Friday, March 21, 2014

கறைபடியாத கையையுடைய கர்த்தரின் ஊழியர்

கர்த்தரிடத்தில் உண்மையும் உத்தமுமான ஒரு ஊழியர் இருந்தார். 'கறைபடியாத கையையுடைய கர்த்தரின் ஊழியர்' என்று அவரைப் பாராட்டுவார்கள். பெரும் பணப்புக்கமுள்ள அவரது நிர்வாகத்தில் பத்துப்பைசாவுக்குக் கூட அவர் ஆசைப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் என்ன என்று அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
.
'என் சிறுவயதில் என் தாய்க்கு சமையல் வேலைகளில் அதிக உதவியாக இருக்க ஆசைப்படுவேன். குறிப்பாக இரவில் சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்து வெள்ளைத்துணி விரித்து, அழகாக வைப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. 'அம்மா சாப்பாட்டு மேஜையை ஒழுங்கு செய்யட்டுமா?' என்று உற்சாகமாக கேட்பேன். அப்பொழுதெல்லாம் என் தாயார் சமையலறையிலிருந்து சொல்லும் மறுமொழி என்ன தெரியுமா? 'உன் கை சுத்தமாக இருக்கிறதா?' என்பார்கள். இந்த குரல் என் வாழ்நாள் முழுவதும் என் உள்ளத்திலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என் உத்தியோக வாழ்விலும், ஊழிய காலங்களிலும், உன் கை சுத்தமாக இருக்கிறதா என்ற என் அம்மாவின் கேள்வி எச்சரிப்பின் தொனியாக எனக்குள் தொனித்துக் கொண்டே இருக்கிறது. பரிசுத்தமான தேவனுக்கு நாம் ஊழியம் செய்யம் போது நம் உள்ளம் மாத்திரமல்ல, நம் கைகளும் சுத்தமாயிருக்க வேண்டாமா?' என்றார்.

