Saturday, August 31, 2013

வேதாகமத்தின் அதிசய சாதனைகள்


கையால் எழுதப்பட்ட மிகப்பெரிய வேதாகமம்,


உலகின் மிகச்சிறிய வேதாகமம்


நீரில் நனையாத வேதாகமம்


ஒவ்வொரு வேத வசனமும் ஒவ்வொரு பகுதியில்


உலகின் மிகபெரிய வேதாகமம்


கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்

கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்
"நவீன கால‌ கடல் வழிகளின் தந்தை" என அழைக்க‌ப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க‌ ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8‍‍ம் அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. ("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas" Psalms 8:8 ). 


அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த‌ பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும் "Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் , "Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ‌ சிலையை ஒரு வேதாகமத்தின் கூட‌வே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார். 

தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22

Wednesday, August 21, 2013

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த ஒரு பெண்மணி வெகுநாளாய் 'ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும் . தரிசனத்திலோ சொப்பனத்திலோ உம் முகத்தை காண் வேண்டும்' என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது அனுதின ஜெபத்தில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. ஒருமுறை அவர்கள் வெளி மாநிலத்திற்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்தார்கள். அச்சமயம் தன் குடும்பத்தினரோடு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தார்கள்.
.
அப்போது வழியருகே ஒருவர் சரியான ஆடையின்றி படுத்திருப்பதை கண்டு அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் காரை நிறுத்தும்படி கூறினார்கள். உடனிருந்தோர், 'இம்மனிதன் குடித்துவிட்டு படுத்திருக்கலாம், நமக்கு ஏன் வீண் வம்பு, போகலாம்' என்றனர். இருப்பினும் இவ்வூழியரது வற்புறுத்தலால் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது அவர் மிகவும் உடல் நலக்குறைவினால் கவனிப்பாரற்று படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை கனிவோடு விசாரித்து விட்டு தங்களிடமிருந்த உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு சென்றார்.
.
ஒரு சில நாட்களுக்கு பின் தன் ஜெப வேளையிலே ஆண்டவரே, நான் உம்மை எப்படியாவது பார்க்க வேண்டும். அதுவே என் உள்ளத்தின் வாஞ்சை என ஜெபித்தார்கள். அந்த நொடிப் பொழுதில் 'இரண்டு தினங்களுக்கு முன்பு என்னை வெளிப்படுத்தினேனே, என்னை நீ பார்த்தாயே' என்று ஆண்டவர் உணர்த்துவதைக் கண்டார். எப்போது ஆண்டவரே என்ற போது, 'அன்று சாலையோரத்தில் உன்னிடம் உணவு பொட்டலத்தையும் தண்ணீரையும் பெற்றுக் கொண்டது நான்தான்' என உணர்த்தினார். அப்போது மத்தேயு 25-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட சம்பவம் அவ்வூழியரின் நினைவிற்கு வந்தது. அந்த வேதப்பகுதியை நாம் தியானிக்கலாம்.

Sunday, August 4, 2013

இரட்சிப்பின் வழி

ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, 'அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம் போவதற்கு? என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒரு போதும் போதாது, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விடலாம். அந்த விமானம் மிகவும் உயர்ரக விமானம். அது அவனை சரியாக அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை.
.
எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால் அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே வீண்' என்று கூறினார்.

இளைப்பாறுதல் தரும் தேவன்

ஒரு குரங்கு கானகத்தில் தன் பாட்டுக்கு மரங்களில் தாவி தாவி விளையாடிக் கொண்டு அங்கு பழுக்கும் பழங்களை சாப்பிட்டு சுகமாக வாழ்ந்து வந்தது. அப்படி ஒரு நாள் மரங்களுக்கு மரம் தாவிக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன் வந்து நின்றது. அங்கு ஜன்னலில் பார்த்தபோது, ஒரு தட்டில் சில ஆப்பிள் பழங்கள் வைத்திருப்பதைக் கண்டது. உடனே தன் கையை நீட்டி அந்த பழங்களில் மூன்று, நான்கு பழங்களை எடுத்துக் கொண்டது. பின் அதை கைகளில் பிடித்துக் கொண்டே காட்டிற்கு வந்து சேர்ந்தது.
.
அதை கடிக்க முற்பட்டபோது, அதனால் கடிக்க முடியவில்லை. அது கட்டையினால் செய்யப்பட்ட ஆப்பிள்கள். ஆனால் அந்த குரங்கால் அந்த ஆப்பிள்களை கீழே தூக்கிப் போட முடியவில்லை. மற்ற குரங்குகள் வந்து அதை பிடுங்க பார்த்தபோது, அது தன்னிடம் அந்த பழங்களை இழுத்துக் கொண்டு, மற்ற குரங்குகளுக்கு காண்பிக்கவும் மறுத்தது.
.
அந்த பழத்தை எடுத்துக் கொண்டு அதனால் மரத்திற்கு மரம் தாவ முடியவில்லை. பழத்தை கீழே வைத்தால் மற்ற குரங்குகள் வந்து அதை எடுத்துக் கொண்டு விடுமோ என்று பயந்து, தன் கைகளிலேயே அவற்றை வைத்து கொண்டு, வேறு பழங்களையும் சாப்பிட முடியாமல், பசியால் தவித்தது. கையிலிருந்த பழங்களை அதனால் கீழேப் போட அதற்கு மனம் வரவில்லை.

