Sunday, November 30, 2014

வேதாகமமும் அறிவியலும் பதிவு 4


வேதாகமமும் அறிவியலும் பதிவு 4

எனக்கன்பான தேவ ஜனமே, இந்த பதிவில் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். பரிசுத்தர் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

1. பல நட்சத்திரங்கள் உருவாகும்
வேதாக வசன ஆதாரம் : ஆதியாகமம் 22:17 - உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி முடிவு - 1-5-2006 அன்று வெளியிடப்பட்டது http://www.nasa.gov/centers/goddard/news/topstory/2006/milkyway_seven.html

இதற்கு ஆதாரமாக பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் கொடுத்துள்ள பதிவுகள் http://www.space.com/1917-dozen-stars-born-milky-year.html

இந்த பதிவுகளில் கூறியுள்ள படி பால்வெளி மண்டலத்தில் வருடந்தோறும் பல நட்சத்திரங்கள் உருவாகுமாம். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 6 அல்லது 7 புதிய நட்சத்திரங்கள் உருவாகும் என கணக்கிட்டு உள்ளனர். இதனை மற்ற நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஓர் பால்வெளி மண்டலத்தில் 7 உருவாகும் என்றால் இந்த பிரபஞ்சத்தில் பல பால்வெளி மண்டலங்கள் உள்ளது. இவ்வாறு இருக்கும் பொது ஓர் வருடத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உருவாகும்? உங்களால் கணக்கிட முடியுமா? முடியாது. அதனை போலத்தான் நம் தேவனின் ஆசீர்வாதத்தையும் உங்களால் எண்ணி பார்க்க முடியாது.

நமது வேதாகமத்தில் இந்த நட்சத்திர பெருக்கத்தை குறித்து ஆதியாகமத்தில் எழுதப்பட்டுவிட்டது. இதனை எழுதியவர் மோசே. எழுதப்பட்ட வருடம் கி.மூ 4000 வருடங்களுக்கு முன். மோசே விண்வெளி ஆராய்ச்சியாளரா? இல்லை நண்பரே. ஆனால் அவர் வின்னுலகை படைத்த இயேசு கிறிஸ்துவின் விசுவாசி. இவர் எழுதியது இன்று தான் உண்மை என்று பலருக்கும் தெரிகிறது. நட்சத்திரங்கள் உருவாகுமா? தேவன் ஆசீர்வதிக்கும் போது நான் உன்னை நட்சத்திரங்களை போல பெருக பண்ணுவேன் என்றார். நாம் பெருகுகின்றோம், நட்சத்திரம் பெருகுகிறதா? ஆம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

2. கடற்கரை மணல் உருவாகி பெருகும்
வேதாகம வசன ஆதாரம் - ஆதியாகமம் 22:17 கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
ஆராய்ச்சி முடிவு - கடற்க்கரை மணல் உருவாகும்.
http://geology.com/stories/13/sand/

இப்படிப்பட்ட மணல் கடற்க்கரை காற்றில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் கடல் அரிப்புகள், போன்றவைகளால் உருவாகும் என நிருபிக்கப்பட்டுள்ளது. http://global.britannica.com/EBchecked/topic/521932/sand-dune/49752/Formation-and-growth-of-dunes
"The wind adjusts its velocity gradient on reaching the sand patch; winds above a certain speed decrease their near-surface velocity and deposit sand on the patch. This adjustment takes place over several metres, the sand being deposited over this distance, and a dune is built up. " இதில் dune என்ற வார்த்தையின் அர்த்தம் a mound or ridge of sand or other loose sediment formed by the wind, especially on the sea coast or in a desert.

ஒருவேளை வேதாகமத்தில் கடற்க்கரை மணல் அல்லாமல் வேறு நிலப்பகுதி மணலை பற்றி கூறி இருந்தால் கருத்து மாறுபாடாக இருந்திருக்கும். ஆனால் வேதாகமத்தில் மோசே தேவ ஞானத்தால் எழுதியது ஆச்சரியமாகுமா? இன்றைய விஞ்ஞான துறைக்கு ஆச்சரியமே. தேவ பயத்தோடு நாம் எழுதும் ஒவ்வொரு காரியமும் விஞ்ஞானத்தை மிஞ்சும் என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும்?

3. பூமி வெட்டவெளியில் தொங்குகிறது.
வேதாகம வசன ஆதாரம் - யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
அறிவியல் கண்டுபிடிப்பு - நாசா விண்வெளி ஆராய்ச்சி முடிவுகள், இந்தியாவின் ஆராய்ச்சி முடிவுகள் ஒத்துக்கொண்டுள்ளன. http://spaceplace.nasa.gov/geo-orbits/en/

ஆதிகால மனிதர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் இந்த உலகம் எதோ ஒன்றில் அமர்ந்திருப்பதாகவும் அல்லது எதோ ஓர் மிருகம் தாங்கி கொண்டிருப்பதாகவும் படம் வரைந்தனர். ஆனால் பரிசுத்த வேதாகமம் தெளிவாக இந்த பூமி அவாந்திர வெளியில் அதாவது வெட்டவெளியில் தொங்குகிறது என்று கூறி இருக்கிறது. யோபுவின் புஸ்தகம் எழுதப்பட்டது 4000 வருடங்களுக்கு முன்னராக இருந்தாலும் அதை கடந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் யோபு. ஆபிரகாமின் காலத்தில் வாழ்ந்தவர் என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே இந்த காரியம் மனிதனுக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்டது.
Many ancient peoples believed that the world was a flat disk supported by a giant or an animal, such as a buffalo or a turtle.
http://www.clarifyingchristianity.com/science.shtml

