Thursday, January 31, 2013

உணமையான ஊழிய அர்ப்பணிப்பு - டாமியன்

பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
.
1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்த தீவில் அவர் கொண்டு வந்தார். ஏதோ குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளை கொடுத்து, ஜனங்களை ஆறுதல் படுத்தினார்.
.
ஒரு நாள் அவர் குளிக்க செல்லும்போது, தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில் பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஓ, அவருக்கும் தொழுநோய் பற்றி கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம், 'நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன்' என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் 'தொழுநோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்' என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே தான் அளவு கடந்த அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டு பாராமல், தன் உடலையும், உயிரையும் தொழு நோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதை எடுத்து காட்டின அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.

Wednesday, January 30, 2013

கிணற்றில் எறியப்பட்ட சாது சுந்தர் சிங்

1908-ம் ஆண்டு திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்தமதமே பிரதானமாக இருந்ததால் அம்மதம் நசிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமையான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார். ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிசேஷத்திற்கு வரவேற்பில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்று ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்ததை பிரசங்கித்த குற்றத்திற்காகவும் லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.
.
திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி சுந்தர் ஒரு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லபட்டார். அவரது உடைகளை உரிந்து விட்டு எலும்பு குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கைதோள் பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எங்கும் இருளாக இருந்தது. இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும் எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த இடமெல்லாம் அழுகிய மாம்சமும் எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகள் தான் அவர் நாவிலும் வந்தன. ‘ஏன் என்னை கைவிட்டீர்?’ துர்நாற்றம் பசி, தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்கு தூக்கம் வரவில்லை.
.
மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் ‘கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்’ என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்

Saturday, January 26, 2013

"எனக்கு பெருமையாக இருக்கிறது" - ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் சமீபத்தில் அதிபராக பதவி ஏற்று கொண்டார். அப்பொழுது அங்கே நடந்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒபாமா அவர்கள் பரிசுத்த வேதாகமம் மீது தன் கைகளை வைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.

இது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாக ஒபாமா குறிப்பிட்டு உள்ளார்.
அவர் போதகர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் பயன்படித்திய வேதாகமத்தின் மீது தன் கைகளை வைத்து உறுதிமொழி எடுத்து கொண்டார்.

ஜேசன்  மற்றும் ஜார்ஜ் புஷ் சபை ஆராதனையில் அதிபர் ஒபாவோடு கலந்து கொண்டார்கள்.



தேவனே அமெரிக்காவை ஆசிர்வதியும்
தேவனே எனக்கு உதவி செய்யும்

இது ஒபாமா கூறிய வார்த்தைகள். தேவன் எவ்வளவு முக்கியமானவர் என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் சரி.

Wednesday, January 23, 2013

கிரகாம் ஸ்டைய்ன்ஸ் (1941 - 2002)

நம்மில் எவ்வளவு பேர் இம் மனிதரை நினைவு வைத்திரிக்கிரோம்? இவருடைய தியாகம் நினைவு இருக்கிரதா? இவரை மட்டும் அல்ல, இவரோடு இரண்டு பிள்ளைகளும் எரித்து கொள்ளப்பட்டார்கள். இந்த மரணம் ஒரு இந்து அல்லது முகமதிய தலைவருக்கு நடந்திருந்தால்? பெரிய கலவரமோ அல்லது போராட்டமோ இந்தியா முழுவதும் வேடித்திருக்கும்.

ஆனால் நாம் அப்படி செய்ய அழைக்கபடவில்லை. வேதம் வன்முரையை தூண்டவோ போராட்டத்தை தூண்டவோ இல்லை. பல கிறிஸ்த்தவ ஆலையங்கள் சபைகள், நிருவனங்கள் ஆதியில் இவரை பற்றி பேசி பின்னர் மறந்து விட்டன.

