Monday, November 4, 2013

வியப்பூட்டும் வேதாகமம்

ஆசிய கண்டத்திலேயே முதன் முறையாக அச்சிடப்பட்ட புத்தகம் 'பைபிள்' எனப்படும் பரிசுத்த வேதாகமமாகும்.

அதிலும் சிறப்பு என்னவென்றால், முதல் வேதாகமம் தமிழில் அச்சடிக்கப்பட்டதால் ஆசிய கண்டத்திலேயே முதலில் அச்சில் ஏறிய மொழி 'தமிழ்' ஆகும்.

ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழகம் வந்த சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார்.

பரிசுத்த வேதாகமத்தை ஜுவாலித்து பிரகாசிக்கிற விலையேறப்பெற்ற பளிங்கு கற்களினால் மகா ஞானம்பெற்ற சிற்பாசாரியால் அதிக அழகாகவும் விசேஷித்த கைவேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டதும், சிறிதும் பெரிதுமான அறுபத்தாறு அறைகளுள்ளதும் இராஜாதிராஜா உலாவிக்கொண்டிருக்கிறதுமான மகா பெரிய இராஜ அரண்மனைக்கு ஒப்பிடலாம்.

முழுவதுமாக தன்னை கொடுத்த இயேசு

ஒரு பணக்கார தகப்பனும் மகனும் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வியட்நாம் போர் நடைபெறவே, மகன் அந்த போருக்கு போக வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் போரில் மிகவும் நன்றாக போரிட்டு, மற்றும் அநேக போர் வீரர்களை காப்பாற்றினான். அப்படி ஒரு வீரனை காப்பாற்றும்போது, அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. தகப்பனுக்கு அந்த செய்தி போய் தனது ஒரே மகன் இறந்த துக்கத்திலே இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டு கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது ஒரு வாலிபன் நின்றுக் கொண்டிருந்தான். 

அவன் சொன்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய போர் வீரரில் நானும் ஒருவன். உங்கள் மகன் உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவான். நீங்கள் ஓவியங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று. நான் ஒரு பெரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகனை நான் வரைந்துள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டிக் கொணடான். தகப்பன் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘இல்லை இல்லை உங்கள் மகனால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறி படத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் அந்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து, வருகிற ஒவ்வொருவருக்கும் காட்டினார்.
.
சில மாதங்கள் கழித்து அவரும் மரித்தார். அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு வந்தன. புகழ்பெற்ற ஓவியங்களாக இருந்தபடியால் அவற்றை வாங்க அநேகர் வந்திருந்தனர். ஏலத்தை நடத்துபவர், முதலாவது அவருடைய மகனின் அந்தப் படத்தைக் காட்டி ‘யார் இதை வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்தை ஆரம்பித்தார். அங்கு அமைதி நிலவியது. திரும்பவும் அவர் 'யார் வாங்குகிறீர்கள்? 200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?' என்று கேட்டார். பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருடைய மகனின் படத்தை வாங்க வரவில்லை. மற்ற ஓவியங்களை ஏலமிட ஆரம்பியுங்கள் என்று கேட்டது. ஏலமிடுபவரோ, ‘அவருடைய மகன்; அவருடைய மகன் யார் வாங்க முன்வரகிறீர்க்ள்’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்த வீட்டில் தோட்டக்காரனாயிருந்தவர், 10 டாலர் எனக் குரல் கொடுத்தார். உடனே ஏலமிடுபவர் யாராவது 20 டாலர் என்றுக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ‘10 டாலர் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்தை அந்தத் தோட்டக்காரனுக்குக் கொடுத்தார். மற்றவர்கள் பொறுமையை இழந்து, ‘மற்ற ஓவியங்களை ஆரம்பியுங்கள்’ என்றுக் கத்தினார்கள். ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம் முடிந்தது’ என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு ‘எனக்கு முன்னமே இரகசிய உயிலைப் பற்றி சொல்லப்பட்டது. யார் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு அவருடைய எஸ்டேட்டும் எல்லா ஓவியங்களும் சொந்தம் என்று அவர் உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆகையால் யார் மகனுடைய ஓவியத்தை வாங்கினார்களோ அவர்களுக்கே எல்லாம் சொந்தம்’ என்று கூறி ஏலத்தை முடித்தார்.
.
2000 வருடங்களுக்கு முன்பு தமது சொந்தக் குமாரன் என்றும் பாராமல், அவரை ஒப்புக் கொடுத்த தேவன் ‘இதோ என் மகன், அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் - யோவான் 1:12. மட்டுமல்ல, அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளி இருக்கிறார். ஆனால், எத்தனைப் பேர் அவரை புறக்கணித்து, கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கே சொந்தம் என்று அவரை அடையாமற் இருக்கிறார்க்ள. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எத்தனை பாக்கியம்! மற்றவர்களும் இந்த பாக்கியத்தை அடையும்படிக்கு நாம் திறப்பின் வாசலில் நிற்போமா? அவர்களுக்கு சத்தியத்தை சொல்வோமா?

