வெளிப்படுத்தல்22: 6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள்.
சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக்
காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின்
கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
அன்பு நண்பர்களே,
என் வாழ்வில் நடந்த ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சிறு சாட்சியை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.
என் தந்தையின் பெயர் திரு.வாசன் தேவராஜ் தாயார் பெயர் திருமதி.கிறிஸ்டி. நான் தேவனை அதிகமாக விசுவாசிக்கிற குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதில் இருந்தே கடவுளுகுள்ளாக வளர்க்கப்பட்டேன். அப்பா எனது இரண்டாது அண்ணனுடன் (இம்மானுவேல் பிரைட்) இணைந்து கோவை இரத்தினபுரியில் மாவு மில் நடத்தி வருகிறார். அம்மா ஓர் அரசாங்க பள்ளிகூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்தவுடன் கடைக்கு சென்று அண்ணனுக்கும், அப்பாவுக்கும் உதவிசெய்வார்கள். எனக்கு இரண்டு அண்ணன் மற்றும் ஓர் தங்கை உண்டு. மூத்தவர் திரு.சாமுவேல் பாப்டிஸ்ட் (என்னை கடவுளுக்குள் வழிநடத்தியவர்) UESI - TN மூலமாக முழு நேர ஊழியம் செய்து வருகிறார். தங்கை திருச்சியில் தன கணவர் வக்கீல்.திரு தாமஸ் அவர்களோடு வசித்துவருகிறாள்.
எங்கள் இல்லம் கவுண்டம்பாளையம், ஜெயம் நகரில் உள்ளது.
இது எனது திருமணத்திற்கு முன் நடந்த ஓர் நிகழ்வு.
2007ம் வருடம், நவம்பர் 2ம் தேதி, வெள்ளிகிழமை, வழக்கம் போல் என் கல்லூரி வேலைகள் முடிந்த பின்னர் நான் சார்ந்திருந்த இந்திய நற்செய்தி மாணவர் மன்றத்தின் மூலமாக ஊழியத்தை முடித்துவிட்டு கடைக்கு சென்றேன். அதன் பிறகு அம்மாவை கடையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அன்றும் சுமார் 8 மணி அளவில் அம்மாவை கூட்டி கொண்டு என் வீட்டிற்கு சென்றேன். அதன் பின்னர் என் தங்கையை அழைக்க கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும்.
அப்படி வரும் வழியில் கடுமையான மழை பிடித்துக்கொண்டது. தங்கை மழையில் நனைந்துவிடுவாளே என்ற அவசரத்தில் என் வேகத்தை அதிகப்படுத்தினேன். கடுமையான மழையால் ஓர் மின்சார கம்பம் கம்பிகளோடு நடுரோட்டில் சாய்ந்திருந்தது. வேகமாக வந்ததால் நான் அதை கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் மீது வேகமாக மோதியதால் பல அடிகளுக்கு மேல் தூக்கி எறியப்பட்டேன். கீழே விழுந்தது நினைவில்லை, அதற்குள் மயக்கமுற்றிருக்கிறேன்.
அப்பொழுது தேவன் எனக்கு ஓர் காரியத்தை வெளிப்படுத்தினார். நான் உயரே இருந்து கீழ விழும் போது ஓர் பெரிய கரம் என்னை தாங்கி பிடித்து தரையில் கிடத்துவதுபோல் உணர்தேன். ஓர் தண்ணீர் நிரப்பப்பட்ட மெத்தையில் கிடத்துவதுபோல் இந்நிகழ்வு இருந்தது. அப்பொழுது என் உடம்பில் இருந்து என் ஆவி பிரிவதை தெளிவாக அறியமுடிந்தது. நாம் எப்படி ஓர் மனிதரிடம் முகமுகமாய் பேசுகிறோமோ அதை போல் என் ஆவி பிரிவதை உணர்ந்தேன். நான் என் உடலை திரும்பி பார்த்து இறந்து போய் விட்டதை உணர்ந்தேன். "இறந்து விட்டோம், இனி உலகத்தில் நமக்கு இடமில்லை" என்று எனக்குள் பேசியவாறு என் உடலை விட்டு கடந்து சென்றேன். சில வினாடிகளில் பிரகாசமான ஒருவர் என்னை ஓர் இடத்திற்கு புன்னகையோடு கூட்டி சென்றார். அந்த இடம் அமைதி நிறைந்ததாயும், பிரகாசமுள்ளதாயும், சமாதானம் நிறைந்ததாயும் இருந்தது. பல பரிசுத்தவான்கள் அங்கு நித்திரை செய்து கொண்டிருந்தனர். சிலை என்னை பார்த்து அன்போடு சிரித்தார்கள். அவர்கள் முகங்களில் ஓர் சமாதானம், சந்தோசம் இருப்பதை பார்த்தேன். அப்பொழுது பிரகாசமான ஒருவர் என்னை அணைத்தவாறு "உங்களுடைய இடம் அங்கே உள்ளது" என்று சுட்டி காண்பித்தார். நான் அந்த இடத்திற்கு சென்றேன். செல்லும் போது "இந்த இடம் இயேசுகிறிஸ்து மரித்து மூன்று நாள் பரதிசியில் இருந்த இடம். இங்கு இருந்து தான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்று தேவ தூதன் என்னிடம் சொன்னதை போல் உணர்ந்தேன்.
