Sunday, August 24, 2014

மனமகிழ்ச்சி நல்ல மருந்து

ஒரு போதகரின் மனைவி ஒரு வாரத்திற்கு ஒரு கேம்ப் கூட்டத்திற்கு போக அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து தூரமாக அந்த இடம் இருந்ததால், அங்கு தங்குவதற்கான வசதிகளை குறித்து அறிய விரும்பினார்கள். விசேஷமாக பாத்ரூம் வசதிகளை குறித்து அவர்கள் அறிய விரும்பினார்கள். அதை எப்படி டாய்லெட் என்று எழுதுவது, அது அநாகரீகமாக இருக்குமே என்று எண்ணி, பல விதத்தில் யோசித்து, பாத்ரூம் கம்மோட் (Bathroom Commode) என்பதை குறிக்கும் வகையில் 'நான் இருக்க போகும் இடத்தில் சொந்தமாக ஒரு BC இருக்கிறதா' என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.
.
அதை பெற்று கொண்ட அந்த கூட்டத்தை ஒழுங்கிபடுத்தியவருக்கு BC என்றால் என்னவென்று தெரியவில்லை. கூட இருந்த அநேகரிடம் அதை குறித்து கேட்டபோது, அவர்களுக்கும் புரியவில்லை. கடைசியில் ஒருவர், 'அந்த அம்மா பாப்டிஸ்ட் சபையை சேர்ந்தவர்கள். ஆகவே Baptist Church என்பதை சுருக்கமாக BC என்று குறிப்பிட்டுள்ளார்கள்' என்று கூறினார்.
.
ஆகவே, அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தியவர், இவ்வாறு மறு பதில் அனுப்பினார், 'அன்புள்ள அம்மா, இந்த பதில் கடிதத்தை எழுதுவதற்கு சில காலம் எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும், நீங்கள் குறிப்பிட்டுள்ள BC ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. ஒரே நேரத்தில் 250 பேர் ஒன்றாக அமரக்கூடிய இடமாக உள்ளது. நீங்கள் அடிக்கடி போக வேண்டும் என்றால், அது கொஞ்ச தொலைவில் அமைந்துள்ளதால், கொஞ்சம் சிரமம் ஏற்படும் என்று நினைக்கிறேன். தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் தங்களுடனே சாப்பாட்டையும் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்கள் சீக்கிரமாக வந்து, நேரம் கழித்து தான் போகிறார்கள்.
.
நானும் என் மனைவியும் கடைசியாக சென்றது, ஆறு மாதங்களுக்கு முன்பு, அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆகவே இன்னும் அநேகர் உட்காரும்படியாக பணத்தை வசூலித்து கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து போகாதிருப்பது எனக்கு மிகவும் வேதனையாயிருந்தாலும், வயதாகிவிட்டால், அவ்வளவு தூரம் செல்வது கடினமாக உள்ளது. நீங்கள் இங்கு வருவதாயிருந்தால், நானே உங்களை அழைத்து கொண்டுபோய் உங்களோடு அமர்ந்து, மற்றவர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்தி வைப்பேன் நன்றி' என்று பதில்கடிதம் அனுப்பினார்.
.
இதை படித்து, நன்கு சிரித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. நாம் மனம் திறந்து, வாய் விட்டு சிரிக்கும்போது, நமது நுரையீரல்கள் விரிவடையும்போது, இரத்த ஓட்டம் நன்றாக செயல்படும். இரத்த ஓட்டம் நன்கு செயல்படும்போது, நோய்கள் மாறி போகும். அதைதான் நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. சிலர் வாய் விட்டு சிரிக்க கூடாது என்பார்கள். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பதாகும். நம் முன்னோர்கள் அதை அறிந்திருந்தபடியால்தான் அதை குறித்து பழமொழி எழுதி வைத்துள்ளார்கள்.

'மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்'. - (நீதிமொழிகள் 17:22).

