Saturday, June 21, 2014

கர்த்தருடைய சாயல்

இங்கிலாந்தில் ஒரு பெண் மிகவும் அழுக்கான உடைகளைத் தரித்துக் கொண்டு, குப்பைத் தொட்டிகளுக்கு அருகே இருந்து அங்கிருந்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு, சடை பிடித்த முடிகளுடன் அலைந்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பக்கத்தில் யாராவது வந்தால், ‘நான் பெரிய குடும்பத்துப் பெண்ணாக்கும், என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்’ என்று சத்தம் போடுவாள். இப்படி 20 வருடங்களாக தெருதெருவாக அலைந்துக் கொண்டிருந்தாள். அவள் யாரோ பிச்சைக்காரி என்று யாரும் அவளைக் கண்டுக் கொள்ளவும் இல்லை.
.
ஒரு முறை அவள் ஏதோ சண்டை செய்தாள் என்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி, நேரமெடுத்து அவளை விசாரித்த போது, அந்தப் பெண் உண்மையாகவே பெரிய இடத்துப் பெண்தான் என்று தெரிய வந்தது. அவள் அங்கிருந்த பெரிய அரசாங்க அதிகாரியின் மகள் என்றும், அவள் ஒரு முறை கடைக்கு சென்றபோது, அவள் திருடர்களால், தலையில் அடிக்கப்பட்டு, மூளைகலங்கிப் போய் தான் இருக்கும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்ததாக தெரிய வந்தது.
.
20 வருடங்களாக குப்பையில் கிடந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வாழந்து வந்த அவள் அத்தனை நாட்களுக்குபிறகு, தன் குடும்பத்தோடு, சரியான இடத்திற்கு தன் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு உடன்சுதந்தரவாளியாக அழைத்து செல்லப்பட்டாள்.
.
நாம் அனைவரும் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டுள்ளோம். ஆனால் நம்முடைய பாவங்களினால் நாம் அவரை விட்டு தூரப் போய், அலைந்து திரிந்தாலும், நாம் நம் பாவங்களை விட்டு திரும்பி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, திரும்பவும் தேவனிடத்தில் வரும்போது, பரலோகத்தின் ஆசீர்வாதங்களுக்கு நாம் சுதந்தரவாளிகளாக மாறுகிறோம். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே என்று வசனம் நமக்கு கூறுகிறது.
.
கெட்ட குமாரன் தன் தந்தையின் சொத்துக்களில் தன்னுடைய பங்கை வாங்கிக் கொண்டு, ஊதாரியாக செலவழித்து, கடைசியில் பணமெல்லாம் செலவழிந்து, பன்றி சாப்பிடும் தவிட்டை சாப்பிட வாஞ்சித்தும் அது கிடைக்காதபடியால், மனம் திரும்பி, ‘எப்படியாவது என் தகப்பனிடம் போய் அவருடைய வேலையாட்களில் ஒருவனாக இருப்பேன்; என்று நினைத்துதான் அவன் தன் தகப்பனிடம் வந்தான். ஆனால் தகப்பனோ, எத்தனை கரிசனையுள்ளவராய்; அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். - (லூக்கா 15:20-24) என்று பார்க்கிறோம். நாம் நம் பாவங்களில் மடிவதை விரும்பாத தேவன் அவரிடத்தில் திரும்பி வருவதையே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறவராய், அந்த கெட்ட குமாரன் திரும்பி வந்தபோது எப்படி மகிழ்ந்தாரோ அதைப் போலவே நம் தேவனும் மகிழ்கிறவராய் இருக்கிறார்.

No comments:

Post a Comment