Saturday, June 21, 2014

கர்த்தருடைய சாயல்

இங்கிலாந்தில் ஒரு பெண் மிகவும் அழுக்கான உடைகளைத் தரித்துக் கொண்டு, குப்பைத் தொட்டிகளுக்கு அருகே இருந்து அங்கிருந்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு, சடை பிடித்த முடிகளுடன் அலைந்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பக்கத்தில் யாராவது வந்தால், ‘நான் பெரிய குடும்பத்துப் பெண்ணாக்கும், என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்’ என்று சத்தம் போடுவாள். இப்படி 20 வருடங்களாக தெருதெருவாக அலைந்துக் கொண்டிருந்தாள். அவள் யாரோ பிச்சைக்காரி என்று யாரும் அவளைக் கண்டுக் கொள்ளவும் இல்லை.
.
ஒரு முறை அவள் ஏதோ சண்டை செய்தாள் என்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி, நேரமெடுத்து அவளை விசாரித்த போது, அந்தப் பெண் உண்மையாகவே பெரிய இடத்துப் பெண்தான் என்று தெரிய வந்தது. அவள் அங்கிருந்த பெரிய அரசாங்க அதிகாரியின் மகள் என்றும், அவள் ஒரு முறை கடைக்கு சென்றபோது, அவள் திருடர்களால், தலையில் அடிக்கப்பட்டு, மூளைகலங்கிப் போய் தான் இருக்கும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்ததாக தெரிய வந்தது.
.
20 வருடங்களாக குப்பையில் கிடந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வாழந்து வந்த அவள் அத்தனை நாட்களுக்குபிறகு, தன் குடும்பத்தோடு, சரியான இடத்திற்கு தன் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு உடன்சுதந்தரவாளியாக அழைத்து செல்லப்பட்டாள்.
.
நாம் அனைவரும் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டுள்ளோம். ஆனால் நம்முடைய பாவங்களினால் நாம் அவரை விட்டு தூரப் போய், அலைந்து திரிந்தாலும், நாம் நம் பாவங்களை விட்டு திரும்பி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, திரும்பவும் தேவனிடத்தில் வரும்போது, பரலோகத்தின் ஆசீர்வாதங்களுக்கு நாம் சுதந்தரவாளிகளாக மாறுகிறோம். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே என்று வசனம் நமக்கு கூறுகிறது.
.
கெட்ட குமாரன் தன் தந்தையின் சொத்துக்களில் தன்னுடைய பங்கை வாங்கிக் கொண்டு, ஊதாரியாக செலவழித்து, கடைசியில் பணமெல்லாம் செலவழிந்து, பன்றி சாப்பிடும் தவிட்டை சாப்பிட வாஞ்சித்தும் அது கிடைக்காதபடியால், மனம் திரும்பி, ‘எப்படியாவது என் தகப்பனிடம் போய் அவருடைய வேலையாட்களில் ஒருவனாக இருப்பேன்; என்று நினைத்துதான் அவன் தன் தகப்பனிடம் வந்தான். ஆனால் தகப்பனோ, எத்தனை கரிசனையுள்ளவராய்; அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். - (லூக்கா 15:20-24) என்று பார்க்கிறோம். நாம் நம் பாவங்களில் மடிவதை விரும்பாத தேவன் அவரிடத்தில் திரும்பி வருவதையே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறவராய், அந்த கெட்ட குமாரன் திரும்பி வந்தபோது எப்படி மகிழ்ந்தாரோ அதைப் போலவே நம் தேவனும் மகிழ்கிறவராய் இருக்கிறார்.