நான் கோவையில் இந்திய நற்செய்தி மாணவ மன்றத்தில் இனைந்து ஊழியம் செய்த போது இம் மா மனிதரை நினைவு கூரும் வகையில் சில ஊழியங்கலை செய்து வந்தோம்

  • ஒவ்வொரு வருடமும் 22ம் ஜனவரி மாதம் ஊழிய திருநாள் ஆக அனுசரிக்கப் படவேண்டும்.
  • அந்நாளில் ஆலையங்கலிலும், ஊழிய நிறுவனங்களிலும் தேவ செய்தி ஊழிய தலைப்போடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
  • அந்நாளில் ஒரு முழு நேர ஊழியக்காரரை குடும்பத்தோடு அழைத்து நேரம் செலவிடலாம்.
  • உங்கள் குடும்ப ஜெபத்தில் ஊழியத்தை பற்றியும், ஊழியத்தின் முக்கியத்துவத்தையும் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளலாம்.
  •  குடும்ப ஜெபத்தில் ஊழியம் மற்றும் ஊழியகாரர்களுடைய சரித்திரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
  • உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள ஊழிய ஸ்தாபனங்களுக்கு அழைத்து சென்று ஊழியம் செய்வதின் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஆழையங்கள் 22ம் தேதி ஒட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஊழிய ஞாயிறு" ஆக அனுசரிக்க பட வேண்டும்.
  • ஊழிய ஸ்தாபனங்களை  அழைத்து சபை மக்களோடு ஊழியத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஒரு ஊழிய குடும்பத்திற்கு பணமோ அல்லது பரிசு அனுப்பி மகிழ்விக்கலாம்.
  • உங்கள் வீட்டின் அருகில் missionary குழந்தைகள் படிப்பார்கள் என்றால் அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து அவர்களோடு நேரம் செலவிடலாம்.
  • ஒருவருக்கவாவது இயேசுவை பற்றி சொல்லலாமே?
இது நீங்கள் விரும்பினீர்கள் என்றால் உங்கள் சபைகளில் இதை பகிர்ந்து கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பார். 
 
                                                                       

Sunday, January 20, 2013

கிறிஸ்தவர்கள் வளர்ச்சி - நாம் எங்கே தவருகிறோம்?



கிறிஸ்தவம் இந்தியாவில் 2 ம் னூற்ராடில் நுழைந்தது. ஆனால் வளர்ச்சி குறிப்பிடும் படியாக இல்லை. ஆலையங்கள், ஊழியங்கள், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டு இருக்கும் தருவாயில் ஏன் கிறிஸ்தவம் வளரவில்லை? இந்த கணக்கெடுப்பு என் மனதை வதைத்த காரணத்தால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்தவம் வளர்வது கிறிஸ்துவை நேசிக்கும் ஓவொறு கிறிஸ்தவனுக்கும் உள்ள கடமை.

Saturday, January 19, 2013

ட்ரோஜான் குதிரை (Trojan Horse)

நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள். அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.
.
இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், 'மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்' என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் 'இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது' என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.
.
இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

போஷிப்பவர் - உண்மை சம்பவம்

மதுரையில் வசிக்கும் ஒரு குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. காரணம் வாடகை ஆட்டோ ஓட்டி, குடும்பத்தை நடத்தி வந்த கணவருக்கு வீட்டு செலவுக்கு கொடுக்கக் கூட அவரிடம் பணமிருப்பதில்லை. இதில் வீட்டில் தவழ்ந்து விளையாடி வந்த இரட்டை பெண் பிள்ளைகளும் அவ்வப்போது பசியினால் அழுவது பெற்றவர்களின் மனதை கசக்கி பிழிந்தது.
.
இந்த குடும்ப போராட்டத்தில் இயேசுகிறிஸ்துவை இறுக பிடித்து கொண்ட மனைவி ஞாயிறு தோறும் ஒரு சபைக்கு சென்று ஆண்டவரை ஆராதித்து வந்தாள். ஆண்டவரை நம்பும்படியும், ஜெபிக்கும்படியும் கணவரிடம் அடிக்கடி கூறுவாள். ஆனாலும் அவளது வார்த்தைகளுக்கு அவர் சற்றும் செவிசாய்க்கவில்லை. ஒரு நாள் காலை பிள்ளைகள் இருவரும் பசியால் அழுதனர். அடுப்பில் உணவோ. கையில் காசோ இல்லை. பக்கத்து வீட்டில் போய் உணவோ கடனோ கேட்கவும் தன்மானம் ஒத்து வரவில்லை.
.
ஆகவே இடுப்பில் ஒரு பிள்ளையையும் கையிலொரு பிள்ளையையும் பிடித்து கொண்டு இருதயம் கனத்தவளாக கலங்கிய கண்களோடு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்று, ஒரு டம்ளர் பாலும், இரண்டு பன்னும் வாங்கி விட்டு, தயங்கியவளாக, 'அண்ணா காசு நாளைக்கு கொடுக்கிறேன்' என்று கூறினாள். டீக்கடைக்காரரோ 'என்னம்மா, இப்போதுதானே உன்கிட்ட நின்ற பெரியவர் காசு கொடுத்து விட்டு போனார்' என்றார். இவளால் நம்பி முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். அப்படி யாருமில்லை. யாராக இருக்கும்? என்று குழம்பி கொண்டிருக்கையில் உன்னை போஷிக்கிற தேவன் நானல்லவா? என்று உள்ளத்தில் அழுத்தமாய் கர்த்தர் நினைவுப்படுத்தினார். அவளடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாலில் பன்னை தொட்டு சாப்பிட்டு விட்டு திருப்தியாய் தூங்கினர் இரட்டையர்கள்.

