Sunday, August 24, 2014

மனமகிழ்ச்சி நல்ல மருந்து

ஒரு போதகரின் மனைவி ஒரு வாரத்திற்கு ஒரு கேம்ப் கூட்டத்திற்கு போக அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து தூரமாக அந்த இடம் இருந்ததால், அங்கு தங்குவதற்கான வசதிகளை குறித்து அறிய விரும்பினார்கள். விசேஷமாக பாத்ரூம் வசதிகளை குறித்து அவர்கள் அறிய விரும்பினார்கள். அதை எப்படி டாய்லெட் என்று எழுதுவது, அது அநாகரீகமாக இருக்குமே என்று எண்ணி, பல விதத்தில் யோசித்து, பாத்ரூம் கம்மோட் (Bathroom Commode) என்பதை குறிக்கும் வகையில் 'நான் இருக்க போகும் இடத்தில் சொந்தமாக ஒரு BC இருக்கிறதா' என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.
.
அதை பெற்று கொண்ட அந்த கூட்டத்தை ஒழுங்கிபடுத்தியவருக்கு BC என்றால் என்னவென்று தெரியவில்லை. கூட இருந்த அநேகரிடம் அதை குறித்து கேட்டபோது, அவர்களுக்கும் புரியவில்லை. கடைசியில் ஒருவர், 'அந்த அம்மா பாப்டிஸ்ட் சபையை சேர்ந்தவர்கள். ஆகவே Baptist Church என்பதை சுருக்கமாக BC என்று குறிப்பிட்டுள்ளார்கள்' என்று கூறினார்.
.
ஆகவே, அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தியவர், இவ்வாறு மறு பதில் அனுப்பினார், 'அன்புள்ள அம்மா, இந்த பதில் கடிதத்தை எழுதுவதற்கு சில காலம் எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும், நீங்கள் குறிப்பிட்டுள்ள BC ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. ஒரே நேரத்தில் 250 பேர் ஒன்றாக அமரக்கூடிய இடமாக உள்ளது. நீங்கள் அடிக்கடி போக வேண்டும் என்றால், அது கொஞ்ச தொலைவில் அமைந்துள்ளதால், கொஞ்சம் சிரமம் ஏற்படும் என்று நினைக்கிறேன். தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் தங்களுடனே சாப்பாட்டையும் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்கள் சீக்கிரமாக வந்து, நேரம் கழித்து தான் போகிறார்கள்.
.
நானும் என் மனைவியும் கடைசியாக சென்றது, ஆறு மாதங்களுக்கு முன்பு, அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆகவே இன்னும் அநேகர் உட்காரும்படியாக பணத்தை வசூலித்து கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து போகாதிருப்பது எனக்கு மிகவும் வேதனையாயிருந்தாலும், வயதாகிவிட்டால், அவ்வளவு தூரம் செல்வது கடினமாக உள்ளது. நீங்கள் இங்கு வருவதாயிருந்தால், நானே உங்களை அழைத்து கொண்டுபோய் உங்களோடு அமர்ந்து, மற்றவர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்தி வைப்பேன் நன்றி' என்று பதில்கடிதம் அனுப்பினார்.
.
இதை படித்து, நன்கு சிரித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. நாம் மனம் திறந்து, வாய் விட்டு சிரிக்கும்போது, நமது நுரையீரல்கள் விரிவடையும்போது, இரத்த ஓட்டம் நன்றாக செயல்படும். இரத்த ஓட்டம் நன்கு செயல்படும்போது, நோய்கள் மாறி போகும். அதைதான் நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. சிலர் வாய் விட்டு சிரிக்க கூடாது என்பார்கள். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பதாகும். நம் முன்னோர்கள் அதை அறிந்திருந்தபடியால்தான் அதை குறித்து பழமொழி எழுதி வைத்துள்ளார்கள்.

'மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்'. - (நீதிமொழிகள் 17:22).

No comments:

Post a Comment