கூறினாள். அந்த பணக்காரர் 'யார் உன் தகப்பன்?' என்று கேட்டபோது, அந்த சிறுமி, 'உங்கள் வீட்டில் வேலை செய்யும் ஜான்தான் என் அப்பா' என்று கூறினாள். ஜான் தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தபடியால், அவரே தேவனுடைய பார்வையில் ஐசுவரியவானாக, விலைமதிப்பற்றவராக காணப்பட்டார்.

Monday, December 10, 2012

நன்றியோடு இருக்க வேண்டாமா?

ஒரு குருடனான சிறுவன் முக்கியமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தான். அவனுக்கு பக்கத்தில் ஒரு போர்டில் 'நான் குருடனாயிருக்கிறேன். எனக்கு உதவுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகே சிலர் போட்ட நாணயங்கள் சிதறி கிடந்தது.
.
அந்த வழியாக ஒரு மனிதன் கடந்து போனார். அப்போது சில நாணயங்களை எடுத்து அவன் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டு விட்டு, அந்த சிறுவனின் பக்கத்தில் இருந்த போர்டில் சில எழுத்துக்களை எழுதினார்.
.
சற்று நேரத்தில் அவனது பாத்திரம் நாணயங்களால் நிரம்ப ஆரம்பித்தது. சிலர் நின்று அவனுக்கு பணத்தை கொடுத்து சென்றார்கள். சாயங்கால வேளையில் அந்த போர்டை மாற்றி எழுதின மனிதர் என்ன நடக்கிறது என்று அறிய வந்தார். அவரது காலடி சத்தத்தை கேட்டு, அவர்தான் என்று அறிந்த சிறுவன், 'ஐயா நீர் யார்? நீர் என்ன எழுதினீர்? எனக்கு பணம் குவிகிறதே' என்று கேட்டான்.
.
அதற்கு அவர், 'நான் உண்மையைதான் எழுதினேன், நீ எழுதினதையே சற்று மாற்றி எழுதினேன்' என்றார். அதற்கு சிறுவன் 'என்னதான் எழுதினீர்கள் சொல்லுங்கள்' என்றான். அதற்கு அவர், 'இந்த நாள் இனிய நாள், அழகு மிகுந்த நாள், என்னால்தான் அதை பார்க்க முடியவில்லை' இதைத்தான் நான் எழுதினேன் என்றார்.
.
முதலாவது எழுதியிருந்த பலகையில் நான் குருடன் எனக்கு உதவுங்கள் என்று மாத்திரம் எழுதியிருந்தது. ஆனால் மற்றதிலோ இதை காணும் மக்களாகிய நீங்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள், எனக்கு அந்த பாக்கியம் இல்லையே என்று மக்களை அவர்களது பாக்கியத்தை உணர வைத்தது.

கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள்

ஒரு சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான். அவன் முகம் மிகவும் கோபமாக இருந்தது. அதை கண்ட அவனுடைய தாத்தா அவனை அழைத்து 'என்ன நடந்தது? ஏன் கோபமாய் இருக்கிறாய்' என்று கேட்டார். அதற்கு அவன், 'பின்ன என்ன தாத்தா? நானும் அப்பாவும் கடைக்கு போயிருந்தோம். அப்பா எனக்கு ஒரு ஏரோபிளேனை விளையாட வாங்கி தந்தார். நான் அதை வெளியில் எடுத்து கொண்டு போய் பார்த்து கொண்டிருந்தபோது, சில பொறுக்கி பசங்க என்னோடு சண்டையிட்டு, நான் அப்பாவை கூப்பிடுவதற்குள் அதை பறித்து கொண்டு போய் விட்டார்கள். அவன்கள் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால்...' என்று கோபமுடன் கூறினான். அதை கேட்டு கொண்டிருந்த தாத்தா, ' நீ கோபப்பட்டு இப்போது என்ன ஆகப் போகிறது? உன்னுடைய ஏரோப்ளேன் போனது போனதுதான். அது கிடைக்க போகிறது இல்லை, உனக்கு தெரியுமா, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு நரிகள் எப்போதும் இருக்கின்றன. ஓன்று வெள்ளை நரி, மற்றொன்று கறுப்பு நரி. இந்த இரண்டு நரிகளும் எப்போதும் சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. வெள்ளை நரி, போனால் போகட்டும் என்று கூறும், அன்போடு நடந்து கொள்ளும்படி கூறும். ஆனால் கறுப்பு நரி, அது எப்படி, அதை சும்மா விடுவது என்று அதிகமாக வம்பை வளர்த்து கொண்டிருக்கும்' என்று கூறினார். அப்போது அந்த சிறுவன், 'எந்த நரி ஜெயிக்கும்' என்று கேட்டான். அதற்கு தாத்தா, 'எதற்கு நாம் அதிகமாய் தீனி போடுகிறோமோ அதுதான்' என்றார்.