Sunday, January 13, 2013

வேதாகம சங்கம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?

முன் நாட்களில் வேதாகமம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான காரியமாகும். இந்தியாவில் மட்டுமல்ல, கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லி கொள்ளும், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இதே நிலை! வேதாகம தட்டுப்பாட்டினால் பைபிள் சொசைட்டி என்று சொல்லப்படும் வேதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் வேதாகமம் அனைவருக்கும் கிடைக்கும்படியாக இந்த சங்கம் உதவி செய்தது. இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறுமிதான் காரணமாக இருந்தாள். அதை குறித்து பார்ப்போம்.
.
மேரி ஜோன்ஸ் என்னும் சிறுமி 1784ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தாள். அவளுடைய தகப்பன் நெசவு தொழில் செய்பவராயிருந்தார். மேரி தன் 8ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டாள்.
.
அவளுடைய கிராமத்திற்கு தாமஸ் சார்லஸ் என்பவர் ஏழை குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு எழுத்துக்களை கற்று கொடுக்க வருவார். அங்கு படிக்க கற்று கொண்ட மேரி, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பண்ணைக்கு சென்று அங்கிருந்த வேதாகமத்தை எடுத்து படிப்பது வழக்கம். வேதாகமத்தை படிக்க படிக்க, தனக்கென்று சொந்தமாக ஒரு வேதாகமம் வேண்டும் என்கிற ஆவலும் எண்ணமும் மேரிக்கு உருவாக ஆரம்பித்தது.
.
ஆனால் அந்த எண்ணம் ஈடேறாத காலம். ஏனென்றால் பணம் கிடைப்பது என்பது மிகவும் கடினமான காலமது. அப்படி பணம் இருந்தாலும், எந்தவித உதவியுமின்றி, வாகன வசதிகளுமின்றி, 25 மைல் தூரத்தில் இருந்த பாலா என்னுமிடத்தில் மட்டுமே வேதாகமம் கிடைத்தது. அப்படி போனாலும், போகும் நேரத்தில் வேதாகமம் இருக்கும் என்று சொல்ல முடியாது.
.
ஆனால் மேரி மனம் தளரவில்லை, கொஞ்சம் கொஞ்சமாய் பணத்தை சேர்க்க ஆரம்பித்தாள். காய்களை விற்பது, வீடுகளில் சென்று வேலைகளை செய்வது இப்படி சிறுசிறு வேலைகளை செய்து, அதில் வரும் சிறு வருமானத்தை சேர்த்து வைத்து, கடைசியில் அவளுக்கு வேதாகமம் வாங்க தேவையான பணம் ஆறு ஆண்டுகளுக்கு பின் கிடைத்தது.
.
அதை சந்தோஷமாய் எடுத்து கொண்டு, மேரி வெறுங்கால்களோடு, (செருப்பு வாங்க பணம் இல்லை) 25 மைல் தூரத்தில் இருந்த பாலாவிற்கு செல்ல ஆரம்பித்தாள். வழியில் இருந்த கற்களையும் முட்களையும் பொருட்படுத்தாது, ஆறுகளையும், குன்றுகளையும் கடந்து, கடைசியில் பாலாவை நோக்கி சென்றடைந்தாள். பாலாவில் தாமஸ் சார்லஸ் என்பவரிடம் மாத்திரமே வேதாகமம் விற்கும் கடை இருந்தது. ஆனால் என்ன ஒரு கஷ்டம், அங்கிருந்த வேதாகமங்கள் எல்லாம் விற்று போயிருந்தன, அல்லது யாராவது வேதாகமம் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்து போயிருந்தனர். அதை கேட்ட மேரி அழ ஆரம்பித்தாள். தன் இருதயம் வெடித்து விடுவது போல அவள் அழுவதை கண்ட சார்லஸ், வேறு ஒருவர் ஆர்டர் பண்ணியிருந்த வேதாகமத்தை அவளுக்கு கொடுத்தார். அதை பெற்று கொண்ட அவளுடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சந்தோஷமாய் வீட்டிற்கு திரும்பினாள்.
.
மேரி இப்படி 25 மைல் தூரம் வேதாகமத்தை வேண்டி வந்தது, தாமஸ் சார்லஸின் இருதயத்தை தொட்டது. மேரியை போல எத்தனையோ பேர் வேதாகமம் வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் வாங்க முடியாதவர் உண்டு என்பதை உணர்ந்து, அவர் Council of the Religious Tract Society க்கு கடிதம் எழுதினார். அதன்படி 1804ஆம் ஆண்டு British and Foreign Bible Society ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் இங்கிலாந்து தேசம் முழுவதற்கும் வேதாகமம் கிடைக்கும்படியாக முயற்சிகள் எடுக்கப்பட்டது.
.
அதன்பின் மற்ற நாடுகளுக்கும் வேதாகமம் கிடைக்கும் முயற்சியில் வேதாகம சங்கம் ஈடுபட்டது. அநேக ஆண்டுகளுக்குப்பின் இப்போது எல்லா நாடுகளிலும் வேதாகம சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழு வேதாகமோ, அல்லது வேதாகமத்தின் பாகங்களோ, மொழி பெயர்ப்பு செய்யும் வேலையை இந்த சங்கம் செய்கிறது. இதுவரை மொத்தம் 2,500க்கும் மேலான மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலே நாம் திருப்தி அடைந்து நின்று விடக்கூடாது. கர்த்தரின் வருகைக்குள்ளாக மொழி தெரிந்த ஒவ்வொரு மனிதனின் கைகளிலும், அவனுடைய மொழியில் வேதாகமம் கிடைக்கும் வரைக்கும் நாம் ஜெபிப்பதிலும், அதற்கு ஒத்துழைப்பதிலும் ஓய்ந்திருக்க கூடாது.
.
உலகில் எத்தனையோ மேரி ஜோன்கள் தங்களுக்கென்று ஒரு வேதாகமம் கூட இல்லாத நிலையில் இருக்கலாம். ஒரு வேளை வேதாகமம் இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த மொழியில் வேதாகமம் இல்லாதிருக்கலாம்... அவர்களுக்காக ஜெபிப்போமா?

