Friday, April 25, 2014

தேவனால் முடியாத காரியம்

நம் தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை என்று நாம் அறிந்திருக்கிறோம். அதை குறித்து அநேக பாடல்களையும் பாடுகிறோம். ஆனால் சில காரியங்கள் தேவனால் முடியாததாய் இருக்கிறது. அதை குறித்து இப்போது காண்போம்.
.
1. நம் தேவனால் பாவம் செய்ய முடியாது. அது அவருடைய இயல்புக்கும், இயற்கையான குணத்திற்கும் மாறுபாடானது. 'அவரிடத்தில் பாவமில்லை' (1யோவான் 3:5ன் பின்பாகம்). அவர் பாவத்தை நியாயம் தீர்க்காமல் அதை காண முடியாது. அதனால்தான் அவர் தம்முடைய சொந்த குமாரனை இந்த பாவ உலகத்திற்கு அனுப்பி, பாவத்திற்கு கிருபாதார பலியாக அவரை ஒப்புக்கொடுத்தார்.
.
2. தேவன் ஒருவரையும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி அவர்களை இரட்சிக்கிறவரல்ல. 'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3: 17-18). நாம் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறபடியால், நமக்கு சிந்திக்கும் திறமை, சொந்தமாக சுய சத்தத்தில் முடிவெடுக்கும் உரிமைகளை கர்த்தர் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார். கர்த்தரை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு அவர் சந்தர்பத்தையும் கொடுக்கிறார். அவரை ஏற்று கொள்வதும் நிராகரிப்பதும் அவரவருடைய சொந்த விருப்பமே!
.
3. தேவன் ஒருவரையும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக தமக்கு கீழ்ப்படிய சொல்லுகிறவரல்ல. 'நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன். - (ஏசாயா 66:3).
4. பாவத்தை கண்டும் காணதவர் போல இருக்க மாட்டார். 'பாவத்தின் சம்பளம் மரணம்' - (ரோமர் 6:23) என்று பாவத்திலிருக்கிறவர்களை எச்சரித்து அவர்கள் பாவத்திலிருந்து வெளிவருவதையே விரும்புகிறார்.
.
5. அவர் பொய் சொல்ல மாட்டார். 'பொய்யுரையாத தேவன்..' (தீத்து 1:3) 'நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்' (எபிரேயர் 6:18).
.
6. அவரால் மரிக்க முடியாது. 'அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்' (உபாகமம் 33:27) 'நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை' (சங்கீதம் 102:27).
.
7. தேவன் தமது வார்த்தைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டார். 'உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்' - (சங்கீதம் 138:2).
.
8. தேவன் ஒருபோதும் தம்முடைய குணாதிசயங்களிலிருந்தும், தமது பரிசுத்தத்திலிருந்தும், பரிபூரணத்திலிருந்தும் மாறவே மாட்டார் 'நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை' (மல்கியா 3:6).
.
9. அவருடைய சித்தததிற்கு மாறாக கேட்கப்படும் எந்த விண்ணப்பத்திற்கும் அவர் பதிலளிக்க மாட்டார். 'அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்' (ரோமர் 8:26).
.
10. 'இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது' (ஏசாயா 59:1-2).
.
11. தேவனுக்கு சமமானவர் வேறு யாருமில்லை. ஒப்புயர்வு இல்லாதவர் 'முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை' (ஏசாயா 46:9).
.
இப்படிப்பட்ட தேவனை தெய்வமாக கொண்டுள்ள யாவரும் பாக்கியவான்கள். அவரே தேவன், வேறொருவரும் அவருக்கு சமமில்லை! ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! ஆமென் அல்லேலூயா!

No comments:

Post a Comment