4. மரபணு வளர்ச்சியின் அவசியம்
வேதாகம வசனம் - ஆதியாகமம் 1:11-12
தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
அறிவியல் ஆராய்ச்சி ஆதாரம் -http://www.ncbi.nlm.nih.gov/pubmed/22382462
http://www.globalsciencebooks.info/JournalsSup/images/SF/GGG_1%281%291-20.pdf

மனிதனில் உள்ள வித்து தான் இன்னொரு மனிதனை உருவாக்க முடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஓர் தெளிவான உண்மை. கணிகளுக்கும், புல் பூண்டுகளுக்கும் இப்படிதான் என்பது ஆராய்ச்சி செய்யாமலே 4000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதா? அதுவும் உலக ஆரம்பத்தில் இருந்தே இந்த உண்மையை தேவன் மனிதனுக்கு புரிய வைத்திருந்தார். இந்த வசனத்தில் "தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள்" என்ற வார்த்தையை கவனிக்கவும். நமக்குள் இருக்கும் வித்து எப்படி இன்னொரு மனிதனை உருவாக்க வல்லதோ அதை போல கனிகளில், செடிகளில் உள்ள வித்துக்கள் அந்தந்த கனிகளை மட்டுமே கொடுக்கும். கணவனும் மனைவியும் இணையும் போது குழந்தை பிறக்கிறது. சிங்கமோ, கரடியோ பிறக்குமா? குருவியோ, மரமோ பிறக்குமா? நிச்சயமாக முடியாது. யார் இந்த அதிசயத்தை செய்திருப்பார். இயற்கையாக நடந்திருக்குமா? நிச்சயம் உருபாக்குபவர் வேண்டும் அல்லவா? அவர் நம் தேவனே.. இந்த உண்மையும் வேதாகமத்தில் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே எழுதப்பட்டு விட்டது. http://animalsmart.org/animal-science/the-fields-of-animal-science/breeding-and-genetics/important-terms-in-breeding-and-genetics

5. இந்த பூமியின் மண்ணிலே உருவாக்கப்பட்டவன் மனிதன்
வசன ஆதாரம் - ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆராய்ச்சி முடிவுகள் - http://www.theregister.co.uk/2013/11/06/science_and_religion_agree_life_and_mankind_are_from_clay/
http://www.foxnews.com/science/2013/11/06/new-study-suggests-man-came-from-clay-as-bible-suggests/

மனிதன் மண்ணிலே படைக்கப்பட்டதை பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. பழங்கால கிரேக்க, சீன, எகிப்து சித்தாந்தங்களும் கிறிஸ்தவர்களின் வேதாகமமும், இஸ்லாமியர்களின் குரானும் மண்ணிலே மனிதன் பிறந்தான் என்று எழுதி வைத்துள்ளது. ஆனால் மற்ற புத்தகங்கள் கூறும் இந்த கருத்தை பரிசுத்த வேதாகமம் 4000 வருடங்களுக்கு முன்னரே எழுதி வைத்திருந்தது. இதை பல ஆதாரங்கள் நிருபித்துள்ளது
http://en.wikipedia.org/wiki/Creation_of_man_from_clay
http://www.foxnews.com/science/2013/11/06/new-study-suggests-man-came-from-clay-as-bible-suggests/
https://esoriano.wordpress.com/2007/05/25/from-dust-to-man-a-scientific-proof/
இன்னமும் பல வலைத்தளங்கள் உள்ளது.

6. மனஉளைச்சல் / அழுத்தம் எலும்பை உருக்கும்
வசன ஆதாரம் - நீதிமொழிகள் 12:4. குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

மற்றும் நீதிமொழிகள் 14:30 , 15:30 , 16:24 , 17:22
சாலமன் ராஜா கி. மூ 950 வருடங்களுக்கு முன்னமே இந்த எலும்புருக்கி நோயை குறித்து எழுதியுள்ளார். மன அழுத்தமோ ஆவிக்குரிய அழுத்தமோ இருக்குமாயின் அது எலும்பை பாதிக்கும் என்று கூறி இருந்தார். இது உண்மையா? ஆம் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி குழு. அதாவது தான் நேசித்த ஒருவரின் மூலம் (மனைவி - நீதி 12:4) லட்சை (வெட்கம்) அடைந்தாலோ, பொறாமையின் மூலமாகவோ, மனம் உடைந்த நிலையில் இருக்கும் மனிதனின் எலும்புகள் பாதிக்கப்படும். அதே நேரத்தில் நல்ல செய்தி கேட்பதின் மூலமாகவும், மகிழ்ச்சியான நேரங்களிலும் எலும்புகள் புஷ்டியாக இருக்குமாம். குழந்தை பெரும் ஓர் தாயிடம் எல்லோரும் அன்பாகவே இருப்பார்கள். ஏன் என்றால் அவர்கள் மனம் ஒடிந்தால் அவளின் ஆரோக்கியம் மட்டும் அல்ல அவளின் குழந்தையும் மனதளவிலும், ஆரோக்கியத்திலும் அதிகமாய் பாதிக்கப்படும்.

இதை வைத்து பார்க்கும் போது சாலமன் ராஜா கூறிய மனம் மற்றும் எலும்பு வசனங்கள் எவ்வளவு பெரிய உண்மை...
http://www.apa.org/helpcenter/stress-body.aspx
http://www.webmd.com/balance/stress-management/effects-of-stress-on-your-body

7. குகை மனிதன்
வேதாகம ஆதாரம் - யோபு 30:5,6. அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
அறிவியல் ஆதாரம் - http://www.huffingtonpost.com/2012/06/28/cavemen-bones-dna-humans_n_1636289.html

குகை மனிதன் இருந்ததாக நமக்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் இருந்தது. ஆனால் அறிவியல் இதை உறுதி செய்யவில்லை. சமீபத்தில் குகை மனிதர்களின் எலும்புகள் கிடைத்துள்ளது. இது சுமார் 7,000 வருடங்களுக்கு முன் உள்ளதை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த குகை மனிதனை பற்றி யோபுவில் பல ஆயிர வருடங்களுக்கு முன்னமே எழுதப்பட்டு விட்டது.
http://www.gotquestions.org/cavemen.html
http://www.matrixbookstore.biz/caveman.htm

8. குழந்தை பிறந்த எட்டாவது நாளில் அதிக ரத்த உறைவு இருக்கும்
வசன ஆதாரம் - லேவியராகமம் 12:3 எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.