கர்த்தரில் குரல் கேட்கிறோமா?

ஒரு வாலிபன் தன் தேசத்தில் இருந்த உயரமான மலையின் மேல் ஏற ஆர்வம் கொண்டான். அதற்காக பல மாதங்கள் பயிற்சி செய்து, தனக்கு மட்டுமே புகழ் வர வேண்டும் என்பதற்காக தனியாக மேலே ஏறுவதற்கு புறப்பட்டான். மலையின் மேலே ஏற ஆரம்பித்தான். உற்சாகமாக ஆரம்பித்ததால் நேரம்போவது தெரியாமல் மேலே ஏறிக் கொண்டே இருந்தான். அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. அவன் எங்கும் போய் தங்குவதற்கு ஆயத்தம் செய்யாததால், எப்படியும் மேலே போய் விடுவோம் என்று எண்ணத்தோடு இன்னும் அதிகமான வேகத்துடன் மேலே போக ஆரம்பித்தான். அதற்குள் நன்கு இருட்டி விட்டது. கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
.
சிகரத்தை எட்டுவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது, கால் இடறி கீழே விழ ஆரம்பித்தான். எங்கும் காரிருள். எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத நிலை. புவி ஈர்ப்பின் காரணமாக மிக வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தான். கீழே போகும்போது தான் எப்படியும் மரிக்க போகிறோம் என்று தெரிந்து விட்டது. அப்படி அவன் நினைத்துக் கொணடிருக்கும்போது ஒரு இழுப்பு. மலையின் உச்சியிலிருந்து அவன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு முடிந்து அவனை அந்தரத்தில் தொங்க வைத்தது. இப்போது அவனுக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த ஒரே வழி கர்த்தர் மாத்திமே. வேறு வழி இல்லாமல், தன்னால் இயன்ற வரை சத்தமாக 'கர்த்தாவே எனக்கு உதவி செய்யும்' என்று கதறினான். உடனே வானத்திலிருந்து ஒரு சத்தம், 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டது. 'என்னைக் காப்பாற்றும்' என்றான். 'நான் உன்னை காப்பாற்றுவேன் என்று நீ நினைக்கிறாயா?' என்று ஆண்டவர் கேட்டார். 'ஆம் ஆண்டவரே நான் நம்புகிறேன்' என்று சொன்னான். அப்போது கர்த்தர், 'அப்படியானால் உன் இடுப்பிலிருக்கும் கயிற்றை அறுத்து விடு' என்றார். அந்த நேரத்தில் அமைதி நிலவியது. அவன் அந்த கயிற்றை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவனை பார்த்து காப்பாற்ற வந்தவர்கள் அவன் கயிற்றை கெட்டியாக பிடித்தபடியே குளிரில் உறைந்துப் போய் மரித்திருக்கக் கண்டார்கள். அவன் தரையிலிருந்து இரண்டு அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கண்டார்கள்.

வேதனைகள் மத்தியில்

ஒரு போதகர் தன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும், வீட்டில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பறிகொடுத்தவராய், மிகுந்த வியாகுலத்தோடு ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு ஆலயத்தை கட்டும்படி வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் செய்யும் வேலையை சற்று நேரம் நின்று அந்த போதகர் பார்த்து கொண்டிருந்தார். அதில் ஒருவர், உளியையும், சுத்தியலையும் வைத்து, முக்கோண வடிவில் கல்லை செதுக்கி கொண்டிருந்தார். அதை பார்த்த போதகர், அவரிடம் சென்று, 'நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்' என்று கேட்டார். அந்த ஆலயத்தின் முகப்பு பகுதியை அவர் போதகரிடம் காட்டி, 'இந்த வடிவம், இந்த இடத்தில் பொருத்தும்படிக்கு இதை நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்' என்று கூறினார்.
.
அவர் அப்படி சொல்லி கொண்டிருக்கும்போதுதானே, ஆவியானவர் அவருடன் பேச ஆரம்பித்தார். போதகர் சென்று கொண்டிருக்கும் பள்ளத்தாக்கின் அனுபவம் அவரை தேவனிடம் நெருங்கி சேரும்படியாகவும், தேவனோடு அவருடைய சித்தத்தில் தன்னை சரியாக இடத்தில் பொருத்தும்படிக்கு தேவன் அனுமதித்திருக்கிறார் என்று அந்த நாளில் அறிந்து கொண்டார்.

