Tuesday, October 15, 2013

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

ஒரு கிறிஸ்தவ சகோதரி கணவரை இழந்தவர்கள், அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் வேலைக்கு செல்லுமுன்பு பிள்ளைகளை அழைத்து, அவர்களோடு ஜெபித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். அவர்கள் வளர்ந்து வருகிற போது, ஒரு மகன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாவ வழிகளில் செல்ல ஆரம்பித்தான்.


.
அதை கண்ட சில குடும்ப நண்பர்கள், அவனுடைய தாயிடம் வந்து, இந்த மாதிரி 'உங்கள் மகன் பாவ காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு அந்த தாய், 'நான் அவனிடம் தன் வழியை விட்டு நல் வழிக்கு வா என்று சொன்னாலும், அவன் வருவானா என்பது சந்தேகம். ஆனால் என் பிள்ளைகளை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்

கொடுத்திருக்கிறபடியால் தேவன் அவர்களை காத்துக் கொள்வார் என்கிற
நம்பிக்கை எனக்கு உண்டு' என்று கூறி, அதற்காக முறுமுறுக்காமல், கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து. ஜெபத்தோடு காத்திருந்தார்கள். அவர்கள் அப்படி முறுமுறுப்பில்லாமல், நம்பிக்கையோடும், கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியோடும் இருப்பதைக் கண்டு அநேகருக்கு ஆச்சரியமாக இருந்தது.
.

.ஒரு நாள் வந்தது, அந்த மகன் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு, அது  அவனுடைய தவறு இல்லை என்றாலும், போலீஸிடம் மாட்டிக் கொண்டான்.  அவனது நண்பர்கள் அவனை விட்டு ஓடிப் போனார்கள். அப்போதுதான்  அவனுக்கு தன் நண்பர்களின் குணநலன்கள் தெரிய ஆரம்பித்தது. தன் தாய் தனக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதை உணர ஆரம்பித்தான். அவனது  வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவன் மேல் தவறு இல்லை என்று  நிரூபிக்கப்பட்டு, அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான்.
.

.அவனது தாயார் கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். 'எனக்கு தெரியும், கர்த்தரிடம் நான் ஒப்புக்கொடுத்ததை அவர் கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார் என்று. ஆகவே உன்னிடம் நான் நம்பிக்கை இழக்கவில்லை, விசுவாசத்தோடு கர்த்தர் உன்னை தொடுவார் என்று காத்திருந்தேன், கர்த்தர் என்னை வெட்கப்படவிடவில்லை' என்று கூறினார்கள்.

Monday, October 14, 2013

இன்னும் இடம் இருக்கிறது

ஒரு மனிதர் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி அநேகரை அழைக்கிறார். விருந்து வேளை வந்தபோது, விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாக்கு போக்குசொல்ல தொடங்குகிறார்கள் ஒருவன் வயலுக்கு போக வேண்டுமென்று சொல்கிறான். மற்றொருவன் மாட்டை சேரிக்க வேண்டுமென்று மறுக்கிறான். இன்னொருவன் இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறேன், நான் வரவில்லை என்கிறான். ஆனால் அந்த எஜமானின் விருப்பம் எப்படியாவது என் வீடு ஜனத்தினால நிறைய வேண்டும் என்பதுதான். ஆகவே சினங்கொண்டு, 'தெருக்கள், வீதிகளில் போய் ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடர்களையும் கொண்டு என் வீட்டை நிரப்பு' என்று ஊழியக்காரனுக்கு கட்டளையிடுகிறார்.
.
இன்றைக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது. பரலோகத்தை தம்முடைய ஜனங்களால் நிரப்ப வேண்டுமென்று. ஆனால் 2000 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் இடம் காலியாகவே உள்ளது. ஆவரிடத்தில் வருவதற்கும், விருந்தில் பங்கேற்பதற்கும், இன்னும் பலர் விநோதமான சாக்குபோக்குகளையே சொல்லி கொண்டு, கர்த்தரிடம் வருவதற்கு நிராகரித்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட நம் ஒவ்வொருவரிடத்திலும் தயவு செய்து காலியிடத்தை நிரப்புங்கள் என்று வருந்தி கேட்கிறார். நூறில் ஒரு ஆடு காணாமற் போனால் கூட அவரால் திருப்தியாக இருக்க முடியாது. அந்த ஒரு ஆட்டை கண்டுபிடிக்கும் வரை பரிதபித்து கொண்டே இருப்பார்.