அக்கால வழக்கப்படி பிறந்த குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்தது நமக்கு தெரிந்த ஓர் விஷயம். இந்த விருத்தசேதனம் பரிசுத்தமாக்குதலுக்காக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஓர் குழந்தையின் பாவபிறப்பு முடிவுக்கு வருகிறது. இந்த விருத்தசேதனம் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை குறிக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் இதை இன்று செய்வதில்லை. காரணம் பரிசுத்த வேதாகமமே. 1 கொரிந்தியர் 7:19. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

தொழில் விருத்தசேதனம் பெறுவதை காட்டிலும் உள்ளத்தில் பாவத்தை வெறுத்து விருத்தசேதனம் அடைந்து பரிசுத்தமாய் வாழ தேவன் அழைக்கிறார். ஒருவன் கிரியையினால் இரட்சிக்கப்பட முடியாது என்று வேதாகமம் போதிக்கிறது. சரி... இந்த விருத்தசேதனம் பழக்கத்தில் இருந்த காலத்தில் தேவன் அதை ஏன் 8ம் நாளில் பண்ண சொன்னார்? எந்த மனிதன் இதை குறித்து ஆராய்ந்தான்?

பிறந்த குழந்தையின் ரத்த உறைவு எட்டாம் நாளில் அதிகமாய் இருக்கும். அந்த நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 9ம் நாளில் இருந்து ரத்தஓட்டம் சிறிது சிறிதாக வேகமெடுக்கும். இது அறிவியல் முடிவு. இதனை அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இதை தேவன் அக்காலத்தில் தம்முடைய பிள்ளைகளுக்கு நடைமுறைபடுத்தி கொடுத்திருந்தார். இது ஓர் அதிசயமே..

இன்றும் இது அறிவியல் பூர்வமாக நிருபிக்கபட்டிருக்கிறது.
http://www.timothylsmith.com/why-does-the-bible-say-that/
http://aliyosshmuel.com/thinkjewish.asp?AID=197

ரோமர் 11:33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

பிரியமானவர்களே... இதுவரை (1,2,3ம் பதிவுகளில்) சுமார் 30க்கும் மேற்ப்பட்ட அறிவியல் அதிசயத்தை நாம் ஆராய்ந்திருக்கிறோம். இன்று நாம் 8 அறிவியல் அதிசயங்களை வேதாகமத்தோடு படித்தோம். இன்னமும் பல ஆயிரங்கள் உண்டு. தேவனின் பலத்தோடு மிகவிரைவில் உங்கள் கண்முன் கொண்டு வருகிறேன். தேவனின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

I கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்

ஆக்கம், தொகுப்பு, படைப்பு
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
www.facebook.com/TamilNaduChristianMinistries

Wednesday, November 26, 2014

ஆத்துமா நஷ்டமானால் லாபம் என்ன?

ஒருகுடியானவன் ஒரு புதிய ஊருக்கு சென்றான். அந்த ஊரின் அழகையும், வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் நிலம் வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். அவர் அவனிடம் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் சில ஊர் மக்களும் சென்றிருந்தனர்.
.
ஊர்த்தலைவர் அவனைப் பார்த்து, 'எங்கள் ஊர் வழக்கப்படி ஒரு நாள் நிலம் தருகிறோம்' என்றார். 'அப்படியென்றால் என்ன?' என்று வினவினான் குடியானவன். 'அதுவா, நீ இப்பொழுது புறப்பட்டு, எவ்வளவு தூரம் நிலத்தை சுற்றி வருகிறாயோ அந்த நிலமெல்லாம் உனக்கு சொந்தமாகி விடும். ஆனால் இருட்டுவதற்கு முன நீ புறப்பட்ட இடத்தை வந்தடைய வேண்டும். சிறிது தாமதித்தாலும் உனக்கு ஒன்றுமில்லை' என்றார்.
.
அதிசயமான இந்த முறை அவன் ஆசையை தூண்டி விட்டது. சரியென்று வேட்டியை வரிந்துக் கட்டிக்கொண்டு அவன் ஓட ஆரம்பித்தான். ஆகா! ஒரு அழகிய மாந்தோப்பு, இது கிடைத்தால் எவ்வளவு நலம் என்று அதையும் சுற்றி ஓடினான். கொஞ்ச தூரத்தில் ஓரு பூந்தோப்பு, அருகில் பளிங்கு போன்ற நீர் ஓடும் ஆறு, அதையும் சுற்றி வளைத்துக் கொண்டான். துரவு வயல் என கண்ணில்பட்ட எதையும் விடாமல் சுற்றினான். 'ஆயிரம் ரூபாய்க்கு எவ்வளவு இலாபம்? இந்த ஊர்க்காரர்கள் எத்தனை முட்டாள்கள்?' என எண்ணியபடி ஓடினான். இருட்ட ஆரம்பித்தது.
.
நிபந்தனை நினைவுக்கு வர தான் கிளம்பின இடத்தை நோக்கி விரைந்தான். கால்கள் தடுமாறின. இதயதுடிப்பு தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. வியர்த்து ஊற்றியது. நா வறண்டது. கண்கள் ஒளி மங்கின. தள்ளாடினவனாக எப்படியோ இடத்தை வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் அவனை கரம் தட்டி வரவேற்றனர். சில நொடிக்குள் சாய்ந்து விழுந்தான். விழுந்தவன் எழுந்தரிக்கவே இல்லை. 'இனி ஆறடி நிலம்தான் தேவை அவனை புதைக்க' என்றார் ஊர்த்தலைவர். அந்த குடியானவன் தான் ஆசைப்பட்ட அனைத்தையும் தனக்கு சொந்தமாக்கினான். ஆனால் தன் உயிரையோ இழந்து விட்டான்.
.
நம்மில் அநேகரின் ஓட்டம் இப்படித்தான் இருக்கிறது. எதிர்காலத்திற்காக சேமிப்பு, பிள்ளைகளுக்காக ஓவர் டைம் சம்பாத்தியம், ஞாயிற்றுக் கிழமைக்கூட கர்த்தரோடு, குடும்பத்தோடு செலவழிக்க மனமில்லை. ஜெபிப்பதற்கு, வேதம் வாசிக்க நேரம் செலவிடுவதில்லை. அவர்களது ஒரே நோக்கம் சம்பாதிப்பது. ஆலயம் செல்பவர்களையும், ஜெபிப்பவர்களையும் ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடுகிறவர்களையும் காணும்போது பிழைக்கத் தெரியாத முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
.
கை நிறைய சம்பாத்தியம் உள்ளது, ஆனால் உள்ளத்திலோ கவலை, பிள்ளைகள் மனம் போன போக்கில் வளர்ந்ததால் அவர்களைக் குறித்ததான கவலை, தேவ வசனமில்லாத வனாந்தரமான இருதயம் இதனால் என்ன பயன்?