Friday, June 20, 2014

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஒரு மனிதன் லண்டனில் ஒரு இடத்திற்கு போவதற்காக இரயிலில் ஏறினான். அவனுக்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள். இரயில் புறப்பட்டு 20 நிமிடம் இருக்கும். அந்த இரண்டு வாலிபர்களில் ஒருவனுக்கு திடீரென்று வலிப்பு வந்து, இழுக்க ஆரம்பித்தது. உடனே பக்கத்தில் இருந்த மற்ற வாலிபன், தன் மேல் உடையை கழற்றி, வலிப்பு வந்த வாலிபனின் தலைக்கு அடியில் வைத்து, வாயில் வந்த நுரையை துடைத்து, அந்த வலிப்பு நிற்கும் வரை காத்திருந்து, வேர்வையை துடைத்து, அந்த வாலிபனை மீண்டும் அவன் இடத்தில் அமர பண்ணினான். அதை ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்த மற்ற பிரயாணியிடம் திரும்பி, 'ஐயா, ஒரு நாளில் இவனுக்கு மூன்று அல்லது நான்கு முறை இந்த வலிப்பு வருகிறது. நானும் இவனும் நண்பர்கள். நாங்கள் இரண்டு பேரும், வியட்நாம் போரில் ஈடுபட்டவர்கள். அந்த போரில் இரண்டு பேரும் அடிபட்டோம். ஏன் இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்து, நான் நடக்க முடியாமல் போனது, இவனது தோளில் ஒரு குண்டு பாய்ந்தது. எங்களை காப்பாற்ற வர வேண்டிய ஹெலிகாப்டர் ஏதோ காரணத்தினால் வரவேயில்லை.
.
இந்த என் நண்பன், நடக்க முடியாத என்னை தன் தோளில் சுமந்து கொண்டு, மூன்றறை நாட்கள் நடந்து ஒரு பெரிய காட்டை கடந்தோம். வழியில் வியட்நாம் போர் வீரர்கள் எங்களை குறி வைத்து, குண்டுகளை வீசி கொண்டே இருந்தார்கள். நான் இவனிடம், 'என்னை கீழே போட்டு விட்டு நீ தப்பித்து கொள்' என்று எத்தனையோ முறை சொன்னேன். ஆனால் இவனோ என்னை கீழே விடவே யில்லை. அந்த பயங்கர காட்டிலிருந்து தப்பி எப்படியோ வெளியே வந்தோம். என் உயிரை இவன் காப்பாற்றினான். எதற்கு காப்பாற்றினான், எப்படி காப்பாற்றினான் என்பதை நான் அறியேன். நான்கு வருடங்களுக்கு முன்பு இவனுக்கு இந்த வியாதி இருப்பதை கண்டேன். நான் நியூயார்க் நகரத்தில் இருந்த வீட்டை விற்று விட்டு, இவனை கவனித்து கொள்ள இவனோடு கூட நான் இருக்கிறேன். இவன் எனக்கு செய்தததற்காக நான் என்ன வேண்டுமானாலும் இவனுக்காக செய்ய தயார்!' என கண்களில் நீர் மல்க கூறினான்.

அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17:15-19).

Friday, June 6, 2014

காரிருளில் என் நேச தீபமே - பாடல் பிறந்த கதை

காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்,
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்
.
மேற் கண்ட வரிகள் ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய பாடலின் முதற்கவி ஆகும். இந்த நான்கு வரிகளை மீண்டுமொருமுறை கருத்தாய் வாசியுங்கள். உன்னத கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு அற்புத சத்தியம் இதில் அடங்கியுள்ளது. காரிருள்போல தோன்றும் வாழ்க்கiயின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். இன்றைய நாட்களில் விசுவாசிகள் அநேகர் தீர்க்கதரிசனமுள்ளவர் என யாரையாவது குறித்து கேள்விபட்டால் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இது அநேக நேரங்களில் அஞ்ஞானிகள் குறி கேட்பது போல ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பாடலின் கருத்து நம் வாழ்க்கைக்கு மிகமிக அவசியாமானது. நாளைய தினத்தை கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், இன்றைய தினத்திற்கான கிருபையை மட்டும் சார்ந்து வாழ நாம் கற்று கொள்வது அவசியம்.
.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவருடைய கரத்தில் நமது காலங்களும் நமது வாழ்க்கையும் இருப்பதால், அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்போது, நம்மை யாரும், எதுவும் நிச்சயமாக அசைக்க முடியாது.
.
இந்த பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம். 1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது.
.
அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம்.