Wednesday, March 5, 2014

கடைசி கால கொடுமைகள்

இஸ்ரவேலருக்கும், காசாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரைக் குறித்து பார்த்தோம். இந்த நாளிலும் தொடர்ந்து, மேலே சொல்லப்பட்ட வார்த்தையின்படி நடைபெறும் சம்பவங்களைக் குறித்து காண்போம்.
.
இத்தனை நாட்கள் இல்லாதபடி, திடீரென்று ஒரு பயங்கரமான, இரக்கமில்லாத, கடூரமான தீவிரவாத இயக்கம் ஈராக்கில் தோன்றியுள்ளது. அதற்கு பெயர் Islamic State of Iraq and Relevant எனப்படும் ISIS ஆகும். இந்த ஐசிஸ் இயக்கத்தினருக்கு அனைவரும் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால், அவாகள் சொல்லும் வரியை செலுத்த வேண்டும். செலுத்த முடியாவிட்டால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கொல்லப்படுவார்கள். இந்த இயக்கத்தினரால், இஸ்லாமியருக்கே மிகுந்த பிரச்சனை ஏறபட்டுள்ளது. தங்கள் சுன்னி மார்க்கத்தை பின்பற்றாதவர்களை அவர்கள் கடுகளவும் இரக்கமின்றி, கைகளை பின்னாக கட்டி, கண்களை கட்டி சுட்டு கொல்லுகிறார்கள்.
.
இந்த இயக்கத்தினர் ஈராக்கில் அநேக இடங்களை கைப்பற்றி, அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். மோசுல் என்னும் இடத்தையும் கைப்பற்றி, அநேக ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருக்கும் அந்த இடத்தில் உள்ள கிறிஸ்தவர்களை வரிப்பணம் கட்ட சொல்லி வற்புறுத்துவதால், அநேகர் தங்கள் சொந்த வீடுகளை வசதிகளை, இழந்து, வேறு இடத்திற்கு ஓடிவந்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் அவர்கள் சொல்லும் வரிப்பணத்தை கட்ட முடியாத காரணத்தினால், தகப்பனுக்கு முன்பாகவே மனைவிiயும், மகளையும் கற்பழித்ததை கண்ட தகப்பன், தாங்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார். அங்கிருந்த யோனாவின் கல்லறையும், தானியேல் தீர்க்கதரிசி இருந்த கல்லறையையும், பழங்காலத்திலிருந்து தொழுதுக் கொண்டு வரப்பட்ட ஒரு தேவாலயத்தையும் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.
.
இந்த இயக்கத்தினர் மத்திய கிழக்கு பகுதிகளில் ஒருவித பீதியையும், கலகத்தையும் உருவாக்கி வருகின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களை கொன்று, அவர்கள் தலைகளை கையில் பிடித்துக் கொண்டு சிரிக்கும் காட்சிகள் அனுதினமும் முகநூலில் காண முடிகிறது. இந்த இயக்கத்தின் தலை நசுக்கப்படவும், இவர்களின் யோசனைகள் அபத்தமாகி, ஒன்றுமில்லாமற் போகவும் நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கத்தான் வேண்டும்.
.
நைஜீரியாவில் பொக்கொ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 வாலிப பிள்ளைகள் இன்னும் தங்கள் பெற்றோரை வந்து சேரவில்லை. நைஜீரியாவில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பில்லை. பொக்கோ ஹராம் தீவிரவாத இயக்கம், சபை நடந்துக் கொண்டிருக்கும்போது, உள்ளே நுழைந்து கிறிஸ்தவர்களை கொல்லுகிறார்கள். சபையோடு அப்படியே எரித்து விடுகிறார்கள்.
.
மேலே சொன்ன சம்பவங்கள் வெகு சிலதே. மற்ற நாடுகளில் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்ற பெயருக்காகவே சித்தரவதை செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். 'என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்' என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தை இந்த நாட்களில் துல்லியமாக நிறைவேறி வருகிறது.