Monday, November 24, 2014

பரிசுத்த வேதாகமத்தை கற்று தரும் தேவன்

வேதாகம ஆசிரியர் ஒருவர், தன்னுடைய கிழிந்துப்போன வேதாகமத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு, 'ஒவ்வொரு விசுவாசியும் வேதாகமத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒவ்வொரு வேதாகமத்தையும் சேதப்படுத்த வேண்டும்' என்றார். நம்முடைய வேதாகமங்கள் படிப்படியாக தாமாகவே கிழிந்துப் போகும் அளவு நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்.
.
பாவத்தினால் தன் மனதை சேதப்படுத்தியவன் சேதமடையாத புத்தம் புதிய வேதாகமத்தை வைத்திருப்பான். சேதமடைந்த கிழிந்த வேதாகமத்தை வைத்திருப்பவனது மனதோ, கர்த்தருக்குள் களிகூர்ந்து பாதுகாப்பாய் இருக்கும்.
.
ஆம், நாம் ஆர்வமாய் வேதத்தை வாசிக்கிறவர்களாக இருப்பவர்களானால் நாம் சேதமடைவதற்கு பதிலாக நமது வேதாகமம் சேதமடையும். நமது பாவத்தை உணர்த்தி, மனசாட்சியை கூர்மையாக்கி, நம்மை உணர்வுள்ளவர்களாக மாற்றும் உயிருள்ள வார்த்தைகளடங்கிய புத்தகம் நம் வேதாகமம் மட்டுமே!

Saturday, November 22, 2014

அலங்கோலத்திலிருந்து அலங்காரம்

ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. அதில் பல அறைகள் இருப்பினும் ஒரு அறை மட்டும் மிகவும் விசேஷமானது. அவ்வீட்டைப் பார்வையிட செல்லும் ஓவியரெல்லாம் அவ்வறை சுவர்களில் ஏதாகிலும் ஒரு ஓவியத்தை வரைந்து செல்வது வழக்கம். ஒரு காலத்தில் அவ்வறை மிக நேர்த்தியாக கட்டப்பட்டு அழகிய வர்ணம் பூசப்பட்டதாய் இருந்தது. ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சோடா குடிநீர் சேமிப்பு கலம் வெடித்து அதன் அழகிய சுவரெல்லாம் கறைபட்டு போயின.
.
அங்கு தங்கியிருந்த பிரபல ஓவியர் சர்.எட்வின் லாண்ட்சீர் என்பவர் அந்த கறைகளை பார்த்தபோது அவை நிலையாக நிற்கும் கறைகள் போல் அவருக்கு தோன்றின. பின் அவர் தன் கலைத்திறனால் அந்த கறைகளை விலைமதிக்க முடியாத ஒர் ஓவியமாக மாற்றிவிட்டார். அதில் அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் பின்னணி காட்சியை வரைந்தார். அதிலுள்ள பாறைகளும், மரங்களும் அவற்றிற்கிடையில் கெம்பீர தோற்றத்துடன் நிற்கும் ஒரு அழகிய ஆண்மானும் காண்போருக்கு உண்மை காட்சியைப் போல தோற்றமளித்தன். இந்த ஓவியம் ஸ்காட்லாந்தின் சிறந்த மலைக்காட்சி ஓவியங்களில் ஒன்றாக விளங்குகிறது. அன்று அலங்கோலமான கறை இன்று ஆயிரக்கணக்கானோரை தன் பக்கம் இழுக்கும் ஒரு அழகிய காட்சியாய் விளங்குகிறது.
.
ஒரு காலத்தில் நமது ஆவிக்குரிய வாழ்வும் நன்கு வளர்ச்சியடைந்த தேவனுடைய கண்களுக்கு அழகானதாக காணப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதோ நற்சுபாவங்கள், நல்ல பழக்கவழக்கங்கள், மிகச்சிறந்த ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாம் மறைந்து பாவ கறை படிந்து அலங்கோலமாய் காணப்படுகிறதோ? முந்தின நாட்களில் என்னில் காணப்பட்ட உன்னத அனுபவங்கள் மீண்டும் துளிர்ப்பது சாத்தியம் தானா? நான் இழந்து போயிருக்கும் ஜெப ஜீவியம் என்னில் புதுப்பிக்கப்படுமோ, எனற அங்கலாய்போடு காண்ப்படுகிறீர்களோ? உங்கள் ஆத்துமா தொய்ந்து போய் உள்ளதோ? சோர்ந்து போகாதீர்கள்!