மரித்து விட்டோம் என்ற பயம் என்னில் சிறிது கூட இல்லை. சந்தோசமாக என்னுடைய இடத்திற்கு நகர்ந்தேன். அருகில் நெருங்கியவுடன் என் மனதில் ஓர் சிந்தனை "ஊழியத்தை யார் கையிலும் ஒப்படைக்காமல் வந்துவிட்டேனே? யார் இதனை செய்வார்? என் ஊழியத்தை இன்னும் நிறைவேற்றவில்லையே? என்று பதறினேன். சிறிது நேரத்தில் பரிசுத்த தேவன் என்னை மீண்டும் இப்பூமிக்கு அனுப்பி வைத்தார். சிறிது நேரம் கழித்து என் காதினுள் தண்ணீர் போவதை உணர்தேன். நான் உயிரோடு எழும்பினேன். எழும்பி பார்த்த போது நான் ஆவியில் எப்படி என் வாகனத்தை பார்த்தேனோ அதே போல் என் வாகனம் நொறுங்கி கிடந்தது.
குறைந்த வீடுகள் மற்றும் காட்டு பகுதியானதால் யாரும் வரவில்லை. உடனே அங்கிருந்து ஓடி என் அண்ணனையும் தங்கையும் அழைத்து விபரத்தை சொன்னேன். ஊரே திரண்டு விட்டது.
அன்று இரவு தேவனின் பாதத்தில் அமர்ந்து ஜெபித்த போது தேவன் சங்கீதம் 63:3 எனக்கு காண்பித்தார். "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்." இந்த வசனத்தோடு என்னிடம் பேசினார். "உன் ஆயுள் 30 வருடம் தான். நீ என் ஊழியத்தை பற்றி கேட்டதால் உன்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினேன். இப்போது நீ உன் ஜீவனுக்குரிய நாட்களில் அல்ல. என் கிருபையின் நாட்களில் இருக்கிறாய்" என்று தேவன் என்னிடம் பேசினார். அவருடைய சத்தத்தை என் காதுகள் கேட்டன. தேவனுக்கே மகிமை...
அதன் பிறகு நான் சார்ந்திருந்த ஊழியத்தில் பெரிய வளர்ச்சியை பார்க்கமுடிந்தது. அகஸ்டின் அண்ணன், ரூபன் அண்ணன், ஜெயக்குமார் அண்ணன், அனந்த குமார் மற்றும் சாம்சன் அண்ணன் மற்றும் என் ஊழியத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் மூலமாக தேவன் பெரிய காரியங்களை செய்தார். தேவனுக்கே மகிமை.
இங்கு நான் குறிப்புட்டுள்ளது தேவன் எனக்கு வெளிப்படுத்தின ஓர் மகிமையான காரியம். இதன் மூலம் எனக்கு தேவன் நிச்சயித்தது சொன்னது என்னவென்றால்.... பரதீசி (PARADISE) என்றும், பரலோகம் என்றும், நம் பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டது போல் பரிசுத்த தேவன் நீதிபரராய் வீற்றிருப்பதும் உண்மை. தேவன் என் வாழ்க்கையில் பரலோக நிச்சயத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயமாக நான் என் மரணத்திற்கு பின்னால் பரலோகம் தான் செல்வேன் என்கிற ஆணித்தரமான நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
தேவனுக்கு பிரியமானவர்களே, பரலோகம் என்று ஒன்று உண்டு, பரிசுத்த வாழ்க்கை என்பதும், தேவனை உங்களை நேசிக்கிறார் என்பதும் கணக்கிடமுடியாத உண்மை. தேவன் உங்கள் ஆயுசு நாட்களை கூட்டி கொடுத்திருப்பது அவரை அதிகமாக நேசிக்கவும், அவருடைய ஊழியத்தை செய்து பலரை அவருடைய மந்தையில் சேர்க்கவும் தான். இதை உணர்தவர்கலாக தேவனின் நுகத்தை சுமப்போமா?
தேவன் தாமே இந்த சிறு சாட்சியை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அந்த நம்பிக்கையில் தொடர்ந்து குடும்பமாக ஊழியம் செய்து வருகிறோம். தொடர்ந்து எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
யோவான் 11:25 இயேசு........... நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;