பாய்ச்சினால் பாய்ச்சப்படும்

ஒரு விவசாயியின் நிலம் ஒவ்வொரு வருடமும் நன்கு விளைந்த நிலமாகவும், அவருடைய கதிர்கள் சிறந்ததாகவும் தெரிந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. அதை கண்ட ஒரு பத்திரிக்கை நிருபர், அவரிடம் சென்று, 'எப்படி உம்முடைய நிலம் மாத்திரம் எப்போதும் சிறந்த கதிரை கொடுக்கிறது? அதன் இரகசியம் என்ன?' என்று கேட்டார்.
.
அதற்கு அவர், 'நான் என்னுடைய பயிரின் விதையை என்னுடைய நிலத்தின் பக்கத்தில் விதைப்பவர்களுக்கும் கொடுக்கிறேன்' என்றார். அதற்கு அந்த நிருபர், 'உம்முடைய சிறந்த விதையை கொடுப்பதினால் அவர்களும் உம்மோடு போட்டியிடுவார்களே அதனால் உமக்கு நஷ்டமில்லையா? என்று கேட்டார். அதற்கு விவசாயி, 'அதில்தான் இரகசியம் இருக்கிறது. நான் கொடுக்கும் விதையை அவர்கள் விதைத்து அவை கதிராக வரும்போது, காற்றானது அதிலிருந்து மகரந்தத்தை எடுத்து ஒவ்வொரு வயல் நிலத்திலும் வீசுகிறது. இப்போது என் அயலக நிலத்துக்காரர்களின் விதைகள் மோசமானதாக இருந்தால் அதிலிருந்து வரும் மகரந்தமும் மோசமானதாக இருக்கும். அப்போது மகரந்த சேர்க்கை நிகழும்போது என் கதிர்களும் மோசமானதாக இருக்கும். நான் என் நிலத்திற்கு நல்ல கதிரை எதிர்ப்பார்த்தால் என் பக்கத்து நிலத்துக்காரர்களுக்கும் நல்ல விதையை கொடுக்க வேண்டும். அப்போது நல்ல மகரந்த சேர்க்கையால் என் கதிர்களும் நன்றாக இருக்கின்றன' என்றார். அவர் வாழ்க்கையின் தத்துவத்தை நன்கு அறிந்தவராக இருந்தார். அவருக்கு நல்ல கதிர் கிடைக்க வேண்டும் என்றால் அவரது பக்கத்து நிலத்துக்காரருக்கும் நல்ல விதை கிடைக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம் அவருக்கு இருந்தது.

Sunday, October 28, 2012

அதை விட எனக்கு என்ன வேண்டும்?

ஒரு நாட்டை சேர்ந்த மன்னர் தன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியும்படி அடிக்கடி வேஷம் மாறி, மக்களோடு கலந்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது வழக்கம். ஒரு முறை அவர் அப்படி சென்ற போது, பொது குளியலறையில், அங்கு தண்ணீரை சூடுபடுத்தும் தொழிலாளி இருப்பதை கண்டார். முன்பு இப்போதிருக்கும் ஹீட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலிருந்த நிலைமை. அப்போது அந்த மனிதனிடம் மன்னர் பேசி, அந்த மனிதனை அவருக்கு பிடித்து போயிற்று. தினமும் அவர் அவனுடன் வந்து பேசி போவது வழக்கானது. ஒரு நாள் அவர் அந்த மனிதனிடம் 'நான் தான் இந்த நாட்டு மன்னர்' என்று கூறினார். அதை கேட்ட அந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டான். மன்னர் அவன் தன்னிடமிருந்து பொருள், வசதிகளை கேட்க போகிறான் என்று நினைத்தார். ஆனால் அவனோ அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை. அப்போது மன்னர், 'நான் மன்னர், எது வேண்டுமானாலும் நீ கேள், உனக்கு நான் தருகிறேன்' என்று கூறினார். அதற்கு அந்த மனிதன், 'மன்னரே, நான் ஒரு மிகவும் தாழ்மையுள்ள நிலையில் உள்ளவன் என்றும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதவன் என்றும் நீர் அறிந்தும் என்னிடம் தினமும் வந்து, உங்களையே என்னிடம் தந்து விட்டீர்களே, அதை விட எனக்கு என்ன வேண்டும்?' என்று கண்ணீர் மல்க கேட்டான்.

Thursday, October 18, 2012

ஏன் ஆலயததிற்கு செல்ல வேண்டும்?

