Saturday, April 26, 2014

அதன் அழகை ரசி

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். - (1தெசலோனிக்கெயர் 5:11).

.
ஒரு வயதான முதியவர் மரண படுக்கையில் இருந்து, நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தார். ஒரு நாள் அவருக்கு தன் வீட்டின் கீழே இருந்து அவருக்கு பிடித்தமான ரவா கேசரி செய்யும் வாசனை வந்தது. அதை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, எழுந்து கீழே விழுந்து, சிரமப்பட்டு கீழே சென்றார்.
.
உயிரை கையில் பிடித்தபடி கீழே சமையறைக்குள் சென்றபோது, அவரால் நம்ப முடியவில்லை. அவருக்கு பிடித்தமான உணவு வகைகளும், கேசரியும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் நினைத்தார், 'கடைசியாக என் கணவர் நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மரித்து போகட்டும்' என்று தன் மனைவி ஆசையாய் சமைத்திருப்பதாக நினைத்து சேகரியை பக்கத்தில் இருந்த ஒரு கரண்டியில் எடுத்து, அதை வாயில் வைக்கும் தருவாயில், அவருடைய மனைவி கையில் ஒரு அடி கொடுத்து, ' இந்தபக்கம் வராதீர்கள், இது உங்கள் அடக்கத்திற்கு வருபவர்களுக்காக செய்தது' என்று முதியவரை துரத்தி விட்டார்கள்.
.
அந்த பாட்டியம்மா மாத்திரம் அல்ல, நாமும் கூட அநேக வேளைகளில் அப்படித்தான் இருக்கிறோம். உயிரோடு இருக்கும் நேரத்தில் நாம் அவர்களிடம் நீர் எத்தனை அருமையானவர் என்று சொல்வதில்லை. ஆனால் மரித்தப்பின் எத்தனை எத்தனை வார்த்தைகள் அவரை புகழ்நது பேசுகிறோம். அவர் உயிரோடு இருக்கும்போது அந்த வார்த்தைகளை சொன்னால் அவர் எப்படி மகிழ்வார்!
.
மலர்களை ஒரு மனிதர் மரித்தப்பின் சார்த்துகிறோம். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கொடுத்தால் அவர் அதன் அழகை இரசிப்பாரே!
.
நம்முடைய நாட்டில் மரித்தப்பின் அநேகருக்கு பெரிய பெரிய விருதுகளை கொடுப்பார்கள். அவர் ஒருவேளை மிகவும் வயதாகிதான் மரித்திருப்பார். அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுத்திருந்தால், அந்த வயதான காலத்தில் மகிழ்ச்சியோடே இருந்திருப்பாரே!
.
ஒருவேளை உங்களுக்கு யாராவது விசேஷித்தவர்களாக இருந்தால், அவர் மரிக்கும்வரை காத்திராதேயுங்கள். அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை வாழ்த்தி, உள்ளதை உள்ளபடி சொல்லி, அவரை மகிழ செய்யுங்கள்.
.
ஒருவர் செய்கிற நன்மையான காரியங்களை பாராட்ட மறவாதீர்கள். நீங்கள் பாராட்டுவதால் அவர் தலைகீழாக நிற்க போவதில்லை, ஆனால் அவர் கர்த்தருக்குள் இருந்தால் அவர் கர்த்தரை அதற்காக துதிப்பார், பெருமையடைய மாட்டார்.
.
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். ஆமென் அல்லேலூயா!