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்

உங்களுக்கு சொந்தமாக ஒரு வேதாகமம் இருந்தால் நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் உலகத்திலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களிடம் வேதாகமம் கிடையாது.
.
நீங்கள் காலையில் எழுந்தரிக்கும்போது, முழு சுகத்தோடும் பெலத்தோடும் எழுந்திருந்தால் நீங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் மில்லியன் மக்கள் இந்த வார இறுதி வரைகூட ஜீவிக்க மாட்டார்கள்.
.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் போரில் ஈடுபடாதிருந்தால், சிறைச்சாலையின் தனிமையை அனுபவிக்காதிருந்தால், பசியின் கொடூரத்தை அனுபவியாதிருந்தால் நீங்கள் 500 மில்லியன் மக்களை காட்டிலும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
.
நீங்கள் சபை ஆராதனைக்கு விடுதலையோடு எந்தவித பயமுமில்லாமல், எந்தவித பயமுறுத்தலும் இல்லாமல் கர்த்தரை தொழுது கொள்ள செல்வீர்கள் என்றால், மூன்று பில்லியன் மக்களைவிட நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
.
உங்களுக்கென்று ஒரு பிரிஜ் இருந்து, நீங்கள் தலை சாய்க்க ஒரு வீடு இருந்து, நீங்கள் அணிந்து கொள்ள நல்ல உடை இருந்தால் நீங்கள் உலகத்திலுள்ள 75 சதவிகித மக்களை விட பணக்காரர்.
.
உங்கள் மணி பர்சிலும், உங்கள் பேங்கிலும் உங்களுக்கென்று பணம் இருந்தால், நீங்கள் எட்டு சதவிகித பணக்காரர்களில் ஒருவர்.
.
உங்கள் பெற்றோர் உயிரோடும், இன்னும் இணைந்து இருந்தால், நீங்கள் மிகவும் அபூர்வமானவர்.
.
நீங்கள் உங்கள் தலையை உயர்த்தி, புன்னகைத்து தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருந்தால் நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். அநேகர் அந்த நன்றியுணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
.
நீங்கள் ஒருவரின் கரத்தை பிடித்தோ, அணைத்தோ அல்லது அவர்களது தோள்களை தொட்டு ஆறுதல் படுத்துவீர்களானால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் நீங்கள் கர்த்தரின் அன்பை வெளிப்படுத்துகிறீர்கள்.
.
நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்ட விசுவாசியாக இருந்தால் உலகத்திலுள்ள சிறுபான்மை மக்களை சேர்ந்தவராவீர்கள்.
.
நீங்கள் இதை வாசிப்பீர்களானால், உலகில் உள்ள 3 பில்லியன் மக்களை விட ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் அவர்களுக்கு வாசிக்கவே தெரியாது.
.
உலகில் எத்தனையோ பில்லியன் மக்கள் இருந்தும் தேவன் நம்மை அவருக்கு சொந்தமாக தெரிந்து கொண்டாரே, நாம் எத்தனை பாக்கியவான்கள்! வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நாம் பிள்ளைகளாகும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறாரே நாம் எத்தனை பாக்கியமுள்ளவர்கள்! நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களை தெரிந்து கொண்டேன் என்று நம்மை தெரிந்து கொண்டாரே அவர் எத்தனை நல்லவர்!