ஒரு போதகர் தனது சபைக்கு எப்போதும் வரும் ஒருவர் தொடர்ந்து வராததை கண்டார். சில வாரங்கள் கழித்துஅவர் வராததால்அவரை காண சென்றார். அங்கு அந்த மனிதர்தனியாக நெருப்பு எரியும் இடத்திற்கு பக்கத்தில் அனலுக்காக அமர்ந்திருப்பதை கண்டார். ஆரம்பத்தில் அவரை குசலம் விசாரித்து விட்டுஅவர் பக்கத்தில் போய் அமர்ந்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

இருவரும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். அந்த போதகர் நெருப்பு எரிவதையே பார்த்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து அவர் ஒரு கரண்டியை எடுத்துஎரிந்து கொண்டிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து தனியே வைத்தார். கனகனவென்று எரிந்து கொண்டிருந்த அந்த கரித்துண்டு சற்று நேரம் ஆனவுடன் சாம்பல் பூத்து போய்அப்படியே அடங்கி அணைந்து போனது.

பின்னர் அந்த போதகர் 'சரி நான் போக வேண்டும்என்று சொல்லி எழுந்தார். போவதற்கு முன்மீண்டும் அந்த கரித்துண்டை எடுத்துநெருப்பில் போட்டார். உடனே அது பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த மனிதர், ' போதகர் ஐயா அவர்களே உங்களுடைய அமைதியான இந்த செய்திக்காக நன்றி! நான் அடுத்த வாரம் உங்களை ஆலயத்தில் பார்க்கிறேன்என்று கூறினார்.

ஜெபமும் வெட்டுக்கிளியும்


நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும்போது அதனால் யாரும் பயப்படுவதில்லை. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அதுவே ஒரு முழு படையாக வரும்போது, வழியில் காணப்படும் எந்தவிதமான பச்சையான இலைகளையும் விட்டுவைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும்.

வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும்போது செய்து முடித்துவிடும். பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில்  வெட்டுக்கிளிகளைக் குறித்து,  ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களைவிட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது, அரிய பெரிய காரியங்களை செய்யலாம், பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்

என்ன நடந்தாலும் நம்புவேன்


அநேக வருடங்களுக்கு பிறகு தன் மனைவி கர்ப்பவதியானது குறித்து ஒரு கம்பெனியில் வேலை செய்யும் ஒரு மனிதர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் தன் கூட வேலை செய்யும் சக ஊழியர்களிடம்,  'என் மனைவி கர்ப்பம் தரித்திரிக்கிறாள். கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டார்' என்று சந்தோஷத்தோடு சொன்னபோது, ஒரு சிலர் 'தேவனிடம் பிள்ளையை கேட்டீரோ' என்று அவரை பரிகசித்தனர்.

பிள்ளை பிறந்தபோது, அந்த பிள்ளைக்கு Down Syndrome என்னும் பிறப்பிலேயே காணப்படும் குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தகப்பன், தன் விடுமுறை கழிந்து முதலாம் நாள் வேலையில் சேர்ந்துபோது, எப்படி தன் கூட வேலை செய்பவர்களை சந்திப்பது? கர்த்தரிடம் கேட்டு பெற்று கொண்ட பிள்ளையாயிற்றே, ஆனால் இப்படி குறையோடு பிற்நததை குறித்து கேலி செய்வார்களே என்று நினைத்தவராக, கர்த்தாவே எனக்கு அவர்களுக்கு பதில் சொல்ல நல்ல ஞானத்தை தாரும் என்று ஜெபித்தபடி தன் வேலையில் சேர்ந்தார். அவர் நினைத்தபடியே, ஒருவர் அவரிடம் வந்து, 'உனக்கு ஆண்டவர் இப்படிப்பட்ட பிள்ளையைதான் கொடுத்தாரா' என்று கிண்டலாக கேட்டார். அப்போது என்ன பதில் சொல்வது என்று திகைத்தவராக ஒரு சில நிமிடம் மௌனமாக ஜெபித்த அவர், பின் தைரியமாக, 'நல்லவேளை உனக்கு அப்படிப்பட்ட பிள்ளையை தேவன் கொடுக்காமல், எனக்கு கொடுத்ததற்காக தேவனை துதிக்கிறேன்' என்று கூறினார். இது உண்மையில் நடந்த சம்பவம்.

மாமியார் பிரச்சனை


புதிதாய் திருமணமான தன் மகளை பார்க்க ஒரு தாய் அவர்கள் தங்கியிருந்த பண்ணைக்கு சென்றிருந்தார்கள். போனவுடனே, அந்த இடம் முழுவதையும் தான் பார்வையிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அந்த விவசாய கணவர் தன்னால் இயன்ற மட்டும் அந்த மாமியாரோடு தோழமையோடு இருக்க பார்த்தார். ஆனால் அவர்களோ, முரண்டு பண்ணி,  எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார்கள். தேவையில்லாத ஆலோசனைகளையும்  சொல்லி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அப்படியே பார்த்து கொண்டு வந்து கொண்டிருந்தபோது, குதிரைகள் கட்டியிருந்த லாயத்திற்கு வந்தார்கள். அப்போது ஒரு குதிரை அந்த மாமியாரின் தலையில் ஓங்கி எட்டி உதைத்ததால் அவர்கள் தலை உடைபட்டு, அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள்.

