சமயோசித புத்தியுள்ள போதகர் மேடையில் எழுந்து வந்தார். “இப்போது நாம் ஆண்டவரைத் துதித்துப் பாடப் போகிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த சில பாடல்களைப் பாடுவோம்.” என்று கூறி, “மகிழ்வோம், மகிழ்வோம்….” எனப் பாட ஆரம்பித்தார். கூட்டத்தினரும் உற்சாகமாக இருகரம்தட்டி உற்சாகமாய்ப் பாடினர். அதைத்தொடர்ந்து, “அல்லேலூயா கர்த்தரையே, ஏகமாகத் துதியுங்கள்,” மற்றும், “இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்,” “பரிசுத்தர் கூட்டம் நடுவில்,” “ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் !” எனப் பாடல்கள் முழங்கின. செய்தியாளர் தாமதமாய் வந்த குறையை, ‘அப்பாடல் நேரம்’ நிறைவாக்கிற்று.
இப்படி, கிறிஸ்தவத் தமிழ் உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை, எல்லோருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்து, எல்லோராலும் உற்சாகமாய்ப் பாடப்படும் பல பாடல்களை இயற்றியவர், அகில உலக வானொலி ஊழியத்தின் தென் ஆசிய இயக்குனர், சகோதரர் எமில் ஜெபசிங் ஆவார். இந்திய தேசத்தின் மிகச் சிறந்த மிஷனரி இயக்கமாகத் திகழும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை வித்திட்டு, உரமிட்டு, வளர்த்திட்ட ஆதிகாலத் தலைவர்களில் இவரும் முக்கியமானவர். “பாடலென்றால் எமில்” என்று கூறுமளவிற்கு, இவ்வியக்க மக்கள் உற்சாகமாய்ப் பாட வழிவகுத்தவர். அழிந்து போகும் கோடிக்கணக்கான இந்தியர் மீதான இவரது உள்ளத்தின் ஆத்தும பாரம், இவரது பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் தொனிக்கும். இனிமையான ராகங்கள் இவரது பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.
சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் “பரிசுத்த பூமி” என, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.
ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959-ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும், மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப்பாடி, அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி, இப்பாடலை நேரடியாகக் கரும்பலகையில மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது.
“பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார் ! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ! சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் ! அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் !” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்?” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே,” என்ற ஆவியானவரின் பதில், வேதத்தின் அற்புதங்களைச் சிந்திக்கத் து}ண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம், என, பல அற்புதங்களை, ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும்பலகையில் பாடலாக உருவானது.
இப்பாடலை, கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர். அப்பெரிய வெள்ளிக்கிழமையானது, உயிர்த்தெழுந்து, சதா காலமும் ஜீவித்தரசாளும் மகிமை நிறை ஆண்டவரை, அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.
No comments:
Post a Comment