கொடுப்பவரையே நாடுவோம்


ஒரு இராஜா அநேக போர்களை நடத்தி வெற்றிக் கண்டார். அவருடைய நான்கு அமைச்சர்கள் இந்த போர்களை அவருக்காக நடத்தி வெற்றியின் வழியில் இராஜாவை நடத்தினர். ஆகையால் அந்த இராஜா நான்கு அமைச்சர்களையும் கனப்படுத்த விரும்பினார்.
.
ஆகவே தனது பக்கத்து நாட்டு மன்னர்களையும், நாட்டின் பெரிய பதவியிலிருப்பவர்களையும் அழைத்து பெரிய விருந்து செய்தார். அந்த விருந்தில் அந்த நான்கு அமைச்சர்களையும் கனம் பண்ணி, 'உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள், அதை தருகிறேன்' என்று கூறினார்.
.
முதல் அமைச்சர் வந்தார், அவர் சொன்னார், 'இராஜா அவர்களே, நான் சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். பணம் இல்லாததால் அநேக நாட்கள் உணவு இன்றி தவித்தேன். எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே எனக்கு பணம் கொடுங்கள், அதுப்போதும் என்றார். அதன்படியே போதும் என்று சொல்லும் அளவிற்கு அவரக்கு இராஜா பணத்தை கொடுத்தார்.
.
இரண்டாவது அமைச்சர், 'எனக்கு வீடு இல்லை. இந்த அரண்மனையைப்போல வீடு ஒன்று கட்டித்தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். வீடு கட்டித்தர இராஜா அரண்மனை வேலைக்காரரிடம் கட்டளையிட்டார்.
.
மூன்றாவது அமைச்சர், 'எனக்கு வீடும் உண்டு. பணமும் உண்டு, ஆனால் நான் போகும் வழி சரியாக இல்லை. எங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நல்ல பாதை போடப்பட வேண்டும்' என்றுக் கேட்டுக் கொண்டார். அதன்படி இராஜா பாதைப் போட்டுக் கொடுப்பதாக வாக்களித்தார்.
.
நான்காவது அமைச்சரை கேட்டபோது, அவரது கண்கள் கலங்கியது. பேச்சு வரவில்லை. அதைக்கண்ட இராஜா 'உனக்கு என்ன வேண்டும்? கேள், பாதி இராஜ்யமானாலும் தருகிறேன்' என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர் கண்களில் கண்ணீர் வழிந்தபடி, 'இராஜா எனக்கு பணமோ, வீடோ அல்லது வேறு எதுவுமே வேண்டாம்;. நீங்கள்தான் எனக்கு வேண்டும். உங்களுக்கு சரியென்றால் என் வீட்டில் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இராஜா உடனே, 'இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை, நான் வந்து உன் குடும்பத்தோடு இரண்டு நாட்கள் தங்குகிறேன்' என்றுக் கூறினார்.
.
அதன்படி இராஜா போய் தங்க திட்டங்கள் போட்டபோது, அந்த அமைச்சரின் வீடு பழைய வீடு, போக சரியான பாதை இல்லை என்று அறிந்து, இராஜா போய் தங்கியிருக்கும்படி அரண்மனைப் போன்ற வீட்டை கட்டச்சொல்லி, சரியான பாதை போடப்பட்டு, அவர் அங்கு தங்கியிருக்கும் நாட்கள் இராஜாவுக்கு தேவையானதை செய்து கொடுக்கும்படி பணமும் நிறைய அந்த அமைச்சருக்கு கொடுக்கப்பட்டது. அவர் கேட்காமலேயே மற்றவர்கள் பெற்றுக் கொண்ட அத்தனை ஆசீர்வாதங்களையும் இந்த அமைச்சர் இராஜாவை தன் வீட்டிற்கு அழைத்ததால் பெற்றுக் கொண்டார்.