உம்முடைய சித்தம்

ஒரு விவசாயிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். ஒருவளை ஒரு விவசாயிக்கும், மற்றவளை ஒரு குயவனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் இரண்டு பிள்ளைகளையும் அடிக்கடி போய் பார்த்து வருவது அவரது வழக்கம். அப்படி ஒரு முறை அவர் மூத்தவள் வீட்டிற்கு சென்றபோது, அவள் தன் தகப்பனிடம், 'அப்பா, தேவன் நல்ல மழையை கொடுக்கும்படி அவரிடம் வேண்டி கொள்ளுங்கள். பயிர்கள் மழை இல்லாமையினால் வாடி போய் கொண்டு இருக்கின்றன' என்று கூறினாள்.
.
அவர் மற்ற பெண்ணை பார்க்க போனபோது, அவள், தன் தகப்பனிடம், 'அப்பா நல்ல வெயில் அடிக்கும்படி ஜெபித்து கொள்ளுங்கள். அப்போதுதான் என் கணவர் செய்த மண் பாத்திரங்கள் நன்றாக காய முடியும்' என்று கேட்டு கொண்டாள்.
.
இப்போது தகப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு பேருக்காகவும் ஜெபிக்க வேண்டும்! ஆகவே கடைசியில் அவர் தைரியமாக, 'தேவனே உம்முடைய சித்தம் எதுவோ அதுவே ஆகக்கடவது' என்று ஜெபித்தார்.
.
நம் தேவன் நம்முடைய காலங்களை அறிந்தவரல்லவா? நம் இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்த தேவன், நமக்கு என்ன தேவை என்றும் அறிந்திருக்கிறார். ஒரு சிறு பிள்ளை கத்தி வேண்டும் என்று அடம் பிடித்தால், அதை அந்த பிள்ளைக்கு அதனுடைய பெற்றோர் தருவார்களோ? நிச்சயமாக இல்லை. அதுப்போல நாம் அநேக தேவைகளை குறித்து ஆண்டவரிடம் கேட்கலாம்.

குயவனே குயவனே

ஒரு கணவனும் மனைவியும் ஒரு அழகான கலைபொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றார்கள். அங்கு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு வரும்போது காப்பி குடிக்கும் கிண்ணங்கள்; அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு கிண்ணம் மிகவும் இவர்களை கவர்ந்தது. அதை வாங்கும் நோக்கத்துடன் அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் கிண்ணம் அவர்களோடு பேச ஆரம்பித்தது.
.
“இப்போது நீங்கள் பார்க்கிற நான் ஆரம்பத்தில் இதுப் போல இல்லை. நான் வெறும் சிவப்பான களிமண்ணாகத்தான் இருந்தேன். என்னை உருவாக்கின குயவனார் என்னை உருட்டி திரும்ப திரும்ப அடித்து என்னை மெதுவாக்கினார். நான் அவரிடம் ‘போதும் என்னை விட்டு விடுங்கள், என்று கெஞ்சினேன். அவர் இன்னும் முடியவில்லை என்றார். பிறகு என்னை திரிகையிலே போட்டு சுற்ற ஆரம்பித்தார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நான் என்னை விட்டுவிடும் என்று கதறினேன். ஆனால் அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின் தனக்கு பிடித்தமான ஒரு பாத்திரமாக என்னை உருவாக்கி, என்னை நெருப்பில் இட்டார். எனக்கு தாங்க முடியாத உஷ்ணம், என்னை வெளியே எடுத்துப் போடும் என்று கதறினேன். அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின்னர் என்னை எடுத்து குளிர்ச்சியாக்கும்படி வெளியே வைத்தார். அப்பா! என்ன ஒரு விடுதலை! நான் குளிர்ந்து கொண்டிருக்கும்போதே என்மேல் படங்களை வரைய ஆரம்பித்தார். பின் நான் மூச்சு விடுவதற்குள் திரும்பவும் என்னை நெருப்பில் இட்டு காய வைத்தார். அது முன் இருந்ததுப் போல அல்ல, இரண்டு மடங்கு சூடு அதிகம். நான் அவரிடம் கெஞ்சினேன், கதறினேன், அழுதேன் இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது என்று நான் என் நம்பிக்கையை இழக்கும் நேரத்தில், அவர் என்னை வெளியே கொண்டு வந்து ஆற வைத்தார். இன்னும் என்னச் செய்யப்போகிறாரோ என்று மிகவும் அஞ்சியிருந்த நேரத்தில், என்னிடம் ஒரு கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டி, ‘பார் உன்னைப் பார்’ என்றார். நான் பார்த்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை நானா அது என்று. அத்தனை அழகாய் மாறிவிட்டேன். பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தார்: ‘நான் உன்னை தட்டி உருட்ட ஆரம்பித்தபோது உனக்கு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் நான் உன்னை அப்படியே விட்டிருந்தால் நீ காய்ந்துப் போயிருப்பாய். உன்னை திருகியில் வைத்து சுற்றும்போது உனக்கு தலை சுற்றியிருக்கும் ஆனால் நான் அதை செய்யாதிருந்தால் நீ உதிர்ந்திருப்பாய். உன்னை நெருப்பில்இட்டு காய வைக்காதிருந்திருநதால் நீ காய்ந்து கடினமாகாதிருந்திருப்பாய். இத்தனைக்கும் பிறகு நீ இப்போது நான் விரும்பும் பாத்திரமாக வனைந்து உருவாக்கப்படடிருக்கிறாய்’ என்றுக் கூறினார் என்றது”.
.
நம்மில் அநேகர் இந்த உலகத்தின் பாடுகளை அனுபவித்து போதும் ஆண்டவரே என்று கதறிக் கொண்டிருக்கிறோமா? உங்களை இந்த உபத்திரவத்தின் குகையில் தெரிந்துக் கொள்ளவும், உங்களை தனக்கு பிரயோஜனமான பாத்திரமாக உருவாக்கவுமே கர்த்தர் இதை அனுமதித்திருக்கிறார்.

இரகசிய உயில்

ஒரு பணக்கார தகப்பனும் மகனும் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வியட்நாம் போர் நடைபெறவே, மகன் அந்த போருக்கு போக வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் போரில் மிகவும் நன்றாக போரிட்டு, மற்றும் அநேக போர் வீரர்களை காப்பாற்றினான். அப்படி ஒரு வீரனை காப்பாற்றும்போது, அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. தகப்பனுக்கு அந்த செய்தி போய் தனது ஒரே மகன் இறந்த துக்கத்திலே இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டு கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது ஒரு வாலிபன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் சொன்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய போர் வீரரில் நானும் ஒருவன். உங்கள் மகன் உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவான். நீங்கள் ஓவியங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று. நான் ஒரு பெரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகனை நான் வரைந்துள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டிக் கொணடான். தகப்பன் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘இல்லை இல்லை உங்கள் மகனால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறி படத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் அந்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து, வருகிற ஒவ்வொருவருக்கும் காட்டினார்.
.
சில மாதங்கள் கழித்து அவரும் மரித்தார். அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு வந்தன. புகழ்பெற்ற ஓவியங்களாக இருந்தபடியால் அவற்றை வாங்க அநேகர் வந்திருந்தனர். ஏலத்தை நடத்துபவர், முதலாவது அவருடைய மகனின் அந்தப் படத்தைக் காட்டி ‘யார் இதை வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்தை ஆரம்பித்தார். அங்கு அமைதி நிலவியது. திரும்பவும் அவர் 'யார் வாங்குகிறீர்கள்? 200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?' என்று கேட்டார். பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருடைய மகனின் படத்தை வாங்க வரவில்லை. மற்ற ஓவியங்களை ஏலமிட ஆரம்பியுங்கள் என்று கேட்டது. ஏலமிடுபவரோ, ‘அவருடைய மகன்; அவருடைய மகன் யார் வாங்க முன்வரகிறீர்க்ள்’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்த வீட்டில் தோட்டக்காரனாயிருந்தவர், 10 டாலர் எனக் குரல் கொடுத்தார். உடனே ஏலமிடுபவர் யாராவது 20 டாலர் என்றுக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ‘10 டாலர் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்தை அந்தத் தோட்டக்காரனுக்குக் கொடுத்தார். மற்றவர்கள் பொறுமையை இழந்து, ‘மற்ற ஓவியங்களை ஆரம்பியுங்கள்’ என்றுக் கத்தினார்கள். ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம் முடிந்தது’ என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு ‘எனக்கு முன்னமே இரகசிய உயிலைப் பற்றி சொல்லப்பட்டது. யார் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு அவருடைய எஸ்டேட்டும் எல்லா ஓவியங்களும் சொந்தம் என்று அவர் உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆகையால் யார் மகனுடைய ஓவியத்தை வாங்கினார்களோ அவர்களுக்கே எல்லாம் சொந்தம்’ என்று கூறி ஏலத்தை முடித்தார்.
.
2000 வருடங்களுக்கு முன்பு தமது சொந்தக் குமாரன் என்றும் பாராமல், அவரை ஒப்புக் கொடுத்த தேவன் ‘இதோ என் மகன், அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் - யோவான் 1:12. மட்டுமல்ல, அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளி இருக்கிறார். ஆனால், எத்தனைப் பேர் அவரை புறக்கணித்து, கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கே சொந்தம் என்று அவரை அடையாமற் இருக்கிறார்க்ள. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எத்தனை பாக்கியம்! மற்றவர்களும் இந்த பாக்கியத்தை அடையும்படிக்கு நாம் திறப்பின் வாசலில் நிற்போமா? அவர்களுக்கு சத்தியத்தை சொல்வோமா?

யாரை பற்றிக் கொண்டிருக்கிறாய்?