சிலநாட்கள் கழித்து,  நடந்த அடக்க ஆராதனையில் வந்த ஒவ்வொருவரிடமும் அந்த தம்பதியினர் பேசி கொண்டிருந்தனர், அப்போது,  அந்த அடக்க ஆராதனையை நடத்திய போதகர்,  அந்த கணவரிடம் யாராவது பெண் வந்து பேசினால்,  அவர் ஆம் என்பது போல தலையை ஆட்டி பேசுவதையும்,  யாராவது ஆண் வந்த பேசினால்,  இல்லை என்று தலையை ஆட்டி ஏதோ பேசுவதையும் வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்துவிட்டு,  மெதுவாக அந்த கணவரிடம் சென்று 'என்ன விஷயம்?' என்று கேட்டார். அப்போது அந்த கணவர், 'என்னிடம் பெண்கள், பாவம், என்ன ஒரு வருத்தமான செய்தி என்று சொல்லும்போது நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் ஆண்கள் வந்து என்னிடம் அந்த குதிரையை வாடகைக்கு கொடுக்க முடியுமா?  என்று கேட்டபோது,  அவர்களுக்கு இல்லை, ஒரு வருடத்திற்கு அந்த குதிரையை தொடர்ந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்'  என்று சொன்னார்.

கிறிஸ்தவ மாமியார் மருமகள் இடையே எந்த பிரச்சனையும் வர நாம் அனுமதிக்கக் கூடாது. எந்த நாத்தனார் பிரச்சனையும் வர நாம் அனுமதிக்க கூடாது. முடிந்தவரை சமாதானமாயிருக்க முயற்சிக்க வேண்டும். மாமியாருக்கு ஏற்ற கடமைகளை செய்யும்போது அவர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பது குடும்பத்திற்கு நல்லது. நிச்சயமாக நகோமி தன்னைவிட்டு பிரியாத அந்த மருமகளான ரூத்தை ஆசீர்வதித்திருப்பார்கள். அதனால் உலகமே புகழும் வணங்கும் தெய்வமாகிய இயேசுகிறிஸ்துவை தன் சந்ததியில் பெற்று பெரிய பாக்கியத்தை ரூத் பெற்றார்கள்.

மாவீரன் அலெக்ஸாண்டர்

மாவீரன் அலெக்ஸாண்டரை பற்றி அறியாதவர்கள் யாரும் சரித்திரம் படித்தவர்களாக இருக்க முடியாது. தனது இள வயதில் மேசிடோனியாவின் அரசனான அவர், உலகத்தையே தன் காலின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தாகத்தோடு செயல்பட்டவர். பத்து வருடங்களில் உலகத்தை வென்று கொண்டே வந்தவர். அப்படி அவர் ஜெயித்து கொண்டே வந்தபோது, ஒவ்வொரு நாட்டிலும் பேசும் மொழிகளை குறித்தும், அவர்களுடைய கலாச்சாரங்களை குறித்தும் அவர் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். ஏனெனில் அவர் வெற்றி எடுக்கும் நாடுகளில் எந்த மொழியில் பேசுவது, எப்படி செல்வது என்று யோசித்து கொண்டிருந்தார். அதன்படி, அவர் தான் வெற்றி கொள்ளும் நாடுகளில் காலனிகளை அமைத்து, அங்கு கிரேக்க கலாச்சாரங்களை கற்பிக்க ஆரம்பித்தார்.
 
இந்த காரியங்கள் தேவனால் நியமிக்கப்பட்டது என்ற அலெக்சாண்டருக்கு தெரியாது. அவர், தான் உலகத்தையே வென்று, எல்லாரையும் தன் காலின் கீழ் கொண்டு வருவதாக நினைத்து கொண்டிருந்தார்.
தனது திட்டத்தின்படி காலனிகளில் அவர் கிரேக்க மொழியை கற்று கொடுக்க திட்டங்கள் தீட்டி, அதன்படி அவர் ஆட்களை கொண்டு அந்த இடங்களில் கிரேக்க மொழியை கற்று கொடுத்து, மக்கள் அதை பயில ஆரம்பித்தனர். அதனால் தான் செல்லும் இடங்களில் கிரேக்க மொழியில் பேச முடியும் என்பது அவர் எண்ணம். மட்டுமல்ல, அந்த நாடுகளில் முக்கிய பாதைகளையும் அவர் உண்டாக்க ஆரம்பித்தார். தான் பயணம் செல்லும்போது, தனக்கு வசதியாக இருக்கும் என்று காடுகளை வெட்டியும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளை இணைக்கும் பாதைகளை போட ஆரம்பித்தார். அவர் தான் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த காரியங்களை செய்தார். ஆனால் சர்வ ஞானியான நம் தேவன் அவற்றை குறித்து வேறு திட்டம் வைத்திருந்தார்.
அதன்படி, தனது 33 ஆவது வயதில் தான் மரிக்கும்முன், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதற்கான முக்கிய இரண்டு பணிகளை அவர் செய்து முடித்திருந்தார். அதாவது மொழி, மற்றும் நாடுகளுக்கு செல்வதற்கான சரியான பாதைகள்! கிறிஸ்துவுக்கு முன் 356 ஆம் ஆண்டு பிறந்த அவர், ராஜாதி ராஜாவின் சுவிசேஷம் பரவுவதற்கான பாதையை செம்மையாக்கினவராய் மாறினார். அவர் தான் செய்வது எதற்காக என்று அறியாதபடி செய்தார். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் அவற்றை தமது குமாரனை உலகத்திற்கு அனுப்புவதற்கான நோக்கத்தை உலக மக்கள் அறியும்படியாக அதை தமக்கு சாதகமாக்கினார்.

