Monday, September 8, 2014

நிச்சயமான ஓட்டம் - சுவிசேஷகர் பில்லிகிரகாம்

புகழ்பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரகாம் அவர்களுக்கு தற்போது 96 வயதாகிறது (நவம்பர் மாதம் 1918ம் வருடம் பிறந்தார்). அவருக்கு பார்க்கின்ஸன் என்னும் வியாதி உள்ளது.
.
2000ம் வருடம் ஜனவரி மாதத்தில் வட கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பில்லி கிரகாமை கௌரவிக்கும் பொருட்டு, ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
.
ஆரம்பத்தில் அந்த கூட்டத்திற்கு போக அவர் மனமில்லாதிருந்தார். ஆனால் அந்த கூடடத்தை ஒழுங்கு செய்திருந்தவர்கள், 'நீங்கள் பெரிய பேச்சொன்றும் பேச வேண்டாம். நீங்கள் வந்தாலே போதும், அது எங்களுடைய பாக்கியம், நாங்கள் உங்களை கௌரவிக்கவே விரும்புகிறோம்' என்று கூறினர். பின் அவர் சம்மதித்தார்.
.
அவரை குறித்த புகழாரங்களை சூட்டி முடித்தபிறகு, பில்லி கிரகாம் பேச எழுந்தார். எழுந்து அங்கு கூடியிருந்தவர்களிடம், 'இன்று எனக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களை குறித்த ஞாபகம் வருகிறது. அவர் ஒரு நாள் நியுயார்க் நகருக்கு செல்லும் இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வரிசையாக மக்களிடம் பரிசோதனை செய்து கொண்டு வந்தார். அவர் ஐன்ஸ்டனிடம் அவர் பயண டிக்கெட்டை காட்டும்படிக் கேட்டார். அவரும் தனது கோட் பாக்கெட்டில் கையை விட்டு துளாவினார். டிக்கெட்டை காணவில்லை. அவரது இக்கட்டான நிலையை கண்ட பரிசோதகர், 'ஐயா உங்களை இந்த நாடே அறியும், நானும் உங்களை அறிவேன். நீங்கள் டிக்கெட் எடுக்காமல் இருக்க மாட்டீர்கள். சிரமப்பட்டு கொள்ள வேண்டாம்' என்று ஆறுதலோடு பேசினார். எனினும் ஐன்ஸ்டினுக்கு சமாதானமில்லை. 'என்னை யார் என்று உங்களுக்கு தெரியும், நான் யார் என்று எனக்கு தெரியும், ஆனால், இப்போது என்னுடைய பிரச்சனை என்னவென்றால், நான் நியுயார்க் பெருநகரில் எந்த ஸ்டெஷனில் இறங்க வேண்டும் என்பது எனக்கு தெரியாதே' என்று அங்கலாய்த்தார்.
.
இதை பில்லிகிரகாம் சொல்லிவிட்டு, 'இப்போது நீங்கள் பார்க்கிறீர்களே, நான் அணிந்திருக்கும் இந்த சூட், இது புத்தம் புதிய சூட்டாகும், என்னுடைய பிள்ளைகளும், எனது பேர பிள்ளைகளும், நான் இந்த வயதான காலத்தில் கொஞ்சம் மெதுவாக எல்லாவற்றிலும் இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நான் எப்போதும் வேகமாக காரியங்களை செய்து பழகினவன். அதனால் இந்த விசேஷித்த கூட்டத்திற்கு நான் போய் இந்த சூட்டை வாங்கி அணிந்து வந்தேன். இதற்கு மட்டுமல்ல, வேறு ஒரு முக்கிய நாளிலும் இதே சூட்டை அணிவேன். அந்த நாள் என்னவென்றால், நான் மரித்து அடக்கம்பண்ணப்படும்போது இதே சூட்டை அணிவேன். நான் மரித்தேன் என்று நீங்கள் கேள்விப்படும்போது, நான் அணிய இருக்கும் இந்த உடையை எண்ணாமல், நான் இப்பொது சொல்ல இருக்கும் வார்த்தைகளை நினைவு கூருங்கள். அது என்னவென்றால், நான் யார் என்பதும் எனக்கு தெரியும், மட்டுமல்ல, நான் மரித்தபின் எங்கே போவேன் என்பதும் எனக்கு நிச்சயமாக தெரியும்' என்று கூறினார்.
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டினுக்கு இந்த உலகத்தில் தான் எங்கே போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் பில்லிகிரகாம் அவர்களுக்கு தான் மரித்த பிறகு தான் போகும் இடத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். நாம் எங்கே எதை நோக்கி போய் கொண்டிருக்கிறோம் என்று நம்மால் கூற முடியுமா? ஆனால் நாம் எங்கு போய் கொண்டிருக்கிறொம் என்ற இலக்கு தெரியாவிட்டால் நமது நிலைமை எத்தனை பரிதாபம்!
.
'நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்' என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னார். அவருக்கும் தான் என்ன செய்கிறோம், எதை நோக்கி ஓடுகிறோம் என்று நிச்சயம் இருந்தது. ஒரு ஓட்டபந்தயம் என்று இருந்தால் அதற்கான இலக்கு குறிக்கப்படும். அந்த இலக்கை நோக்கி சரியான தடத்தில் ஓடி, முதலில் வந்தாலே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இலக்கு இல்லாதபடி ஓடினால், நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் எந்த பயனும் இல்லை. நாம் தடம் மாறி ஓடினாலும் நாம் தோற்றவர்களே!
.
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம் (1கொரிந்தியர் 9:25).

No comments:

Post a Comment