ஒரு வாலிபன் தன் தேசத்தில் இருந்த உயரமான மலையின் மேல் ஏற ஆர்வம் கொண்டான். அதற்காக பல மாதங்கள் பயிற்சி செய்து, தனக்கு மட்டுமே புகழ் வர வேண்டும் என்பதற்காக தனியாக மேலே ஏறுவதற்கு புறப்பட்டான். மலையின் மேலே ஏற ஆரம்பித்தான். உற்சாகமாக ஆரம்பித்ததால் நேரம்போவது தெரியாமல் மேலே ஏறிக் கொண்டே இருந்தான். அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. அவன் எங்கும் போய் தங்குவதற்கு ஆயத்தம் செய்யாததால், எப்படியும் மேலே போய் விடுவோம் என்று எண்ணத்தோடு இன்னும் அதிகமான வேகத்துடன் மேலே போக ஆரம்பித்தான். அதற்குள் நன்கு இருட்டி விட்டது. கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
.
சிகரத்தை எட்டுவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது, கால் இடறி கீழே விழ ஆரம்பித்தான். எங்கும் காரிருள். எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத நிலை. புவி ஈர்ப்பின் காரணமாக மிக வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தான். கீழே போகும்போது தான் எப்படியும் மரிக்க போகிறோம் என்று தெரிந்து விட்டது. அப்படி அவன் நினைத்துக் கொணடிருக்கும்போது ஒரு இழுப்பு. மலையின் உச்சியிலிருந்து அவன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு முடிந்து அவனை அந்தரத்தில் தொங்க வைத்தது. இப்போது அவனுக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த ஒரே வழி கர்த்தர் மாத்திமே. வேறு வழி இல்லாமல், தன்னால் இயன்ற வரை சத்தமாக 'கர்த்தாவே எனக்கு உதவி செய்யும்' என்று கதறினான். உடனே வானத்திலிருந்து ஒரு சத்தம், 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டது. 'என்னைக் காப்பாற்றும்' என்றான். 'நான் உன்னை காப்பாற்றுவேன் என்று நீ நினைக்கிறாயா?' என்று ஆண்டவர் கேட்டார். 'ஆம் ஆண்டவரே நான் நம்புகிறேன்' என்று சொன்னான். அப்போது கர்த்தர், 'அப்படியானால் உன் இடுப்பிலிருக்கும் கயிற்றை அறுத்து விடு' என்றார். அந்த நேரத்தில் அமைதி நிலவியது. அவன் அந்த கயிற்றை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவனை பார்த்து காப்பாற்ற வந்தவர்கள் அவன் கயிற்றை கெட்டியாக பிடித்தபடியே குளிரில் உறைந்துப் போய் மரித்திருக்கக் கண்டார்கள். அவன் தரையிலிருந்து இரண்டு அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கண்டார்கள்.
.
இன்று நம்மில் எத்தனைப் பேர் அவன் கயிற்றை பிடித்துக் கொணடிருந்ததைப் போல இந்த மாய உலகத்தைப பிடித்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தர் 'இந்த உலகத்தை விட்டுவிட்டு என்னை சார்ந்துக் கொள்' என்று அழைக்கிறார். ஆனால் நாம் அதை விடாதபடி கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் 1 யோவான் 2:17.

Friday, October 4, 2013

ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்

ஒரு தம்பதியினர் ஒரு ஞாயிற்று கிழமை காலையில் சோம்பலாக படுத்திருந்தனர். அதில் மனைவி எழுந்து ஆலயத்திற்கு செல்ல புறப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் கணவரோ எழுந்து புறப்படுகிற வழியாக இல்லை. அப்போது மனைவி, 'என்னங்க. ஆலயத்திற்கு புறப்படவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு கணவர், 'நான் இன்று ஆலயத்திற்கு வரப்போவதில்லை, ஆகையால் புறப்படவில்லை' என்று கூறினார். அதற்கு மனைவி, ஏன் என்று கேட்டதற்கு, 'நான் ஆலயத்திற்கு வராததற்கு மூன்று காரணங்கள் உண்டு, முதலாவது, ஆலயம் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருக்கிறது. இரண்டாவது, அங்கு என்னை விரும்புகிறவர்கள் யாரும் இல்லை, மூன்றாவது, எனக்கு போக வேண்டும் போல இல்லை' என்று கூறினார். அதற்கு மனைவி, 'எனக்கும் அதேபோல் மூன்று காரணங்கள் உண்டு, முதலாவது, சபை அனலாக இருக்கிறது, இரண்டாவது, குறைந்தபட்சம் 10 பேராவது உங்களை நேசிக்கிறவர்கள் அங்கு இருக்கிறார்கள். மூன்றாவது, நீங்கள் தான் அங்கு போதகர், ஆகவே எழுந்து புறப்படுங்கள்' என்று கூறினார்கள். இது வேடிக்கையாக இருந்தாலும், சிந்திக்க வேண்டிய காரியம் ஆகும்.

பாவத்திற்கு விலகியோடுங்கள்

ஒரு வேதியியல் வகுப்பில் பிராக்டிகல் பீரியடில் ஒரு மாணவி ஒரு வாளி நிறைய தண்ணீரில் ஒரு பெரிய அளவு பொட்டாசியத்தை போடுவதற்கு தயாராக இருந்தாள். அதை கண்ட ஆசிரியர் 'நீ என்ன செய்ய போகிறாய்' என்று கேட்டார். 'நான் இந்த பொட்டாசியத்தை இதில் போட போகிறேன்' என்று அந்த மாணவி கூறினாள். அப்போது அந்த ஆசிரியர், 'நீ அதை போடுமுன் அந்த தண்ணீரை ஒரு ஐந்து நிமிடம் கலக்கி கொண்டிரு' என்று கூறினார், அந்த மாணவி புரியாமல், 'எதற்கு ஐயா' என்று கேட்ட போது, அவர் சொன்னார், 'அதற்குள் நான் இங்கிருந்து ஓடி விடுவேன்' என்று. ஏனென்றால் அவருக்கு தெரியும், அவள் அதை போட்டால், அந்த இடம் முழுவதும் அது கறை படுத்தி விடும் என்று.
.
வேதத்தில் வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். (1 கொரிந்தியர் 6:18) விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் (1 கொரிந்தியர் 10:14) என்று நம்மை எச்சரிக்கிறது. நாம் சோதனைக்குள்ளாக வரும்போது அந்த இடத்தை விட்டு ஓடி விடுவதுதான் சிறந்ததாகும். சில வேளைகளில் அந்த மாதிரி பாவம் செய்ய நேரிடும் சமயங்களில் நாம் நினைக்கிறோம், நான் இதை பார்த்து கொள்வேன், இதை சமாளிக்க என்னால் முடியும் என்று தப்பு கணக்கு போட்டு விடுகிறோம். ஒருவேளை சில வேளைகளில் நாம் எதிர் கொண்டு வெற்றி எடுக்க முடியும், அநேக வேளைகளில் விழுந்து போய் விடுவோம்.

பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது

ஒரு முறை சுவிசேஷகர் பில்லிகிரஹாம் அவர்கள் செய்தியளிக்கும்படி லண்டனில் ஒரு நற்செயதி கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார்கள். பில்லிகிரஹாம் இங்கே கூட்டம் நடத்த வரக்கூடாது என்று பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. 'காஸ்பல் சர்க்கஸ் நடத்த பில்லிகிராஹம் வருகிறார்' என்றெல்லாம் மீடியாக்கள், பத்திரிக்கையெல்லாம் அவரைக் கிண்டல் பண்ணி சரமாரியாக எழுதினர். திருச்சபைகள் கூட அவரை எதிர்த்தன.
.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரும், அவருடைய மனைவியும் கப்பலில் வந்து லண்டன் துறைமுகத்தில் இறங்கியவுடன் பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு, 'எங்கள் லண்டனை மாற்ற வந்திருக்கிறீர்களே, உங்கள் அமெரிக்காவை மாற்றி விட்டீர்களா?' என்றெல்லாம் ஆளாளுக்கு பல விதமான கேள்விகளைக் கேட்டு பரியாசம் பண்ணினார்கள். சுவிசேஷத்தை அறிவிக்க வந்த ஒரு கிறிஸ்தவ நாடு இப்படியாக இருக்கிறதே என்றெண்ணி, பில்லிகிரஹாம் மனமுடைந்து போனார். துறைமுகத்திலிருந்து, தாங்கள் செல்ல வேண்டியப் பட்டணத்திற்கு ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, 'இயேசுவே காரியங்கள் இப்படியிருக்கிறதே, எப்படி நான் இங்கு போய் ஊழியம் செய்ய போகிறேன்?' என்று இருதயம் நொறுங்குண்டு தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்த்தார்.
.
'அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்' என்ற வேத வசனத்தின் மூலம் தேவன் அவரோடு பேசினார். உடனே அவர், 'ஆண்டவரே, என்ன நிந்தை, நெருக்கம், அவமானம், போராட்டம் வந்தாலும் அவைகளை சகித்துக் கொள்ளக் கூடிய கிருபையை எனக்கு தாரும்' என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார். உடனே பாரமெல்லாம் மாறி அவரது உள்ளம் இலகுவாகி விட்டது. இரயிலிலிருந்து அவர்கள் இறங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். 'உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா?' என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதை கண்ட பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
.
பிரியமானவர்களே, நீங்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினிமித்தமோ, அவரை மற்றவர்களுக்கு அறிவித்ததினிமித்தமோ உங்கள் குடும்பத்தாராலும், மற்றவர்களாலும் நிந்தனையும், அவமானத்தையும் அடைந்து வருகிறீர்களோ? கலங்காதீர்கள்! கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் சகலத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகித்துக் கொள்ளும். அப்பொழுது தேவ அன்பு நம் இருதயத்திற்கு மருந்தாய் அமையும். யார் உங்கள் மேல் எரிச்சலானார்களோ, அவர்களே உங்கள் பக்கம் வரும்படி தேவன் அவர்களை மாற்றுவார். அப்படி அவர்கள் வராவிட்டாலும், தேவ அன்பு உங்களை மூடிக் கொள்ளும். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரிப்பீர்கள். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆத்துமாக்கள் உங்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மனம் சோர்ந்து போகாதிருங்கள்.