மிஷனெரி வாழ்க்கை - கிறிஸ்துவின் சாயல்

மிஷனெரி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல், எதிர்பாராத விதமாக கடும்புயலில் சிக்கி, சின்னாபின்னமாய் உடைந்தது. மிஷனெரி கடலில் தூக்கி எறியப்பட்டார். கடைசியாக கையில் சிக்கிய ஒரு கட்டையைப் பிடித்து மூன்று நாட்கள் கழித்து, கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். உணவும் தண்ணீரும் இன்றி சாகும் தருவாயில் இருந்தவரை அந்த கடலோர கிராம மக்கள் தூக்கி சென்று காப்பாற்றினார்கள். அவருடைய உடல் நிலை சீரானது.
.
அவர் அந்த கிராமத்திலேயே இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றினார். அவர்களோடு சேர்ந்து உழைத்தார். அவர் அவர்களுக்கு எவ்விதமான போதகமும் பண்ணவில்லை. தன்னுடைய விசுவாசத்தையும் அறிக்கையிடவில்லை. அவர் வேதாகமத்தைக்கூட அவர்களுக்கு வாசித்துக் காண்பித்ததில்லை.
.
ஆனால் யாருக்காவது சுகமில்லை என்றால் முழு இரவும் கண்விழித்து அவர்களை கவனித்துக் கொள்வார். பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரம் கொடுப்பார். தனிமையாயிருப்போரிடம் சென்று ஆறுதலாய் பேசுவார். சிறுபிள்ளைகளுக்கு படிப்பு சொல்லி கொடுப்பார். யாருக்காவது அநீதியாய் தீங்கிழைக்கப்பட்டால் அவர்களுக்காக வாதாடுவார்.
.
ஒரு நாள் சில மிஷனெரிகள் அந்த கிராமத்திற்கு வந்து இயேசுவின் அன்பையும் அவரது மனதுருக்கத்தையும், தாழ்மையையும் பற்றி எளிய முறையில் எடுத்துச் சொன்னார்கள். அதைக் கேட்ட அந்த மக்கள், இயேசு எங்களோடு பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். அதைக் கேட்ட மிஷனெரிகளுக்கு பெரும் அதிர்ச்சி! அந்த கிராமத்தில் வாழ்;ந்து வந்த அந்த மிஷனெரியை அழைத்து வந்து காண்பித்தனர். அவரைப் பார்த்ததும் மிஷனெரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் தொலைந்து போனார் என்று இந்நாள்வரை
அவர்கள் எண்ணியிருந்த மிஷனெரி அவர்தான். .
வேதத்திலே பார்ப்போமானால் நடமாடும் நிருபமாய் வாழ்ந்தார் அப்போஸ்தலனாகிய பவுல். அந்த வரிசையில் வாழ்ந்து, வாடாத ஜீவகீரிடம் பெற்றோர் அநேகர். அதிலும் வெளியுலகிற்கு அவர்கள் வாழ்வு தெரியாமலேயே மாண்டோரும் அநேகர். உண்மையாகவே தேவனின் சாயலை பிரதிபலிக்க விரும்புவோர் பிரபலமடைய விரும்ப மாட்டார்கள். பிரபலமடைவதை மட்டும் குறிக்கோளாய் கொண்டு வாழ்வோரிடம் கிறிஸ்துவின் சாயலை காணவும் முடியாது.

ஆலயத்திற்கு செல்வோம் வாருங்கள்

ஒரு மனிதர் சபைக்கு ஒழுங்காக செல்பவர், ஒரு முறை ஒரு செய்தித்தாளில் எடிட்டர் பக்கத்திற்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்வது பிரயோஜனமில்லை என்றும், தான் கடந்த30 வருடங்களாக சபைக்குச் செல்வதாகவும், அங்கு, ஏறக்குறைய 3000 போதகங்களைக் கேட்டிருப்பதாகவும், ஆனால் இப்போது, போதகர் செய்த பிரசங்கங்களில் ஒன்றுக் கூட தன் நினைவில் இல்லையென்றும், போதகர் தன் நேரத்தையும், அவருடைய நேரத்தையும் வீணடிப்பதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்களும் அதில் சேர்ந்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். 

இது சில வாரங்களுக்குச் சென்றது. கடைசியில் ஒரு விசுவாசி எழுதினார், “எனக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. என் மனைவி ஏறக்குறைய 3200 தடவை உணவுகளை சமைத்து தந்திருக்கிறாள். அவள் என்ன சமைத்தாள் என்று கேட்டால் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஆனால் அவைகள் என் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நான் வேலை செய்வதற்கு எனக்கு சக்தியையும் கொடுத்து வருகின்றன. என் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் இந்நேரம் சரீரபிரகாரமாக மரித்திருப்பேன். அதுப் போல நான் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவில்லை என்றால் ஆத்தும ரீதியாக எப்போதோ மரித்திருப்பேன். தேவன் எனக்கு கொடுத்த சரீர, ஆத்மீக உணவுகளுக்காக ஸ்தோத்திரம்” என்றார்.

அச்சிடப்பட்ட முதல் புத்தகம் வேதாகமம்

அச்சு இயந்திரம் கண்பிடிக்கப்பட்ட பின் முதல் அச்சிடப்பட்ட புத்தகம் வேதாகமம். உலகம் முழுவதும் அச்சிடப்படும் ஒரே புத்தகம் வேதாகமம். இன்றய உலகத்தில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் வேதாகமம். உலக முழுவதும் அதிகமாக விற்பனையாகும் ஒரே புத்தகம் வேதாகமம். அதிகமான மக்கள் வாசிக்கும் ஒரே புத்தகம் வேதாகமம்.
கி.பி 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி உலகத்தில் 6877 மொழிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 518 மொழிகளில் முழு வேதாகமமும், ஏறக்குறைய 2798 மொழிகளில் வேதாகமத்தின் சில பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்கிறது விக்கிபிடியாவின் கணக்கீடு. 

அப்படி என்ன இருக்கிறது இந்த புத்தகத்தில் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன். உலகம் தோன்றிய கதையை சொல்லும், உலகத்தின் முடிவை தெளிவாய் சொல்லும், வந்தவர்கள் கதையை விளக்கி சொல்லும், போனவர்கள் கதையை எடுத்து சொல்லும், வருபவர்கள் கதையையும் குறிப்பால் சொல்லும். இது இறந்த கால வரலாறு. நிகழ்காலத்தின் கண்ணாடி, இது எதிர்காலத்தின் ஜோதிடம். இது தான் ஒட்டுமொத்த உலக கிறிஸ்தவர்களும் மார்தட்டி கொள்ளும் செய்தி.

வேதாகமமானது பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த மக்களை வழி நடத்த தீர்க்கதரிசிகளால் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பது இரண்டாயிரம் ஆண்டு கிறிஸ்தவ சாம்ரஜ்ஜியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. 


இதை எல்லோருக்கும் விளங்கும் படி சொல்வதென்றால் கடவுள் மனிதனுக்கு எழுதிய கடிதம் என்று சொல்லலாம். சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் உங்கள் வருங்கால தலைமுறைகளுக்கு ஒரு செய்தியை விட்டு செல்ல நினைக்கிறீர்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அந்த செய்தி அழியாமல் இருக்க வேண்டும். அப்படி என்றால் அந்த செய்தியை எந்த வகையில் கொண்டு செல்வீர்கள். முதலில் மொழி முக்கியம். அந்த மொழி நூறு ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்க வேண்டும். அடுத்து கொண்டு செல்லும் ஊடகம் முக்கியம் அதாவது மீடியா. (காகிதம், குருந்தகடு, இணையதளம் போன்றவை) 
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுபாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:18

கோபம் ஒரு நிமிடம் மட்டும்

ஒரு சாது தன் சீடர்களிடம் 'கோபப்படும்போது ஏன் ஒருவர் மற்றவரைப் பார்த்து கத்துகிறார்?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தார்கள். ஒரு சீடன் 'நாம் நம்முடைய பொறுமையை இழந்து விடுகிறோம். அதனால் சத்தம் போட்டு கத்துகிறோம்' என்றான். அதற்கு சாது, 'ஏன், அவர்கள் பக்கத்தில் தானே இருக்கிறார்கள்? பின் ஏன் கத்த வேண்டும்' என்று மீண்டும் கேட்டார்.
.
சீடர்கள் ஒவ்வொரு பதிலை கொடுத்தார்கள். அதில் ஒன்றிலும் திருப்தி அடையாத சாது சொன்னார், 'ஏன் கோபம் வரும்போது கத்துகிறார்கள் தெரியுமா? கோபம் வரும்போது அவர்களின் இருவரின் இருதயமும் ஒருவரையொருவர் விட்டு, தூர போய் விடுகிறது. அவர்களையுமறியாமல், தாங்கள் மற்ற நபரோடு தூர போய் விட்டோம் என்கிற எண்ணத்தினால் சத்தமாய் கத்துகிறார்கள்' என்றார்.
.

.அப்போது ஒரு சீடன், 'கோபம் வரும்போது கத்துகிறார்கள், ஆனால் அன்பு வரும்போது?' என்று கேட்டான். 'அன்பு வரும்போது அவர்கள் மெதுவாக பேசுகிறார்கள். காதில் கிசுகிசுப்பாய் பேசினாலும் அது நன்கு கேட்கும், ஏனெனில் அவர்கள் இருதயம் மிகவும் அருகில் இருப்பதால். கடைசியில் அவர்கள் பேசக்கூட வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலே போதும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கிக் கொள்ளும்' என்றுக் கூறினார். அது எத்தனை உண்மை!.
.
திருமணமான புதிதில் மற்றவர்கள் கேட்காத வண்ணம் மெதுவாக பேசிக் கொள்ளும் தம்பதியர், நாளாக நாளாக ஒருவர் ஏன் பேசுகிறார் என்று நினைக்கும் வண்ணம் மிகவும் சத்தமாக கத்தி, பேசி சண்டைப் போட்டுக் கொள்ளுகிறார்கள்.


அதே தம்பதியர், நாளாக நாளாக எதுவும் பேசாமலே கண்களினாலே பார்த்து ஒருவரை யொருவர் புரிந்துக் கொள்ளும் காலக்கட்டத்திற்குள்ளும் வருகின்றனர். புது தம்பதியினர் போல பழைய தம்பதிகள் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும், இருவரும் இருதயம் ஒத்திருப்பதால் அதிகமாய் பேசாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்துக் கொள்கின்றார்கள். .
.சில வேளைகளில் பழைய தம்பதியராயிருந்தாலும், கோபம் அளவு கடந்து வரும்போது, எதையுமே நினைக்காமல் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கி, புண்பட்டு, அன்று முழுவதும் சாப்பிடாமலும், அப்படியே ஜெபிக்காமலும் தூக்கத்திற்கு செல்கின்றனர்;. பசியினாலும், கோபத்தினாலும் தூக்கமும் வராமல், எழுந்துப்போய் சாப்பிடவும் வறட்டு கௌரவம் விட்டுக் கொடுக்காமல், பாடுபடுவார்கள். ஏன் இந்தப்பாடுகள்?சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக மன்னித்து மறந்து, ஜெபித்துவிட்டுபடுத்தால், அடுத்தநாள் புதிய நாளாக, அன்றலர்ந்த மலராக
புத்துணர்ச்சியோடு எழுந்தரிக்கலாமில்லையா?