Friday, November 21, 2014

மரண நாள்

ஒரு அரசன் மரண தருவாயிலிருந்த தனக்கு பிரியமான அமைச்சரை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவரிடம், “நீர் அமைச்சராயிருந்தபோது எனக்கு அநேக நன்மையான ஆலோசனைகள் கூறினீர். ஆகையால் நீர் இப்போது எதை கேட்கிறீரோ அதை தருகிறேன்” என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர், “அரசே, நான் சாவதற்குமுன் ஒரு நாள் எனக்கு கூட்டி தர வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அரசர், 'என்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட எந்த காரியத்திலும் நீர் எதை கேட்டிருந்தாலும் நான் அதை உமக்கு கொடுத்திருப்பேன், என்னால் இயலாத காரியத்தை கேட்கிறீர், மன்னிக்கவும், என்னால் அதை தர முடியாது' என்று கூறினார்.
.
ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை என்று வேதம் நமக்கு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. நாம் யாவரும் ஒரு நாளில் மரிக்கவே போகிறோம். ஆனால் அதை குறித்த பயம் தான் மற்ற எல்லா பயங்களிலும் அதிக கடினமானது. கொடுமையானது. நாம் அதை விரும்புகிறோமோ இல்லையோ, ஒரு நாள் நாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். நாட்டை ஆளுகிற பெரிய அரசனானாலும், ஒன்றுமே யில்லாத ஆண்டியானாலும் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். அதை பணத்தை கொடுத்து நிறுத்த முடியாது.
.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27) என்று வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரிக்கவே வேண்டும். ஆனால் மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. அநேக மதங்கள் வித்தியாசமாய் போதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் என்ன போதிக்கிறது? நாம் உலகில் வாழ்வது, நிரந்தரமல்ல, ஆனால் மறுமையில் வாழ்வதே நிரந்தரம் என்று போதிக்கிறது. அதாவது நாம் இந்த பூலோகத்தை விட்டு, தேவனோடு என்றும் வாழும்படியாக நித்திய ஜீவனை பெற்றவர்களாக என்றென்றும் வாழுவோம் என்று வேதம் கூறுகிறது.

Thursday, November 20, 2014

கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்

பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.
.
திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து விட்டான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான்.
.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அரைகுறையான கீழ்ப்படிதல் இருக்குமானால் அது ஆபத்தானது. பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தமாகி நோவா என்ற தேவ மனிதனுடன் பேசுகிறார், “தொடர் மழை பெய்யபோகிறது, அந்த அழிவிலிருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காத்துகொள்ள ஒரு பேழையை செய்” என்று. மழை அதற்குமுன் பூமியிலே பெய்ததா என்பது தெரியவில்லை. ஆனாலும் அது என்ன? ஏன், எதற்கு என எந்த கேள்வியும் கேட்காமல் நோவா கர்த்தர் சொன்ன அளவின்படியே ஒரு இஞ்ச் கூட்டியோ குறைத்தோ கட்டாமல் அவர் சொற்படி கீழ்ப்படிந்து பேழையை செய்தார். அழிவிலிருந்து அவர் குடும்பம் காக்கப்பட்டது.
.
அடுத்ததாக ஆபிரகாமிற்கு 100 வயதில் பிறந்த பிள்ளையை மோரியா என்ற மலைக்கு கொண்டு போய் தேவன் பலியிட சொன்னார். அப்படியே கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஆபிரகாம் தன் மனைவியிடம் கூட சொல்லாமல், எங்கே கூறினால் அழுது தன்னை தடுத்து விடுவாளோ என்று எண்ணி, வேலைக்காரரில் இரண்டு பேரை கூட்டி கொண்டு அதிகாலமே கிளம்பி விடுகிறார், கேள்வி கேட்காத கீழ்ப்படிதலை கண்ட ஆண்டவர் அவரை உலகம் முழுவதற்கும் ஆசீர்வாதமாக மாற்றினார்.