Thursday, October 11, 2012

ஞானமற்றவர்களைப்போல நடவாமல்

1887-ம் வருடம் இம்மானுவேல் நெஞ்சர் (Immanuel Nenjer) என்பவர் தன் பணியாளிடம் 20 டாலரை கொடுத்துகாய்கறி வாங்கி வர சொன்னார். அந்த பணியாள் அப்படியே போய் வாங்கிவிட்டுஅந்த 20 டாலர் பணத்தைகடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்த போதுஅதை வாங்கிய பெண்ணின் கைகளில் அந்த பணத்திலிருந்து மை (Ink) கைகளில் பட்டது. உடனே அந்த பெண்ணிற்கு தோன்றிற்றுஇந்த ஆள் கள்ளநோட்டு அடிக்கிறாரா என்று. ஆனால் அந்த பெண்ணிற்கு இம்மானுவேலை வெகு நாட்களாக தெரியும்ஆகவே மிச்ச காசை கொடுத்து விட்டு,  திரும்ப அந்த நோட்டை பார்த்தபோதுஅதிலிருந்த மை கரைந்தது தெரிய வந்தது. உடனே போலீசுக்கு சொல்லிஅவர்கள் இம்மானுவேலின் வீட்டை பரிசோதித்தபோதுவீட்டின் மேல் அட்டிகையில்அவர் கள்ள நோட்டு உருவாக்குவது தெரிய வந்தது. அந்த மனிதர் ஒரு அற்புதமான ஓவியர். அவர் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் 16,000 டாலருக்குமேல் விற்பனை ஆனது. அப்படியிருக்கும்போதுஅவர் இந்த 20 ரூபாய் நோட்டை கள்ள நோட்டாக வரைந்து விற்றது எத்தனை முட்டாள்தனம்! இதில் என்ன ஒரு காரியம் என்றால்அவர் 20 டாலர் நோட்டை வரைவதற்கும்அந்த 16,000 டாலர் படத்தை வரைவதற்கும் எடுத்து கொள்ளும் நேரம் ஒன்றுதான்.

ஏம்பா! உங்க ஆசைக்கு அளவே இல்லயா?

இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் நெடு நாட்களுக்கு பிறகு சந்தித்தனர். ஒருவர் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. மற்றவர் அவரை பார்த்து,   'ஏன் என்ன ஆயிற்று'  என்று கேட்டார். அப்போது மற்றவர்,  'உனக்கு தெரியுமா,  மூன்று வாரத்திற்கு முன் என்னுடைய மாமா இறந்தார். அவர் எனக்கு 4,00,000 இலட்சம் என் பேரில் எழுதிவிட்டு போனார்' என்று கூறினார். அப்போது மற்றவர், 'சந்தோஷமான செய்திதானே'  என்றபோது, அவர்,  'இன்னும் கேள், இரண்டு வாரத்திற்கு முன்,  எனக்கே தெரியாத ஒரு உறவினர் என்பேரில் 8,00,000 எழுதிவிட்டு இறந்து போயிருக்கிறார்' என்றதும், 'அடேயப்பா, இன்னும் ஏன் சோகமாய் இருக்கிறாய்'   என்றதற்கு, அவர் 'இந்த வாரம் யாரும் மரித்து என்பேரில் எதையும் எழுதி வைக்கவில்லையே' என்று கூறினார்.

ஐயோ சாரி!!!

மென்சா என்னும் குழுவில் அதிக அறிவுள்ளவர்களே சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய I.Q. 140 க்கு மேல் இருக்கும். சமீபத்தில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அவர்களில் சிலர் கூட்டம் முடிந்தபிறகு சாப்பிடுவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள்உப்பு இருந்த பாட்டிலில் மிளகு பொடியும்மிளகுபொடி  இருந்த பாட்டிலில் உப்பும் இருந்ததை கண்டார்கள். இவர்கள்தான் அறிவாளிகளாச்சே என்ன செய்வது என்று யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு பேப்பர் டவலில் உப்பை கொட்டிஅதை மாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த பணிப்பெண்ணிடம்இப்;படி பாட்டில்கள் மாறி இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது அந்த பணிப்பெண் 'ஐயோ சாரி! மன்னியுங்கள்என்று சொல்லி விட்டுமிளகு பொடியில் இருந்த மூடியை எடுத்துஉப்பு பாட்டிலிலும்உப்பில் இருந்த மூடியை எடுத்து மிளகு பொடி பாட்டிலிலும் மாற்றி வைத்து விட்டு போனாள். அங்கிருந்த அறிவாளிகள் அசடு வழிந்தார்கள்.