ஈராக் தேசம்... வேதத்தின் உண்மை சரித்திரம்

வேதத்தில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும் நாடு எது தெரியுமா? ஆம், இஸ்ரவேல் தேசத்தை குறித்து தான். அதற்கு அடுத்தபடி சொல்லப்பட்டிருக்கிற நாடு எது என்றால் அது ஈராக் தேசம் தான். ஈராக் தேசத்தை குறித்து, அநேக இடங்களில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஈராக் தேசம் ஈரான் தேசத்தோடு ஒன்பது வருடங்கள் போரிட்டு, தாக்குபிடிக்க முடிந்தது. அதை ஆண்ட சதாம் ஹூசைன் அந்த ஒன்பது ஆண்டுகளும் விடாமல் போரிட்டு, கடைசி வரை யார் ஜெயித்தார்கள் என்றே சொல்ல முடியாதபடி அந்த போர் முடிந்தது. அது முடிந்த உடனே, ஈராக் தேசம் மிகவும் சிறிய அண்டை நாடான குவைத்தை பிடித்து ஆக்கிரமித்தது, அதன்பின் குவைத் தேசததின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க படைகள் வந்து, அதை மீட்டு கொடுத்தது. இன்னும் அமெரிக்க படைகள் குவைத்தை பாதுகாத்து வருகின்றது. அதன்பின் சதாம் ஹூசைன் நீதி விசாரிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டது நாம் யாவரும் அறிந்ததே. இந்த நாளில் இந்த ஈராக் தேசத்தை குறித்து, அதன் விசேஷங்களை குறித்து நாம் பார்க்க போகிறோம். வேதத்தில் காணப்படும் அசீரியர்கள், கல்தேயர்கள், மெசபொடோமியா, பாபிலோன் இவை யாவும் பண்டைய ஈராக் நாட்டினையே குறிக்கின்றன.
.
  • ஏதேன் தோட்டம் ஈராக்கிலே இருந்தது.
  • மெசபொடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக் தேசத்திலே தான் நாகரீகம் தோன்றியது.
  • நோவா பேழையை ஈராக்கிலேதான் கட்டினார். நோவா எந்த இடத்தில் பேழையை கட்டினார் என்பது வேதத்தில் குறிப்பிடாவிட்டாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கில் தான் கட்டியிருக்க கூடும் என்று நம்புகின்றனர்.
  • பாபேல் கோபுரம் ஈராக் தேசத்தில் தான் கட்டப்பட்டது.
  • ஆபிரகாம் இருந்த கல்தேயரின் ஊரான ஊர் ஈராக்கில் தான் இருந்தது.
  • ஈசாக்கின் மனைவி ரெபேக்காளின் ஊராகிய நாகோர் ஈராக்கில்தான் இருந்தது.
  • யாக்கோபு ராகேலை சந்தித்தது ஈராக்கில்தான்.
  • யோனா பிரசங்கம் செய்த நினிவே ஈராக்கில்தான் இருந்தது.
  • இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை ஜெயித்த அசீரியா ஈராக்கில் தான் இருந்தது.
  • ஆமோஸ் தீர்க்கதரிசி ஈராக்கில் தான் தீர்க்கதரிசனம் கூறினார்.
  • ஈராக்கில் இருந்த பாபிலோன் எருசலேமை அழித்தது.
  • பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் யூத வாலிபர்களை அடிமைகளாக கொண்டு சென்றது இந்த ஈராக்கில்தான்.
  • தானியேல் தீர்க்கதரிசி இருந்த சிங்க கெபி ஈராக்கில்தான் இருந்தது.
  • சாத்ராக் மேஷாக் ஆபெத்நேகோ என்னும் எபிரேய வாலிபர்கள் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கி வீசப்பட்டதும் இந்த ஈராக்கில் தான். அதில் நான்காவது நபராக இயேசுகிறிஸ்து வந்து உலாவினதும் இந்த ஈராக்கில்தான்.
  • எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொன்னது இந்த ஈராக்கில்தான்.
  • பேதுரு சுவிசேஷத்தை ஈராக்கில் பிரசங்கித்தார்.
  • ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது –ஆதியாகமம் 2:10-14
  • ஆதாமும்ஏவாளும் உருவாக்கப்பட்டது ஈராக்கில்--ஆதியாகமம்2:7-8
  • சாத்தான் தன்னை முதலில் வெளிப்படுத்தினது ஈராக்கில் ஆதியாகமம் 3:1-6
  • நிம்ரோத் பாபேல் கோபுரத்தை கட்டியது ஈராக்கில் - ஆதியாகமம் 10:8-911:1-4
  • பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது ஈராக்கில் ஆதியாகமம் 11:5-11
  • யாக்கோபு 20 வருடங்களை ராகேலுக்காக கழித்தது ஈராக்கில் ஆதியாகமம் 27:42-45
  • முதன்முதல் ராஜாங்கம் ஈராக்கிலே அமைக்கப்பட்டது தானியேல் 1:1-2, 2:36-38
  • எஸ்தர் புத்தகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஈராக் தேசத்திலே நடந்தது
  • நாகூம் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தது ஈராக் தேசத்தை குறித்து தான்
  • வெளிப்படுத்தின விசேஷத்தின் பாபிலோனிய தேசம் இப்போதிருக்கும் ஈராக் ஆகும்.
.
இப்படி சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசம் வேதத்தில் இஸ்ரவேல் தேசத்திற்கு அடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஈராக் தேசத்தில் சதாம் ஹூசைனின் மறைவுக்குப்பின் எப்போது பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும், தீவிர வாத செய்கைகளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த தேசத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போமா? இந்த தேசத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபிப்போமா? இங்குள்ள கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போமா?

பரலோகத்தின் குடிமகன்

ஒரு மனிதர் ஒரு கிராமப்புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் அவர் செல்லும் வழி தவறி விட்டது. யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தவராக ஒரு வீட்டின் கதவை தட்டினார். அங்கு இருந்த ஒரு மூதாட்டி கதவை திறந்தார்கள். என்ன என்று கேட்டபோது, வழி தவறிவிட்டதாகவும், வழி கேட்க வேண்டி கதவை தட்டியதாகவும் அந்த மனிதர் கூறினார்.
.
அப்போது அந்த வயதான அம்மா அவரை வீட்டிற்குள் அழைத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறினார். உள்ளே வந்த மனிதருக்கு ஆச்சரியம், அந்த வீட்டில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள், ஒரு பழைய கட்டில் வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட அவர், அந்த தாயாரிடம், 'என்னம்மா வீட்டில் ஒன்றுமே இல்லை?' என்றுக் கேட்டார்.
.
அதற்கு அந்த தாயார், 'உன்னுடைய பொருட்கள் எல்லாம் எங்கே' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், 'நான் எப்படி என் பொருட்களை நான் போகும் இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும்? நான் வழிபோக்கனாயிற்றே?' என்று கூறினார். அப்போது அந்த தாயார், 'நானும் அப்படித்தான்' என்றுக் கூறினார்கள்.
.
பிரியமானவர்களே, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, நாம் வழிப்போக்கர்களைப் போலதான் இங்கு வாழ வேண்டும், ஜீவிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய குடியிருப்பு இந்த உலகத்தில் அல்ல, பரலோகத்தில் இருக்கிறது.