நம் பரம தகப்பனின் அன்பு

ஒரு சபையின் ஆராதனையில் போதகர் ஆராதனையை முடித்து விட்டு, அன்று பேச வந்திருந்த விசேஷித்த போதகரை குறித்து அறிமுகம் செய்து விட்டு போய் உட்கார்ந்தார். அந்த வயதான போதகரும் ஒரு உதாரணத்தின் மூலம் செய்தியை சொல்ல ஆரம்பித்தார்.
.
'ஒரு தகப்பனும், அவருடைய மகனும், மகனுடைய நண்பனும், என்று மூவருமாக பசிபிக் கடலில் ஒரு படகில் உல்லாச பயணமாக சென்றிருந்தார்கள். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று புயல் உருவாக ஆரம்பித்தது. படகு நடுக்கடலில் மாட்டி கொண்டது. தகப்பன் படகை ஓட்ட நன்கு அறிந்திருந்தவரானாலும், படகு புயலில் சிக்கி கொண்டதால் என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் படகு கவிழ்ந்து மூன்று பேரும் கடலில் விழுந்தார்கள்' அவர் சொல்லி கொண்டிருந்த சம்பவத்தை இரு வாலிபர்கள் உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்ததை அந்த போதகர் கவனித்தவாறே அந்த சம்பவத்தை தொடர்ந்தார்.
.
அந்த தகப்பன், தன் கையில் கிடைத்த கயிற்றை ஒரு பக்கத்தை தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, மற்ற நுனியை இரண்டு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பது என்று மனதில் போராடியவாறு பொங்கி எழும் அலைகளின் மத்தியில் போராடும் தன் மனதை கட்டுப்படுத்தியவாறு, தன் மகன் இரட்சிக்கப்பட்டவன் என்பதையும், மற்றவனோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்த தகப்பன், தன் மகனிடம் 'மகனே, நான் உன்னை நேசிக்கிறேன்' என்று கதறியவாறே, அந்த கயிற்றின் மற்றொரு நுனியை எடுத்து, மற்ற பையனிடம் வீசினார். அதை பிடித்தவாறே இருவரும் படகை பிடித்து கொண்டு கரை வந்து சேர்ந்தனர். மகனோ, கொந்தளிக்கும் கடலில் கண்களின் முன்பாக மூழ்கி போவதை கண்டவாறே தகப்பன் கரையில் போய் விழுந்தார். அவனது சரீரம் திரும்ப கிடைக்கவே இல்லை.
.
இதை சொல்லிவிட்டு போதகர் சற்று நிறுத்தியபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அவர் என்ன சொல்ல போகிறார் என்று ஆவலோடு அவர் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
போதகர் தொடர்ந்தார், அந்த தகப்பன் தன் மகன் மரித்தாலும், இயேசுவோடு கூட என்றும் ஜீவித்திருப்பான் என்றும், மற்ற வாலிபனோ, ஒருவேளை மரித்திருந்தால், நித்திய நரகத்திற்கு சென்றிருப்பான் என்பதை அறிந்திருந்ததால், நண்பனை காப்பாற்ற வேண்டி தன் சொந்த மகனை அவர் தத்தம் செய்தார்.
.
நம் பரம தகப்பனும், தம்முடைய ஒரே பேறான குமாரனை நாம் இரட்சிப்படைய வேண்டி, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாரே, இன்றே அவர் அளிக்கும் பாதுகாக்கும் கயிற்றை பிடித்து கொண்டு அவரிடம் வந்து விடுங்கள், இன்றே இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள்' என்று கூறி, தன்னிடத்தில் வந்து அமர்ந்தார். அவருக்குப்பின் போதகர் வந்து, சபையை முடித்தபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அந்த வயதான போதகரின் முன் வந்து, 'நீர் எங்களுக்கு சொன்ன கதை அற்புதமாக இருந்தது, நீங்கள் சொன்ன மாதிரி எந்த தகப்பன், தன் சொந்த மகனை விட்டு விட்டு மற்றவனை காப்பாற்ற முடியும்?' என்று கேட்டார்கள். அப்போது அந்த வயதான போதகர், தன் கண்களை துடைத்து கொண்டு, 'உங்களால் நம்ப முடியவில்லை இல்லையா? உங்களுக்கு தெரியுமா? அந்த தகப்பன் நான் தான் என்றும், என் மகனின் அந்த நண்பன் உங்கள் போதகர் என்றும் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?' என்று கேட்டார்.
.
ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் பிள்ளையை மற்ற பிள்ளை இரட்சிக்கப்படும்படியாக பலியாக கொடுக்கும்போது, நமது பரம தகப்பன் தமது சொந்த குமாரனை நாம் இரட்சிக்கப்படும்படியாக அனுப்பியது அதிக நிச்சயமல்லவா?

Wednesday, November 19, 2014

தாகம் தீர்க்கும் ஜீவ நதி

இஸ்ரவேலில் சுக்கோத் என்னும் கூடார பண்டிகை வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அந்த சுக்கோத் பண்டிகையின்போது யூதர்கள் ஏழு நாட்கள் தாங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, கானானுக்குள் செல்வதற்கு முன் வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடத்திசெல்லப்பட்டதை நினைவு கூர்ந்து, வெளியே கூடாரங்களில் குடியிருப்பார்கள். அந்த பண்டிகையின் கடைசி நாளில் யூதர்கள், சீலோவாம் குளத்தில் இறங்கி, அங்கிருந்து தண்ணீரை மொண்டு கொண்டு வந்து, தேவாலயத்திற்கு கொண்டு வருவார்கள். அங்கு அந்த தண்ணீரை ஊற்றி, ஏசாயா 12-ம் அதிகாரத்தை பாட்டாக பாடுவார்கள். 'நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்' என்று பாடுவார்கள். அவர்கள் இரட்சிப்பின் ஊற்றாகிய இயேசுகிறிஸ்துவை குறித்து அவர்தான் மேசியா என்று அறியாமலேயே பாடி கொண்டுதான் இருந்தார்கள்.
.
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த போது, ஒரு நாள் இந்த கூடார பண்டிகையின் 'கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்றார். அந்த நேரத்தை சற்று சிந்தித்து பாருங்கள், மேசியாவாகிய கிறிஸ்து முக்கியமான இடத்தில் நின்று கொண்டு, சத்தமிட்டு: 'ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்று கூறினபோது அங்கிருந்த யூதர்கள் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? யார் இவர்? என்று நினைத்தது மாத்திரமல்ல, அவர்கள் அவர் தீர்க்கதரிசி என்றும், சிலர் கிறிஸ்து என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அவரை நினைத்து, 'இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று' (யோவான் 7:43) என்று பார்க்கிறோம். ஆனாலும் கடைசி வரை அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுக்கு தாகம் இல்லை.
.
இயேசுகிறிஸ்து இன்றும் அந்த அழைப்பை விடுக்கிறார். 'என்னிடத்தில் விசுவாமாயிருந்தால் அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்று அறைகூவல் விடுக்கிறார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு, ஒருவன் தாகமாயிருந்தால் மாத்திரமே, அவரிடத்தில் வந்து பானம் பண்ணமுடியும். இன்று உலகில் மனிதர்கள் எதனெதன் பேரிலோ தாகமாயிருக்கிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்துவின் மேல் தாகம் கிடையாது. ஒரு மனிதன் கிறிஸ்துவின் மேல் தாகமாயிருந்தால், அவரிடம் வரும்போது அந்த தாகம் தீர்க்கப்படும்.