Monday, October 8, 2012

நாம் எதற்காக மரிக்க இருக்கிறோம்?

பில்லிகிரஹாம் பொது கூட்டமொன்றில் கடிதம் ஒன்றை வாசித்தார். அது அமெரிக்க நாட்டு கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பட்டிருந்தது. அவன் மெக்ஸிகோவிலிருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக மாறி விட்டான். அதினால் தான் விரும்பிய பெண்ணின் உறவை முறிக்க அவன் எழுதிய கடிதம் அது.
.
கடித்தத்தில் அவன் எழுதியிருந்தது: 'கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்குள் மரண விபத்துகள் அதிகம். எங்கள் நடுவில் சுட்டு கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுபவர்களும், உயிரோடு வைத்து கொல்ல்பபடுகிறவர்களும், சிறையில் அடைக்கப்படுகிறவர்களும் ஏராளம், ஏராளம். நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் கட்சிக்கு கொடுத்து விடுகிறோம். பொழுதுபோக்குகளாகிய படம், கச்சேரி, நடனம், ஆகியவற்றிற்கு செல்ல நேரமோ, பணமோ எங்களுக்கு கிடையாது. உலகம் முழுவதும் கம்யூனிச (கடவுள் இல்லை என்கிற கொள்கை) மயமாக்க வேண்டுமென்பதே எங்கள் ஒரே இலட்சியம். கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு ஒரு வாழ்க்கை தத்துவம் இருக்கிறது. அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. வாழ்க்கையில் எங்களுக்கு ஒரு நோக்கமும், இலட்சியமும் உண்டு. அதை நிறைவேற்றுவதற்காக நாங்கள் எங்கள் ஆசா பாசங்களை அடக்கி கட்டுப்படுத்துகிறோம். நான் என் உயிரினும் மேலாக வாஞ்சிப்பது என் கட்சி கொள்கையின் வளர்ச்சியையே. அதன் முன் என் உணவு எல்லாம் பெரிதாக தோன்றவில்லை. என் கொள்கையின் மீதுள்ள என் பிடி நாளுக்கு நாள் இறுகுகிறதே அன்றி தளருவதில்லை. நான் இப்போதே சிறைவாசம் செல்கிறேன். துப்பாக்கி முனையில் என்னை பலியாக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன் ஆகவே எனனை மறந்து விடு' என எழுதியிருந்தான். அதை பில்லிகிரஹாம் படித்த போது பல கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் சூடேறியது.
.
கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கும், உயிரை பணயம் வைப்பதற்கும் வைராக்கியமாய் இருப்பார்களானால், கிறிஸ்தவர்களாகிய நாம் மகிமையின் ஆண்டவருக்காய் எவ்வளவு அதிக அன்புடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்! கிறிஸ்துவின் மீது வாஞ்சையுள்ள ஒரு மனிதனின் நோக்கமெல்லாம் ஒன்றே, அது தேவனை பிரியப்படுத்துவதுதான். அவன் இருந்தாலும், இறந்தாலும், சுகமாய் இருந்தாலும், சுகவீனமாய் இருந்தாலும், பணக்காரனாயினும், ஏழையாயினும், புகழப்பட்டாலும், இகழப்பட்டாலும், கனமடைந்தாலும், கனவீனமடைந்தாலும் எதை குறித்தும் கவலைப்படாமல், ஒன்றிற்காக மட்டும் அவன் நெருப்பாய் எரிவான். அது தேவனை பிரியப்படுத்தி, அவரது மகிமையை வளர செய்வதே ஆகும். எரிந்து  பிரகாசிக்கையில் சாம்பலாகி விட்டாலும், பரவாயில்லை, அதுதான் அவன் செய்து முடிக்கும்படி தேவன் அவனுக்கு நியமித்த வேலை என்று அறிந்து மகிழ்ச்சியடையவான்.
.

