Friday, May 23, 2014

பெற்றோரை வெறுக்காதே

ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின் வாழ்வதற்கு போனார். அவர் தள்ளாத வயதின் காரணமாக கண்கள் மங்கியதாகவும், நடை தள்ளாடுவதாகவும், கரங்கள் நடுங்கியபடியும் இருந்தது.
.
அந்தக் குடும்பம், தினமும் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். இந்த வயதானவர், கண்கள் மங்கியதாகவும், கைகள் நடுங்கியபடியும் இருந்ததால், கையிலிருந்த உணவு கீழே விழுவதும், டம்ளரில் இருந்த பால் மேஜை விரிப்பின் மேல் விழுவதாகவும் இருந்தது. அது மகனுக்கும் மருமகளுக்கும் தொந்தரவாக இருந்தது. மகன் ஒரு நாள் சொன்னான், ''இந்த வயதானவர் பண்ணுகிற காரியஙகள், என்னை பாதிக்கிறது. அவர் உண்ணும்போது வரும் சத்தமும், கீழே போடும் உணவுகளும் இந்த இடத்தை அழுக்குப்படுத்தி விடுகின்றன. இதற்கு ஏதாவது ஒரு காரியம் செய்தே ஆக வேண்டும்'' என்று தன் மனைவியிடம் கூறினான்.
.
அதன்படி, அவர்கள் அந்த அறையில் ஒரு மூலையில் அவருக்கென்று ஒரு மேஜையைப் போட்டு, அதில் அவரை அமர்த்தி சாப்பிடவும், மற்றவர்கள் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடவும் செய்தார்கள். அவர் பீங்கான் தட்டுகளை உடைத்ததால், அவருக்கு மரத்திலான தட்டு ஒன்றும் சாப்பிட சொடுத்திருந்தார்கள். அவர் அங்கு தனியே சாப்பிடும்போது அவர் கண்களில் கண்ணீர் வருவதைக் குடும்பத்தினர் கண்டனர்.
.
இதையெல்லாம் நான்கு வயது பேரன் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு சாப்பிடுவதற்கு முன் அவன் அங்கிருந்த மரக்கட்டையை வைத்து ஏதோ பண்ணிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவன் தந்தை 'மகனே நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்றுக் அன்பொழுகக் கேட்டார். அதற்கு அந்த நான்கு வயதுச் சிறுவன், 'அப்பா நீங்களும் அம்மாவும் வயதாகும்போது சாப்பிடுவதற்கு இந்த கட்டையிலிருந்து தட்டுகளை செய்துக் கொண்டிருக்கிறேன்' என்றான். அதைக் கேட்ட அத்தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த இரவிலிருந்து வயதான தகப்பன் திரும்ப எல்லாரும் சாப்பிடும் மேஜைக்கு அழைத்துவரப்பட்டு அவர் முடிவுகாலம் வரை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். இப்போது அவர் சாப்பிடும் சத்தமோ, மேஜையின் மேல் விழும் பாலோ எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

Friday, May 16, 2014

இந்தியாவில் முதல் அற்புதம் - பரிசுத்த தோமா

பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தார். சென்னையையும் கேரளாவின் கடற்கரைப் பகுதியையும் தன்னுடைய ஊழியஸ்தலமாக தெரிந்துக் கொண்டார். ஒரு முறை கேரளாவின் கடற்கரை வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஒரு பெரிய மதத்தின் தலைவரோடு அநேகர் கூட்டமாக நின்று கையில் தண்ணீரை அள்ளி சூரியனை நோக்கி தெளித்து, சூரியனை கடவுளாக வணங்குவதைக் கண்டார்.
.
அதைக் கண்டவுடன் ஆவியில் வைராக்கியம் கொண்டவராய், தோமா 'சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கிய ஆண்டவா ஒருவர் இருக்கிறார். அவர்தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களை செய்கிறவர். அவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறேன்' என்று சவால் விட்டார். அந்த சவால் என்னவென்றால். பூசாரிகளும் தோமாவும் கடல் தண்ணீரை கடலிலிருந்து எடுத்து வானத்திற்கு நேராக எறிய வேண்டும். தண்ணீர் அள்ளப்பட்ட அந்த இடத்தில் தண்ணீருக்கு மத்தியில் பள்ளம் விழ வேண்டும். மட்டுமல்ல, வானத்தில் எறியப்பட்ட தண்ணீர் வானத்தில் அப்படியே நிற்க வேண்டுமென்பதாகும்.
.
முதலில் அந்த மதத்தவர் அவ்விதமாக தண்ணீரை எறிந்தார்கள். தண்ணீரை அள்ளிய இடம் மீண்டும் தண்ணீரால் சூழப்பட்டது, ஆகாயத்தில் எறியப்பட்ட தண்ணீரும் புவிஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழுந்தது. அதன் பின்பு தோமா தன்னுடைய குரலை உயர்த்தி, 'ஜீவனுள்ள இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் கட்டளையிடுகிறேன், தண்ணீரே ஆகாயத்தில் அப்படியே நில்' என்று சொல்லி தண்ணீரை அள்ளி மேலே எறிந்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீர் ஆகாயத்தில் அப்படியே நின்றது. அவர் தண்ணீர் எடுத்த பகுதியில் அந்த இடம் அப்படியே பள்ளமாக இருந்தது.
.
இந்த அற்புதத்தை கண்டவுடன் அங்கிருந்த பூசாரிகள் மற்றும் அந்த மதத்தின் முக்கியமானவர்கள் அத்தனைப்பேரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். தோமா அப்போஸ்தலர் அவர்களை கிறிஸ்துவண்டை அருமையாக வழிநடத்தினார். இன்றைக்கும் கேரளாவிலிருக்கிற மார்த்தோமா சபையார் தோமாவின் காலத்திலிருந்தே கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள்.