இயேசு ஏன் பிறந்தார்?

ஒரு ஊரை சேர்ந்த மக்கள் வித்தியாசமான ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதை கேள்விப்பட்ட ஒரு புகழ்பெற்ற மருத்துவர்
அந்த நோயை ஆராய்ந்து, நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்தார். தனதுமிகுந்த அலுவல்கள் மத்தியிலும் அந்த மருத்துவர் ஒரு நாளை நியமித்து அன்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். இச்செய்தியைக் கேட்ட ஊரார் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவருக்கு பெரிய அளவில் மரியாதையும் வரவேற்பும் கொடுக்க விரும்பினர். அந்த நாளும் வந்தது. மக்கள் அவரை குதிரையில் ஏற்றி, வீதி வீதியாய ஊர்வலம் வந்து கௌரவப்படுத்தினர். பட்டடாசுகள் வெடித்தனர். பல பிரமுகர்கள் அவரை வாழ்த்திப் பேசி புகழாரம் சூட்டினர். பின் அவருக்கு அறுசுவை உணவுகளை தயாரிப்பதிலும், அவரை கவனிப்பதிலும் மூழ்கிப்போன அந்த மக்கள் அவரிடம் சிகிச்சை பெற கவனம் செலுத்தவில்லை. மாலை வந்தபோது மருத்துவர் அவசர வேலையாக ஊருக்கு திரும்பினார். அவர்களோ தொடர்ந்து நோயாளிகளாகவே இருந்தனர்.
.

இந்த ஜனங்கள் செய்தவை யாவும் நல்ல செயல்கள்தான். ஆயினும் முக்கிய
நோக்கத்திற்கு அவர்கள் முதல் கவனம் செலுத்தவில்லை. இதுப்போலவே
பாவிகளை இரட்சிக்க உலகத்தில் உதித்த இயேசுகிறிஸ்துவின் பிறப்பை
கோடிக்கணக்கானோர் வெகு விமரிசையாக வருடந்தோறும்
கொண்டாடுகிறார்கள். டிசம்பா மாதம் வந்துவிட்டால் விசேஷ
ஆராதனைகள், பாடல் நிகழ்ச்சிகள், வண்ண விளக்குகள், புத்தாடைகள்,
இனிப்பு, விருந்து என கொண்டாட்டத்தின் நாட்களாக அவை மாறி
விடுகின்றன. இன்னும் அநேக இடங்களில் குடித்து கும்மாளமிடுவதும்
கிறிஸ்மஸின் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால்
இயேசுகிறிஸ்து எதற்காக வந்தார்? என் பாவத்திலிருந்து விடுதலையளிக்க
அல்லவா வந்தார். அதை நான் பெற்றிருக்கிருக்கிறேனா என்று அநேகர்
சிந்திப்பதில்லை.
.


பொதுவாக எல்லா மனிதர்களிடமும் பாவம் என்ற கொடிய நோய்
காணப்படுகிறது. அதன் வெளிப்பாடுகள் தான் தவறான சுபாவம், தவறான
இயல்பு. தவறான செயல், தவறான மனநிலை ஆகும். அந்த பொல்லாத
பிசாசின் கிரியைகளை அழித்து, நமக்கு விடுதலையளிக்கவே
இயேசுகிறிஸ்து உலகத்திற்கு வந்தார். அவர் நமது கனத்தையும்,
மரியாதையையும், காணிக்கையையும் பெறுவதை பிரதான நோக்கமாக
கொண்டு பூமிக்கு வரவில்லை, ஒரு விசேஷ செயலை ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் செய்ய வந்தார். அதாவது நமக்குள் இயங்கும் பாவத்தின்
ஆதிக்கத்தை அழித்து அப்புறப்படுத்தவே வந்தார்.