Monday, October 1, 2012

ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிற தேவன்


ராபர்ட் மேத்தியூ என்பவர், தனது மனைவி கர்ப்பிணியாய் இருப்பதை சில வாரங்களுக்கு முன்தான் குடும்பமாய் அறிந்திருந்தனர். அவர்கள் விர்ஜினியாஎன்னும் அமெரிக்க நகரத்தில் வசித்து வந்தார்கள். மனைவிகலிபோர்னியாவில் உள்ள தன் சகோதரியை பார்க்க வேண்டும் என்றுஆவலாய் இருந்தபடியால், அதற்கென்று திட்டமிட்டு அவர்கள் அடுத்த நாள்தயாரானார்கள். அன்று செப்டம்பர் மாதம் 10ம் தேதி.
.
அவர்கள் தயாராகி, காரில் போய் கொண்டிருந்தபோது, இருவரும் ஜெபித்தார்கள். தன் மனைவியின் இந்த கலிபோர்னியா போய் வரும் திட்டம் நல்லபடியாக முடியவேண்டும் என்று அவர் ஜெபித்து ஆமென் என்று சொல்வதற்கும், காரின் டயர் வெடிப்பதற்கும் சரியாக இருந்தது. உடனே வேகமாக அந்த காரின் டயரை மாற்றி, புறப்பட்டு ஏர்போர்ட் போவதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய பிளேனை மிஸ் பண்ணி விட்டார்கள்.
.
அடுத்த நாள் ராபர்ட் மேத்தியூவின் அப்பாவிடமிருந்து டெலிபோன் வந்தது. எந்த பிளேனில் அவருடைய மனைவி வருவதாக இருந்தது என்றும், அந்த பிளேனின் நம்பரையும் கேட்டபோது, அந்த பிளேன்தான், அந்த இரட்டை மாடி கட்டிடத்தில் மோதிய ஒரு பிளேன் ஆகும் என்று கூறினார். கர்த்தர் எப்படி தங்களை காத்து கொண்டார் என்று அவர்கள் நினைத்திருந்த போது, அவர்களின் அப்பா, சொன்னார், 'நான் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கபோவதில்லை, நான் போய் அங்கு கட்டிடம் விழுந்து, அதில் மாட்டி கொண்டு இருப்பவர்களை விடுவிக்கபோகிறேன்' என்று சொல்லி, போனை வைத்து விட்டார்.
.
அவர் ஒரு ஓய்வுபெற்ற நியூயார்க் தீயணைக்கும் படையை சேர்ந்தவர். அவர் அங்கு உதவி செய்ய போனதும், அங்கு அவர் சென்ற பிறகு எந்த செய்தியும் வராமல் அவர் மேல் கட்டிடம் விழுந்து இறந்து போனதும் பின்னால் வந்த செய்திகள். ராபர்ட்க்கு தேவன் தன் மனைவியை காத்தது பெரிய காரியமாயிருந்தாலும், தன் தகப்பன் இறந்தது குறித்து மிகவும் வேதனை, தேவன் மேல் கோபமாகவும் இருந்தது. ஏனென்றால் அவருடைய அப்பா இன்னும் இரட்சிக்கப்படவில்லை.
.
இரண்டு வாரங்களுக்கு பிறகு, வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அங்கு ஒரு தம்பதியர் ஒரு சிறு கைக்குழந்தையுடன் நின்றிருந்தனர். அவர்கள் 'உங்கள் தந்தைதானே ஜேக் மேத்யூ' என்று கேட்டார்கள். ஆம் என்றதற்கு, 'நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள் உண்டு' என்று கூறி, 'செப்டம்பர் மாதம் 11ம் தேதி, என் மனைவி அங்கிருந்த இடிபாடுகளுக்குள் மாட்டி கொண்டாள். உங்கள் தந்தைதான் பாடுபட்டு இவளை காப்பாற்றினார்.  அவர் அப்படி காப்பாற்றி கொண்டு இருக்கும்போதே, என்மனைவி உங்கள் தகப்பனுக்கு கர்த்தரை பற்றி சொல்லி, அவரை கர்த்தருக்குள் வழிநடத்தினாள்' என்று கூறினார். இதை கேட்டவுடன் ராபர்ட்டின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எத்தனை நல்ல ஆண்டவர் நம் தேவன்! அவர்மேல் அநியாயமாக கோபித்து கொண்டு இருந்தோமே என்று வெட்கப்பட்டார். தன் தந்தை கர்த்தரை அறிந்தவராய் நித்தியத்திற்கு கடந்து சென்றார் என்பது எத்தனை ஆறுதலான விஷயம்!
.
இந்த சம்பவம் உண்மையில் நடந்த சம்பவமாகும். இந்த காரியம் நடந்து இப்போது 9 வருடங்களாகி இருக்கலாம், ஆனால் நடந்தது நடந்ததே! கர்த்தர் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களின் சத்தத்தை கேட்டு புறம்பே போய் விடுகிற தேவனல்ல, நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிற தேவன்!