Wednesday, August 20, 2014

கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்

பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.
.
திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து விட்டான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.
.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அரைகுறையான கீழ்ப்படிதல் இருக்குமானால் அது ஆபத்தானது. பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தமாகி நோவா என்ற தேவ மனிதனுடன் பேசுகிறார், "தொடர் மழை பெய்யபோகிறது, அந்த அழிவிலிருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காத்துகொள்ள ஒரு பேழையை செய்" என்று. மழை அதற்குமுன் பூமியிலே பெய்ததா என்பது தெரியவில்லை. ஆனாலும் அது என்ன? ஏன், எதற்கு என எந்த கேள்வியும் கேட்காமல் நோவா கர்த்தர் சொன்ன அளவின்படியே ஒரு இஞ்ச் கூட்டியோ குறைத்தோ கட்டாமல் அவர் சொற்படி கீழ்ப்படிந்து பேழையை செய்தார். அழிவிலிருந்து அவர் குடும்பம் காக்கப்பட்டது

Saturday, August 2, 2014

உணர்வில்லாத இருதயம்

ஒரு சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரையும் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனங்களோ, இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தார். பின்னர்தான் மக்களுக்கு புரிய வந்தது, அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால், உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.
.
அதைப்போலவே ஒரு ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது, லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும், அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனை அவனுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் (லூக்கா 16:27-28). 'ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 16:29-31). எத்தனை சோகமான காட்சி! அத்தனை நாட்கள் பூமியிலிருந்த நாட்களில் தன்னுடைய சகோதரர்கள் மேல் இல்லாத கரிசனை நரகத்தில் எரியும்போது அந்த ஐசுவரியவானுக்கு வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை!

அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். - (லூக்கா 16:27-28).

Friday, August 1, 2014

நாம் கட்டும் வீடு

ஒரு வீடு கட்டிக் கொடுக்கும் மேஸ்திரி வயதாகிப்போனதினால் தன்வேலையிலிருந்து ஓய்வெடுக்க விரும்பினார். அதை தன் எஜமானிடம் சொன்னபோது, அவர், தனக்கு கடைசியாக ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், அதை ஒரு அருமையான நண்பருக்கு கொடுக்க வேண்டும் என்றும், அதை நல்லபடியாக கட்டிக் கொடுத்து விட்டு, நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார். அதைக் கேட்ட மேஸ்திரிக்கு வருத்தமாக இருந்தது, ‘நான் ஓய்வெடுக்கலாம் என்றால் இப்படி நமக்கு வேலைக் கொடுக்கிறாரே’ என்று, ‘நான் என் இஷ்டப்படி கட்டுவேன்’ என்று நினைத்தவராக, இருப்பதிலேயே குறைவான விலையில் சாமானங்களை வாங்கி, ஏதோ கட்டி முடிக்கவேண்டும் என்று கட்டி முடித்து, சாவியை எஜமானரிடம் கொடுத்தார்.
.
எஜமானர் அந்த சாவியை வாங்கி, ‘இந்த வீட்டை யாருக்கு கட்டச்சொன்னேன் தெரியுமா? அது உங்களுக்குத்தான்’ என்று சாவியை அவரிடமே திருப்பிக் கொடுத்தார். அதைக் கேட்ட மேஸ்திரி அதிர்ந்துப் போனார். ‘முதலிலேயே தெரிந்திருந்தால் நல்ல விலையேறப் பெற்ற சாமானங்களை வாங்கி, வீட்டைக் கட்டியிருப்பேனே’ என்று நொந்துக் கொண்டார்.
.
நாம் ஒவ்வொருவரும்கூட கிறிஸ்துவின் அஸ்திபாரம் என்னும் அவருடைய வார்த்தையின் மேல் அஸ்திபாரம் வைத்து, நம்முடைய சரீரமாகிய தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறோம். அவருடைய உபதேசம், விசுவாசம், நம்பிக்கை என்னும், பொன் வெள்ளி மற்றும் விலையேறப் பெற்ற கற்களினால் அதைக் கட்டும்போது ஒரு நாள் நியாயத்தீர்ப்பில் அக்கினியானது பரிசோதிக்கும்போது நமது சரீரமாகிய தேவனுடைய ஆலயம் நிலைத்து நிற்கும். ஆனால் அவருடைய உபதேசம் அல்லாத மற்றவற்றின் மேல் வீடு கட்டப்படுமானால் அது மரம், புல், வைக்கோலுக்கு சமானமாய், நெருப்பு பரிசோதிக்கும்போது பரிட்சைக்கு நில்லாது. அது அழிந்துப் போகும். ஆகவே நாம் கிறஸ்துவின் உபதேசத்தில் நமது வாழ்க்கை நிற்கும்படியாக கட்டுவதற்கு எச்சரிக்கையாக இருப்போம்.


போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். - (1கொரிந்தியர் 3:11-15)