.
கர்த்தர் தீர்க்கதரிசனமாக சொன்ன மற்றொரு காரியம், கொள்ளை நோய்கள். இப்போது எபோலா என்கிற கொல்லும் நோய் ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது, இது காணப்பட்டு சில வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரித்திருக்கிறார்கள். இந்த நோயை கொண்டவர்கள் தங்கள் நாடுகளில் வந்துவிடக் கூடாது என்று ஆப்ரிக்க நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு வரும்போது ஏகப்பட்ட சோதனைகள் செய்து, சரியானப்பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் பாஸ்கரன் என்ற தேனியை சேர்ந்தவர் பல பரிசோதனைக்கட்கு உட்பட்டு பின்தான் சொந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது செய்தியின் வழியாக நாம் அறிந்ததே.
.
இந்த எபோலா (Ebola) வைரஸ் குரங்குகள், சிம்பன்சிகள் மூலமாக பரவுகின்றன. இந்த வைரஸை உடையவர்களின் இரத்தமோ, மற்ற உடலிலுள்ள எந்த நீரோ மற்றவர்களின் கையில் காலிலுள்ள சிறுசிராய்ப்பு அல்லது, வெட்டுகளின் மேல் பட்டு, மற்ற எந்த வகையிலாவது, அவரின் இரத்தத்தோடு கலந்து விட்டால், அவருக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும். இந்த வைரஸ் நோய் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக இந்த வைரஸ் தாக்கிய தங்கள் அன்புக்குரியவர்களையே தெருவில் வீசும் அவலம் தற்போது லைபிரியாவில் காணப்படுகிறது. எத்தனை பயங்கரம் பாருங்கள்!
.
சமீபத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சீனாவில் அநேகர் மரித்திருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போதோ நடந்தவை அல்ல, ஒரு மாதம், அல்லது அதற்குள்ளாகவே நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள்!
.
இவையெல்லாம் கடைசி நாட்களின் அறிகுறிகள். இயேசுகிறிஸ்து சொன்னார் இவையெல்லாம் வேதனையின் ஆரம்பம் என்று. வேதனைகளின் ஆரம்பம் ஆரம்பித்து விட்டது. இனிமேல் தொடர்ந்து வேதனைகளைத்தான் செய்தித்தாள்களில் வாசிக்க முடியும்.
.
ஒரு வேளை நாம் இருக்கும் நாடுகளில நம் சொந்த தேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாடுகள் வந்தால் நாம் எத்தனை தூரம் கர்த்தருக்காக நிற்போம்? என் உயிர் போனாலும் நான் கர்த்தரை மறுதலிக்க மாட்டேன் என்கிற உறுதி நம் இருதயத்தில் இருக்கிறதா? மத்திய கிழக்கு பகுதிகளில் ஆரம்பித்துள்ள சம்பவங்கள் நாம் வாழும் தேசங்களையும் சந்திக்க வெகு தொலைவில் இல்லை. ஆனால் நாம் நம் விசுவாசத்திலும், கர்த்தரைப் பற்றிய வைராக்கியத்திலும் உறுதியாய் நிற்போம். கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக, அந்த நோய் மற்ற நாடுகளில் பரவாமலிருக்க ஜெபிப்போம். மற்ற நாடுகளில் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் துன்பப்படுகிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். இது நாம் சுகமாய் இருக்கும் இந்த நாட்களில் செய்ய வேண்டிய கடமையாகும். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது. ஆமென் மாரநாதா!