Sunday, September 30, 2012

ஊழியத்தில் பயம் வேண்டாம்

மத்திய ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகளுக்குள் இன்னும் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற இடங்களிலிருந்து வந்து, இங்குள்ளவர்களை கொல்வதும், சித்திரவதை செய்வதும் சகஜமான செயல்களாகி விட்டன. ஆனால் கர்த்தரின் மக்கள் ஜெபிக்கும்போது, தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக இந்த நாள் வரை பாதுகாக்கிற தேவனாக இருக்கிறார்.
.
ஒரு நாள் ஹிட்டு (Hutu) என்னும் கிராமத்தில் டுட்சி (Tutsi) என்னும் இடத்தின் போர் வீரர்கள் அந்த கிராமத்தை அழித்து விட வேண்டும் என்று எண்ணத்தோடு வந்தனர். அந்த இரவு நேரத்தில் ஒரு இளம் போதகரின் வீட்டிற்கு கைகளில் இயந்திர துப்பாக்கிகளுடன், உள்ளே நுழைந்து, போதகரும் அவருடைய குடும்பமும் அமர்ந்திருந்த இடத்தில் தங்கள் துப்பாக்கியை காட்டி, கொல்லபோவதாக மிரட்டினார்கள். அப்போது அந்த போதகர், 'எங்களை கொல்லுங்கள், ஆனால் அதற்கு முன் நாங்கள் குடும்பமாக ஜெபிக்க எங்களை அனுமதியுங்கள்' என்று கேட்டு கொண்டார். சரி, எப்படியும் இவர்கள் மரிக்கத்தானே போகிறார்கள் என்று அந்த வீரர்களும் அனுமதித்தனர்.
.
அதன்படி, அந்த போதகரின் குடும்பத்தினர் ஒருவரோடொருவர் கைகளை கோர்த்து கொண்டு, முழங்கால்படியிட்டு, தேவனிடம் இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றும் என்று ஜெபிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அப்படி ஊக்கத்தோடு ஜெபித்து எழுந்த போது, அந்த கொடியவர்கள் யாரையும் காணவில்லை, அவர்கள் வீட்டிலிருந்து மட்டுமல்ல, அந்த கிராமம் முழுவதிலுமிருந்து அவர்கள் ஓடி விட்டிருந்தனர். போதகரின் குடும்பத்திற்கும்  மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்றுமட்டும் அறிந்திருந்தார்கள்.
.
சில மாதங்கள் கழித்து, ஒரு பொதுவான இடத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டுட்சி மற்றும் ஹிட்டு என்னும் இரண்டு இடங்களிலிருந்தும் ஜனங்கள் வந்திருந்தார்கள். அதில் அந்த இளம் போதகர், சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை விவரித்து, அதிசயமாக தன் குடும்பமும், தன் கிராமத்திலிருந்தவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்றும், தாங்கள் யாருக்கும் இதுவரை என்ன நடந்தது என்று புரியவில்லை என்றும், கர்த்தர் ஏதோ பெரிய காரியத்தை செய்தார் என்று மாத்திரம் அறிந்திருக்கிறோம் என்றும் கூறினார்.
.
அப்போது கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு மனிதன் எழுந்து நின்று, 'உமக்கு தெரியுமா? அந்த இரவில் உம்மையும், உம்முடைய கிராமத்தில் உள்ளவர்களையும் கொல்வதற்காக வந்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் வீட்டில் நுழைந்து உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் சுடுவதற்காக இயந்திர துப்பாக்கியை குறிவைத்தேன். அப்போது நீங்கள் ஜெபிக்க அனுமதி கேட்டீர்கள். நாங்களும் அனுமதித்தோம், நீங்க்ள ஜெபித்து கொண்டிருந்தபோது, திடீரென்று உங்கள் அனைவரையும் சுற்றி ஒரு அக்கினி சுவர் எழும்பியது. அதிலிருந்து எழும்பிய ஜீவாலைகளினால் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை எங்களால் காண முடியவில்லை. அந்த அக்கினியின் வெப்பத்தினால், நீங்களும் உங்கள் வீடும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள் என்று நாங்கள் தீர்மானித்து, உங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினோம். வெளியே ஓடி வந்து பார்த்த போது, உங்கள் வீடு முழுவதும் அக்கினியால் சூழ்ந்திருந்ததே ஒழிய எரிந்து போகவில்லை.
அந்த அதிசயத்தை பார்த்த நாங்கள், பயந்து, உங்கள் கிராமத்தை விட்டே வெளியே ஓடி வந்து விட்டோம். பின் நான் அதை குறித்து சிந்தித்த போது, அந்த அக்கினி சாதாரண அக்கினி அல்ல, அது உங்கள் தேவனிடமிருந்து உங்களை காப்பதற்காக அனுப்பப்பட்ட அக்கினி! அன்றையதினம் உங்களை காப்பாற்றின உங்கள் தேவனை பற்றி அறிந்து கொள்ள நான் வந்திருக்கிறேன். நான் இந்த போர், கொலை கொள்ளை யாவற்றிலிருமிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். உங்களை காத்த அந்த வல்லமையுள்ள தேவனை குறித்து அறிந்து அவருக்கு என்னை கொடுக்க வந்துள்ளேன்' என்று கூறினான்.