Tuesday, November 11, 2014

ஏகோவா சாட்சி - எச்சரிக்கை

ஏகோவா சாட்சிகளை
குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

இவர்கள் ஏகோவா மட்டும் தான் தெய்வம், இயேசு கிறிஸ்து ஓர் மனிதன், பரிசுத்த ஆவியானவரும் தெய்வம் இல்லை என்று கூவிவரும் இவர்கள் குறிபார்ப்பது கிறிஸ்தவர்களை மட்டும் தான். அதுவும் CSI , லுத்தரன், methodist சபைக்கு போகும் கிறிஸ்தவர்களை குறிபார்ப்பது தான் இவர்கள் வேலை. இவர்கள் கிராமபுரங்களில் அதிகமாக பெருகி வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம், ஊட்டி, கொடைகானல், மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்துவருகிறார்கள். நான் ஓர் CSI சபையில் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து விட்டு கடைசியாக ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருக்க சொன்னேன். ஆலயம் முடிந்ததும் பலர் என்னிடம் வந்து ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். பிறகு சபை ஆயரோடு அவர்களின் இல்லங்களுக்கு அன்றே சென்று அவர்களுக்கு விளக்கினோம்.

அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் ஏகோவா சாட்சிகளை வீட்டில் அனுமதிப்பதில்லை. நீங்கள் எப்படி? 1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

எப்படி சோதித்தறிவது? இங்கே தான் கிறிஸ்தவர்கள் தவறுகிறார்கள். எங்கே? வேதத்தை படிப்பதோடு மட்டுமல்ல... ஒருவர் கடவுளை பற்றி கூறும்போது அதை மனதில் எடுத்துகொள்ளும் முன்பாக வேதத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். சிலர் வேதவசங்களை சொல்லமலேயே செய்தியை முடித்துவிடுகிறார்கள். அல்லது ஆரம்பித்தில் ஒன்றை ஆரம்பித்து முடிவில் ஒன்றை சொல்லுவார்கள். சிலர் நம் உணர்வை தூண்டும் விதமாக மனதை பாதிக்கும் விஷயத்தை சொல்லி கவனத்தை ஈர்க்க பார்பார்கள். சிலர் சம்பந்தமில்லாத வேதவசனத்தை கோர்த்துவிடுவார்கள்.

இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவர்கள் யெஹோவா என்கிறார்கள், இஸ்லாமியர்கள் அல்லாஹ் என்கிறார்கள். ஏகோவா சாட்சிகள் இஸ்லாமியர்களின் குரானை நம்ப மறுப்பவர்கள். ஆனால் இவர்கள் புதிய ஏற்பாடு வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றி அதில் ஏகோவா என்ற பெயரை இணைத்து வேத புரட்டர்களாய் நம்மிடையே வளம் வருகின்றனர்.

நீங்கள் வேதவசனத்தை ஆராய அழைக்கிறேன். அதற்கு உங்கள் சபை போதகரை வேத ஆராய்ச்சி கூடங்களை உங்கள் இல்லத்திலோ, ஆலயத்திலோ நடத்த சொல்லுங்கள். அவரிடம் உங்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை கேளுங்கள். தெளிவடையுங்கள். இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்பல்களிடம் ஒரு வேலை நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் தப்பிபார்களா?

இவர்களின் நம்பிக்கைகளை பற்றி சில வரிகள்
1. திரியேக தேவத்துவத்தை அடியோடு மறுப்பவர்கள்
2. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக கொண்ட ஆலயங்கள் பிசாசின் ஆலயங்களை பார்ப்பவர்கள்
3. பிதாவினால் முதலாவதாக உண்டாக்கப்பட்டது மிகாவேல் தூதனாவான்.
4. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. மாறாக கூரான ஆயிதத்தால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
5. இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார். அவர் உயிர்த்தெழவில்லை.
6. இவர்கள் சுமார் 144,000 ஏகோவா சாட்சிகள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்று நம்புகிறார்கள்.
7. மனிதன் ரட்சிக்கபடவெண்டிய அவசியம் இல்லை
8. இவர்களின் உபதேசத்தை உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது.
9. உலகத்தின் முடிவு ஐந்து தடவை நடக்கும்
10. மனிதன் ரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. சிறு குழந்தைகள் உட்பட. ((Strasbourg, Monday 2 March – Friday 13 March 1998) http://194.250.50.201/eng/E276INFO.148.html under “II.Reports adopted” )
11. ஒவ்வொரு வாராமும் சபை உறுப்பினர்கள் 10 மணி நேரமாவது இவர்களின் "watchtower" பத்திரிக்கையை கொடுக்க வேண்டும். யாரும் இதை மறுத்து பேச கூடாது.
12. யாராவது இவர்களின் நம்பிக்கையை விட்டு வெளியேறி விட்டால் அவர்கள் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.
13. மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த (tertiary) எந்த ஓர் காரியத்தையும் கற்க தடை செய்யப்பட்டுள்ளது.
14. ஏகோவா சாட்சிகள் யாரும் ராணுவத்தில் இருக்க கூடாது.
15. கழுத்தில் சிலுவை அணிய கூடாது
16. தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூற மறுப்பவர்கள்.