Sunday, March 2, 2014

இஸ்ரேல் - பாலஸ்தீனம் - ஏன் இந்த போர்? பகுதி 1

இந்த நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் அநேகருக்கு தெரியாது. அதைப் பற்றி செய்திகளை கேட்டாலும், எங்கோ நடக்கிறது நமக்கு என்ன என்கிற மனநிலைதான் அநேகரிடம் காணப்படுகிறது. ஆனால் கடைசி கால சம்பவங்களில் மத்திய கிழக்கு நாடுகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது நாம் யாவரும் அறிந்திருக்க வேண்டும். செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதோடு வேத வசனம் என்ன சொல்கிறது என்று பார்த்து, வேதத்தில் சொல்லப்படுகிற தீர்க்கதரிசன நிறைவேறல் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
.
தற்போது இஸ்ரேலுக்கும், இஸ்ரேலின் ஒரு பகுதியாகிய காசாவிற்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரத்தின்படி எகிப்தில் போர் நிறுத்தத்தைக் குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.
.
இஸ்ரேலின் மூன்று வாலிபர்களை காசாவிலுள்ள ஹமாஸ் என்னும் தீவிரவாத குழு கடத்திச் சென்று, இஸ்ரேல் அரசாங்கத்தின் வேண்டுகோள் எதையும் கேட்காமல், அவர்களை கொன்று, தூக்கி வீசியது. அதனால் கோபமுற்ற யூதர்களில் சிலர் பாலஸ்தீனாவை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடத்தி சென்று அவனை கொன்றனர். அதன்பின் ஹமாஸ் இஸ்ரவேலை ராக்கெட்டுகள் வீசி தாக்க, போர் ஆரம்பித்தது. ஜூலை மாதம் 8ம்தேதி ஆரம்பிக்கப்பட்ட போர் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையிடையே போர் நிறுத்தம் இரண்டு நாள், மூன்று நாள் என்று நிறுத்தப்பட்டாலும், ஹமாஸ் அதையும் மீறி தாக்கும்போது, மீண்டும் போர் தொடர்கிறது.
.
இப்படியாக கடந்த முப்பத்து மூன்று நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த போர் தற்போது மூன்று நாட்களாக பேச்சு வார்த்தையின் நிமித்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போரில் இஸ்ரவேல் பக்கத்திலிருந்து, மூன்று பாமரமக்களும், (அதில் ஒருவர் தாய்லாந்தை சேர்ந்தவர்) அறுபத்தி மூன்று போர் வீரர்களும் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் காசாவின் பக்கத்தில் இருந்து, 1964 பேரும், சுமார் 2000 பேருக்கும் மேலாக காயமடைந்திருக்கிறார்கள். அநேகருடைய வீடு தரைமட்டமாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து யுனைட்டட் நேஷன்ஸின் பாதுகாப்பில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
.
இத்தனைக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் விடாமல் 3488 ராக்கெட்டுகளை இஸ்ரவேல் மீது வீசியும் அவர்களில் மனித சாவும், கட்டிடங்கள் இடிபாடும் மிகவும் குறைவே. எப்படி இந்த காரியம் நடந்தது? போர் நடக்கும்போது, அதில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அநேக அற்புதங்களை கண்டனர். ஏன், ஹமாஸ் தீவிரவாதிகளில் ஒருவனே, 'நாங்கள் அனுப்புகிற ராக்கெட்டுகளை அவர்களின் தேவன் எங்கள் மேலேயோ, கடலிலோ திருப்பி அனுப்புகிறார்' என்று சாட்சி கூறினான்.
.
இந்த போரைப்பற்றியும், காசாவிற்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்தும், 2000 வருடங்களுக்கு முன்பாகவே கர்த்தர் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆச்சரியம்! 'காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்ளூ அஸ்தோத்தைப் பட்டப் பகலிலே பறக்கடிப்பார்கள்ளூ எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். . சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறதுளூ இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன். சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும். அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்ளூ அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்ளூ அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்' (செப்பனியா 2:4-7) என்று வசனம் திட்டவட்டமாக காசாவின் அழிவைக் குறித்து தீர்க்கதரிசனமாய் நமக்கு வெளிப்படுத்துகிறது.
.
அவர்களுக்கு ஏன் இந்த அழிவு? அதே அதிகாரத்தில் 'அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்' (10ம் வசனத்தில்) கூறப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாக பெருமைபாராட்டி, அவர்களை நிந்தித்தபடியினால் அவர்களுக்கு இந்த தண்டனை என்று கர்த்தர் கூறுகிறார்.
.
இஸ்ரவேல் தவறு செய்யவில்லையா? அவர்கள் பாவம் செய்யவில்லையா? வசனம் கூறுகிறது, 'அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லைளூ அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்' (எண்ணாகமம் 23:21) அவர்கள் அக்கிரமம் செய்தாலும், குற்றம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் தம் சொந்த ஜனத்தை சிட்சிப்பார், அவர் அவர்களை தண்டிப்பார். அவர்களை நியாயம் தீர்க்கும் நாள் உண்டு. அப்போது அவர்களை நியாயம் விசாரிப்பார். ஆனால் எதிரிகளிடம் அவர்களை காட்டிக் கொடுத்து, அவர்களை அழிக்கும்படி அனுமதியார். எத்தனை நல்ல தேவன் நம் தேவன்!
.
பிரியமானவர்களே, நாமும் கூட பாவம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் நாம் செய்த அக்கிரமங்களுக்கும், பாவங்களுக்கும் தண்டிப்பார். ஆனால் மற்றவர்களிடம் காட்டிக் கொடுத்து, மற்றவர்கள் முன் நம்மை வெட்கப்படுத்த விடமாட்டார்.
.
கர்த்தர் தமக்கு சொந்தமாக தெரிந்துக் கொண்ட ஜனத்திற்கு எதிராக யார் வந்தாலும், கர்த்தர் தம் ஜனத்தோடு இருந்து அதைக் காப்பார். ஏனெனில் ஆயிரம் வருட அரசாட்சி எருசலேமில் இருந்து கர்த்தர் ஆட்சி செய்யப்போகிறபடியால் அதை யாருக்கும் விட்டுக் கொடார். ஆந்திக்கிறிஸ்துவின் காலத்தில் யூதர்கள் உபத்திரவ காலத்திற்கு கடந்து செல்ல நேரிட்டாலும், பின் கிறிஸ்து அந்திக்கிறிஸ்துவோடு போராடி, வெற்றிப்பெற்று, ஆயிர வருட அரசாட்சியை எருசலேமில் அமைப்பார்.
.
இந்த யுத்த நிகழ்ச்சிகள் தற்போது நடந்துக் கொண்டிருந்தாலும், உடனே முடிவு வராது என்று இயேசுகிறிஸ்து சொன்னாலும், ஆனால் இது வேதனைகளுக்கு ஆரம்பம் என்று நம்மை எச்சரித்திருக்கிறபடியால் நாம் நம் தேவனை பற்றிக் கொள்வோம். எந்த வேளையில் கிறிஸ்து வந்தாலும் அவருடன் செல்ல ஆயத்தப்படுவோம். மற்றவர்களை ஆயத்தப்படுத்துவோம். ஆமென் அல்லேலூயா!

