Thursday, April 11, 2013

சீகன் பால்கு - தமிழில் முதல் வேதாகமம்


சீகன் பால்கு

1682-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு. இவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார். தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த தரங்கம்பாடிக்கு (தற்போது நாகை மாவட்டத்தில் உள்ளது) வர ஆசைப்பட்ட அவரை டென்மார்க் அரசர் கப்பலில் அனுப்பி வைத்தார்.

சுமார் 3 மாதங்கள் பயணம் செய்து 1706-ம் ஆண்டு ஜுலை 9-ந் தேதி தரங்கம்பாடி மண்ணில் கால் பதித்தார். அப்போது இங்கு ஆட்சி செய்த அரசரும், தளபதியும் சீகன்பால்கு உளவாளி என்று நினைத்து கொடுமைப்படுத்தினர்.

தமிழ் அச்சு

அதை பெரிதாக நினைக்காத சீகன் பால்கு, பொதுமக்கள் உதவியுடன் தமிழ் மொழியை 11 நாளில் கற்றுக் கொண்டார். பின்பு அவர் 17 ஆயிரம் சொற்களை கொண்ட தமிழ் அகராதியை விரைவில் உருவாக்கினார். பிறகு பைபிளின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்தார்.

1710-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து தமிழ் அச்சு இயந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். பொறையாறு அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவி, மரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார். இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறை" என்றே அழைக்கப்படுகிறது.

1715-ம் ஆண்டு தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்கு முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானது, சிறப்பு அம்சமாகும்.

1718-ம் ஆண்டு இங்குள்ள கடற்கரை சாலையில் புதிய ஜெருசலேம் ஆலயத்தை கட்டினார். 1719-ம் ஆண்டு அதே இடத்தில் சீகன் பால்கு மறைந்தார். இன்று அவர் பெயர் விளங்கும் வகையில் கட்டப்பட்ட சுவிசேஷ லுத்தரன் ஆலயம் கம்பீரமான தோற்றத்தில் புதிய பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment