Thursday, July 24, 2014

அளவற்ற ஆழமான அன்பு

B.E. சிவில் இஞ்ஜினியரிங் படித்து முடித்த பிரபுவுக்கு அரபு நாடுகளில் ஒரு கட்டிடம் கட்டும் கம்பெனியில் வேலை கிடைத்தது. பிரபுவும் அவன் அம்மாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசித்ததினால், மகன் வெளிநாடு செல்வதை பிரபுவின் தாயார் விரும்பவில்லை. இருப்பினும், தன் குடும்ப பொருளாதார தேவைகளை நினைத்து சம்மதித்தார். பிரபு அரபு நாடு சென்றதும் அவனை ஆச்சரியப்பட வைத்தது, பேரீச்சம் மரங்களும், பேரீச்சம் பழங்களும் தான். அதுவும் அவ்வப்போது மரத்தில் பறிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். புதிய (Fresh) பேரீச்சம் பழங்களை பார்க்கும் பிரபுவுக்கு அவன் அம்மா ஞாபகம் வரும். காரணம் பிரபுவின் அம்மாவுக்கு பேரீச்சம் பழம் என்றால் உயிர். புதிய பேரீச்சம் பழம் இந்தியாவில் கிடைப்பது அரிது என்பதை அறிந்த பிரபு, ஒரு மாத லீவில் இந்தியா வந்த தன்னுடைய நண்பன் விநோத் மூலம் புதிய பேரீச்சம் பழப்பெட்டி ஒன்றை வாங்கி தன் தாயாருக்கு கொடுத்து அனுப்பினான்.
.
பலவித காரணங்களால், விநோத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று. நான்காம் நாள் வேகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று தன் குடும்பத்தாரை சந்தித்து விட்டு, பிரபுவின் வீட்டிற்கு சென்று, பொருட்களையும், பேரீச்சம் பழப்பெட்டியையும் கொடுத்தான். தன் மகன் அன்போடு, ஆவலோடு கொடுத்தனுப்பிய பெட்டியை உடைத்து ஆசையோடு பேரீச்சம் பழங்களை ருசித்தாள் தாயார். பழம் 'வெகு ஜோர்' என்று சொல்லி தன் கணவருக்கும், தன் மகளுக்கும் கொடுத்தார். இருவரும் பழத்தை சாப்பிட்டுவிட்டு முகத்தை சுழித்தனர். காரணம், பேரீச்சம் பழங்கள், பழசாகி விட்டன. கெட்டுப் போகிற வாசனை பெட்டியிலிருந்து வந்தது. ருசியும் குறைந்து விட்டது. பிரபுவின் அப்பாவும், தங்கையும் அவன் அம்மாவை சாடினார்கள். கெட்டுப் போன பழத்தை சாப்பிட்டுவிட்டு, நன்றாக, ருசியாக இருக்கிறது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பிரபுவின் அம்மா 'நான் ருசித்தது என் அன்பு மகன் பிரபுவின் அன்பையே தவிர, பேரீச்சம் பழத்தையல்ல' என்றாராம். பிரபுவின் அம்மாவின் பதில் இருவரையும் சிந்திக்க வைத்தது.
.
அன்பானவர்களே! மேற்கண்ட சம்பவத்தில் பிரபுவின் அம்மா கெட்டுப்போன பழத்தின் ருசியை அறியாமல் போனதற்கு காரணம், தன் மகன் தன் மேல் வைத்திருந்த அளவற்ற அன்பாகும். நாம் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கும் போது தான், மேலான தன்மைகள் நம்மில் வெளிப்படும்.

Tuesday, July 15, 2014

பரிசுத்தத்தை காத்துக் கொள்வோம்

ஒரு பெரிய உணவகத்தில் ஒரு இளம் ஜோடி வந்து உணவை ஆர்டர் செய்தார்கள். அதோடு கூட கையில் எடுத்துச் செல்லும்படியாக ஒரு பார்சலையும் கேட்டார்கள். பார்சல் வந்ததும், பணத்தை செலுத்திவிட்டு, தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினர். சிறிது நேரத்திற்குப்பின் திறந்தால் அதில் உணவு இல்லை. கட்டுகட்டாக பணநோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
.
அதைக் கண்ட அதிர்ச்சியுற்று, அதை அப்படியே எடுத்துக் கொண்டு கடை முதலாளியிடம் கொடுத்தனர். அவரும் அதிச்சியுற்றார். பின் அவர்களுக்கு நன்றி செலுத்தினார். அவர்களைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் பெருமையாக சொன்னார்.
.
அங்கே தற்செயலாக வந்திருந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் இருவரையும் பேட்டிகண்டு, புகைப்படம் எடுப்பதற்காக சேர்ந்து நிற்க சொன்னார். ஆனால் அவர்கள் இருவரும் ஒரேயடியாக மறுத்தனர். கடை முதலாளி 'இப்படிப்பட்ட நற்குணம் எல்லாருக்கும் தெரிய வேண்டும். ஆகவே கண்டிப்பாக போட்டோ எடுத்து பத்திரிக்கையில் போட வேண்டும்' என்று வற்புறுத்தினார். ஆனால் அவர்களோ பிடிவாதமாய் மறுத்து விட்டனர். ஏன் என்று முதலாளி கேட்கவே, அவர்கள் இருவரும் 'நாங்கள் கணவன் மனைவி அல்ல' என்று சொல்லி தலைகுனிந்து நின்றனர்.
.
நற்பண்பும் நல்ல நடத்தையும் இணைபிரியா இரண்டு தண்டவாளங்கள் போன்றவை. மேலேயுள்ள சம்பவத்தில் நற்பண்பு சிறந்து விளங்கினாலும், நடத்தை மோசமாயிருந்தது.