சத்துருக்களைச் சிநேகியுங்கள்

கோரி டென் பூம் (Corrie ten Boom) என்பவர் தனது தந்தை சகோதரி பெட்ஸியுடன் (Betsie) ஹாலந்தில் வசித்து வந்தார். அந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. ஹிட்லர் ஐரோப்பிய யூதர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். ஆயிரமாயிரமான யூதர்களை நச்சுவாயு கூண்டுக்குள் அடைத்து கொலை செய்தான். பூம் அவர்களின் குடும்பம் அப்படித் தவித்த யூதர்களை தங்கள் வீட்டிற்குள் அடைக்கலம் கொடுத்து, ஆதரித்தனர்.
.
இதைக் கேள்வியுற்ற ஹிட்லரின் ராணுவம் மூவரையும் கைது செய்து, 'கான்சன்ட்ரஷன் கேம்ப்' (Concentration Camp) என்னும் கேம்பில் வைத்து வாதை செய்தனர். அவர்களது தந்தை சிறிது காலத்தில் மரித்தார். அதற்கு பின்பு இளவயதான கோரியும் அவரது சகோரியான பெட்ஸியும் அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. காவலர்கள் முன்பு நிர்வாணமாய நடக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர். அடிகளும் உதைகளும், உணவு தராமல் சித்தரவதை செய்யப்பட்டனர். இவற்றை தாங்கமுடியாமல் பெட்ஸி மரித்தார்கள். கோரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தபடியினால், எல்லாவற்றையும் பொறுமையாக சகித்து, நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்கள்.
.
உலகப் போர் முடிந்து, கோரி விடுதலையாக்கப்பட்டார். அதன்பின் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் சென்று கிறிஸ்துவின் அன்பையும், தான் நாசிக் கேம்பில் பட்ட பாடுகளை விவரித்து, கிறிஸ்துவின் அன்பினால் தான் நிலைநிற்பதாகவும் கூறினார். மியூனிச் (Munich) என்னுமிடத்தில் நடந்தக் கூட்டத்தில், அவர் இயேசுகிறிஸ்துவின் அனபையும் அவரது மனனிப்பையும், நமது பாவங்களை கடலின் ஆழத்தில் எறிந்து பின் அதை அவர் நிளைப்பதில்லை என்றும், தான் பட்ட கஷ்டங்களையும் மனதுருக கூறிமுடித்து, நாமும் மன்னிக்கிறவாகளாக இருக்க வேண்டும் என்றும், அதுவே சந்தோஷமான வாழ்விற்கு வழி என்றும் கூறி முடித்தார். அதைக் கேட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர். அநேகர் அவரை சூழ்ந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அவர் ஒரு மனிதனின் முகத்தைப் பார்த்தார். அந்த முகம் அவருக்குத் தெரிந்த முகமாயிருந்தது. உடனே ஞாபகம் வந்தது. நாசிக் கேம்பில் தானும் தன் சகோதரியும்பட்ட பாடுகளும், தன் சகோதரியை எவ்வித இரக்கமுமின்றி கொடூரமாகக் கொன்ற கொலைப்பாதகன் இவன்தான் என்ற நினைவுகளும் எழுந்தன. இப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அம்மனிதன், "நீங்கள் இன்றுக் கொடுத்த மன்னிப்பின் செய்திக்காக நன்றி. நீங்கள் நாசிக் கேம்பைப் பற்றிச் சொன்னீர்கள். நான் அதில் ஒரு தலைவனாக் இருந்தேன். இப்போதோ நான் ஒரு கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்து என் பாவங்களை மன்னித்து விட்டார். நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?" என்றுக் கேட்டான்.
.
கோரி அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள். ஆயிரமாயிரமான நினைவுகள் அவர்களது உள்ளத்தில் பளிச்சிட்டது. தன் தகப்பன் மற்றும் தன் சகோதரியின் மரணத்திற்கு காரணமான மனிதன், தான் பட்ட எண்ணற்ற இன்னல்களுக்கு காரணமான மனிதன் தன் முன்னே நிற்கிறான், என்கிற வெறுப்பும் அருவெறுப்பும் அவர் மனதில் தோன்றியது.
.
சற்று நேரத்திற்கு முன்புதான் மன்னிப்பைக் குறித்துக் பேசினார்கள். இப்போது மன்னிக்க முடியாத நிலை. அமைதியாக தேவனிடம் தனக்கு வேண்டிய சத்துவத்தையும் அந்த மனிதனை மன்னிக்கும் மன வலிமையையும் தாரும் என்று ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஜெபிக்கும்போதே ஆவியானவர் அவர்களில் கிரியை செய்ய அரம்பித்தார். அந்த நாசிக் காவலனின் கரங்களைப்பிடித்து, "சகோதரனே உங்களை என் முழு இதயத்தோடும் மன்னிக்கிறேன்" என்று கண்கலங்க கூறினார்க்ள. இந்தச் சம்பவத்தைப் படித்த போது என்கண்கள் கலங்கியது. எப்பேற்ப்பட்ட மனிதனையும் மன்னிக்க தேவன் கிருபை மிகுந்தவராயிருக்கிறார். ஆனால் மனிதர்களாகிய நாம் மன்னிக்க மிகுந்த தயக்கம் காட்டுகிறோம். கோரியைப் போன்று தன்னை இந்த அளவு பாதித்த மனிதனை மன்னிக்க முடியுமென்றால், நாம் மன்னிக்க எந்த மனிதனுடைய தப்பிதங்களும் தடையாக இருக்க முடியாது.
.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். - (மத்தேயு 6:15). நாம் மற்றவர்களின் குற்றங்களை மன்னித்தாலே நமது பாவம் மன்னிக்கப்படும். மற்றவர்களின் குற்றங்களை மன்னிப்போம். இயேசுவின் அன்பு நம்மூலம் வெளிப்படட்டும்.

கர்த்தரின் சிட்சை

ஒரு பெரிய கட்டிடத்தை கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. கட்டிட மேஸ்திரி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து சித்தாளை கூப்பிட நினைத்து சத்தமாக கத்தினார். சித்தாளின் காதுகளில சத்தம் விழவில்லை. மறுபடியும் கூப்பிட்டார். பலனில்லை. போதாத குறைக்கு இயந்திரங்களின் சத்தங்கள் அவரின் காதை அடைத்தது. மேஸ்திரி வேறு வழியின்றி ஒரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் போட்டார். திடுக்கிட்டு, திரும்பி பார்த்த சித்தாள், 'என்ன வேண்டும் ஐயா?' என்று கேட்டான். மேஸ்திரி, 'மேலிருந்து பெரிய கிரானைட் கல்லை இறக்குகிறோம். அதனால் உன்னை கொஞ்சம் விலகி நிற்க சொன்னேன்' என்றார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான தீவிரவாதம்.. ஜெபிப்போம்..