இப்படி எல்லா விதங்களிலேயும் கிறிஸ்தவத்தை விட்டு பிரிந்து நிற்கிறது. நமக்கு தெரிந்தபடி கிறிஸ்தவத்திற்கும் மற்ற மதங்களுக்கு உள்ள மிகப்பெரிய இடைவெளி இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும்.
1. இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே நித்திய ஜீவன் உண்டு (ரோமர் 6:23தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்)
2. இயேசு கிறிஸ்து இல்லாமல் யாரும் பரலோகம் போக முடியாது. (மாற்கு 15:38)
3. இயேசு சிலுவையில் அறியப்பட்டது உண்மை - எபிரெயர் 10:10. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
4. ரோமர் 5:1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
5. எபேசியர் 2ம் அதிகாரம் ரட்சிப்பின் வழியை தெளிவாக விளக்குகிறது.

ஆனால் இதை மறுக்கும் ஏகோவா சாட்சிகள் ஓர் சாத்தானின் கருவியாகும்.. ரட்சிப்பு இல்லை என்றால் சிலுவை இல்லை, சிலுவை இல்லை என்றால் பரிசுத்த வேதாகமம் இல்லை. பரிசுத்த வேதாகமம் இல்லை என்றால் இயேசு கிறிஸ்து இல்லை. இயேசு கிறிஸ்துவை இல்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை.

இப்படி கிறிஸ்தவத்தில் ஆணிவேரை அசைத்து பார்க்க சாத்தான் பல மதங்களை உருவாக்கி கிறிஸ்தவர்களை வேட்டையாடி வருகிறான். இந்த மயக்கங்களுக்கு பலியான பல ஆயிரம் உயிர்கள் உண்டு. இவர்கள் பரிசுத்த வேதாகமத்தில் இருந்து கேள்வி எழுப்பி விடையை வேறு ஒரு மத புத்தகத்தோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இது கணக்கு புத்தகத்தையும், சமூக அறிவியல் புத்தகத்தை ஒப்பிட்டு ஏன் கணக்கு புத்தகத்தில் உள்ளது சமூக அறிவயலில் இல்லை? என்று கேட்க்கும் முட்டாள்களுக்கு ஒப்பாவர். கணக்கு புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு கணக்கு புத்தகத்தில் தான் விடை தேட வேண்டும். அதை போல பரிசுத்த வேதாகமத்தில் இருக்கும் கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தில் இருந்து தான் பதில் தேட வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். உங்களை தர்க்கம் பேச வைத்து உங்கள் வேத அறிவை தெரிந்து கொள்வார்கள். பிறகு உங்கள் அறிவிற்கேற்ப குழப்ப பார்பார்கள். வேதத்தை முழுவதும் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் பேச்சில் மயங்கி விடுவர். 1 திமோத்தேயு 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

1 திமோத்தேயு 6:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

என்று வேதம் எச்சரிக்கிறது. ஜாக்கிரதையாய் இருங்கள். உங்கள் ஆலயங்களிலோ, போதனைகளிலோ வேதவசனம் சரியாய் கோர்க்கப்படவில்லை என்றால் அதை விட்டு விலகுங்கள். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லபட்டிருக்கிற எல்லாவற்றிக்கும் பதில் பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. உங்கள் சபை ஆயரை, போதகரை அணுகி விடை வேதத்தின் அடிப்படையில் விடை தேடுங்கள். அல்லது மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக நடக்கும் முகாமில் கலந்து கொள்ளுங்கள். (நண்பர் சுவிஷேச ஜெபக்குழு, விஸ்வவாணி, IMS , இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (UESI TN ), Scripture Union , என்று பல நல்ல ஊழிய ஸ்தாபனங்கள் உண்டு. அணுகவும்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Saturday, November 1, 2014

பில்லிகிரகாம் - என்னையும் நம்பிடுமே

பில்லிகிரகாம் இளம் வயது வாலிபனாக இருந்தபோது, தேவனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருந்தார். ஒரு நாள் தன் நண்பர்களோஈஷடு கால்பந்தாடச் சென்றார். விளையாடிக் கொண்டிருந்த நேரத்திலும் அவர் உள்ளம் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தது. கர்த்தர் பில்லிகிரகாமின் உள்ளத்தில் உலகத்திலுள்ள மற்ற வாலிபர், வயோதிபர், சிறியோர், பெரியோரின் ஆத்தும தேவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
.
விளையாட்டு முடிந்தது. நண்பர்கள் எல்லோரும் அவரவர் தம்தம் வீட்டிற்கு சென்று விட்டார்கள். ஆனால் பில்லிகிரகாமோ, அந்த கால்பந்து மைதானத்திலே முழங்கால்படியிட்டார். கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
.
'ஆண்டவரே என்னை நம்பும், என்னை நம்பும், உமது பார்வையிலே என்னை நம்பிக்கைக்குரியவனாக்கும்' என்று கதறினார். அந்த வார்த்தைகளே அவரது ஜெபமாக இருந்தது. அவரது உள்ளம் தேவனிடத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது, ஏறத்தாழ நான்கு மணி நேரம் மிகுந்த சத்தத்தோடு ஜெபித்தார், 'ஆண்டவரே என்னை நம்பும்' என்பதுதான் அவரது ஜெபமாக இருந்தது. கர்;த்தருடைய ஆவியானவர் வல்லமையாக இறங்கி அவரை அபிஷேகித்தார். அன்றிலிருந்து கர்த்தர் ஒரு பெரிய திருப்பத்தை அவர் வாழ்வில் கட்டளையிட்டார். மாபெரும் விளையாட்டு வீரரான அவரை மாபெரும் சுவிசேஷ வீரனாக மாற்றினார். அல்லேலூயா!