. ஆனாலும் அந்த பழங்களை கீழே போடாமலும், தளர்ந்து, பசியினால் வாடி, சந்தோஷத்தை எல்லாம் இழந்து அந்த குரங்கு தவித்தது. பக்கத்தில் இருந்த மரத்திலிருந்து பழ வாசனை அதனுடைய மூக்கை துளைத்தது. ஆரம்பத்தில் அந்த வாசனை வந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்த குரங்கு, இப்போது மிகவும் தளர்ந்துப் போன நிலையின் கடைசியில், கையில் கனத்துக் கொண்டிருந்த அந்த கட்டை பழங்களை கீழேத் தூக்கிப் போட்டு விட்டு, அந்த பழ மரத்தில் தாவி ஏறி, தன் மனம் விரும்பும் மட்டும் பழங்களை சாப்பிட்டு சந்தோஷித்தது.

மன்னிப்பு என்கிற கடன்

ஒரு செல்வந்தர் ஒருவரிடம், ஒரு மனிதன் பத்து இலட்சம் ரூபாய்கள் கடன்பட்டிருந்தான். அந்த செல்வந்தர் தன் கணக்குவழக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தபோது, இந்த மனிதன் அநேக நாட்களாக தனக்கு பணத்தை திரும்ப தரவில்லை என்பது தெரிய வந்தது. உடனே அந்த மனிதனுக்கு அவர் ஆள் விட்டனுப்பி, 'என் பணத்தை கொடுத்து முடி' என்று கட்டளையிட்டார். அவனோ, 'ஐயா, என்னால் முடியவில்லை, நான் எப்படியாவது திருப்பி கொடுக்க முயற்சிக்கிறேன்' என்றான். அப்போது அந்த செலவந்தர், 'உன் மனைவி பிள்ளைகளையும், உன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்றாவது, என் கடனை அடைத்து முடி' என்றார். அப்போது அந்த மனிதன், அந்த செல்வந்தரின் காலில் விழுந்து, 'ஐயா, தயவுசெய்து கொஞ்சகாலம் பொறுத்து கொள்ளும். எப்படியாவது நான் அடைத்து விடுகிறேன். என் மனைவி பிள்ளைகளை விற்று விட்டு, நான் என்ன செய்வது ஐயா' என்று கண்ணீர் விட்டு கதறினான். அதை கேட்ட செல்வந்தர், அவன் மேல் மனதுருகி, 'சரி,போ உன்னை மன்னித்து விட்டேன்' என்று சொல்லி, அவன் அவருக்கு பட்டிருந்த பத்து இலட்ச ரூபாய் கடனையும் அவனுக்கு கொடுக்க வேண்டாம் என்று மன்னித்து விட்டார்.
.
இப்போது சந்தோஷமாய் தன் கடனெல்லாம் அடைக்கப்பட்டு விட்டதே, என மனைவி பிள்ளைகளோடு நான் சந்தோஷமாய் இருப்பேனே என்று எண்ணி கொண்டே வந்து கொண்டிருந்த அவனுக்கு எதிரே, அவனிடம் நூறு ரூபாய் கடன்பட்டிருந்த தன்னுடன் வேலை செய்யும் ஒருவன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனிடம், இவன் சென்று, 'நீ என்ன என் கடனை இன்னும் அடைக்காமலிருக்கிறாய், உடனே கொடுத்து முடி' என்று அவன் கழுத்தை நெரிக்க பார்த்தான். கடன் வாங்கியவனோ, 'ஐயா எப்படியாவது நான் கொடுத்து விடுகிறேன்' என்று அவன் கால்களை பற்றி கதறினான். ஆனால், இவனோ, 'உன்னை விட்டால் என் பணத்தை நீ கொடுக்கவே மாட்டாய்' என்று கூறி அவனை போலீஸில் பிடித்து கொடுத்து, 'இவன் என் பணத்தை கொடுத்து முடிக்குமட்டும், அவனை சிறையிலேயே வையுங்கள்' என்று அந்த போலீஸிடம் ஒப்படைத்தான்.
.
அதை நேரில் பார்த்த சிலர், அந்த செல்வந்தரிடம் போய், ' நீர் இந்த மனிதனுக்கு 10,000 இலட்சம் ரூபாய்களை மன்னித்தீரே, ஆனால் இவனோ போய் தனக்கு 100 ரூபாய் கொடுக்க முடியாத ஒரு மனிதனை அடிக்கவும், போலீஸில் பிடித்து கொடுக்கவும் செய்தான்' என்று கூறினர். அதை கேட்ட செல்வந்தருக்கு மிகவும் கோபம் உண்டாகி, அந்த மனிதனை பிடித்து கொண்டு வர சொல்லி, 'நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனை போலீசிடம் 'இவனை அடித்து, எனக்கு என் பணம் கிடைக்கும் வரைக்கும் இவனை சிறையில் வைத்து, எப்படியாவது பணத்தை திரும்ப பெற்று கொடுங்கள்' என்று அவர்களிடம் ஒப்படைத்தார்.
.
இந்த உவமையை தான் நாம் மத்தேயு 18ம் அதிகாரம் 23-34 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இதை படிக்கும்போதே, நமக்கு அந்த பத்து இலட்சம் கடன்பட்டிருந்த மனிதன் மேல் கோபம் வருகிறதல்லவா? நம்மில் அநேகரும் அவனை போலத்தான் இருக்கிறோம்.