கென்யாவில் உள்ள நெய்ரோபியில் ஷாப்பிங் மாலில் அங்கு இருந்த சாதாரண மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, 68 பேருக்கும் மேலாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். அநேகர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
.
ஈராக்கில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள். சிரியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள். ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
.
ஞாயிற்றுக் கிழமை ஆலயத்திற்கு சென்று, ஆராதனை முடிந்து வெளியே வந்து நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலைப்படையை சேர்ந்த இருவர் தாக்கியதில் பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் 70பேருக்கும் மேலாக கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். 130 பேருக்கு மேலாக காயம் அடைந்திருக்கிறார்கள். ஆலயத்தின் முன்புறம் ஏராளமாய் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது.
.
தீவிரவாத சக்திகளுக்கு, மனித உயிரின் அருமையை அறியாதபடி அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறபடியால், அருமையான உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு முன்பே இயேசுகிறிஸ்து இவர்களைப் பற்றி 'மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்' என்று சொல்லி விட்டார். கொலை செய்கிறவர்கள் கிறிஸ்துவையும், பிதாவையும் அறியாபடியினால் இப்படி செய்வார்கள் என்று காரணத்தையும் அவரே சொல்லி விட்டார்.
.
காலாகாலமாய் நாம் இதுப் போன்ற தீயசக்திகள் சாதாரண மக்களை கொல்வதுப் போன்ற செய்திகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது இதுப் போன்ற செய்திகள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கின்றன. இயேசுக்கிறிஸ்து கடைசிக் கால நிகழ்ச்சிகளைக் குறித்து தீர்க்கதரிசனமாக கூறும்போது, 'ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; .. உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்' (மத்தேயு 24:7,9) என்றுக் கூறினார். அதன்படி இந்த நாட்களில் நடந்து வருகிறது.
.
இதற்கு விசுவாசிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது நாம் ஜெபிக்க வேண்டும். தீவிரவாதிகளின், மதவாதிகளின் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். 'தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்' (2கொரிந்தியர் 4:4). இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் குருடாக்கியருக்கிற இவர்களின் மனக்கண்களை கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கும்படியாக இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பார்வையற்ற மனிதனால் இயற்கை காட்சிகளையோ, நிறங்களையோ, அழகையோ இரசிக்க முடியாது. எல்லாமே இருளாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனம் குருடாகியிருக்கிற இந்த மனிதர்களுக்கு மனிதனின் ஆத்துமாவின் அருமையோ, உயிரின் விலையே தெரியாது. ஆனால் அவர்களின் மனக் கண்கள் திறக்கப்படும்போது, அவர்கள் அதன் அருமையை அறிந்துக் கொள்வார்கள். ஆகவே அவர்களின் மனக்கண்கள் கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியைக் காண வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
இரண்டாவது, சுவிசேஷம் அவர்களை சென்றடையும்படியாக வாசல்கள் திறக்கப்படும்படியாகவும், அவர்களை நற்செய்தி சென்றடையும்படியாகவும் ஜெபிக்க வேண்டும். 'அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?' (ரோமர் 10:14). ஆகவே அவர்கள் சுவிசேஷத்தை கேள்விப்படும்படியாக வாசல்கள் திறக்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் சத்தியத்தை கேள்விப்பட்டு, அவரை விசுவாசிக்கத்தக்கதாக ஜெபிக்க வேண்டும்.
.
மூன்றாவதாக, நாம் நம் சாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். நாம் பாவத்தின் மேல் பாவம் செய்துக் கொண்டு, கிறிஸ்துவை பிரசங்கித்தால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துக் கொண்டோ, மற்றவர்கள் கேட்கும் சாதாரண உதவிக்கூட செய்யாமல், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சொன்னால் அவர்கள் விசுவாசிப்பார்களா? நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மாதிரியாக வாழ்ந்தால் நம்மைக் காண்பவர்கள் நம்மில் வாழும் கிறிஸ்துவைக் காண்பார்களல்லவா? இருளில் வாழும் அவர்களுக்கு வெளிச்சமாக நம் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். 'இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16).