Tuesday, June 3, 2014

சத்தம் கேட்கும் ஆடு


2001-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி கடத்தப்பட்ட வானூர்தி (Aeroplane) அமெரிக்காவில் உள்ள பென்டகனில் மோதிய போது, அநேக மக்கள் அங்கு வேலை செய்பவர்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் அங்கு அந்த பிளேன் மோதியதால் உண்டான பயங்கரமான புகை மண்டலத்திற்குள் சிக்கி, புகை அவர்கள் கண்களை மறைத்தபடியால், வெளியே வர முடியாமல், மிகவும் அவதிக்குள்ளாயினர். அவர்கள் அங்கு மூச்சு விட முடியவில்லை, சரியாக காண முடியவில்லை. அப்போது ஐசக் ஹுப்பி (Issac Hoopi) என்னும் போலீஸ் அதிகாரி, உள்ளே ஓடி, உயிரோடு மக்கள் இருக்கின்றனரா என்று தேடினார். உள்ளே இருக்கும் நிலவரத்தை கண்டவுடன், சற்று வெளியே வந்து, 'என் சத்தத்தை கேட்டு அந்த சத்தத்தை பின்தொடர்ந்து வாருங்கள்' என திரும்ப திரும்ப உரத்த சத்தத்தோடே கூறிக் கொண்டே இருந்தார். அவருடைய அந்த சத்தத்தை கேட்டு அநேகர், வெளியே வந்தனர். உள்ளே ஒன்றுமே தெரியாத புரியாத நிலையில் இருந்த அவர்கள் அந்த சத்தத்தை கேட்டு, வெளியே வந்து உயிர் தப்பினர்.
.
'என் சத்தத்தை கேட்டு என் பின்னே வாருங்கள்' என்று நம் நேசர் இயேசுகிறிஸ்து வழிதவறி போன ஆடுகளை நோக்கி அழைத்து கொண்டே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவே நல்ல மேய்ப்பர்;. 'வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்' என்று யோவான் 10:3 ல் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அறிந்திருக்கிற தேவன் நம் தேவன். அவர் நம்மை அழைத்து, நம்மை புல்லுள்ள இடங்களுக்கு நடத்தி கொண்டு செல்கிறார்.
.
இந்த உலகத்தின் பாவத்திலும், துன்பத்திலும், வெளியே வர முடியாதபடி தவிக்கிற ஒவ்வொருவரையும் தேவன் அழைத்து, என் பின்னே வாருங்கள் என்று அழைக்கிறார். அப்படி அவருடைய சத்தத்தை கேட்டு வரும்போது, நாம் பத்திரமாக கரை கொண்டு சேர்க்கப்படுவோம்

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது - (யோவான் 10:4).

Sunday, June 1, 2014

நம் வாயின் வார்த்தைகள்


இரண்டு சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள் என வைத்து கொள்வோம். அவர்கள் என்ன பேசி கொள்வார்கள்? முதலில் நலம் விசாரிப்பார்கள், பின்பு அவரவர் தங்கள் கஷ்டத்தை கூறுவார்கள். தங்கள் குடும்ப நிகழ்வுகளை கூறுவார்கள். தங்கள் பிள்ளைகளை குறித்து பேசி கொள்வார்கள். அதோடு முடிந்து விடுமா? பக்கத்து வீட்டு காரர்களை பற்றியும், எதிர்த்த வீட்டுகாரர்களை பற்றியும் பேசாவிட்டால் அவர்களது பேச்சு முடியாது. அதனால் ஏதாவது பிரயோஜனமுண்டா?
.
வேதம் சொல்கிறது, கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் (எபேசியர் 4:29) என்று.
.
ஒரு முறை இரண்டு விசுவாசிகள் பேசி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னார், "பரிபூரணமாய் தமக்கு ஒப்புக்கொடுக்கிற மனுஷனை தேவன் வல்லமையாய் உபயோகப்படுத்த எவ்வளவு ஆவலாய் இருக்கிறார் தெரியுமா" என்றார். இந்த வார்த்தைகளை ஆறடி தொலையில் நின்று கொண்டிருந்த வாலிபனின் காதுகளில் விழுந்தது. பூரணமாய் ஒப்புகொடுக்கிற மனிதனை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த கூடுமானால், நான் ஏன் என்னை பூரணமாக ஒப்புகொடுக்க கூடாது? என்று எண்ணினான். ந்த வாலிபன்தான் பிரசித்து பெற்ற ஊழியரான் டீ.எல் மூடி என்பவர். இருவரின் சாதாரண உரையாடல் ஒரு வாலிபனை கர்த்தருக்கு பூரணமாக தன்னை அர்ப்பணிக்க வைத்தது. இதுதான் பக்தி விருத்திக்கேதுவான நல்ல வார்த்தை.
.
நமது வேலையிடத்தில் கொஞ்சநேரம் இடைவெளி கிடைத்தால் போதும், அங்கு வேலை செய்கிறவர்களிலிருந்து, ஒவ்வொருவரை குறித்தும் வெட்டியாக பேசி நம் நேரத்தை வீணாக செலவழித்து விடுகிறோம். அந்த நேரத்தில் மற்றவருடைய ஆத்துமா இரட்சிக்கப்படும்படி பேசினால் எத்தனை நலமாயிருக்கும்!

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. - (மல்கியா 3:16).
.