Wednesday, November 19, 2014

தாகம் தீர்க்கும் ஜீவ நதி

இஸ்ரவேலில் சுக்கோத் என்னும் கூடார பண்டிகை வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அந்த சுக்கோத் பண்டிகையின்போது யூதர்கள் ஏழு நாட்கள் தாங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, கானானுக்குள் செல்வதற்கு முன் வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடத்திசெல்லப்பட்டதை நினைவு கூர்ந்து, வெளியே கூடாரங்களில் குடியிருப்பார்கள். அந்த பண்டிகையின் கடைசி நாளில் யூதர்கள், சீலோவாம் குளத்தில் இறங்கி, அங்கிருந்து தண்ணீரை மொண்டு கொண்டு வந்து, தேவாலயத்திற்கு கொண்டு வருவார்கள். அங்கு அந்த தண்ணீரை ஊற்றி, ஏசாயா 12-ம் அதிகாரத்தை பாட்டாக பாடுவார்கள். 'நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்' என்று பாடுவார்கள். அவர்கள் இரட்சிப்பின் ஊற்றாகிய இயேசுகிறிஸ்துவை குறித்து அவர்தான் மேசியா என்று அறியாமலேயே பாடி கொண்டுதான் இருந்தார்கள்.
.
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த போது, ஒரு நாள் இந்த கூடார பண்டிகையின் 'கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்றார். அந்த நேரத்தை சற்று சிந்தித்து பாருங்கள், மேசியாவாகிய கிறிஸ்து முக்கியமான இடத்தில் நின்று கொண்டு, சத்தமிட்டு: 'ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்று கூறினபோது அங்கிருந்த யூதர்கள் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? யார் இவர்? என்று நினைத்தது மாத்திரமல்ல, அவர்கள் அவர் தீர்க்கதரிசி என்றும், சிலர் கிறிஸ்து என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அவரை நினைத்து, 'இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று' (யோவான் 7:43) என்று பார்க்கிறோம். ஆனாலும் கடைசி வரை அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுக்கு தாகம் இல்லை.
.
இயேசுகிறிஸ்து இன்றும் அந்த அழைப்பை விடுக்கிறார். 'என்னிடத்தில் விசுவாமாயிருந்தால் அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்று அறைகூவல் விடுக்கிறார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு, ஒருவன் தாகமாயிருந்தால் மாத்திரமே, அவரிடத்தில் வந்து பானம் பண்ணமுடியும். இன்று உலகில் மனிதர்கள் எதனெதன் பேரிலோ தாகமாயிருக்கிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்துவின் மேல் தாகம் கிடையாது. ஒரு மனிதன் கிறிஸ்துவின் மேல் தாகமாயிருந்தால், அவரிடம் வரும்போது அந்த தாகம் தீர்க்கப்படும்.

No comments:

Post a Comment