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? - (யாத்திராகமம் 15:11).

Friday, May 2, 2014

ஆச்சரியமான தேவ அன்பு - ஜோசப் பார்க்கர்


இங்கிலாந்து நாட்டின் போதகர் ஜோசப் பார்க்கரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'இயேசுகிறிஸ்து யூதாஸ் காரியோத்தை ஏன் தமது சீஷராக தெரிந்துக் கொண்டார்? அவருக்கு தெரியுமே அவன் அவரை காட்டிக் கொடுப்பான் என்று' என்பதுதான் அந்தக் கேள்வி. போதகர் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். ஆனால் பதிலைக் கூட முடியவில்லை. அந்தக் கேள்வி அவரை திணறடித்துவிட்டது. ஆனால் அதே கேள்வி அவருக்கு மற்றொரு கேள்வியை உருவாக்கியது. அதுவும் அவரை திணறடித்தது, அந்தக் கேள்வி, 'தேவன் ஏன் என்னை தெரிந்துக் கொண்டார்?' என்பதே.
.
ஒரு சிலருடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது நம் இருதயத்தில் மிகவும் துக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒழுங்கீனமாய் வாழ்கிறார்களே? அவர்களையெல்லாம் எப்படி தேவன் தெரிந்துக் கொண்டார் என்று அங்கலாய்க்கிறோம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால், மற்றவர்களை குற்றப்படுத்தி பார்க்கிற கண்ணோட்டத்தினால் தான் நாம் அவ்வாறு நினைக்கிறோம் என்பதை நாம் உணருகிறதில்லை. இதைத்தான் பிரபல சுவிஷேசகராகிய பில்லிகிரகாம் அவர்கள் கூறும்போது. 'மீட்கப்பட்ட எந்தவொரு பாவியும் பிறரைப் பார்த்து பாவி என்று சொல்ல எந்தவொரு நியாயமுமில்லை' என்று சொல்கிறார்.
.
நாம் காண்கின்ற மனிதர்கள் எல்லாரும் தேவ சாயலில் பூரணப்பட்டவர்கள் கிடையாது என்பதை நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். நம்மைப் போல் அவர்களும் தேவ சாயலில் முழுமைப் பெற தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களே! இதில் சிலர் தேவகிருபையில், பெலத்தில், சீராக வாழ முடிகிறது. சிலரோ குறைவுள்ளவர்களாய், பெலவீனர்களாய் காணப்படுகிறார்கள். 'அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்' (ரோமர் 15:1-2) என்று வசனம் கூறுகிறது. ஆம், அப்படிப்பட்ட பெலவீனமுள்ளவர்களை நாம் நியாயந்தீர்க்காமல், அவர்களை தாங்க வேண்டும், அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என் கிறிஸ்து நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.
.
ஜோசப் பார்க்கரிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்பட்டால், நாம் என்ன பதில் சொல்வோம்? பாவத்தில் வாழும் மனிதர்களை மீட்கும்படி, இரட்சிக்கும்படி தேவ அன்பு வெளிப்பட்டதே! அந்த அன்பு பாவியாகிய என்னை சந்தித்ததே! அதேப் போல மற்றவர்களையும் பெலவீனர்களையும் சந்திக்கக்கூடாது? தேவன் தகுதியற்ற நம்மிடத்தில் காண்பிக்கின்ற அவருடைய ஆச்சரியமான அன்பிற்காக அவரை துதிப்போமா?
.
பெலவீனமுள்ளவர்களும், நான் பெலவீனன், என்னால் பரிசுத்தமாக வாழ முடியாது, என்னால் கர்த்தர் விரும்புகிற தரத்திற்கு உயரமுடியாது என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிராமல், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும் (பிலிப்பியர் 2:12)

Thursday, May 1, 2014

நம்பிக்கையின் வைரம் - (Hope Diamond)


உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற விலையேறப்பெற்ற கல்லாக நம்பிக்கை வைரம் (Hope Diamond) இன்றளவும் விளங்குகிறது. இது முதலில் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பட்டதாகவும், அதை ஒரு பிரஞ்ச் வாணிபர் வாங்கி, Evalyn Walsh McLean என்பவருக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வைரத்தை உரியவர்களுக்கு அது சாபத்தையும், சாவையும் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அது அநேகருடைய கை மாறினாலும், அது சாபத்தை கொண்டு வந்ததால், அத உரியவர்கள் உடனே மற்றவர்களுக்கு விற்றனர். கடைசியில் இப்போது அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் (Smithsonian) என்னும் கூடத்தில் தானமாக கொடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
.
விலையுயர்ந்த கற்கள் எப்போதும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வைக்கப்படும். அதை அடைவதற்காக யுத்தங்களும் நடந்ததுண்டு. சிலர் தங்களுடைய மனைவிகளுக்கு வைரத்தால் செய்த மோதிரங்களை தங்களின் அன்பின் அடையாளங்களாக தருவதுண்டு. எப்போதும் அதனுடைய மதிப்பு போற்றதக்கதே!

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். - (1பேதுரு 2:5).