Friday, April 25, 2014

தேவனால் முடியாத காரியம்

நம் தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை என்று நாம் அறிந்திருக்கிறோம். அதை குறித்து அநேக பாடல்களையும் பாடுகிறோம். ஆனால் சில காரியங்கள் தேவனால் முடியாததாய் இருக்கிறது. அதை குறித்து இப்போது காண்போம்.
.
1. நம் தேவனால் பாவம் செய்ய முடியாது. அது அவருடைய இயல்புக்கும், இயற்கையான குணத்திற்கும் மாறுபாடானது. 'அவரிடத்தில் பாவமில்லை' (1யோவான் 3:5ன் பின்பாகம்). அவர் பாவத்தை நியாயம் தீர்க்காமல் அதை காண முடியாது. அதனால்தான் அவர் தம்முடைய சொந்த குமாரனை இந்த பாவ உலகத்திற்கு அனுப்பி, பாவத்திற்கு கிருபாதார பலியாக அவரை ஒப்புக்கொடுத்தார்.
.
2. தேவன் ஒருவரையும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி அவர்களை இரட்சிக்கிறவரல்ல. 'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3: 17-18). நாம் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறபடியால், நமக்கு சிந்திக்கும் திறமை, சொந்தமாக சுய சத்தத்தில் முடிவெடுக்கும் உரிமைகளை கர்த்தர் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார். கர்த்தரை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு அவர் சந்தர்பத்தையும் கொடுக்கிறார். அவரை ஏற்று கொள்வதும் நிராகரிப்பதும் அவரவருடைய சொந்த விருப்பமே!
.
3. தேவன் ஒருவரையும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக தமக்கு கீழ்ப்படிய சொல்லுகிறவரல்ல. 'நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன். - (ஏசாயா 66:3).
4. பாவத்தை கண்டும் காணதவர் போல இருக்க மாட்டார். 'பாவத்தின் சம்பளம் மரணம்' - (ரோமர் 6:23) என்று பாவத்திலிருக்கிறவர்களை எச்சரித்து அவர்கள் பாவத்திலிருந்து வெளிவருவதையே விரும்புகிறார்.
.
5. அவர் பொய் சொல்ல மாட்டார். 'பொய்யுரையாத தேவன்..' (தீத்து 1:3) 'நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்' (எபிரேயர் 6:18).
.
6. அவரால் மரிக்க முடியாது. 'அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்' (உபாகமம் 33:27) 'நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை' (சங்கீதம் 102:27).
.
7. தேவன் தமது வார்த்தைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டார். 'உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்' - (சங்கீதம் 138:2).
.
8. தேவன் ஒருபோதும் தம்முடைய குணாதிசயங்களிலிருந்தும், தமது பரிசுத்தத்திலிருந்தும், பரிபூரணத்திலிருந்தும் மாறவே மாட்டார் 'நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை' (மல்கியா 3:6).
.
9. அவருடைய சித்தததிற்கு மாறாக கேட்கப்படும் எந்த விண்ணப்பத்திற்கும் அவர் பதிலளிக்க மாட்டார். 'அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்' (ரோமர் 8:26).
.
10. 'இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது' (ஏசாயா 59:1-2).
.
11. தேவனுக்கு சமமானவர் வேறு யாருமில்லை. ஒப்புயர்வு இல்லாதவர் 'முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை' (ஏசாயா 46:9).
.
இப்படிப்பட்ட தேவனை தெய்வமாக கொண்டுள்ள யாவரும் பாக்கியவான்கள். அவரே தேவன், வேறொருவரும் அவருக்கு சமமில்லை! ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! ஆமென் அல்லேலூயா!

Wednesday, April 9, 2014

பரிபூரண ஜீவன்

ஒரு வீட்டின் சொந்தக்காரர் தன் வீட்டை ஒரு இலட்சத்திற்கு விற்க விரும்பினார். அதை மற்ற ஒருவர் எப்படியாவது வாங்க வேண்டும் என முயற்சித்தார். ஆனால் அவரிடம் அந்த அளவு பணம் இல்லாததால் அந்த வீட்டு சொந்தக்காரரிடம், பேசி, கடைசியில் அரை லட்சத்திற்கு அந்த வீட்டு சொந்தக்காரர் ஒரு நிபந்தனையின் பேரில் அதை விற்க ஒப்பு கொண்டார். அதன்படி, வீட்டின் சொந்தக்காரர் வீட்டு முன் கதவின் உட்புறம் ஒரே ஒரு ஆணியை மட்டும் அடிக்கவும் அந்த வீட்டை வாங்கினவர் ஒப்புக்கொண்டார். அதன்படி, ஒரு ஆணி மாத்திரம் அந்த வீட்டின் கதவில் அடிக்கப்பட்டது.
.
சில வருடங்கள் கழித்து, அந்த வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டை திரும்ப பெற விரும்பினார். ஆனால் வீட்டை வாங்கினவரோ அதை திரும்ப கொடுக்க மறுத்து விட்டார். அதனால் அந்த வீட்டின் சொந்தக்காரர், போய் ஒரு மரித்த நாயின் உடலை கொண்டுவந்து, தான் அடித்திருந்த ஆணியின் மேல் மாட்டி விட்டார். ஒரு செத்த நாய் வீட்டின் உள் இருந்தால், அந்த வீட்டில் குடியிருக்க முடியுமா? உடனே அந்த வீட்டை காலிபண்ணினார்கள், அந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள்.
.
நாம் கர்த்தரை ஏற்று கொண்டபின் ஒரு சிறு பகுதியை நமக்கு என்று நம் இருதயத்தில் வைத்திருந்தாலும், சத்துரு அதை சொந்தம் கொண்டாட வருவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வாரன் என்று வசனம் நமக்கு கூறுகிறது. சாத்தானாகிய திருடன் வரும்போது, கொல்லவும் அழிக்கவும், திருடவும் தான் வருவான். அவனால், எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. அப்படி அவன் வரும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்கையை சூறையாடவும், கர்த்தருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவை அழிக்கவும் தான் வருவானேயன்றி, வேறொன்றுக்கும் வருவதில்லை.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - (யோவான் 10:20).