Thursday, May 9, 2013

டிக்கெட், டிக்கெட்!

இரவு பத்துமணி திருநெல்வேலியில் எட்டுமணிக்குப் புறப்பட்ட சென்னை ரயில் விருதுநகரை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுத்துச் சலித்தவர்களும் மனநிம்மதி உடையவர்களும் நிம்மதியாகப் படுத்து ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கத் தொடங்கி விட்டனர்.

விருதுநகரில் வண்டி வந்து நின்றது. பழம், பிஸ்கட், பத்திரிகைகள் விற்பவர்களின் குரல் காதைப் பிளந்தது. அவசர, அவசரமாக அகப்பட்டதை வாங்கி அரை குறையாக சிலர் மென்று வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

வண்டி புறப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் ஏறாதவண்டியாகப் பார்த்து பிச்சைக்காரர்களும் இப்படியே ரயில்பயணம் செய்து பழக்கப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளும் ஏறிக்கொண்டனர்.

ஒரு கேரேசுக்குள் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். அவரது வரவறிந்து டிக்கெட் எடுக்காத சிலர் பெஞ்சுக்கடியில் பதுங்கினர். ஒன்றிரண்டு பேர் பாத் ரூமிற்குள் போய் மறைந்தனர். 

டிக்கெட் வைத்திருந்தவர்கள் அதைப் பரிசோதகரிடம் காட்டினர். இல்லாதவர்களில் பலர், என்ன நேருமே என்று பதறினர். சிலர் டி.டி. ஆரிடம் மன்னிப்புக் கேட்டனர். உரிய அபதாரத் தொகையையும் கட்டினர்.

தனபால் ரயிலில் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொளுந்து வெற்றிலையை எடுத்து காம்பு கிள்ளி, முனை முறித்து, நரம்பு உரித்து சுண்ணாம்பு தடவி, சுருட்டி, மடக்கி வாயில் திமித்து ரசித்து மென்று கொண்டிருந்தான். அவ்வப்போது துண்டின் முனையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். துண்டில் வெற்றிலைக் கறை: வாழைக்காய்க் கறை, வாழைக்காய் வெட்டுவதும் வாழை இலை அறுப்பதும் அவனது பிரதான வேலை!

டிக்கெட் பரிசோதகர் தனபாலிடம் டிக்கெட், டிக்கெட்?” என்று கேட்டார்.

தனபால் மடிக்குள் கையைவிட்டு டிக்கெட்டை எடுத்து நீட்டினான்.

டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டைப் பார்த்துவிட்டு, “இதென்னய்யா, டிக்கெட்? நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். தனபால், “திருச்சிக்கு போகிறேன். அங்கே தான் என் மகன் பெல் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆள் ரொம்ப நல்லா இருப்பானுங்க. அவனுக்கு பெண் பார்த்துக்கிட்டிருக்கேன். தை மாதம் கலியாணம் வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்” என்று கதையைத் தொடங்கினான்.

டி.டி.ஆருக்கு எரிச்சல்!” உன் மகனுக்கு நீ கலியாணம் எப்போ வச்சால் எனக்கென்ன? எந்த ஊரில் ஏறினீர்?”
கோவில்பட்டியிலிருந்து திருச்சிக்கு டிக்கெட் எடுக்காமல் வெறுமனே பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துட்டு ரயிலில் ஏறியிருக்கிறீரே, என்ன மனுஷன் நீர்?”
தனபால் நிதானமாக, “ஏன், திருச்சி ஊரிலே பிளாட்பாரம் இல்லீங்களா? என்று கேட்டான். டி.டி.ஆர் பொத்துக்கொண்டு வந்த கோபத்தையும் புறம்பே தள்ளிவிட்டு குபுக்கென்று சிரித்துவிட்டார்

No comments:

Post a Comment