ஜெயமுள்ள வாழ்க்கை

ஒரு முறை பிரசங்கியார் D.L.Moody அவர்கள் தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் காட்டி, அதனில் உள்ள காற்றை எப்படி எடுப்பது என்றுக் கேட்டார். ஓவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறினார்கள். “ஒருவர் சொன்னார், ஒரு குழாயை வைத்து அதை உறிஞ்சி எடுத்துவிடுங்கள் ” என்றுக் கூறினார். அப்படி எடுத்தால் அங்கு வெற்றிடம் (Vaccum) உருவாகும். அதினால் கண்ணாடி உடைந்து விடும் என்று மூடி கூறினார். இன்னும் அநேகர் வெவ்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது அவர் ஒரு பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து அந்த டம்ளரில் நிறைய ஊற்றி, “இப்போது இதில் கொஞ்சம்கூட காற்று இல்லை. தண்ணீரை ஊற்றியவுடன் காற்று எடுக்கப்பட்டு விட்டது” என்றார்.
.
அவர் இந்த சிறிய உதாரணத்தின் மூலம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்றுக் காட்டினார். பாவத்தை அங்கும் இங்கும் உறிஞ்சி எடுப்பதால் அது போய் விடாது என்றும், நாம் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயம் நிரப்பப்பட வேண்டும் என்றும் விளக்கினார். பின்னும் அவர், ‘நம்முடைய இருதயத்திலிருந்து பெருமையும் சுயநலமும் மற்றும் பாவமான காரியங்களும்; விலகும்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு இருதயத்தையும் நிரப்புவார்’, ஆனால் நம் இருதயம் அப்பாவங்களினால் நிறைந்திருந்தால் பரிசுத்த ஆவியானவருக்கு அங்கு இடமில்லை என்றுக் கூறினார். நம்முடைய இருதயம் உலக காரியங்களுக்கு வெறுமையாக்கப்படாலொழிய ஆவியானவர் அதை நிரப்ப முடியாது என்றும் கூறினார்.
.
அதுப் போல நாம் நம்மையே வெறுமையாக்கி ஆவியானவரை நம் இருதயத்திற்குள் அழைப்போம். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். அவர் வந்து நம் இருதயத்திற்குள் வாழும் போது எந்த பாவமும் நம்மை நெருங்காது. கர்த்தர் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். மட்டுமல்ல சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார்; - யோவான் - 14: 8:13.

பாவம் தொடர்ந்து பிடிக்கும்

ஒரு முறை விஞ்ஞானிகள் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர். அது என்னவென்றால், ஒரு பாத்திரத்தில் நன்றாக சூடாக்கப்பட்ட தண்ணீரில் ஒரு தவளையை போட்டனர். அது மறு வினாடியே துள்ளி குதித்து வெளியே வந்தது. பின் மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரை எடுத்து அதில் ஒரு தவளையை விட்டனர். முதலில் அது மிகவும் மகிழ்ச்சியாக சுற்றி வந்தது. பின் அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி கொண்டே வந்தனர். தவளையும் எவ்வித வித்தியாச உணர்வுமின்றி வெதுவெதுப்பான நீரில் சுகமாய் நீந்தி கொண்டு வந்தது. தண்ணீரும் சற்று நேரத்தில் நன்றாக சூடானது. நீந்தி கொண்டிருந்த தவளை சிறிது சிறிதாக தன் பெலனை இழந்து வெளிவர நினைத்தும் முடியாமல் செத்து பரிதாபமாக மிதந்தது.

உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்'. - (எண்ணாகமம் 32:23).

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

ஒரு கிறிஸ்தவ சகோதரி கணவரை இழந்தவர்கள், அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் வேலைக்கு செல்லுமுன்பு பிள்ளைகளை அழைத்து, அவர்களோடு ஜெபித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். அவர்கள் வளர்ந்து வருகிற போது, ஒரு மகன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாவ வழிகளில் செல்ல ஆரம்பித்தான்.

அதை கண்ட சில குடும்ப நண்பர்கள், அவனுடைய தாயிடம் வந்து, இந்த
மாதிரி 'உங்கள் மகன் பாவ காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்'
என்று கூறினார்கள். அதற்கு அந்த தாய், 'நான் அவனிடம் தன் வழியை
விட்டு நல் வழிக்கு வா என்று சொன்னாலும், அவன் வருவானா என்பது
சந்தேகம். ஆனால் என் பிள்ளைகளை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்
கொடுத்திருக்கிறபடியால் தேவன் அவர்களை காத்துக் கொள்வார் என்கிற
நம்பிக்கை எனக்கு உண்டு' என்று கூறி, அதற்காக முறுமுறுக்காமல்,
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து. ஜெபத்தோடு காத்திருந்தார்கள். அவர்கள்
அப்படி முறுமுறுப்பில்லாமல், நம்பிக்கையோடும், கர்த்தரிடத்தில்
மனமகிழ்ச்சியோடும் இருப்பதைக் கண்டு அநேகருக்கு ஆச்சரியமாக
இருந்தது.
.

.
ஒரு நாள் வந்தது, அந்த மகன் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு, அது

அவனுடைய தவறு இல்லை என்றாலும், போலீஸிடம் மாட்டிக்
கொண்டான். அவனது நண்பர்கள் அவனை விட்டு ஓடிப் போனார்கள்.
அப்போதுதான் அவனுக்கு தன் நண்பர்களின் குணநலன்கள் தெரிய
ஆரம்பித்தது. தன் தாய் தனக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதை உணர
ஆரம்பித்தான். அவனது வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவன் மேல் தவறு
இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான்.
.

.
அவனது தாயார் கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். 'எனக்கு தெரியும்,

கர்த்தரிடம் நான் ஒப்புக்கொடுத்ததை அவர் கடைசி வரைக்கும் காத்துக்
கொள்வார் என்று. ஆகவே உன்னிடம் நான் நம்பிக்கை இழக்கவில்லை,
விசுவாசத்தோடு கர்த்தர் உன்னை தொடுவார் என்று காத்திருந்தேன்,
கர்த்தர் என்னை வெட்கப்படவிடவில்லை' என்று கூறினார்கள்.
ர்த்தருடைய வசனம் சொல்கிறது, 'கர்த்தரிடத்தில் மன
மகிழ்ச்சியாயிரு;
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்