Wednesday, July 2, 2014

புல்லுக்கு ஒப்பான ஜீவியம்

ஒரு வைத்தியர் தன்னுடைய நோயாளி ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, 'நீங்கள் செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான செய்தி தெரிய வேண்டுமா?' என்று கேட்டார். அப்போது நோயாளி, 'முதலில் எனக்கு கெட்ட செய்தியை சொல்லுங்கள்' என்று கூறவும், டாக்டர், 'நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயோ, இதைவிட கெட்ட செய்தி ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் சொன்னீர்களே, இதை விட மோசமான செய்தி என்று, அது என்ன? என்று கேட்டபோது, டாக்டர், 'இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார்.
.
நம்முடைய வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை அத்தனை குறைவானது. நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. மனிதனுக்கு தான் இன்று தான் மரிக்கபோகிறோம் என்று தெரிந்தால் கடைசி நிமிடம் வரை பாவம் செய்து, கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி கொள்ளலாம் என்று பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே இருப்பான். அதனால்தான் கர்த்தர் அதை இரகசியமாகவே வைத்திருக்கிறார்.

நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. - (யாக்கோபு 4:14).

Tuesday, July 1, 2014

கிருபையால் நிலைநிற்கிறோம்

ஒரு மனிதன் மரித்து பரலோகத்திற்கு சென்றார். அங்கு பரிசுத்த பேதுருவை வாசலில் கண்டார். அப்போது பேதுரு அவரை பார்த்து, “பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். நீ செய்த எல்லா நன்மையான காரியங்களை குறித்தும் சொல். நான் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களை கொடுப்பேன். அப்படி மதிப்பெண்கள் போடப்பட்டு, 100 மதிப்பெண்கள் ஆனவுடன் நீ பரலோகம் செல்லலாம்” என்று கூறினார்.
.
அந்த மனிதன், தான் செய்த நன்மைகளை செய்ய தொடங்கினார். “நான் ஒரே மனைவியை உடையவன். அவளோடு 50 வருடம் குடித்தனம் நடத்தினேன். அவளுக்கு மனதளவில் கூட நான் துரோகம் செய்ததில்லை” என்று கூறினார். அதற்கு பேதுரு, “ஓ, மிகவும் நல்லது. அதற்கு 3 மதிப்பெண்கள்”; என்று கூறினார். “என்னது 3 மதிப்பெண்தானா?” என்று கேட்டுவிட்டு, “நான், ஒவ்வொரு வாரமும் தவறாமல், ஆலயத்திற்கு சென்றேன். என்னுடைய தசமபாகத்தை தவறாமல் சபைக்கு கொடுத்து வந்தேன்” என்று கூறினார். அப்போது பேதுரு, “வாவ், நல்ல காரியம், நிச்சயமாக அதற்கு ஒரு மதிப்பெண் தரலாம்” என்று கூறினார். “என்னது! ஒரு மதிப்பெண்தானா? சரி இதற்காகவாவது நீங்கள் அதிக மதிப்பெண்கள் தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன், நான் வயதானவர்களுக்கென்று, முதியோர் இல்லம் வைத்து, அவர்களை இலவசமாக பராமரித்தேன்” என்று கூறினார். அதற்கு பேதுரு, “நல்ல காரியம் செய்தீர்கள், சரி அதற்கு இரண்டு மதிப்பெண்கள் தரலாம்” என்று கூறியபோது, அந்த மனிதர், மிகவும் சத்தமிட்டு, “ஐயோ, நான் செய்த நன்மையான காரியங்களுக்கு இவ்வளவு மதிப்பெண்கள் தான் கிடைக்கும் என்றால், நான் பரலோகத்திற்கு செல்லவே முடியாது, யார் தான் செல்ல முடியும்? கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே நான் பரலோகம் செல்ல முடியும்!” என்று கூறினார். அதை கேட்ட பேதுரு, “நீ இப்போது உள்ளே செல்லலாம் என்று கூறினார்.
.
ஒருவரும் தங்களுடைய நற்செய்கைகளினாலே ஒருக்காலும் பரலோகத்தை சென்றடைய முடியாது. நற்கிரியைகளினாலே பரலோகம் கிடைப்பதும் இல்லை. நாம் செய்கிற தான தர்மங்களும், கடவுளிடம் வேண்டி செய்கிற பொருத்தனைகளும் நம்மை ஒருநாளும் பரலோகத்திற்கு கொண்டு சேர்க்காது. பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். இரட்சிக்கப்படாமல் ஒருவரும் பரலோகம் செல்ல முடியாது, முடியவே முடியாது. இயேசுகிறிஸ்து கூறினார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று திட்டவட்டமாக கூறினார். மற்றும் அவர் “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவான் 10:9) என்றும் கூறினார். அப்படி கிறிஸ்து கொடுக்கும் இலவசமான இரட்சிப்பை பெற்றவர்கள் மாத்திரமே நித்திய ஜீவனை அடையும் பாக்கியத்தை பெறுகிறார்கள். இயேசுகிறிஸ்து ஜீவனை தரும் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்க, உலகில் 90 சதவிகிதம் பேர் அதை விட்டுவிட்டு, சாத்தான் சொல்லும் பொய்க்கு செவிகொடுத்து, நித்திய ஜீவனை இழந்தவர்களாக மறுமைக்கு கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்

மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேககுற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. - (ரோமர் 5:16).
.