எமி கர்மைக்கேல் அம்மையார்

எமி கர்மைக்கேல் அம்மையார் இந்தியாவிற்கு வந்து அனாதைகள், இளவயதுள்ள விதவைகள் மற்றும் தேவதாசிகள் என்னப்பட்ட சிறுமிகளை வைத்து 50 வருடங்களுக்கு மேலாக காப்பகம் வைத்து நடத்தி வந்தார். இன்றும் டோனாவூரில் அந்த காப்பகம் நடைபெற்று வருகிறது. வயதான காலத்தில் சிலமுறை கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு, தனது கடைசி இருபது வருடங்கள் படுத்த படுக்கையாகிவிட்டார்கள்.
.
அப்படியிருந்தும் அவர்கள் படுக்கையிலிருந்தபடியே அநேக புத்தகங்களையும், பாடல்களையும் கவிதைகளையும் எழுதினார்கள். அது அநேக ஆயிரங்களுக்கு ஆறுதலை கொண்டு வந்தது.
.
தனது உதவியற்ற நிலைமையிலும் அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்தார்கள். “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்தே தமது பெலன்” என்று அவர்கள் மகிழ்ந்திருந்தபடியால் அவர்களுடைய படுக்கைக்கு அவர்களை காணச் சென்றவர்கள் தேற்றப்பட்டு, கர்த்தரை துதித்தபடி வந்தார்கள்.
.
ஒரு முறை உலகபிரசித்திப் பெற்ற தேவ ஊழியர் பில்லிகிரகாம் இந்தியாவிற்கு வந்திருந்தபோது டோனாவூரில் கார்மைக்கேல் அம்மையாரை சந்திக்கச்சென்றிருந்தார். திரும்பும்போது அவரை ஜெபிக்க வேண்டினர். அவர் ஜெபித்த போது தேவனுடைய பிரசன்னம் அந்த அறையில் அளவில்லாமல் நிரம்பியிருந்தபடியால் அவர் தொடர்ந்து ஜெபிக்க முடியாமற்போயிற்று. ஏமி அம்மையார் ஜெபித்து முடித்தார்கள். மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று, கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. - (1 இராஜாக்கள். 8:11)
.
நமது குறைகளில் நாம் முறுமுறுத்துக் கொண்டே இருக்கிறோம் அல்லவா? நமது குறைகளிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமது பெலன் என்று நாம் கர்த்தரை துதிக்க கற்றுக் கொண்டால் தேவ பிரசன்னம் நம்மை அளவில்லாமல் சூழ்ந்து கொள்ளும்;

இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார்

நம் இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்பது நம்மனைவருக்கும் நன்கு தெரிந்த சத்தியமாகும். ஆனால் நாம் எவ்வளவு தூரம் ஆயத்தமாயிருக்கிறோம் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.
.
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஈசன் ஹோவர் (Eisenhover) விடுமுறையில் இருந்தபோது, பத்திரிக்கையில் அவருக்கு என்று குறிக்கப்பட்டு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் ஆறு வயது நிரம்பிய பால் என்னும் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மரணதறுவாயில் இருப்பதாகவும், அவன் அமெரிக்க அதிபரை பார்க்க விரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, அவர் அந்த சிறுவனை போய் பார்க்க முடிவு செய்தார். அப்படியே ஒரு நாள் அந்த சிறுவனின் வீட்டிற்கு போய் கதவை தட்டினார்.
.
அச்சிறுவனின் தகப்பன் டொனால்ட் கதவை திறந்தபோது அமெரிக்க அதிபரைக்கண்டு அதிர்ச்சியுற்றார். சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன் செய்யாமல், மிகவும் சாதாரண உடைகளை உடுத்தியிருந்த அவர், அதிபரை உள்ளே அழைத்து, சிறுவனிடம் கொண்டு சென்றார். அதிபர் சற்று நேரம் அந்த சிறுவனிடம் பேசிவிட்டு கிளம்பினார்.
.
அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு அதுவே அந்த நாளின் பேச்சாக இருந்தது. ஆனால் டொனால்ட்க்கோ சந்தோஷமேயில்லை. ஏனெனில் அவர் அதிபரின் வருகையை எதிர்ப்பார்க்காததினால், சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன்கூட செய்யாமல் இருந்து விட்டோமே என்று, மிகவும் துக்கப்பட்டார். ஆம் பிரியமானவர்களே! நம் ஆண்டவர் நாம் எதிர்பாராத நேரத்தில் வருவார். நாம் ஆயத்தமா? கறைதிரையற்ற இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்தியிருக்கிறோமா? அல்லது கறைகளோடு காணப்படுகிறோமா?