ஜெபம் கேட்கப்படாததன் ஒரு காரணம்

ராஜன் ஒரு உதவியை எதிர்பார்த்து தன் நண்பனுக்கு போன் செய்தான். அநத நண்பர் காவல் துறையிலே உயர்ந்த பதவியில் இருந்தார். ராஜன் தொலைபேசியை எடுத்தான். எண்களை சுழற்றினான். நண்பர் இன்னும் போனை எடுக்கவில்லை. மணி அடித்து கொண்டேயிருந்தது. ராஜன் தனது தேவையை மளமளவென்று சொன்னான். போனை வைத்து விட்டான். மறுநாள் 'ஐயோ நான் அவரிடம் கேட்டேனே அவர் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே' என்று புலம்பினான். ஆனால் அவனோ அவரிடம் பேசவே இல்லை. அவர் மறுமுனையில் போனை எடுக்கவே இல்லை. ஆம் நம்மில் அநேகருடைய ஜெபமும் இப்படித்தான் இருக்கிறது, 'ஆண்டவரே இதுதான் என்னுடைய வேண்டுதல். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்'. ஆண்டவர் அந்த முனையில் போனை எடுக்ககூட இல்லை. இப்பொழுது நீங்கள் தேவனிடம் ஜெபிக்கவில்லை. உங்களிடமே ஜெபித்திருக்கிறீர்கள். 'நான் ஜெபித்து விட்டேன், தேவன் எனக்கு பதில் கொடுப்பார்' என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும் ஜெபங்கள் கேட்க கூடாதபடி சில தடைகள் நம் வாழ்வில் காணப்படுமேயானால், அதை திருத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இயேசுவே வழி

ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டு பகுதிகளில் ஒருவர் சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார். தான் தங்கியிருந்த கூடாரத்தை விட்டு அங்கு வாழும் பழங்குடி மக்களை தேடி சென்றார். அங்கு அவர் தன் ஊழியங்களை நிறைவேற்றி மாலை நேரத்தில் தான் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு திரும்பி வரும்படி புறப்பட்டார். அது எவ்வித பாதையும் இல்லாத காட்டு பகுதியாய் இருந்தபடியால், எந்த வழியாக தன் கூடாரத்தை சென்றடைவது என்று அறியாத அவர் அலைந்து திரிந்தார். மிக ஆபத்தான அக்காட்டுப்பகுதியில் கடைசியாக ஒரு சிறு குடிசை அவர் கண்களில் பட்டது. அது அப்பழங்குடியினரில் ஒருவனது குடிசையாயிருந்தது. அவர் அவனை அணுகி, தன் கூடாரத்திற்கு போகும் வழியை அறிந்து கொள்ள அவன் தனக்கு உதவி செய்யக்கூடுமா என கேட்டார். உடனே அம்மனிதன் அவருக்கு உதவி செய்ய சம்மதித்தான்.
.
அந்த சுவிசேஷகர் அவனுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டு, 'சரி நான் எந்த வழியாக செல்ல வேண்டுமென்று கேட்டார். அம்மனிதன் நடந்து வாரும் என்று சொல்லிவிட்டு, அவருக்கு முன்பாக நடக்க தொடங்கினான. ஒரு மணி நேரம் நடந்த பின்னர் அச்சுவிசேஷகர் மிகவும் களைத்து போனார். அவருடைய இருதயத்தில் அம்மனிதனை பின்தொடர்ந்து சென்று கடைசியில் தன் கூடாரத்தை அடைவது நிச்சயம் தானா என்ற கேள்வி எழுந்தது. எனவே அவர் அம்மனிதனை நோக்கி, 'இவ்வழியாகத்தான் போக வேண்டுமென்று உனக்கு நிச்சயமாக தெரியுமா? எந்த பாதையும் என் கண்களுக்கு புலப்படவில்லையே' என்று கேட்டார். அப்பழங்குடியான் அவரை பார்த்து, 'இவ்விடத்தில் பாதை ஒன்றுமில்லை. நான்தான் பாதை' என்று கூறினான். மிஷனெரி அவனை பின் தொடர்ந்து சென்று கடைசியில் காரிருள் சூழும் முன்பாக தன் கூடாரத்தை சென்றடைந்தார்.