Saturday, March 1, 2014

பரிசுத்த வேதாகமமும் மனித எலும்புகளும்

.
நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள் நன்றாக இருந்தால் நாம் நல்ல ஆரோக்கியமான சுகத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். எலும்புகளில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது மொத்த ஆரோக்கியத்திற்கே பிரச்சனையாகும். ஏனென்றால், எலும்புகளில் உள்ளே காணப்படும் Bone Marrow என்னும் இரத்தம் உற்பத்தியாகும் இடம் இந்த எலும்புகளிலே ஆகும். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்று வேதம் நமக்கு போதிக்கின்றது. இந்த இரத்தமே ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்கிறதாகும். வேதத்தில் எலும்புகளை குறித்து எழுதப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தால், அநேக காரியங்கள் நம்முடைய எலும்பை பாதிக்கிறதையும் அதினிமித்தம் மொத்த ஆரோக்கியமே கெடுவதையும் குறித்தும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.
.
1. கெட்ட செய்தி கேட்கும்போது, எலும்புகளில் உக்கல் (Rottenness) உண்டாகிறது. 'நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்'. - (ஆபகூக் 3:16).
.
2. இலச்சை (வெட்கம்) எலும்பை உருக செய்யும். குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். - (நீதிமொழிகள் 12:4).
.
3. நிந்தனை எலும்புகளை பட்டயத்தால் உருவ குத்துவது போல இருக்கும். 'உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. - (சங்கீதம் 42:10).
.
4. சாபம் எலும்புகளில் சுடுகின்ற எண்ணை பாய்வது போல இருக்கும். சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். - (சங்கீதம் 109:18).
.
5. அறிக்கையிடாத பாவம் எலும்புகளை உலர பண்ணும். நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. - (சங்கீதம் 32:3).
.
6. பாவம் எலும்புகளை பெலவீனப்படுத்தும். 'உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை'. - (சங்கீதம் 38:3).
.
7. பொறாமை எலும்புகளை உருக வைக்கும். சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி. - (நீதிமொழிகள் 14:30).
.
8. முறிந்த ஆவி எலும்புகளை உலர பண்ணும். மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். - (நீதிமொழிகள் 17:22).
.
9. வேதனையின் நாட்கள் நெருப்பை போல எலும்புகளில் எரியும். என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. - (சங்கீதம் 102:3).
.
10. பயம் எலும்புகளை நடுங்க வைக்கும். 'திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது'. - (யோபு 4:14).
.
11. பாவம் எலும்புகளை நிறைத்து விடும். 'அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்'. - (யோபு 20:11).
.
12. தேவனுடைய தண்டனை எலும்புகளில் அதிக வேதனையை கொடுக்கிறது. அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான். - (யோபு 33:19).
.
13. ஆத்துமாவின் உபத்திரவம் எலும்புகளை துளைக்கிறது. இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. - (யோபு 30:17).
.
14. அக்கிரமங்கள் எலும்புகளின் மேல் இருக்கும். அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும். – (எசேக்கியேல். - 32:27).
.
15. சஞ்சலமும் அக்கிரமத்தினாலும் எலும்புகள் உலர்ந்து போகும். என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. - (சங்கீதம் 31:10).
.
16: பாவத்தின் சாபம் எலும்புகளை கட்டு விட செய்யும். 'தண்ணீரைப்போல் ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று'. - (சங்கீதம் 22:14).
.
ஆனால் சில காரியங்கள் எலும்பை பெலப்படுத்துகின்றன. அவை:
.
1. கர்த்தருக்கு பயப்படுதல் எலும்புக்கு ஊனாகும் (Bone Marrow). நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். - (நீதிமொழிகள் 3:7-8).
.
2. நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும். - (நீதிமொழிகள் 15:30).
.
3. இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். - (நீதிமொழிகள் 16:24).
.
4. ஆரோக்கிய வாழ்வு எலும்புகளை புஷ்டியாக்குகிறது. 'அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளின் ஊன் புஷ்டியாயிருக்கிறது'. - (யோபு 21:24).
.
5. சுத்த மனசாட்சி எலும்புகளை களிகூர செய்யும். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். - (சங்கீதம் 51:8).
.
6. நம் தேவன் நம் எலும்புகளை காப்பாற்றுகிறார். 'அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார் அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை'. - (சங்கீதம் 34:20).
.
7. சமாதானமும் தேறுதலும் எலும்பை செழிக்க வைக்கும். 'நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்'. - (ஏசாயா 66:14).
.
8. பசியுள்ளவரையும், சிறுமையானவர்களையும் திருப்தியாக்கினால் எலும்புகள் நிணமுள்ளதாகும். பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஆமென் அல்லேலூயா!

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதுளூ நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. - (லேவியராகமம் 17:11).