Friday, November 21, 2014

மரண நாள்

ஒரு அரசன் மரண தருவாயிலிருந்த தனக்கு பிரியமான அமைச்சரை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவரிடம், “நீர் அமைச்சராயிருந்தபோது எனக்கு அநேக நன்மையான ஆலோசனைகள் கூறினீர். ஆகையால் நீர் இப்போது எதை கேட்கிறீரோ அதை தருகிறேன்” என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர், “அரசே, நான் சாவதற்குமுன் ஒரு நாள் எனக்கு கூட்டி தர வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அரசர், 'என்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட எந்த காரியத்திலும் நீர் எதை கேட்டிருந்தாலும் நான் அதை உமக்கு கொடுத்திருப்பேன், என்னால் இயலாத காரியத்தை கேட்கிறீர், மன்னிக்கவும், என்னால் அதை தர முடியாது' என்று கூறினார்.
.
ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை என்று வேதம் நமக்கு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. நாம் யாவரும் ஒரு நாளில் மரிக்கவே போகிறோம். ஆனால் அதை குறித்த பயம் தான் மற்ற எல்லா பயங்களிலும் அதிக கடினமானது. கொடுமையானது. நாம் அதை விரும்புகிறோமோ இல்லையோ, ஒரு நாள் நாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். நாட்டை ஆளுகிற பெரிய அரசனானாலும், ஒன்றுமே யில்லாத ஆண்டியானாலும் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். அதை பணத்தை கொடுத்து நிறுத்த முடியாது.
.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27) என்று வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரிக்கவே வேண்டும். ஆனால் மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. அநேக மதங்கள் வித்தியாசமாய் போதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் என்ன போதிக்கிறது? நாம் உலகில் வாழ்வது, நிரந்தரமல்ல, ஆனால் மறுமையில் வாழ்வதே நிரந்தரம் என்று போதிக்கிறது. அதாவது நாம் இந்த பூலோகத்தை விட்டு, தேவனோடு என்றும் வாழும்படியாக நித்திய ஜீவனை பெற்றவர்களாக என்றென்றும் வாழுவோம் என்று வேதம் கூறுகிறது.

No comments:

Post a Comment